ஆசிரியமும் ஆற்றுகையும்

வணக்கம்!

 

போற்றுதும் போற்றுதுமே – திங்களைப்
போற்றுதும் போற்றுதுமே

 

தண்ணொளி வீசிடவே – சமாதானம்
வெண்கொடியாய் வருதலான்

 

போற்றுதும் போற்றுதுமே – ஞாயிறைப்
போற்றுதும் போற்றுதுமே

 

சாயாப் பட்டெளியாய் – சுதந்திரம்
ஓயாதென வருதலான்

 

போற்றுதும் போற்றுதுமே – வான்மழை
போற்றுதும் போற்றுதுமே

 

சோனாவாரியாக – சமத்துவம்
தானெனவே சொரிதலான்

 

போற்றுதும் போற்றுதுமே – உலகெலாம்
போற்றுதும் போற்றுதுமே

 

சமாதானம் சுதந்திரம் சமத்துவம் – எங்கும்
அமைகவே எனச் சுற்றலால்

 

போற்றுதும் போற்றுதுமே
போற்றுதும் போற்றுதுமே

 

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் துறை, மேலாண்மையியல் துறை, நாடகத்துறை ஆகியன இணைந்து நடாத்தும் ‘நாடகத்தின்வழிக் கற்பித்தல்’ பன்னாட்டுக் கருத்தரங்கம் தொடக்கவிழாவில் ‘மையக்கருத்துரை’ வழங்க எனக்கு வய்ப்பளித்த தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர், பேராசிரியர், முனைவர் கோ.பாலசுப்பிரமணியன் அவர்களுக்கும்; என்னை அழைத்துவந்த கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் நடகத்துறை தலைவர், பேராசிரியர், முனைவர்  பெ. கோவிந்தசாமி அவர்களுக்கும்; ஏனைய துறைத் தலைவர்களுக்கும்; உரை நிகழ்த்த என்னைப் பணித்த முனைவர் க.முருகேசன் அவர்களுக்கும்; மற்றும் கல்வியாளர்கள், மாணவர்கள் ஆகியோருக்கும்; பார்வையாளர்களுக்கும் எனது நன்றியையும் வணக்கத்தையும் முதற்கண் தெரிவித்துக்கொள்ளுகிறேன். அனைவருக்கும் வணக்கம்.

 

‘சோழியன் குடுமி சும்மா ஆடாது’ என்பார்கள். நீட்டி முழக்கிப் போற்றி வணக்கம் கூறியதற்குக் காரணம் உண்டு. ‘ஆசிரியமும் ஆற்றுகையும்‘ என்ற பொருளில் பேச எண்ணியுள்ளேன்.

 

முன் கூட்டியே என்னை மன்னித்தருளும்படி கேட்டுக்கொள்ளுகின்றேன். ஏன் என்றால், நான் வசைபாட வந்திருக்கிறேன். முன்னிலைப்படுத்திக் குறைசொல்லி நண்பர்கள் பலரின் கோபத்திற்கு உள்ளாகி இருக்கிறேன். ஆகவே, என்னிலைப் படுத்தியே குறை கூறுகின்றேன். நான் கூறப்போகும் யாவும் எனக்குப் புதிதல்ல, என் பிறப்பிலும் வளர்ப்பிலும் இயல்பாகவே பெற்றுக்கொண்டவை. ஆனாலும் மீழ்பார்வையில் நான் எதுவும் தெரிந்திருக்கவில்லை என்றே உணர்கிறேன்.

 

எனக்கு என்ன தெரியும்? மூச்சை உள் இழுக்கிறேன், வெளி விடுகிறேன். எனக்கு மூச்சு இயக்கம்பற்றித் தெரியுமா? அதைப்பற்றி யோசித்திருக்கின்றேனா? காற்றுப்பையின் பெரும் பகுதியை மனிதர் பயன்படுத்துவதில்லையாமே! முறைப்படி சுவாசிக்கத் தெரியவில்லை. ‘பிராணாயாமம்’ செய்யவேண்டி உள்ளது. எழுத்தை உச்சரிக்கத் தெரியுமா? பேசத் தெரியுமா? தவறில்லாமல் எழுதத் தெரியுமா? ‘ம’ மகரம் போட்டு எழுதுவது ‘மவ்ழ’ – ழகரம், ஒற்றைக் கொம்பு போட்டு எழுதுவது ‘கொம்புள’ – ளகரம். இவ்வளவுதான் நான் கற்றுக்கொண்டது. கண்ணுக்கு வேறுபாடு தெரிகிறது, ஆனால் நாவுக்கும் செவிக்கும் தெரியவில்லை. லகரமும் தடுமாறுகிறது. தன்நகர, றன்னகர, டண்ணகர வேறுபாடு உச்சரிப்பிலும் எழுத்திலும் உள்ளதா? ரகர, றகர வேறுபாடு கருப்பிலும் இல்லை கறுப்பிலும் இல்லை, அருகம் புல்லிலும் இல்லை, அறுகம் புல்லிலும் இல்லை. எது சரி? வட்டார வழக்கு என்று இவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டுமா? அகரமுதலிகளிலும் ஏற்றிவிட வேண்டுமா? இன்றும் குழம்புகிறேன்.

 

தொல்காப்பியர் கூறியபடியா என் நா பழகுகிறது? செந்தமிழும் நாப்பழக்கம். சொல்லளவில் மட்டும்தான், ஆனால் முறைப்படி கற்றுக்கொள்ளவில்லை. எடுத்துக்காட்டாக ‘ஒளவை’ பிராட்டியின் பெயரை எடுத்துக்கொள்ளலாம். ‘ஒள’ உயிர் எழுத்து, அதன் பிறப்பு:

 

பன்னீ ருயிரும் தந்நிலை திரியா
மிடற்றுப் பிறந்து வளியின் இசைக்கும்

 

உஊ ஒஓ ஒள என இசைக்கும்
அப்பால் ஐந்தும் இதழ் குவிந் தியலும்

 

‘ஒள’ என்ற உயிர் எழத்து மிடற்றில் பிறந்து இதழ் குவிந்து காற்றில் ஒலிக்கும். வேறு எந்த உறுப்பும் தொழிற்படுவதில்லை. இதன் உச்சரிப்பு ஒரு பயிற்சி.

 

‘அவ்வை’ என்ற சொல்லை எடுத்துக் கொள்ளலாம். ‘அ’ உயிர் எழுத்து ‘வ்’ மெய் எழுத்து.

 

வகார மெய் – பல்லிதழ் இயைய வகாரம் பிறக்கும்

 

‘அவ்’ இன்னொரு உச்சரிப்புப் பயிற்சி. ‘ஒள’வும் ‘அவ்’வும் உச்சரிப்பைப் பொறுத்தவரை ஒன்றல்ல. இது எனக்குத் தெரியவில்லை.

 

அவ்வாறே:

மையம் – மய்யம்
ஐயர் – அய்யர்

போன்றவற்றின் உச்சரிப்பு வேறுபாடும் எனக்குத் தெரியவில்லை.

 

தமிழுக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல், பத்தாயிரம் ஆண்டுகளாகவும் இருக்கலாம், காலம் ஒரு குத்துமதிப்புத்தான், தொடர்ச்சியாக இன்றும் பயிலும் இலக்கணம் உண்டு, மாறாத மரபு உண்டு. ஆளாளுக்கு நினைத்தபடி யெல்லாம் மாற்றங்களைச் செய்துவிட முடியாது என்று எனக்குத் தெரியாது. தொல்காப்பியம் இருக்கும்வரை தமிழோடு சேட்டைவிடக் கூடாது என்றும் எனக்குத் தெரியாது. நான் விடும் எழுத்து, சொல், பொருள் தவறுகளால் மனம் நொந்து, ‘தமிழ்க் காப்பு நிலையங்கள்’ வேண்டும், அங்கு ‘தமிழ்க் காபியர்கள்’ பணியில் அமர்த்தப்பட வேண்டும், அவர்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டி என்னைத் திருத்த வேண்டும் என்று ஒரு கட்டுரை எழுதி என் இணையத் தளத்தில் போட்டு வைத்தேன். அவ்வளவுதான், கட்டுரைகள் எழுதி மாற்றங்களைக் கொண்டுவந்துவிட முடியுமா என்ன? சரி, அது போகட்டும்.

 

எனக்கு அரங்கில் நிற்கத் தெரியுமா? இருக்கத் தெரியுமா? நடக்கத் தெரியுமா? நின்று திரும்பத் தெரியுமா? அரங்கில் நெறியாகச் சமநிலையில் நிற்கவேண்டும். அசைவுதான் முதலில் கண்ணில்படும். இடுப்பில் நொடிப்பு இருந்தால் இடுப்புத்தான் முதலில் கவனத்தை இழுக்கும். இருக்கும் போது முன் உள்ளவர்களை மதித்து இருக்கவேண்டும். நடக்கும் போது குறிவைத்து நடக்கவேண்டும். திரும்பும் போது உடலை முறுக்காமால் முழுமையாகத் திரும்பவேண்டும். இவை என்னுடைய தோற்றத்தை மேம்படுத்திக் காட்டும் என்று எனக்குத் தெரியாது. நான் பெற்ற கல்விப் பாடத்திட்டத்தில் இவைகள் இல்லை.

 

இவற்றை ஆசிரியனாகிய நான் வகுப்பறைகளில் கற்றுக்கொடுக்க வேண்டும். இவற்றைக் கற்றுக்கொடுக்க முதலில் எனக்கு இவைகள் தெரிந்திருக்க வேண்டும். எனது தோற்றப்பாடு முன்மாதிரியாக இருக்கவேண்டும். ஆசிரியர் பயிற்சித் திட்டத்தில் எல்லோருக்கும் பொதுக் கட்டாய பாடமாக இவைகளும் சேர்க்கப்பட வேண்டும். ஏன் என்றால் ஆசிரியர்களாகிய நாம் முதலில் ஆற்றுநர்கள்.

 

செயலை ஆக்குதல், ஆற்றுதல் என இரண்டாக வகுக்கலாம். ஆக்குதல் இன்னொரு பொருளைச் செய்வது. ஆக்குபவரின் அடையாளம் பொருளில் தெரிந்தாலும், பொருள் வேறாக நிற்கும். ஆற்றுதல் ஒரு நிகழ்வு. உடல் மொழி மூலம் பொருளாவது. ஆற்றும் பொருள் வேறாக நின்றாலும் ஆற்றுதலை ஆற்றுபவரிடம் இருந்து பிரித்துப் பார்க்க முடியாது. ஆசிரியர்கள் தினமும் மாணவர்களாகிய அவைமுன் ஆற்றும் அரங்கர்கள்.

 

அரங்கு என்றால் என்ன? ஒரு நிகழ்வை அவை, அரங்கு என வகுக்கலாம். இரண்டும் பிரிக்கமுடியாதவை, ஆனாலும் வேறானவை. நான் நிற்கும் இடம் மட்டும் அல்ல என் செயலும், நான் இங்கு கையாளும் பொருட்கள் யாவும் அரங்கின்பாற்படும். என் முன்னால் உள்ளது அவை. அவையின் செயல் அரங்கின்பாற்படாது. ஆனாலும் அவை இல்லாமல் அரங்கு இல்லை.

 

அரங்கை அறிந்துகொள்ள நாடகத்திற்கும் அரங்கிற்கும் உள்ள உறவைப் புரிந்துகொள்ள வேண்டும். நாடக மொழி வேறு அரங்க மொழி வெறு. இந்த மொழி வேறுபாட்டை இசை அரங்கில் தெளிவாகக் காணலாம். பாடல் எழதுவதற்கு இலக்கணம் யாப்பு, பாடுவதற்கு இலக்கணம் பண். இரண்டும் வேறு செயற்பாடுகள், வேறு திறமைகள். வேறு கற்றல். இவ்வாறான வேறுபாட்டை நாடகத்திற்கும் பொருத்திப் பார்க்கலாம். நாடகம் எழுதுவது ஒரு செயல், அரங்காக்கம் செய்வது வேறு ஒரு செயல். இரண்டும் வேறு வேறு ஆற்றல்கள். இவற்றை இரு வேறு மொழிகள் எனக் குறிப்பார்கள். ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டிருந்தாலும் இரு வேறுபட்ட கற்றல். நாடகம் கற்பிப்பது வேறு அரங்கைப் பயிற்றுவிப்பது வேறு. அரங்கப் பயிற்சி ஆசிரியர்களுக்கும், அசிரியர்கள் ஊடாக மாணவர்களுக்கும் அவசியமானது.

 

பாடத் தெரியாதவரிடம் பாட்டை எழுதிக் கொடுத்து என்ன பயன். அது போலத்தான் அரங்கப் பயிற்சி இல்லாதவரிடம் நாடகத்தைக் கொடுப்பது. அரங்கப் பயிற்சி அடிப்படையானது. இந்த அடித்தளத்தில் நாடகங்களைக் கட்டி எழுப்பலாம்.

 

அரங்கப் பயிற்சி ஒரு கற்கை முறை. முறைசார் அரங்கக் கல்வியை முறையாகக் கற்ற அரங்கியலாளர்களிடம் இருந்து பெறவேண்டும். அதற்கு முறையான பயில் அரங்குகள் வேண்டும். உலகமெங்கும் முறையான பயில் அரங்குகள் பல உள்ளன. தமிழ் நாட்டில் தமிழ் அரங்கிற்கென தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக நாடத்துறை மட்டுமே உள்ளது. தமிழ்ப் பல்கலை நாடகத்துறை வளாகம் நீண்டகாலமாக எனக்குப் பழக்கமான இடம். இங்கு பணிபுரிந்த பலரை நான் அறிவேன். இன்று பார்க்கிறேன், இடிபாடுகள் மத்தியில் புதர் மண்டிக் கிடக்கும் புராதன நகரத்தின் எச்சசொச்சமாக் காட்சியளிக்கிறது. கஜாப்புயல் காரணமாக இருக்கலாம். கல்விபயில் இடம் மீட்டெடுக்கப்படும்போது, கல்வி பயில்வதற்கான சூழல் உருவாகும். செயற்பாட்டிற்குக் கட்டுமானம் மிக அவசியம். அரங்கில் தமிழ் அடையாளம் தேடும் அரங்கர்களுக்கு தமிழ் பல்கலைக் கழக நாடகத் துறை ஒரு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும். ஒரு அரங்கச் செயற்பாட்டாளனாக இவை என் தாழ்மையான வேண்டுகோள்.

 

கல்விப் புலத்தில் அரங்கக் கல்வியின் முக்கியத்துவத்தை ஆசிரியர்கள் அறிவோம். பாடமாகப் படிப்பதை விட ஆடிப் பாடிப் படிப்பது மனதில் கூடுதலாகப் பதியும். இதை நான், பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு நாடகம் சொல்லிக் கொடுத்த போது அனுபவத்தில் கண்டேன். வகுப்பறைகளில் பின்தங்கிய மாணவர்களும் நாடகப் பாடங்களை சுலபமாக மனனம் செய்து ஒப்புவித்ததைக் கண்டேன். அவர்களின் கற்கும் திறன் அதிகரித்தது, தங்களாலும் சில செய்யமுடியும் என்ற தன்நம்பிக்கை வந்தது, ஆளுமை மேம்பட்டது. அவர்களும் பலரின் கவனத்தை ஈர்த்தார்கள்.

 

நாடகங்களை மட்டும் அல்ல எண்கணிதம் முதல் எல்லாப் பாடங்களையும் நாடகமாகச் சொல்லிக் கொடுக்கலாம். அது ஆசிரியர்களின் அறிவு, அநுபவம், கற்பனை, கிடைக்கும் வசதிகள் அகியவற்றைப் பொறுத்தது. அந்தப் பயிற்சிகளைப் பற்றிப் பல கல்வியாளர்களும், அரங்கியலாளர்களும் நிறையவே பேசியும் எழுதியும் செய்தும் இருக்கிறார்கள். அவற்றைத் தேடிப் படிப்போம். எல்லாவற்றுக்கும் மேலாக அவரவர் கற்பனை. கற்பனையைத் தட்டிவிடுவோம் கல்விசார் நாடகங்கள் பிறக்கட்டும், கல்வி சிறக்கட்டும். இவைகளை அன்று நான் முறையாகக் கற்றுக்கொள்ளவில்லை. அதனால் இன்றும் எழுத்தைச் சரியாக ஒலிக்கத் தெரியவில்லை, தவறின்றி எழதத் தெரியவில்லை. என்குறையைக் கூறுகிறேன்.

 

பாட்டைப் படித்தறியேன் பாடும்வகை நானறியேன்
ஏட்டின் எழுத்தறியேன் எழதும்வகை நானறியேன்
வித்துவக் கவிஞன் அல்ல வித்தைகள் கற்றோனல்ல
கற்றது கைமண்ணளவு கல்லாததோ உலகளவு
தப்புத் தவறிருந்தால் செப்பனிட எடுத்துச் சொல்வீர்
நன்றே கண்டு நயந்தால் சென்று சொல்வீர் சிறப்புகளை

 

 

நன்றி.

 

 

[குறிப்பு: இக் கட்டுரை பற்றிய உங்கள் எண்ணங்களை ‘தொடர்பாடல்’ ஊடாக தெரியப்படுத்தவும், நன்றி.]