இன்னியம் பல்லியம்

முதலுரை

 

‘இயம்’ என்றால், சொல் (திவாகரம்), ஒலி (சூடாமணி), வாச்சியம் (பிங்கலம்) எனப் பல்பொருள்படும் (Tamil Lexicon). இன்னியம் என்றால் இனிய இசைக் கருவிகள் என்றும்; பல்லியம் என்றால் பல வகையான இசைக் கருவிகள் என்றும் பொதுவாகப் பொருள் கொள்ளலாம்.

 

ஆனால், இன்னியம், பல்லியம் என்பன பொதுவாகப் பொருள்படும் சொற்கள் அல்ல, அவை கலைச்சொற்கள் (technical words). ஒரு கலைச் சொல்லுக்குத் திட்டவட்டமான ஒரு துறைப்பொருள் உண்டு. ஆனால் இன்னியம், பல்லியம் ஆகிய சொற்களுக்கு இடையில் உள்ள துறைப்பொருள் வேறுபாட்டைக் கருத்தில் கொள்ளாது, அச்சொற்கள் பல இடங்களில் எடுத்தாளப்படுகின்றன.

 

ஆகவே, பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள தவறுகளைக் கடந்து, நேராகவே இலக்கிய மூலங்களைத் தேடிப் பொருளைக் காணலாம். பழந் தமிழ் இலக்கியங்களில் எங்கெல்லாம் இன்னியம், பல்லியம் ஆகிய சொற்கள் வருகின்றனவோ, கூடியவரை அங்கெல்லாம் தேடிக் கண்டு, பொருள் கொள்வதே இவ் ஆய்வின் நெறிமுறை.

 

1. இன்னிசை

 

ஓசைகள் எல்லாம் இனிமையானவை என்ற கருதுகோளில் தேடலைத் தொடங்கலாம். இன்னிசைக்கும் இன்னியத்திற்கும் இடையில் உள்ள நுண்மையான வேறுபாட்டைக் காணவே இன்னிசை முதலில் தேடப்படுகிறது.

 

இன்இசை இயத்தின் கறங்கும்
கல்மிசை அருவிய காடு … (அகநானூறு 2004 ப59 பா25: 21-22)

 

இசைக் கருவியின் இனிய இசை போல ஓலிக்கும் மலை அருவி உள்ள காடு …

 

இதில் இசைக்கருவி வகைப்படுத்தப்படவில்லை, பொதுவாகவே இசைக் கருவிகளின் இசை இனிமையானது. மலை அருவி ஒலியின் இனிமைக்கு ஒப்பாக ‘இயத்தின் இன்னிசை’ கூறப்படுகிறது.

 

மேலும்:

மணி, கழல், கவண் முதலிய பயன்பாட்டுப் பொருட்களிலும்;
தும்பி, வண்டு ஆகிய உயிரினங்களின் அசைவுகளிலும்;
இடிமுழக்கம், மேகம், மழை, அருவி, கடல், திரை என இயற்கையிலும்;

 

ஒலிக்கும் ‘இன்னிசையை’ இலக்கியங்களில் பரவலாகக் காணலாம். இயத்தில் மட்டும் அல்ல இயற்கையிலும் இன்னிசை உள்ளது. இன்னிசை பொதுவானது. இங்கு முதன்மையான தேடல் இன்னியம்பற்றியதால், இன்னிசைபற்றி இலக்கியங்களில் தேடிக் கண்ட விரிவான தரவுகள் விரிவஞ்சித் தவிர்க்கப்பட்டுள்ளன.

 

‘இன்னா இசை ஒலி’ கேட்கும் இடங்களும் உள்ளன. மணிமேகலை சக்கரவாளக் கோட்டத்தில்:

 

எஞ்சியோர் மருங்கி னீமம் சாற்றி
நெஞ்சு நடுங்குறூஉம் நெய்த லோசையும்
துறவோ ரிறந்த தொழுவிளிப் பூசலும்
பிறவோ ரிறந்த வழுவிளிப் பூசலும்
நீண்முக நரியின் றீவிளிக் கூவும்
சாவோர்ப் பயிருங் கூகையின் குரலும்
புலவூண் பொருந்திய குராலின் குரலும்
ஊண்டலை துற்றிய வாண்டலைக் குரலும்
நுன்னீர்ப் புணரி நளிகட லோதையின்
இன்னா விசையொலி (மணிமேகலை 1998 ப72-73 பா6: 70–79)

 

சாப்பறையிலும் ஓசை நயம் உண்டு. ஒப்பாரியிலும் நடை உண்டு. காஞ்சிப் பாடலிலும் இன்னிசை உண்டு. இன்னா இசை ஒலியில் இன்னிசை காணும் தேடல் இங்கு மேற்கொள்ளப் படவில்லை. அது வேறு ஆய்வு. இது இன்னியம்பற்றியது.

 

2. இன்னியம்

 

‘இன்னியம்’ என இலக்கியங்களில் இசைக் கருவிகள் இயக்கப்படும் முறையையும் இடங்களையும் வகைதொகையாகப் பகுத்து, இசைத் துறையில் இன்னியத்திற்கு உள்ள தனித்துவத்தைத் தீர்மானிக்கலாம்.

 

2 – 1 நூல்நெறி மரபில் இன்னியம்:

 

… … … தேம்பெய்து
அமிழ்து பொதிந்து இலிற்றும் அடங்குபுரி நரம்பின்
பாடுதுறை முற்றிய பயன்தெரி கேள்விக்
கூடுகொள் இன்னியம் குரல் குரலாக
நூல்நெறி மரபின் பண்ணி … (பத்துப்பாட்டு 2003 சிறுபாணாற்றுப்படை ப170 பா226-230)

 

இன்னியம் எனப்படும் இசைக் கூட்டுக்கு நங்கூரம் பாய்ச்சும் பாடல் அடிகள் இவை. இன்னியம்பற்றி அறிய இப்பாடல் அடிகளை விளங்கிக்கொள்ள வேண்டும்.

 

தேம் பெய்து – தேன் சொரிந்து
அமிழ்து பொதிந்து – அமிழ்து சேர்த்து
இலிற்றும் – சுரக்கும்
அடங்கு புரிநரம்பின் – முறுக்கேறிய நரம்புக் கருவியின்
பாடுதுறை முற்றிய – இசைத் துறையில் முதிர்ச்சியடைந்த
பயன் தெரி கேள்விக் – பயன் ஆயும் கேள்வி

 

இன்னியத்திற்குக் ‘கேள்வி’ அடிப்படையானது. இசைத்துறை சார்ந்து அதன் பொருளை அறிந்துகொள்ளவேண்டும்.

 

கடிப்பகை அனைத்தும் கேள்வி போகாக்
குரல்ஓர்த்துத் தொடுத்த சுகிர்புரி நரம்பின் (பத்துப்பாட்டு 2003 மலைபடுகடாம் ப539 பா22-23)

 

வெண்கடுகு அளவும் கேள்வி மாறாமல் ஒலி கேட்டுக் கட்டப்பெற்ற முறுக்கிய நரம்புகளின்

 

கிளையாய்ந்து பண்ணிய கேள்வி… … (புறப்பொருள் வெண்பா மாலை 2004 ப149 பா7-18)

 

கிளை நரம்பை ஆராய்ந்து அமைத்த கேள்வி.

கேள்வி என்றால் இசைச்சுருதி (Tamil Lexicon)

 

கூடுகொள் இன்னியம் – கூட்டாக உட்கொள்ளப்பட்ட இன்னியம்
இன்னியம் கூட்டாக இசைக்கப்படுகிறது.

 

குரல் குரலாக – குரல் (சட்சம்) ஏழிசையில் முதலாவது ஆதார சுருதிசேர்த்து

 

குரன்முத லாகவும் குரலீ றாகவும் (சிலப்பதிகாரம் 1950 ப221 பா8: 38)

 

நூல்நெறி மரபின் நூல் விதித்த முறைமையில்

 

… நூலோர் விதி (சிலப்பதிகாரம் 1950 ப100 பா26 உரை)

 

பண்ணி –

பண்ணல் – பாட நினைத்த பண்ணுக்கு இணை, கிளை, பகை, நட்பான நரம்புகள் பெயரும் தன்மை மாத்திரையறிந்து வீக்குகை; (சீவகசிந்தாமணி ப322 பா657 உரை; 
வீக்குகை – கட்டுகை (Tamil Lexicon)

 

சுருக்கமாக இன்றைய வழக்காற்றில் கூறுவதாயின், முறையாகச் சுருதி சேர்த்தல். இன்னியக் கூட்டிசை கேள்விக் கட்டுக்குள் அமைவதென்பது நூல்நெறி மரபு.

 

கேள்விக் கட்டுக்கு மட்டும் அல்ல தாளக் கட்டுக்கும் அமைவது இன்னியம்.

 

வேறுபல் குரல ஒருதூக்கு இன்னியம் (அகநாநுறு 2004 ப197 பா382: 4)

 

வேறுபட்ட பல ஓசையுடையதாயினும் ஒரு தாளத்திற்கு அமையும் இன்னியம்.

 

மேலும் தாளம்பற்றி:

 

படுபறை பலஇயம்பப் பல்உருவம் பெயர்த்துநீ
கொடுகொட்டி ஆடுங்கால் கோடுஉயர் அகல்குறிக்
கொடிபுரை நுசுப்பினாள் கொண்டசீர் தருவாளோ

 

மண்டுஅமர் பலகடந்து மதுகையால் நீறுஅணிந்து
பண்டரங்கம் ஆடுங்கால் பணைஎழில் அணைமென்தோள்
வண்டுஅரற்றும் கூந்தலாள் வளர்தூக்குத் தருவாளோ

 

கொலைஉழுவைத் தோல்அசைஇக் கொன்றைத்தார் சுவல்புரள
தலைஅங்கைக் கொண்டநீ காபாலம் ஆடுங்கால்
முலைஅணிந்த முறுவலாள் முற்பாணி தருவாளோ (கலித்தொகை 2003 ப13 பா1:5-13)

 

சீர், தூக்கு, பாணி என தாளம் குறித்த சொற்கள் இப் பாடலில் வருகின்றன. இலக்கியங்களில் பல இடங்களில் இச் சொற்களைக் காணலாம். இவை மேலும் ஆய்வுக்குரியன. தூக்கு உட்படத் தாளம்பற்றிய விரிவான ஆய்வு இங்கு மேற்கொள்ளப்படவில்லை. தூக்கு எனப்படும் தாளக் கட்டுக்கு இன்னியம் அமையும்.

 

2 – 2 இன்னிய ஓசைநயம்

 

… … … சூர்மகள்
அருவி இன்னியத்து ஆடு … (நற்றிணை 2003 ப44 பா34:5)

 

இமிழ்இசை அருவியொடு இன்இயம் கறங்க (பத்துப்பாட்டு 2003 திருமுருகாற்றுப்படை ப78 பா240)

 

இன்னியத்திற்கு அருவியின் ஓசை மட்டுமல்ல அதன் ஓட்டமும் (flow) ஒப்பாகும்.

 

2 – 3 கண்ணுளர் இன்னியம்

 

… … … ஆதன் ஓரி
மாரி வண்கை காணிய நன்றும்
சென்றது மன்எம் கண்ணுளம் கடும்பே
பனிநீர்ப்பூவா மணிமிடை குவளை
வால்நார்த் தொடுத்த கண்ணியும் கலனும்
யானை இனத்தொடு பெற்றனர் நீங்கிப்
பசியார் ஆகன் மாறுகோல் விசிபிணிக்
கூடுகொள் இன்னியம் கறங்க
ஆடலும் ஒல்லார்தம் பாடலும் மறந்தே (புறநானூறு 2003 ப270-271 பா153: 4-12)

 

ஆதன் ஓரி என்ற மன்னனிடம் போதிய கொடையைப் பெற்றதால் கண்ணுளம் கடும்பு ஆடல் பாடல் மறந்தனர் என்பது செய்தி.

 

இங்கு கவனத்தில் கொள்ளவேண்டியவை ‘கண்ணுளம் கடும்பு’, ‘கூடுகொள் இன்னியம்’ ஆகிய இரு சொற்தொடர்கள்.

 

கண்ணுளம் கடும்பே – கண்ணுளர் சுற்றம்
கண்ணுளரின் கூட்டிசைக் கருவி இன்னியம்.

 

கண்ணு ளாளர் கருவிக் குயிலுவர்
பண்ணியாழ்ப் புலவர் பாடற் பாணரோ
டெண்ணருஞ் சிறப்பி னிசைசிறந் தொருபால் (சிலப்பதிகாரம் 1950 ப148 பா184-185)

 

கண்ணுளாளரின் இசை நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் கலைஞர்கள்: கருவிக் குயிலுவர், பண்ணியாழ்ப் புலவர், பாடற் பாணர் ஆகியோர்.

 

பாணரை ஆற்றுப்படுத்திய போதும் இன்னியம் கூறப்படுகிறது:

 

அருந்திறற் கடவுள் வாழ்த்திச் சிறிதுநும்
கருங்கோட்டு இன்இயம் இயக்கினிர் கழிமின் (பத்துப்பாட்டு 2003 பெரும்பாணாற்றுப்படை ப218 பா391-392)

 

கோடு – யாழ்த் தண்டு (Tamil Lexicon)

 

நாடக மகளிருடன் இன்னியம்:

 

நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்த
விசிவீங்கு இன்னியம் (பத்துப்பாட்டு 2003 பெரும்பாணாற்றுப்படை ப205-206 பா55-56)

 

விசிவீங்கு இன்னியம் – கட்டு இறுகிய இன்னியம்

 

இவற்றால், பாடலாயினும் ஆடலாயினும் செவ்வியல் ஆற்று கலைக்கும் இன்னியத்திற்கும் உள்ள தொடர்பு தெரிகிறது.

 

கண்ணுளர் செவ்வியல் ஆற்றுகலைக் குழுமங்களைக் குறிக்கும் சொல். கண்ணுளர், கண்ணுளாளர் ஆகிய இரு சொற்களும் ஒரு பொருட்படுவன (பார்க்க ஆய்வுரை: ‘கண்ணுள் வினைஞரும் கண்ணுளரும்’).

 

2 – 4 வெறியாடலில் இன்னியம்:

 

கூடுகொள் இன்இயம் கறங்க களன்இழைத்து
ஆடுஅணி அயர்ந்த அகன்பெரும் பந்தர்
வெண்போழ் கடம்பொடு சூடி இன்சீர்
ஐதுஅமை பாணி இரீஇ கைபெயரா
செல்வன் பெரும்பெயர் ஏத்தி வேலன்
வெறிஅயர் வியன் களம் … (அகநானூறு 2004 ப219 பா 98: 14-19)

 

இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியவை:
அகன்பெரும் பந்தர் – பந்தர் அமைத்து வெறிஆடல் நிகழ்கிறது.

இன்சீர் ஐதுஅமை பாணி இரீஇ – இனிய தாளத்திற்கு அழகாக அமைந்த பாணியில் வைத்துச் செய்யப்படுகிறது.

 

நல்நுதல் பசந்த படர்மலி அருநோய்
அணங்குஎன உணரக் கூறி வேலன்
இன்இயம் கறங்கப் பாடிப்
பல்மலர் சிதறிப் பரவுறு பலிக்கே (நற்றிணை 2003 ப430 பா322: 9-12)

 

இன்இயம் கறங்கப் பாடிப் – இன்னியம் ஒலிக்கப் பாடி

 

கடம்புகொடி யாத்து கண்ணி சூட்டி
வெறுபல் குரல ஒருதூக்கு இன்னியம்
காடுகெழு நெடுவேல் பாடுகொளைக்கு ஏற்ப
அணங்குஅயர் வியன்களம் பொலிய பையத்
தூங்குதல் புரிந்தனர் … (அகநானூறு 2004 ப197 பா382: 3-7)

 

ஒருதூக்கு இன்னியம் காடுகெழு நெடுவேல் பாடுகொளைக்கு – ஒரு தாளத்திற்கு அமைந்த இன்னியம் முருகன் பாடலுக்கு …

 

இமிழ்இசை அருவியொடு இன்இயம் கறங்க
உருவப் பல்பூத் தூஉய் வெருவரக்
குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள்
முருகுஇயம் நிறுத்து முரணினர் உட்க
முருகுஆற்றுப் படுத்த உருகெழு வியல்நகர் (பத்துப்பாட்டு 2003 திருமுருகாற்றுப்படை ப78 பா240: 244)

 

‘முருகு ஆற்றுப்படுத்த’ இன்னியம்.

 

இவ்வாறு முருகன் ஆடல் பாடல்களில் இன்னியம் இசை வழங்குவதைக் காணலாம். முருகனுடன் தொடர்புடைய வேறியாடல்பற்றி இங்கு விரிவாக ஆய்வு செய்யப்படவிi;லை. இது இன்னியம்பற்றிய ஆய்வு.

 

வேறியாடலில் இசைக்கருவிகள்:

 

செறிதொடி முன்கை கூப்பிச் செவ்வெள்
வெறியாடு மகளிரொடு செறியத் தாஅய்க்
குழல் அகவ யாழ்முரல
முழவுஅதிர முரசுஇயம்ப (பத்துப்பாட்டு 2003 பட்டினப்பாலை ப494 பா154-157)

 

2 – 5 வேறு இடங்களில் இன்னியம்

 

சீவகசிந்தாமணி காந்தருவதத்தையரிலம்பகம் என்ற பகுதியில கலியாணத்தில் ‘இன்னியம் முழங்கக்’ கேட்கலாம்.

 

இன்னிய முழங்கி யார்ப்ப வீண்டெரி திகழ வேதம்
துன்னினர் பலாசிற் செய்த துடுப்பினெய் சொரிந் துவேட்ப
மின்னியல் கலச நன்னீர் சொரிந்தனன் விர னேற்றான்
முன்னுபு விளங்கு வெள்ளி முளைத்தெழ முருக னன்னான் (சீவகசிந்தாமணி 1949 ப419-420 பா834)

 

‘இன்னிய முழங்கி யார்ப்ப’ என்பதற்கு ‘இன்னியம் ஆராநிற்க’ என நச்சினார்க்கினியர் உரை கூறுவார். இங்கு இன்னியம் விளக்கம் பெறவில்லை. ‘இன்னியம்’ என்பதற்கு ‘இனிய வாத்தியங்கள்’ என உ.வே.சா அடிக் குறிப்பில் பொதுவான பொருளில் கூறுவார்.

 

தன்வயி னின்றுதன் னின்னியங் கொள்ளும் (பெருங்கதை 1953 ப185 பா1:44: 99)

 

‘இயம்’ எனப் பிரித்து யாழ் எனப் பொருள் கூறுவார்

 

இடுமணன் முற்றத் தின்னியங் கறங்கக் (பெருங்கதை 1953 ப693 பா4:2: 30)

 

புது மணல் பரப்பிய முற்றத்தில் இன்னியம் நிகழ்கிறது என்ற செய்தி உள்ளது.

 

உரையாசிரியர்களின் உரைகள், அகராதிகள் எங்கும் ‘இன்னியம்’ போதிய விளக்கம் பெறவில்லை. ஆகவே இன்னியம் என்ற சொல்லை எடுத்தாள்வதில் தற்காலத்தில் தடுமாற்றம் ஏற்படுகிறது.

 

இடை இட்ட உரை

 

ஆடல், பாடல், சடங்கு, விழா சார்ந்து குறிக்கப்பட்ட இடங்களில் இன்னியம் ஒலிப்பதைக் காணலாம். கூடுகொள் இன்னியம் என்பதால் இன்னியம் கூட்டுக் கருவிஇசை எனவும்; நூல்அறி நெறிமுறையில் இயக்கப்படுவதாலும், கண்ணுளரின் இசையாகக் கூறப்படுவதாலும், செவ்வியல் சார்ந்தது எனவும் கூறலாம். இன்னியம் ஒலிக்கும் இடங்களைக் கண்டோம். இன்னியம் ஒலிக்காத இடங்களையும் கண்ட பின்பே இன்னியம் பற்றி அறுதியிட்டுக் கூறலாம்.

 

 

3  பல்லியம்

 

பல்லிய இசைக் கருவிகள், அவற்றின் தன்மை, குறிப்பாக ஒலிக்கும் இடங்கள் ஆகியவற்றை வகைதொகையாகப் பகுத்துக் காணலாம்:

 

3 – 1 பல்லியக் கருவிகள்

 

திருமுருகன் போர்க்கோலம் கொண்டு திருச்செந்தூர் வருகிறார். அவ்வேளை பல்லியம் ஒலிக்கிறது.

 

அந்தரப் பல்லியம் கறங்கத் திண்காழ்
வயிர் எழுந்து இசைப்ப வால்வளை ஞரல
உரம் தலைக்கொண்ட உரும்இடி முரசமொடு (பத்துப்பாட்டு 2003 திருமுருகாற்றுப்படை ப73 பா119-121)

 

பல்லியக் கருவிகள்: வயிர், சங்கு, முரசு முதலியன.

 

அந்தரம் என்பது வெளி (Open space), தேவலோகம் (Heaven), தேவாலயம் (Temple) என இங்கு பொருத்தப்பாடுடைய பல் பொருள் கிளவி (Tamil Lexicon).

 

உதயணனையும் வாசவதத்தையையும் ‘மண்ணுநீராட்ட’ நீர்க்குடம் செல்லும் சிறப்புக் கூறிய வேளையில் பல்லிய ஒலி:

 

படுகண் முழவொடு பல்லியங் கறங்க
ஏம முரச மிழுமெனச் சிலைப்பக்
காமர் சங்கம் வாய்வதின் முழங்க (பெருங்கதை 1953 ப346-347 பா5:17-19)

 

பல்லியக் கருவிகள்: முழவு. முரசு, சங்கு முதலியன

 

3 – 2 ஊர்வலத்தில் பல்லியம்

 

பல்லியம் கறங்க ‘நீர்க்குடம் செல்லும் சிறப்பு’ கூறுமிடத்து:

 

ஐம்பெருங் குழுவு மெண்பேராயமும்
மன்பெருஞ் சுற்றமும் வம்ப மாந்தரும் (பெருங்கதை 1953 ப346-347 பா5:6-7)

 

ஏன, இங்கு விரிவது ஓர் ஊர்வலக் காட்சி.

 

சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையில் தலைக்கோல் ஊர்வலத்தில் பல்லியம் வருகிறது:

 

முரசெழுந் தியம்பப் பல்லிய மார்ப்ப
அரைசொடு பட்ட வைம்பெருங் குழுவும்
தேர்வலஞ் செய்து கவிகைக் கொடுப்ப
ஊர்வலஞ் செய்து … (சிலப்பதிகாரம் 1950 ப72 பா125-128)

 

கால்கோட் காதையில், சேரன் செங்குட்டுவன் போராற்றலுக்கு அஞ்சி ஓடி ஒளித்த பல கோலங்களில் பல்லியமும் உதவுகிறது:

 

… … … வண்டமி ழிகழ்ந்த
காய்வேற் றடக்கைக் கனகனும் விசயனும்
ஐம்பத் திருவர் கடுந்தே ராளரொடு
செய்குட் டுவன்றன் சினவலைப் படுதலும்
சடையின ருடையினர் சாம்பற் பூச்சினர்
பீடிகைப் பீலிப் பெருநோன் பாளர்
பாடு பாணியர் பல்லியத் தோளினர்
ஆடு கூத்த ராகி யெங்கணும்
ஏந்துவா ளொளியத் தாந்துறை போகிய
விச்சைக் கோலத்து வேண்டுவயிற் படர்தரக் (ப540 பா221-230)

 

3 – 3 கோயில்களில் பல்லியம்

 

சிலப்பதிகாரம் புறஞ்சேரியிறுத்த காதையில் மதுரைமாநகரில் எழும் ஓசைகளுள்ளும் பல்லியம் கேட்கிறது. கோயிலிலும், மன்னர் மாளிகையிலும் காலை முரசமோடு ஒலிக்கிறது.

 

கருந்தெறற் கடவு ளகன்பெருங் கோயிலும்
பெரும்பெயர் மன்னவன் பேரிசைக் கோயிலும்
பால்கெழு சிறப்பிற் பல்லியஞ் சிறந்த
காலை முரசக் கனைகுர லோதையும் (1950 ப336 பா137-140)

 

3 – 4 விழாக்களில் பல்லியம்

 

விழாவிலே முன்றலில் பல்லியம்:

 

முழவொடு பல்லிய முன்றிற் றதும்ப
விழவொடு பொலிந்த வழக்கிற் றாகித் (பெருங்கதை 1953 ப868 பா4-5)

 

3 – 5 பேய் ஆட்டலில் பல்லியம்

 

மறிக்குரல் அறுத்துத் தினைப்பிரப்பு இரீஇச்
செல்லாற்றுக் கவலைப் பல்லியம் கறங்க
தோற்றம் அல்லது நோய்க்குமருந்து ஆகா
வேற்றுப்பெருந் தெய்வம் பலவுடன் வாழ்த்திப்
பேஎய்க் கொளீஇயள் இவள் எனப் படுதல் (குறுந்தொகை 2002 ப313 பா263:1-5)

 

4  சிறு/குறும் பல்லியம்

 

4 – 1 காஞ்சிப் பாட்டில் பல்லியம்

 

காஞ்சித்திணையில் ஓர் இரங்கற் பாடல். அங்கு ஒருவகைப் பல்லியம் ஒலிக்கக் காணலாம்.

 

இயவரும் அறியாப் பல்லியம் கறங்க
அன்னோ பெரும்பேறு உற்றன்றுஇவ் அருங்கடி மூதூர் (புறநாநூறு 2003 ப478 பா336:6).

 

இயவர் போர்க்கள இசைக்கருவியாளர்கள். அவர்கள் இசைக் கருவிகள் பேரோசையுடைய பல்லியம் பாற்படும். ஆனால், ‘இயவரும் அறியாப் பல்லியம்’ என ஒரு பல்லிய வகை கூறப்படுகிறது.

 

காஞ்சிப் பாடல்கள் நிலையாமை பற்றியவை. நெடுந்தகைப் புண் காப்போம் வருக தோழி எனப் பாடிய பாட்டில்:

 

வாங்கு மருப்பு யாழொடு பல்இயம் கறங்க
… … … … … … ஆம்பல் ஊதி
இசைமணி எறிந்து காஞ்சி பாடி (புறநானூறு 2003 ப422 பா281:2-5)

 

யாழும் ஆம்பல் குழலும் இசைமணியும் கூறப்படுகின்றன. இவற்றைப் பல்லியத்துடன் கூறினாலும், யாழ் ‘இயவரும் அறியா’ இசைக் கருவி எனக் கண்டு பல்லியத்திற்கு வேறான கருவி இசையாகக் கொள்ளலாம். காஞ்சிப் பாட்டிற்கான கருவிக் கூட்டிசையைச் சிறு/குறும் பல்லியம் எனக் கூறலாம்.

 

4 – 2 குறும் பல்லியம்

 

குழலன் கோட்டன் குறும் பல்லியத்தன் (பத்துப்பாட்டு 2003 திருமுருகாற்றுப்படை ப77 பா209)

 

‘குறும் பல்லியத்தன்’ என கருவி இசைக் கலைஞருள் ஒரு பிரிவினர் வகைப்படுத்தப் படுகின்றனர்.

 

சிறு பல்லியம் எனினும், குறும் பல்லியம் எனினும் ஒக்கும்.

 

4 – 3 சிறு பல்லிய ஓசை

 

மழைகாலத் தேரையின் சத்தத்துடன் சிறு பல்லியத்தின் ஓசை ஒப்புநோக்கப்படுவதை பல இடங்களில் காணலாம்.

 

படுமழை பொழிந்த பயம்மிகு புறவின்
நெடுநீர் அவல பகுவாய்த் தேரை
சிறுபல் இயத்தின் நெடுநெறிக் கறங்க (அகநானூறு 2004 ப78 பா154:1-3)

 

கார்வான் முழக்கின் நீர்மிசைத் தெவுட்டும்
தேரை ஒலியின் மான சீர்அமைத்து
சில்அரி கறங்கும் சிறுபல் லியத்தொடு (ப.13 பா301:18-20)

 

4 – 4 கழைக்கூத்திலும் சிறுபல்லியம்

 

கழைக் கூத்தில் ‘பல் இயம்’ என்றும் ‘இன்னியம் ‘ என்றும் முறையே இரு வேறு பாடல்களில் கூறப்பட்டுகின்றன.

 

கழைபாடு இரங்கப் பல்இயங் கறங்க
ஆடுமகள் நடந்த கொடும்புரி நோன்கயிற்று (நற்றிணை 2003 ப125 பா95:1-2)

 

குழல் ஒலிக்க ‘பல்லியம்’ முழங்க வலிய கயிற்றில் ஆடுமகள் நடக்கிறாள்.

 

… … … வியலூர்ச்
சாறுகொள் ஆங்கண் விழவுக்களம் நந்தி
அரிக்கூட்டு இன்னியம் கறங்க ஆடுமகள்
கயிறுஊர் பாணியின் … (பத்துப்பாட்டு 2003 குறிஞ்சிப்பாட்டு ப453 பா191-194)

 

ஆடுமகள் விழாவில் ‘அரிக்கூட்டு இன்னியம்’ ஒலிக்கக் கயிற்றில் நடக்கிறாள்.

 

அரி – சத்தம் இடும் வண்டு, சிலம்பின் உட்பரல், (Tamil Lexicon) இவற்றால் ‘மென்மையான’ ஓசையை ஊகித்துக் கொள்ளலாம்.

 

சிறுபல்லியத்தின் ஒலியுடன் ஒப்பு நோக்கலாம்:

 

சில்அரி கறங்கும்சிறுபல் லியத்தொடு

 

‘அரிக் கூட்டு’, ‘சில் அரி’ ஆகிய ஒலிபற்றிய கூறுகளைப் பொருத்திப் பார்க்கலாம். மேலும் அரி என்றால் மூங்கில் எனவும் ஒரு பொருள் உள்ளது (Tamil Lexicon). ‘கழைபாடு இரங்க’ என்பதையும் பொருத்திப் பார்க்கலாம். இவற்றால் ‘பல்லியம்’, ‘இன்னியம்’ என்பதிலும் கழைக் கூத்திற்குச் ‘சிறு பல்லியம்’ பொருத்தமான கருவி இசை எனக் கண்டுகூட்டிக் கூறலாம். மேலும், கழைக் கூத்து வெளிக்கள ஆடல் என்பதும் கவனத்திற்குரியது. இங்கு கழைக் கூத்துப் பற்றிய விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை.

 

4- 5 கோடியரும் சிறு பல்லியமும்

 

கோடியர் பற்றித் தேடியபோது சிறு பல்லியம்பற்றி விரிவாக அறிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது. (பார்க்க ‘கோடியர்’ பற்றிய ஆய்வுரை).

 

செறிநடைப் பிடியொடு களிறுபுணர்ந் தென்னக்
குறுநெடுந் தூம்பொடு முழவுப்புணர்ந்து இசைப்ப
கார்வான் முழக்கின் நீர்மிசைத் தெவுட்டும்
தேரை ஒலியின் மான சீர்அமைத்து
சில்அரி கறங்கும்சிறுபல் லியத்தொடு
பல்ஊர் பெயர்வனர் ஆடி ஒல்லென
தலைப்புணர்ந்து அசைத்த பல்தொகைக் கலப்பையர்
இரும்பேர் ஒக்கல் கோடியர் … … (அகநானூறு 2004 ப13 பா301:16-23)

 

ஆண்யானையினதும் பெண்யானையினதும் ஓசை இணைந்தாற் போன்று ‘குறு நெடும் தூம்பு’; அவற்றுடன் ‘முழவு’ சேர்ந்து இசைப்பது, மழை மேகத்தின் இடியில் நீர் மேல் சப்திக்கும் தேரை ஒலி போலச் ‘சீர் அமைத்து சில் அரி கறங்கும் சிறு பல்லியம்’.

 

‘பல்தொகைக் கலப்பையர்’ – அவர்கள் கையாண்ட இசைக் கருவிகளுள் முழவு, கொடும்பறை, கிணை, தூம்பு, யாழ் முதலியன அடங்கும்.

 

இடை இட்ட உரை

 

பல்லியம் ஊர்வலங்களில் ஒலிக்கிறது. கோயில்களிலும் விழாக்களிலும் பேய் ஆட்டலிலும் பல்லியம் ஒலிக்கிறது.

 

காஞ்சிப் பாட்டிலும் கழைக் கூத்திலும் சிறு பல்லியம் இசை வழங்குவதாகக் கொள்ளலாம்.

 

கோடியர் கூத்தில் இசை வழங்குவது சிறு பல்லியம்.

 

இங்கு கோடியரையும் கண்ணுளரையும் ஒப்பு நோக்கலாம். இரு சாராரும் கூத்தர்கள். ஆனாலும் கோடியருக்குச் சிறு பல்லியமும், கண்ணுளருக்கு இன்னியமும் கூட்டிசைக் கருவிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது கவனத்திற்குரியது. முறையே அவர்கள் கலை வடிவங்களும் சமூக நிலைப்பாடும் மேலும் விரிவாக ஒப்பு நோக்கி ஆய்வு செய்யப்பட வேண்டும். அது இன்னொரு ஆய்வு.

 

பல்லியம் எங்கு ஒலிக்காது என்ற கேள்வியும் தொக்கு நிற்கிறது.

 

5.  பல்லியமும் குயிலுவமும்

 

இவ்வாறு வேறு வேறு இடங்களில் இன்னியமும் பல்லியமும் ஒலிப்பதாக எடுத்துக் காட்டினாலும் குறிப்பாக இரண்டும் வேறுபடும் ஒரு இடத்தை இலக்கியங்களில் சுட்டிக்காட்ட முடியுமா என்று பார்க்கவேண்டும்.

 

சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையில் மாதவியின் அரங்கேற்றத்தின் போது இரண்டு வகையான கருவிஇசைக் குழுக்களையும் காணலாம்.

 

தலையரங்கேறும் மாதவிக்கு தலைக்கோலை முன்வைத்து ‘தலைக்கோல்’ பட்டம் அளிக்க, ‘மன்னவன் கோயிலில்’ இருந்து தலைக்கோல் ஊர்வலமாகக் கொண்டுவரப்படுகிறது.

 

முரசெழுந் தியம்பப் பல்லிய மார்ப்ப
அரைசொடு பட்ட வைம்பெருங் குழுவும்
தெர்வலஞ் செய்து கவிகைக் பொடுப்ப
ஊர்வலஞ் செய்து புகுந்துமுன் வைத்தாங் (சிலப்பதிகாரம் 1950 ப72 பா125-128)

 

தலைக்கோல் ஊர்வலத்தில் பல்லியம் ஒலிக்கிறது. தலைக்கோல் அரங்கை அடைந்ததும் பல்லிய இசை முடிவுக்கு வருகிறது. குயிலுவ இசை அரங்கில் தொடங்குகிறது.

 

கியல்பினின் வழாஅ விருக்கை முறைமையிற்
குயிலுவ மாக்க ணெறிப்பட நிற்ப (ப73 பா 129-130)

 

ஆடலுடன் இணைகிறது குயிலுவம்:

 

கூடிய குயிலுவக் கருவிகளெல்லாம்
குழல்வழி நின்ற தியாழே யாழ்வழித்
தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப்
பின்வழி நின்றது முழவே முழவொடு
கூடிநின் றிசைத்த தாமந் திரிகை (ப73-74 பா138-142)

 

இதனால் பெறுவது, பல்லியம் ஊர்வலத்திற்கான வாத்திய வகை. குயிலுவம் செவ்வியல் ஆடல் பாடலுக்கான வாத்திய வகை. பல்லியம், குயிலுவம் அகிய இரண்டினதும் இசைத் துறைகள் வேறு.

 

பல்லியத்திற்கும் குயிலுவத்திற்கும் உள்ள வேறுபாடு தெரிகிறது. இதில் இன்னியம் எவ்வாறு ஒன்றுபடுகிறது, வேறுபடுகிறது.

 

6. குயிலுவமும் இன்னியமும்

 

துறை சார்ந்து பல்லியத்திற்கு வேறாகக் குயிலுவம் காணப்படுகிறது. அதேபோல பல்லியத்திற்கு வேறாக இன்னியமும் பார்க்கப்படுகிறது. குயிலுவம், இன்னியம் ஆகிய இரண்டும் பல்லியத்திற்கு வேறாக உள்ளதால், இரண்டும் ஒரு பொருளைக் குறிப்பனவா என்பது ஆய்வுக்குரியது.

 

குயிலுவமும் இன்னியமும் செவ்வியல் இசைத்துறை சார்ந்தவை; செவ்வியல் ஆடல் பாடல்களுடன் இணைந்து ஒலிப்பவை.

 

ஏலவே கண்ட தரவுகள்:

 

ஆடலும் வரியும் பாணியுந் தூக்கும்
கூடிய குயிலுவக் கருவியு முணர்ந்து

 

குயிலுவத்துடன் ஆடல், தூக்கு முதலியன கூறப்படுகின்றன.

 

நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்த
விசிவீங்கு இன்னியம்

 

வேறுபல் குரல ஒருதூக்கு இன்னியம்

 

இன்னியத்துடன் ஆடல், தூக்கு முதலியன கூறப்படுகின்றன.

 

இரண்டும் கண்ணுளருடன் தொடர்புடையவை.

 

கண்ணு ளாளர் கருவிக் குயிலுவர்
பண்ணியாழ்ப் புலவர் பாடற் பாணரோ
டெண்ணருஞ் சிறப்பி னிசைசிறந் தொருபால்

 

கண்ணுளருடன் கருவிக் குயிலுவர்.

 

சென்றது மன்எம் கண்ணுளம் கடும்பே
… … …
கூடுகொள் இன்னியம் கறங்க

 

கண்ணுளருடன் கூடுகொள் இன்னியம்.

 

இவ்வாறாக குயிலுவமும் இன்னியமும் ஒரு பொருளைக் குறிப்பன என்பதற்கு இலக்கிச் சான்றுகள் பல உள்ளன. பொருள் ஒன்றாக இருந்தாலும் இரு வேறு சொற்கள்.

 

சிலப்பதிகாரத்தில் உள்ள சொல் ‘குயிலுவம்’; 
சங்கஇலக்கியங்களில் ‘குயிலுவம்’ இல்லை.

 

சங்ககால இலக்கியங்களில் உள்ள சொல் ‘இன்னியம்’;
சிலப்பதிகாரத்தில் ‘இன்னியம்’ இல்லை.

 

சங்க இலக்கியத்திற்குப் பின் சிலப்பதிகாரத்தில் இல்லாமல் போன இன்னியம் சீவக சிந்தாமணியிலும் பெருங்கதையிலும் மீண்டும் ஒலிக்கிறது. இது மேலும் ஆய்வுக்குரியது.

 

முடிவுரை

 

ஏலவே கொண்ட தரவுகளைக் கூட்டிப் பார்க்கையில்:

 

செவ்வியல் அரங்கில் ஒலிப்பது இன்னியம்
செவ்வியல் அரங்கில் பல்லியம் ஒலிப்பதில்லை.

 

பொது வெளியில் ஒலிப்பது பல்லியம்.
பொது வெளியில் இன்னியம் ஒலிப்பதில்லை.

 

என, முடிவாகக் கூறலாம்.

 

ஆனாலும், கால வெள்ளத்தில், இசைக் கருவிகள் கலக்கின்றன; இசைக் கருவிகள் இடம் மாறுகின்றன.

 

அது வேறு ஆய்வு.

 

ஆதார நூல்கள்

 

அகநானூறு

2004, முதன்மைப் பதிப்பாசிரியர்கள்: முனைவர் தமிழண்ணல்,
முனைவர் சுப அண்ணாமலை, கோவிலூர் மடாலயம், கோவிலூர்.

 

கலித்தொகை

2003 முதன்மைப் பதிப்பாசிரியர்கள்: முனைவர் தமிழண்ணல்,
முனைவர் சுப அண்ணாமலை, கோவிலூர் மடாலயம், கோவிலூர்.

 

குறுந்தொகை

2002 முதன்மைப் பதிப்பாசிரியர்கள்: முனைவர் தமிழண்ணல்,
முனைவர் சுப அண்ணாமலை, கோவிலூர் மடாலயம், கோவிலூர்.

 

சிலப்பதிகாரம் இளங்கோவடிகள், அரும்பதவுரையும் அடியார்க்குநல்லலுரையும்

1950 டாக்டர் வே. சாமிநாதையரவர்கள், சென்னை, ஐந்தாம் பதிப்பு.

 

சீவகசிந்தாமணி திருத்தக்கதேவர், நச்சினார்க்கினியர் உரையும்

1949 டாக்டர் வே. சாமிநாதையரவர்கள், சென்னை, ஐந்தாம் பதிப்பு.

 

நற்றிணை

2003 முதன்மைப் பதிப்பாசிரியர்கள்: முனைவர் தமிழண்ணல்,
முனைவர் சுப அண்ணாமலை, கோவிலூர் மடாலயம், கோவிலூர்.

 

பத்துப்பாட்டு

2003 முதன்மைப் பதிப்பாசிரியர்கள்: முனைவர் தமிழண்ணல்,
முனைவர் சுப அண்ணாமலை, கோவிலூர் மடாலயம், கோவிலூர்.

 

புறப்பொருள் வெண்பாமாலை, ஐயனாரிதனார்

2004 திரு பொ.வே சோமசுந்தரனார் விளக்கவுரையுடன்.
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.

 

புறநானூறு

2003 முதன்மைப் பதிப்பாசிரியர்கள்: முனைவர் தமிழண்ணல்,
முனைவர் சுப அண்ணாமலை, கோவிலூர் மடாலயம், கோவிலூர்.

 

பெருங்கதை, கொங்கு வேளிர்

1953, டாக்டர் வே. சாமிநாதையரவர்கள், சென்னை.

 

மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார்

1998 டாக்டர் வே. சாமிநாதையரவர்கள், சென்னை.

 

Tamil Lexicon

1982 University of Madras, Madras.

 

 

[குறிப்பு: இக் கட்டுரை பற்றிய உங்கள் எண்ணங்களை ‘தொடர்பாடல்’ ஊடாக தெரியப்படுத்தவும், நன்றி.]