கண்ணுள் வினைஞரும் கண்ணுளரும்

ka00u;ar

 

Prelude

 

[?]

The derivation of ka00u;ar is not clear. The word is not found in DED. The Tamil Lexicon gives the meaning as actors, dancers, masqueraders, and filigree workers. But its treatment of this word would seem inadequate, in that it falls back on the Cil. for explaining the word’s meaning. Visvanatha pillai gives the meaning of the word as ‘artificers, persons in masquerade’ Likewise he gives the meaning of ka00u; as kuttu as ‘a masquerade ball’. Unfortunately he does not site any authority for such a derivation. Apparently he translates it by splitting it ka0, ‘eye’ + u; ‘inside’ = ‘eyes inside, thus concluding that ka00u;ar were dancers covered by masks. Ingenious as it may seem, the interpretation cannot be accepted. Nacc. suggests yet another etymology: ‘Since they “capture” the eyes of those who look at their art, they are called ka00u;ar’ . In deference to the celebrated commentator the least that can be said of this explanation is that it is a classic instance of folk-etymology. It appears that the word had undergone a radical change of meaning by the time of the post-Heroic epic Cilappitik1ram, in which it is used in the sense of talented painters or filigree workers. Nacc. himself in his commettary takes the word to mean dancers. In view of the unsatisfactory nature of the etymologies, it is perhaps better to reserve judgement on the meaning of this word (K. Kailasapathy, Tamil Heroic Poetry 2002 pp 108-109).

 

 

கண்ணுள் வினைஞரும் கண்ணுளரும்

 

 

அறிமுகம்

 

 

‘கண்ணுள்’ என்ற சொல்லைப் பொதுவாகக் கொண்டு ‘கண்ணுள் வினைஞர்’, ‘கண்ணுளர்’ என இரு சொற்கள் உள்ளன. அவற்றிற்குப் போதிய விளக்கம் இல்லை. அகராதிகள் சொற் பொருளும், உரையாசிரியர்கள் தெளிவுரைகளும் ஐயம்திரிபற விளக்கம் தருவனவாக இல்லை. ஆய்வுகளும் மயக்கம் தருவன. கூத்து பல வகையின. கண்ணுளரைக் கூத்தர் எனப் பொதுவாகக் கொண்டால் எவ்வகைக் கூத்தை ஆடுபவர்கள் என்ற கேள்வி எழுகிறது. கண்ணுள் வினைஞரைச் சித்திரக்காரர் என மட்டுப்படுத்திவிட முடியுமா? ஆகவே, மூலங்களைத் தேடியே விளக்கம் பெற வேண்டி உள்ளது. கண்ணுள் வினைஞர், கண்ணுளர் ஆகிய சொற்களை சங்க இலக்கியங்களில் தேடிப் பார்க்கலாம். இவ் வகையினரைச் சிலப்பதிகாரத்திலும் காணலாம். அவற்றைப் புரிந்து கொள்ள, முதலில் கண்ணுள் என்பதன் பொருளைக் காணவேண்டும்.

 

 

கண்ணுள்

 

 

‘கண்ணுள்’ வரும் பாடல் அடி:

 

கையதை அலவன் கண்பெற அடங்கச் சுற்றிய
கலவுறு கண்ணுள் சிலகோல் அவிர்தொடி (கலி 85: 6-7)

 

கையதை நண்டுக் கண் போன்று நெருக்கமாகச் சுற்றியமைத்த உடல் மூட்டுகளில் தங்கிய ‘கண்ணுள்’ சிறிது வளைந்த ஒளிவீசும் ஆபரணம்.

 

அணிகலன்களின் அழகிய வேலைப்பாட்டை விவரிக்கும்போது கண்ணுள் கூறப்படுகிறது.

 

இங்கு ‘கண்ணுள்’ என்ற சொல் விளக்கத்தை வேண்டி நிற்கிறது.

 

… … … நுண்வினை
இழையணி … … (நற் 138: 8-9)

 

அணிகலனுக்கு நுண்வினை அடைமொழியாவதைப் போலக் கண்ணுள் என்ற சொல்லும் கூறப்படுகிறது. கண்ணுள் என்ற சொல்லுக்கும் நுண்மை எனப் பொருள் கொள்ளலாம். நுண்மை என்பதற்கு ‘fine’ என்ற ஆங்கிலச் சொல்லில் பொருள் காணலாம் (Tamil Lexicon).

 

‘fine’ – நேர்த்தியான, செப்பமுடைய, அழகு வாய்ந்த, உயர்ந்த, மேன்மையான, பண்படுத்தப்பட்ட, சீர்செய்யப்பெற்ற, தெளிவான, தூய்மை மிக்க, கலப்பற்ற … (ஆங்கிலம்-தமிழ்ச் சொற்களஞ்சியம்)

 

அவற்றுடன் ‘fine arts’ என்ற சொல்லையும் காணலாம்,

 

fine arts – நுண்கலைகள், கவின் கலைகள், அழகுணர்ச்சி அல்லது கலையுணர்ச்சியைத் தூண்டும் கலைகள்.

 

கண்ணுள் என்ற சொல்லும் ‘நுண்மை’ என்ற புரிதலில் இவ்வளவு பொருள்களையும் தரும் எனக் கொள்ளலாம். கண்ணுள் பற்றிய இந்தப் புரிதலின் பின்புலத்தில் கண்ணுள் வினைஞர், கண்ணுளர் பற்றிப் பார்க்கலாம்.

 

 

கண்ணுள் வினைஞர்

 

எவ்வகைச் செய்தியும் உவமம் காட்டி
நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின்
கண்ணுள் வினைஞரும் (மது 516-518)

 

எவ்வகையான செய்தியையும் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு நுண்மையான உணர்வும், கூர்மையான பார்வையும் உடைய கண்ணுள் வினைஞர்.

 

இவர்களைச் ‘சித்திரகாரர்’ என்பர் (Tamil Lexicon) [?].

 

சிலப்பதிகாரத்தில் மதுரை மாநகர் வீதியில் கோவலன் கண்ட இன்னோரு வகைக் கண்ணுள் வினைஞர்:

 

கண்ணுள் வினைஞர் கைவினை முற்றிய
நுண்வினைக் கொல்லர் நூற்றுவர் பின்வர
மெய்ப்பை புக்கு விலங்கு நடைச் செலவிற்
கைக்கோற் கொல்லனைக் கண்டன னாகித்
தென்னவன் பெயரொடு சிறப்புப் பெற்ற
பொன்வினைக் கொல்ல னிவவனெப் பொருந்திக் (சிலப் 16: 105-110)

 

சித்திரக்காரர்களிலிருந்து வேறுபடுத்துவது கொல்லர் என்ற சொல்.

 

அரும்பதவுரையாசிரியர் உரை:

சிற்பத்தொழிலெல்லாம் துறைபோகிய கொல்லர் கம்மாளரது வினையாவது – சிற்பம்

 

அடியார்க்கு நல்லார் உரை:

உருக்குத் தட்டாரும் கைவினைமுற்றிய பணித்தட்டாருமாகிய நூற்றுவர் பின்வர அரச வரிசையாகிய சட்டையுடனே ஒதுங்கி நடந்து செல்லும் செலவினையும் கையிற் பிடித்த கொடிற்றையுமுடைய பொற் கொல்லனைக் கண்டனனாகிப் பாண்டியன் பெயரொடு வரிசைபெற்ற பொற்கொல்லன் இவனெனக் கருதி அணுகச் சென்று …

 

[இங்கு மேலதிகச் செய்தி ஒன்று உள்ளது:

 

தமிழ் மன்னர்கள் சிறப்புச் செய்யும்போது சிறப்பிக்கப்படுபவருக்குத் தங்கள் பெயரையும் சிறப்புப் பெயராகச் சூட்டிச் சிறப்பிப்பர். சோழப் பேரரசன் இராசராசன் கல்வெட்டுகளில் இராசராசப் பெருந்தச்சன், இராசராசப் பெரும் பறையன், இராசராச நாவிதன் எனப் பரவலாகக் காணலாம் என்பர் கல்வெட்டு ஆய்வாளர். பாண்டிய மன்னர்களும் இவ்வாறு தங்கள் பெயர்களைச் சூட்டிச் சிறப்புச் செய்தார்கள் எனச் சிலப்பதிகாரத்தில் காணலாம்.

 

தென்னவன் பெயரொடு சிறப்புப் பெற்ற

 

‘தென்னவன் பொற்கொல்லன்’ என்றோ அல்லது ‘செழியன் பொற்கொல்லன்’ என்றோ பெயர் சூட்டிச் சிறப்பித்திருக்கலாம். இது ஊகம் (speculation)].

 

அவ்வாறு அரசனால் சிறப்பிக்கப்பட்ட கண்ணுள் வினைஞன் பொற்கொல்லன்.

 

கண்ணுள் வினைஞர் என்றால்: ஓவியர்கள், சிற்பாசாரியர்கள், பொற் கொல்லர்கள் என மட்டுப்படுத்தி விடலாமா?

 

கண்ணுள் வினைஞர் என்போருக்கு வேறாகப் பொன்செய் கொல்லர் கூறப்பட்டுள்ளதைக் குடியிருப்பில் காணலாம்:

 

கஞ்சக் காரருஞ் செம்புசெய் குநரும்
மரங்கொஃ றச்சருங் கருங்கைக் கொல்லரும்
கண்ணுள் வினைஞரு மண்ணீட் டாளரும்
பொன்செய் கொல்லரு நன்கலந் தருநரும்
துன்ன காரருந் தோலின் றுன்னரும்
கிழியினுங் கிடையினுந் தொழில்பல பெருக்கிக்
பழுதில் செய்வினைப் பால்கெழு மாக்களும் (சிலப் 5: 28-34)

 

பொன்செய் கொல்லரையும் கண்ணுள் வினைஞர் என வகைப்படுத்தினால், குடியிருப்பில் ஏன் வேறு வேறாகக் கூறப்பட்டுள்ளனர் என்ற கேள்வி எழுகிறது. இங்கு கண்ணுள் வினைஞரைச் சிற்பாசாரியர்கள் எனக் கொள்ளலாம்.

 

இக் குடியிருப்பில் கூறப்பட்ட அனைவரும் ஆக்கும் தொழில் புரியும் கைவினைஞர்கள். இவர்களை ஒவ்வொருவராகத் தேடிப் பொருள் கொள்ளில் விரியும். (விளக்கத்திற்கு அடியார்க்கு நல்லார் உரையைப் பார்க்கவும்). விரிவஞ்சி இவர்களுள் கண்ணுள் வினைஞரை மட்டும் இனம் காணலாம்.

 

‘எவ்வகைச் செய்தியும் உவமம் காட்டி
நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின்’

 

‘கைவினை முற்றிய நுண்வினை’

 

ஆகிய விவரத்தால் கண்ணுள் வினைஞர் என்போர் நுண்மையான தொழில் புரியும் திறமை மிக்கவர்கள் எனப் பொதுவாகக் கொள்ளலாம்.

 

 

ஆக்குகலையும் ஆற்றுகலையும்

 

 

சங்க இலக்கியங்களில் ஆற்றுகலைகளின் தேடலில் ‘கண்ணுளர்’ பற்றிய அறிதலே இங்கு பெரிதும் வேண்டப்படுவது. அவர்களை இனங்காண முதலில் ஆக்குகலை, ஆற்றுகலை ஆகியவை பற்றிய புரிதல் வேண்டும்.

 

ஒரு பொருளில் வினைப் பயனால் ஆக்கம் பெறும் படைப்பு, உருவாக்கம் பெறும் போதும், உருவம் பெற்ற பின்பும், ஆக்கியோரின் வினைத் திறமையும், பண்பும் அடையாளம் காணக்கூடியதாக இருந்தாலும், ஆக்கியோரிடம் இருந்து பிரிந்து நிற்கும். ஆக்குகலைப் படைப்பு ஆக்கியோரிடம் இருந்து பிரிந்து வேறாய் நிற்கும் பருப்பொருள் ஆகும். இதுவே இவ்வகைக் கலை ஆக்கத்தின் குணாம்சம். ஓவியம் சிற்பம் ஆகியவை இவ்வகை நுண் ஆக்கு கலைகள். அவற்றை ஆக்குபவர்களைக் ‘கண்ணுள் வினைஞர்’ எனக் குறிப்பாகக் கூறலாம்.

 

இவற்றுக்கு வேறான பண்பையே ஆற்றுகலை கொள்கிறது. ஆற்றுகலைஞரையும் ஆற்றுகலைப் படைப்பையும் பிரிக்கமுடியாது. ஆற்றுகலைப் படைப்பை ஆற்றப்படும் போதே பெறமுடியும், முன்பும் பெறமுடியாது, பின்பும் பெறமுடியாது. அது கலைஞராலும் முடியாது, கொள்வோராலும் முடியாது. அது நிகழ் கலை. அது வினைப் பயனால் உருவான வேறு ஒரு பருப்பொருள் அல்ல. அதுவே வினை. ஆதுவே பயன். அதுவே கலைஞரின் ஆளுமை. இசை, நடனம், நடிப்பு ஆகியவை ஆற்றப்படும் நுண் கலைகள் (Performing Fine Arts). இதில் எஞ்சுவது சூக்குமப் பொருளான உணர்வு மட்டுமே. இப் பின்புலத்தில் கண்ணுள் வினைஞரை வேறுபடுத்திக் கண்ணுளரை அணுகலாம்.

 

 

கண்ணுளர்

 

 

கண்ணுளர் குடியிருப்பை முதலில் காணலாம்:

 

சூதர் மாகதர் வேதா ளிகரொடு
நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர்
காவற் கணிகைய ராடற் கூத்தியர்
பூவிலை மடந்தைய ரேவற் சிலதியர்
பயிறொழிற் குயிலுவர் பன்முறைக் கருவியர்
நகைவே ழம்பரொடு வகைதெரி யிருக்கையும் (சிலப் 5:48-53)

 

கண்ணுள் வினைஞர் குடியிருப்பிலும் வேறானதாகக் கண்ணுளர் குடியிருப்பு காணப்படுகிறது. அங்கு ஆக்குனர்கள், இங்கு ஆற்றுனர்கள். ஆற்றுனர்கள் சேவைத் துறையினர் (service sector).

 

service – work done by an organizaqtion or person that does not involve producing goods (Marriam Wbster – Learners Dictionary). 

 

பல ஆற்றுனர்கள் கூடி வாழும் குடியிருப்பாக இது உள்ளது (தொழில் விளக்கத்திற்கு அடியார்க்கு நல்லார் உரையைப் பார்க்க). அவர்களில் ஆற்று கலைஞர்களாகிய ஆடற்கூத்தியர், பன்முறைக் கருவியர், நகைவேழம்பர் ஆகியோரும் கூறப்படுகின்றனர். அவர்கள் பற்றியது விரிவான வேறு ஆய்வு. அவர்களுடன் கண்ணுளரும் கூறப்படுகின்றனர். இங்கு கவனத்தைப் பெறுவது கண்ணுளர். ஆற்றுகலைஞர் மத்தியில் வேறுபட்ட பல கலைக் குழுக்கள் உள்ளன. அவர்களுள் கண்ணுளர் ஒரு பிரிவு.

 

கண்ணுளருக்கு வேறாகப் ‘பயிறொழிற் குயிலுவர்’ கூறப்படுகின்றனர். பயில்தல் – கற்றல், learn by practice as an art (Tamil Lexicon). ‘பயிறொழிற் குயிலுவர்’ கண்ணுளர் வரிசையில் வைத்துக் கூறப்படவில்லை என்பது கவனத்திற்குரியது. அவர்கள் இன்னும் கண்ணுளருக்கான தகுதியைப் பெறவில்லை.

 

குடி இருப்பில் ஏனைய ஆற்றுனர்களுடன் கூடி வாழும் கண்ணுளருக்கு அரங்கில் தனியான இடம் உண்டு:

 

… கரந்துபோக்கிடனும், கண்ணுளர் குடிஞைப்பள்ளியும், அரங்கமும், அதனெதிர் மன்னர் மாந்தரோடிருக்கும் அவையரங்கமும், இவற்றினைச் சூழ்ந்த புவிநிறைமாந்தர் பொருந்திய கோட்டியும் முதலாயின கொள்க (சிலப் 3: 105 – அடியார்க்குநல்லார் உரை).

 

சிலப்பதிகார மாதவி ஆடிய அரங்கில் மாதவிக்கான தங்கும் இடம் ‘கண்ணுளர் குடிஞைப் பள்ளி’. மாதவியுடன் ஏனைய கூத்தியரும், அவர்களுடன் ‘ஆடற் கமைந்த வாசான்’, ‘அசையா மரபின் இசையோன்’, ‘தண்ணுமை யருந்தொழின் முதல்வன்’, ‘வழுவின் றிசைக்கும் குழலோன்’, ‘இசைசெய்யவல்ல யாழாசிரியன்’ ஆகியோரும் கண்ணுளர் வரிசையில் வைத்து எண்ணப்படுவர்.

 

இவர்களைக் கூட்டாக வேறு ஓர் இசை நிகழ்ச்சியிலும் காணலாம்:

 

கண்ணு ளாளர் கருவிக் குயிலுவர்
பண்ணியாழ்ப் புலவர் பாடற் பாணரோ
டெண்ணருஞ் சிறப்பி னிசைசிறந் தொருபால் (சிலப் 5: 184-186)

 

இசை நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் கலைஞர்கள்: கருவிக் குயிலுவர், பண்ணியாழ்ப் புலவர், பாடற் பாணர் ஆகியோர். இவர்களைக் கண்ணுளாளர் என்பர். கண்ணுளர், கண்ணுளாளர் ஆகிய இரு சொற்களும் ஒரு பொருளைத் தருவன.

 

அவர்களின் ஆடல் பாடல் பண்பட்டது, ‘நன்னூல்’ நெறி முறையில் அமைவது என்பதை சிலப்பதிகார மாதவியின் அரங்கேற்றத்தில் காணலாம்:

 

பாடிய வாரத் தீற்றினின் நிசைக்கும்
கூடிய குயிலுவக் கருவிகளெல்லாம்
குழல்வழி நின்ற தியாழே யாழ்வழித்
தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப்
பின்வழி நின்றது முழவே முழவொடு
கூடிநின் றிசைத்த தாமந் திரிகை
ஆமந் திரிகையோ டந்தர மின்றி (சிலப் 3:137-143)

 

குயிலுவக் கருவிகளின் கூட்டிசையுடன் மாதவியின் அரங்கேற்றம் நிகழ்கிறது.

 

கண்ணுளர் குழுவினரைச் சங்கப் பாடல்களில் காணலாம்:

 

அமைவரப் பண்ணி அருள்நெறி திரியாது
இசைபெறு திருவின் வேத்தவை ஏற்பத்
துறைபல முற்றிய பைந்தீர் பாணரொடு
… … …
கணங்கொள் தோகையின் கதுப்பு இகுத்து அசைஇ
விலங்குமலைத்து அமர்ந்த சேயரி நாட்டத்து
இலங்குவளை விறலியர் நின்புறம் சுற்றக்

 

கயம்புக் கன்ன பயம்படு தண்ணிழல்
புனல்கால் கழீஇய மணல்வார் புறவில்
புலம்விட்டு இருந்த புனிறுஇல் காட்சிக்
கலம்பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ (மலை 38-50)

 

இங்கு கண்ணுளர் தலைவனின் சுற்றமாகப் பாணரும் விறலியரும் உள்ளனர். கண்ணுளர் என்பது தனிப்பட்ட முறையில் பாணரை அல்லது விறலியரை மட்டும் குறிக்காது. கண்ணுளர் நுண்கலை ஆற்றுனர் யாவரையும் குறிக்கும் சொல். கூத்தர் என்பது ஆடிப்பாடும் எல்லோருக்கும் பொதுவான ஒரு சொல். கூத்தருள் குறிப்பிட்ட ஆற்றுகலைக் குழுமத்தைக் குறிக்கும் சொல், கண்ணுளர்.

 

… … … ஆதன் ஓரி
மாரி வண்கை காணிய நன்றும்
சென்றது மன்எம் கண்ணுளம் கடும்பே
பனிநீர்ப்பூவா மணிமிடை குவளை
வால்நார்த் தொடுத்த கண்ணியும் கலனும்
யானை இனத்தொடு பெற்றனர் நீங்கிப்
பசியார் ஆகன் மாறுகோல் விசிபிணிக்
கூடுகொள் இன்னியம் கறங்க
ஆடலும் ஒல்லார்தம் பாடலும் மறந்தே (புற 153: 4-12)

 

ஆதன் ஓரி என்ற மன்னனிடம் போதிய கொடையைப் பெற்றதால் கண்ணுளம் கடும்பு ஆடல் பாடல் மறந்தனர் என்பது செய்தி.

 

இங்கு கவனத்தில் கொள்ளவேண்டியவை: கண்ணுளம் கடும்பு, விசிப்பிணிக் கூடுகொள் இன்னியம் ஆகிய இரு சொற்தொடர்கள்.

 

கண்ணுளம் கடும்பே – கண்ணுளர் சுற்றம்

விசிபிணிக் கூடுகொள் இன்னியம் – கட்டப்பட்ட கூடுகொள் இன்னியம்

 

சங்க இலக்கியத்தில் இன்னியம் என்பதும், சிலப்பதிகாரத்தில் குயிலுவம் என்பதும் கண்ணுளரின் இசைக் கருவிகளை வகைப்படுத்தும் சொற்கள். அவை பண்ணியல் கூட்டிசைக் கருவிகள். இன்னியம், குயிலுவம் ஆகிய இசைக் கருவிகளைக் கொண்டும் கண்ணுளரை இனம் காணலாம்.

 

மேலும் கண்ணுளர் பரிசில் பெறும் ஒரு பாடல்:

 

வரிஉளை மாவும் களிறும் தேரும்
வயிரியர் கண்ணுளர்க்கு ஓம்பாது வீசிக் (பதி 20: 16)

 

பரிசில் பெறும் இடத்தில் கண்ணுளர்க்கு வேறாக ‘வயிரியர்’ கூறப்படகின்றனர். வயிரியர் வேறு வகைக் கலைஞர். இப் பகுதியைக் கண்ணுளர் விளக்கத்துடன் முடித்துக் கொள்ளலாம்.

 

 

தேற்றம்

 

கண்ணுள் வினைஞர் பற்றி சங்க இலக்கியங்களில் ஓர் இடத்திலும் சிலப்பதிகாரத்தில் இரண்டு இடங்களிலும் குறிக்கப்பட்டுள்ளது. கண்ணுளர் பற்றி சங்க இலக்கியங்களில் மூன்று இடங்களிலும் சிலப்பதிகாரத்தில் இரண்டு இடங்களிலும், அடியார்க்குநல்லார் உரையிலும், குறிக்கப்பட்டுள்து. அங்கு கூறப்பட்டுள்ள விளக்கங்களுடன் ‘கண்ணுள்’ என்பதைக் கண்டுகூட்டி முடிவாகக் கூறலாம்:

 

கண்ணுள் வினைஞர் – துறைபோகிய நுண்கலை ஆக்குனர்
கண்ணுளர் – துறைபோகிய நுண்கலை ஆற்றுனர்

 

பாணர், விறலியர் ஆகிய கண்ணுளாளர் குழுமத்தை ஏனைய ஆற்று கலைஞர்களில் இருந்து வேறுபடுத்திக் கூறுவதாயின், இவர்களைப் பண்பட்ட கலை பயில்வோர் என வகைப்படுத்தலாம். இன்றைய செவ்வியல் கலை (Classical Arts) பயில்வோர்களுடன் ஒப்பு நோக்கலாம். ஏனைய கூத்தர்களிடம் இருந்து கண்ணுளரை வேறுபடுத்துவது இவர்களது செவ்வியல் பாங்கே.

 

 

உசாத்துணை

 

இலக்கியங்கள்:

 

கலித்தொகை (கலி)
பதிற்றுப்பத்து (பதி)
மதுரைக் காஞ்சீ (மது)
மலைபடு கடாம் (மலை)
சிலப்பதிகாரம் (சிலப்)

 

ஏனையவை:

 

Kailasapathy, K 2002 Tamil Heroic Poetry, Kumaran Book House, Colombo.

ஆங்கிலம் – தமிழ்ச் சொற்களஞ்சியம்

Tamil Lexicon

Marriam Wbster – Learners Dictionary

 

 

[குறிப்பு: இக் கட்டுரை பற்றிய உங்கள் எண்ணங்களை ‘தொடர்பாடல்’ ஊடாக தெரியப்படுத்தவும், நன்றி.]