முதலுரை
குயிலுவம், ஆமந்திரிகை, என இசைத்துறைக் கலைச் சொற்கள் தமிழ் இலக்கியங்களில் உள்ளன. பழைய புதிய உரையாசிரியர்கள் பலரின் உரைகள் மயக்கம் தருவன. ஆகவே, அவற்றைக் கடந்து நேராகவே இலக்கிய மூலங்களைத் தேடிப் பொருள் காணலாம். பழம் பெரும் தமிழ் இலக்கியங்களில் எங்கெல்லாம் குயிலுவம், ஆமந்திரிகை, ஆகிய சொற்கள் வருகின்றனவோ, கூடியவரை அங்கெல்லாம் தேடிக் கண்டு பொருள் கொள்வதே இவ் ஆய்வின் நெறிமுறை. ஒவ்வொரு சொல்லாகத் தேடி இலக்கியங்களுக்குள் பயணிக்கலாம்.
1 குயிலுவம்
முதலில் குயிலுவம்பற்றிப் பார்க்கலாம். குயிலுவம் என்றால் ‘வாத்தியம் வாசிக்கை’ (Tamil Lexicon), எனப் பொதுவாகப் பொருள் கூறிவிடலாம். ஆனால், பல இடங்களில் மாறுபாடான பொருள் கூறப்படுகிறது. ஆகவே குயிலுவம் ஒட்டிய சொற்கள் தேடலுக்கு உட்படுத்தப்படுகின்றன.
1 – 1 நிகண்டுகள்
குயிலுவர் நரம்பின் ஆய
கருவியைக் கொளுத்தும் மாக்கள்
இயலும்தோல் கருவியாளர்
இயவராம் … (சூடாமணி நிகண்டு 1999 ப334 பா140)
குயிலுவர் – நரம்பால் செய்யப்பட்ட கருவியை மீட்டுபவர்.
இயவர் – தோலால் செய்யப்பட்ட கருவியை முழக்குபவர்.
குயிலுவர் என்றால் நரம்புக் கருவியாளர்;
இயவர் என்றால் தோற் கருவியாளர்;
என, பிங்கலம், கயாதரம், நாமதீபம் ஆகிய நிகண்டுகளும் பொருள் கூறுகின்றன (ப335). மேலும்,
குயிலுவர், நரம்புக்கருவி கொளற்குரியர் (சேந்தன் திவாகரம ப32)
குயிலுவத்தொழிலே நரம்புமுன் கருவி
பயிலும் பாடல் பண்பிற் றாகும் (சேந்தன் திவாகரம் ப217)
நரம்புக் கருவியோர் நாமங் குயிலுவர்
தோற்கருவி மாக்கள் இயவர் குணங்கர் (அபிதானமணிமாலை 1988 ப41 பா266-267)
இசைக் கருவிகளை வகைப்படுத்தி நிகண்டுகள் கூறும் சொற் பொருளை ஆய்வுக்கு அடித்தளமாகக் கொள்ளலாம் என்றால், இலக்கியச் சான்றுகள் வேறாக உள்ளன.
1 – 2 சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையில்:
கியல்பினின் வழாஅ விருக்கை முறைமையிற்
குயிலுவ மாக்க ணெறிப்பட நிற்ப (1950 ப73 பா129-130)
அரும்பதவுரையாசிரியர் உரை:
குயிலுவ மாக்க ணெறிப்பட நிற்பவென்றது – குயிலுவக் கருவியாளர் நிற்கக்கடவ முறைமையிலே நிற்பவென்றவாறு.
குயிலுவர் – இடக்கை முதலான கருவியாளர் (ப73)
அடியார்க்குநல்லாரும் அவ்வாறே சற்று விரித்து உரை கூறுவார்:
முறைமையாவது:- ஆடிட முக்கோ லாடுவார்க் கொருகோல், பாடுநர்க் கொருகோல் லந்தர மொருகோல், குயிலுவர் நிலையிட மொருகோல் … (ப117).
என ஆடுகளத்தை வகுத்து குயிலுவருக்கான இடத்தையும் குறிப்பார்.
இந்திரவிழாவூரெடுத்தகாதையில் மக்கள் கூட்டத்தை வேறு வேறாகக் கூறும் இடத்து, குயிலுவர் சேர் இசைக் கூட்டமும் கூறப்படுகிறது:
கண்ணு ளாளர் கருவிக் குயிலுவர்
பண்ணியாழ்ப் புலவர் பாடற் பாணரோ
டெண்ணருஞ் சிறப்பி னிசைசிறந் தொருபால் (ப148 பா184-186)
அடியார்க்குநல்லார் உரை:
கருவிக் குயிலுவர் – தோற் கருவி வாசிப்போர் (ப168)
சிலப்பதிகார உரைகள், நிகண்டு கூறும் பொருளுக்கு வேறாக உள்ளன.
இங்கு கவனத்திற்குள்ளாவது, குயிலுவர் செவ்வியல் இசைவாணர்களுடன் இணைத்துக் கூறுப்படுகின்றனர்.
ஊர்காண் காதையில் தலைக்கோலரிவையுடன் குயிலுவக் கருவி:
ஆடலும் வரியும் பாணியுந் தூக்கும்
கூடிய குயிலுவக் கருவியு முணர்ந்து
நால்வகை மரபி னவினக் களத்தினும்
ஏழ்வகை நிலத்தினு மெய்திய வரிக்கும்
மலைபருஞ் சிறப்பிற் றலைக்கோ லரிவையும்
வாரம் பாடும் தோரிய மடந்தையும்
தலைப் பாட்டுக் கூத்தியு மிடைப்பாட்டுக் கூத்தியும் (ப361 பா150-156)
ஆடல் பாடல் கூத்தியருடன் குயிலுவர் கூடி இசைப்பதைக் காணலாம்.
கால்கோட் காதையில் மன்னனைக் காண வந்த கூட்டத்திலும் நாடக மகளிருடனே குயிலுவர் வருவதைக் காணலாம்.
நாடக மகளிரீ ரைம்பத் திருவரும்
கூடிசைக் குயிலுவ ரிருநூற் றெண்மரும் (ப535 பா138-139)
நாடக மகளிரு நலந்தகு மாக்களும்
கூடிசைக் குயிலுவக் கருவி யாளரும் (ப536 பா141-142)
இவ்வாறாகச் செவ்வியல் பாடல் ஆடல்களுடன் இணைத்தே குயிலுவம் கூறுப்படுகிறது. குயிலுவம் என்றால் ‘வாத்தியம் வாசிக்கை’ என ஏலவே கண்டோம். ‘கூடிசைக் குயிலுவ …’ என்பதால் பல இசைக் கருவிகளின் கூட்டிசை எனப் பொருள் கொள்ளலாம். ஆகவே அவ் இசைக் கருவிகள் யாவை?
ஆய்ச்சியர் குரவையில் குயிலுவருள் நாரதனார் நரம்புக் கருவியை வாசிப்பார் என்ற பாடல் அடிகள்:
குயிலுவரு ணாரதனார் கொளைபுணர்சிர் நரம்புளர்வார் (ப442 பா27:4)
குயிலுவக் கருவியுள் நரம்புக் கருவியும் கூறப்படுவதைக் காணலாம்.
1 – 3 மணிமேகலை
மணிமேகலை துயிலேழுப்பிய காதையில்:
ககன்மனை யரங்கத் தாசிரியர் தம்மொடு
வகைதெரி மாக்கட்கு வட்டணை காட்டி
ஆடல் புணர்க்கு மரங்கியன் மகளிரிற்
கூடிய குயிலுவக் கருவிகண் டுயின்று
பண்ணுக்கிளை பயிரும் பண்ணியாழ்த் தீந்தொடை
கொளைவல் லாயமோ டிசைகூட் டுண்டு (1961 ப88 பா42-47)
ஆடல் மகளிருடனும் பண்ணிசையுடனும் கூடியே குயிலுவம் இசைக்கப்படுகிறது. குயிலுவக் கருவியுள் யாழ் கூறப்படுகிறது.
குயிலுவர் களதொறும் பண்ணியம் பரந்தெழக் (ப95 பா 123)
குயிலுவர் களதொறும் என்பதற்கு ‘தோற்கருவி வாசிப்பாருடைய இடங்களெல்லாம்’ என உ.வே.சாமிநாதையர் அரும்பதஉரையில் கூறுவார். இங்கும் உரை மாறுபடுகிறது. இங்கு கவனத்திற்குள்ளாவது, குயிலுவம் அது பண்ணியம். பண்ணியம் என்றால் பண்பட்ட கருவி இசை எனக் கொள்ளலாம்.
நிகண்டுகள் குயிலுவர்க்கு வேறாக இயவரைக் கூறுவதால், அடுத்து இயவரைத் தேடலாம்.
1 – 4 சங்க இலக்கியம்
(1) ஐங்குறுநூறு
தட்டை, தண்ணுமை ஆகிய இசைக்கருவிகளுடன் இயவரின் குழலும் ஒலித்தவாறு:
தட்டைத் தண்ணுமைப் பின்னர் இயவர்
தீங்குழல் ஆம்பலின் இனிய இமிரும் (2003 ப257 பா 215: 3-4)
புன்புறப் பேடை சேவல் இன்புற
மன்னர் இயவரின் இரங்கும் கானம் (ப475 பா425: 1-2)
மன்னர் இயவரின் – மன்னர்களுக்கு அருகில் இருந்து இயக்கும் வாத்தியக்காரர்களைப் போல
பெடை சேவலை மகிழ்விக்க எழுப்பும் ஓசை இயவரின் இசைக்கு ஒப்பீடு.
(2) நற்றிணை
இயவர் குழல் ஊதிய வாறு:
இம்மென் பெருங்களத்து இயவர் ஊதும்
ஆம்பலங் குழலின் ஏங்கிக் (2003 ப148 பா113: 10-11)
பெருங்களத்து இயவர் – அமர்க்களத்தில் இயவர் (ப149)
(3) பதிற்றுப் பத்து
இயவர், எதிரி நாட்டுக் காவல் மரம் அறுத்துச் செய்த முரசு கொட்டியவாறு:
கடம்புஅறுத்து இயற்றிய வலம்படு வியன் பணை
ஆடுநர் பெயர்ந்துவந்து அரும்பலி தூஉய்க்
கடிப்புக் கண்ணுறூஉம் தொடித்தோள் இயவர் (2003 ப45 பா17: 5-7)
போர்க்களத்தில் இயவர் முரசறைந்தவாறு:
செங்கள விருப்பொடு கூலம் முற்றிய
உருவச் செந்தினை குருதியொடு தூஉய்
மண்உறு முரசம் கண்பெயர்ந்து இயவர்
கடிப்புஉடை வலத்தர் தொடித்தோள் ஓச்ச (ப50 பா 5-8)
போர்க்களத்தில் தோற்ற படையின் இயவர் அஞ்சியவாறு:
பேஎ மன்ற பிறழநோக்கு இயவர்
ஓடுஉறு கடுமுரண் … (ப276 பா 10-11)
பேஎ மன்ற – அச்சம் மிக
பிறழ நோக்கு இயவர் – திகைத்துப் பார்க்கும் இயவர்
இவற்றால் பெறுவது: இயவர் என்போர் போர்க்கள இசைக்கருவியாளர்கள். அவர்கள் முரசும் அறைவார்கள், ஆம்பற்குழலும் ஊதுவார்கள்.
‘பூசல் அறியா நல்நாட்டு’ இயவர் இருந்தவாறு:
சுரியல்அம் சென்னிப் பூஞ்செய் கண்ணி
அரியல் ஆர்கையர் இனிதுகூடு இயவர் (ப84 பா27: 4-5)
சுருண்ட அழகிய தலையில் பூவால் செய்த மாலை; கள் உண்பவர்கள்; இனிதாயிருக்கும் இசைக்கருவிகளை உடைய இயவர்.
இவ்வாறு இருந்தவர்களும் போரில் ‘சிதைந்து’ போனார்கள் என்பது இப்பாடல் தொடர்ந்து கூறும் செய்தி.
(4) பத்துப்பாட்டு
இயவரின் வாத்திய ஓசைக்கு ஒரு விளக்கம்:
இருவெதிர்ப் பைந்தூறு கூர்எரி நைப்ப
நிழத்த யானை மேய்புலம் படர
கலித்த இயவர் இயம்தொட் டன்ன (2003 ப314 மதுரைக்காஞ்சி பா 302-304)
இரு வெதிர்ப் பைந் தூறு – பெரிய மூங்கிலின் பசிய அடிப்பாகங்களை
கூர்எரி நைப்ப – மிக்க நெருப்பு சுட்டு அழிக்க
நிழத்த யானை – வலுவிழந்த யானை
மேய் புலம் படர – மேய்ச்சல் நிலம் நோக்கிச் செல்ல
கலித்த – உண்டான ஒலி
இயவர இயம் தொட்டன்ன – இயவர் இசைக் கருவிகளை இயக்கியது போன்றது
எரிந்த மூங்கில் அடிப்பாகங்களில் யானையின் கால் பட்டு எழுந்த ஒலி,; இயவர் இசைக் கருவிகளின் ஓசைக்கு ஒப்பீடு.
(5) அகநானூறு
… … … யாமை
கம்புள் இயவன் ஆக விசிபிணித்
தெண்கண் கிணையின் பிறழும் … (2004 ப138 பா3-4)
வானம்பாடிப் பறவை இயவனுக்கு ஒப்பீடு; அவனுடைய கிணை ஆமைக்கு ஒப்பிடு. இயவரின் இசைக் கருவிகளுள் கிணையும் கூறப்படுவதைக் காணலாம்.
(6) புறநானூறு
இயவரும் அறியாப் பல்லியம் கறங்க (2003 ப478 பா336: 6)
இயவர் என்றால் இசைவல்லார் எனப் பொதுப்பட பொருள் கூறுவர்.
இயவருக்கும் பல்லியத்துக்கும் உள்ள தொடர்பு ஆய்வுக்குரியது. பல்லியம் ஆய்வில் காணலாம்.
இடை இட்ட உரை
இது, குயிலுவம், ஆமந்திரிகை ஆகிய இரு இசைத்துறைக் கலைச்சொற்களின் பொருள் தேடல். குயிலுவர், இயவர் ஆகிய இரு சாரார்பற்றி நிகண்டுகள், அகராதிகள், உரைகள் முதலியன இடையில் ஏற்படுத்திய குழப்பத்திற்குத் தீர்வு காணவேண்டியுள்ளது. ஏலவே கண்டுகொண்ட தரவுகளுக்கு அமைய குயிலுவர், இயவர் ஆகிய இரு குழுவினரின் பயில் களங்களும் இசைக் கருவிகளும் ஓசை நயங்களும் வேறானவை என முடிவாகக் கூறலாம்.
இயவர் – போராடுகள இசைக் கருவியாளர்கள்
இயவர் இசைக் கருவிகள் பெரோசையுடைய முரசம், கிணை, தட்டை, தண்ணுமை, ஆம்பற்குழல் போன்றவை.
குயிலுவர் – செவ்வியல் இசைக் கருவியாளர்கள்.
செவ்வியல் கூத்தாடுகளத்தில் பண்ணியம் இசைப்பவர்கள்.
குயிலுவக் கருவிகளை ‘ஆமந்திரிகை’ யில் முழுமையாகக் காணலாம்.
2. ஆமந்திரிகை
இலக்கியங்களில் குயிலுவக் கருவிகள் ஒலிக்கும் இடங்களைத் தேடி ஆமந்திரிகையை அறியலாம்.
2 – 1. சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையில் குயிலுவக் கருவிகளின் கூட்டிசை:
கூடிய குயிலுவக் கருவிகளெல்லாம்
குழல்வழி நின்ற தியாழே யாழ்வழித்
தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப்
பின்வழி நின்றது முழவே முழவொடு
கூடிநின் றிசைத்த தாமந் திரிகை
ஆமந்திரிகையோ டந்தர மின்றிக் (1950 ப73-74 பா138-143)
குயிலுவக் கருவிகள்: குழல், யாழ், தண்ணுமை, முழவு.
அரும்பதவுரையாசிரியர் உரை (ப74):
முழவோடு கூடிநின்றிசைத்த தாமந்திரிகையென்றது – முழவோடுகூடிநின்ற வாச்சியக் கூறுகளை அமைத்தது ஆமந்திரிகை யென்னும் கருவியென்றவாறு.
ஆமந்திரிகையாவது – இடக்கை. நின்றது கருவியென்னாது ஓசை என்க.
ஆமந்திரிகையோடந்தரமின்றியென்றது – இவ்வாமந்திரிகையோடே முன் சொன்ன குயிலுவக்கருவிகள் அனைத்தும் பருந்தும் நிழலும்போல ஒன்றாய் நிற்பவென்றவாறு.
அடியார்க்கு நல்லார் உரையும் அச்சொட்டாக அவ்வாறே அமையும் (ப118-119).
வே.சாமிநாதையரவர்கள் அடிக்குறிப்பு (ப74):
(1) மதுரைக்காஞ்சி 605-6. அடி139-43 “குழல்வழி யாழெழீஇத் தண்ணுமைப் பின்னர், முழவியம்ப லாமந் திரிகை” (சீவகசிந்தாமணி 124, 675 நச்சினார்க்கினியர் மேற்கோள்)
அடிக்குறிப்பிற்கு விளக்கம்:
மதுரைக்காஞ்சி (மது 605-606):
குரல்புணர் நல்யாழ் முழவோ டொன்றி
நுண்ணீ ராகுளி யிரட்டப் பலவுடன்
நச்சினார்க்கினியர் உரை:
குரலென்னு நரம்பு கூடின வன்னம் நன்றாகிய யாழுடனே முழவும் பொருந்தி, மெல்லிய நிர்மையினையுடைய சிறுபறை யொலிப்ப. (பத்துப்பாட்டு 2017, மதுரைக்காஞ்சி 481)
‘பூசைக்குவேண்டும் பொருள்கள் பலவற்றுடனே’ ஒலித்த இசைக் கருவிகளைக் குறிக்கிறது. இங்கு ஆமந்திரிகை கூறப்படவில்லை.
சீவகசிந்தாமணியில் நச்சினார்க்கினியர் மேற்கோள் காட்டுவது கூத்தநூல் சூத்திரமாகும். இதன் விளக்கத்தைச் சீவகசிந்தாமணியில் காணலாம்.
(2) “குழலெழீஇ யாழெழீஇத் தண்ணுமை … … ஆமந்திரிகை என்று கூத்தநூலுடையாரும் சொன்னார்” இறையானரகப்பொருள் 40 உரை
மேற்கோள்)
அடிக்குறிப்பிற்கு விளக்கம்:
காதற் பரத்தை எல்லார்க்கும் உரித்தே (சூத்திரம் – 40)
இச்சூத்திரத்திற்குக் கூறிய உரையில்:
… பரத்தையர் குழலூதி யாழெழீஇத் தண்ணுமையியக்கி முழவியம்பித் தலைமகனை இங்குக் கூத்துண்டு என்பது அறிவிப்ப; என்னை,
குழல்வழி யாழெழீஇத் தண்ணுமைப் பின்னர்
முழவியம்ப லாமந் திரிகை
என்று கூத்தநூலுடையாரும் சொன்னாராகலின் … (இறையனார் அகப்பொருள் (ப172-73).
நக்கீரநார் இவ்வுரையில் ஆமந்திரிகை என்ற சொல்லுக்கு விளக்கம் கூற விழையவில்லை.
உரைகள் மேலும் விளக்கத்தை வேண்டிநிற்கின்றன.
2 – 2 சீவகசிந்தாமணி
சீவகசிந்தாமணி நாமகளிலம்பம் என்ற பகுதியில் வரும் பாடல் அடி ஒன்றுக்கு நச்சினார்க்கினியர் உரை வகுக்கையில்:
புரிவளர் குழலொடு பொலீமலி கவினிய (1949 ப70 பா124)
புரிவளர்குழல் – நரம்பிடத்து இசைவளர்தற்குக் காரணமாகிய குழல்;
“குழல்வழி யாழெழீஇத் தண்ணுமைப் பின்னர், முழவியம்ப லாமந் திரிகை” (கூத்தநூல்).
இது குழலின் முதன்மை பற்றியதன் விளக்கம்.
காந்தருவதத்தையாரிலம்பம் என்ற பகுதியில் வரும் பாடல்:
தோற்பொலி முழவும் யாழுந் துளைபயில் குழலு மேங்கக்
காற்கொசி கொம்பு போலப் போந்துகைத் தலங்கள் காட்டி
மேற்பட வெருவி நோக்கித் தானையை விட்டிட் டொல்கித்
தோற்றினாண் முகஞ்செய் கோலந் துளக்கினாண் மனத்தை யெல்லாம் (ப333 பா675)
அதற்கான உரையிலும் ஏலவே கூறிய மேற்கோள்:
குழல்வழி யாழெழீஇத் தண்ணுமைப் பின்னர்
முழவியம்ப லாமந்திரிகை
… … … ஏங்க – இவை மூன்றுங் கூடியிசைப்ப, இவை ஆமந்திரிகையாம்.
‘கூடி இசைப்ப’ என்பதில் ஆமந்திரிகை விளக்கம் பெறுகிறது.
பல உரைகளில் எடுத்தாளப்பட்ட கூத்தநூல் சூத்திரம்:
குழல்வழி யாழெழீஇத் தண்ணுமைப் பின்னர்
முழவியம்ப லாமந்திரிகை
ஆமந்திரிகைக்கு வரைவிலக்கணமாகிறது.
கூடிய குயிலுவக் கருவிகளெல்லாம்
குழல்வழி நின்ற தியாழே யாழ்வழித்
தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப்
பின்வழி நின்றது முழவே முழவொடு
கூடிநின் றிசைத்த தாமந் திரிகை
சிலப்பதிகார அடிகளிலும் ஆமந்திரிகை விளக்கம் பெறுகிறது.
2 – 3 ஆமந்திரிகை பொருள் விளக்கம்
சிலப்பதிகாரம் பழைய உரைகளின் அடிஒற்றி தமிழ்ப் பேரகராதி உட்படப் பல தமிழ் அகராதிகளும் ‘ஆமந்திரிகை’ என்ற சொல்லுக்கு ‘இடக்கை’ என்று பொருள் கூறுகின்றன. திரிகை என்றால் இடக்கைமேளம் எனவும் ஒரு பொருள் உள்ளது (Tamil Lexicon). இடக்கை என்பது ஒரு தோல் வாத்தியம். இன்றும் கேரளாவில் பயன்பாட்டில் உள்ளது. இடக்கை வாத்தியம் உடுக்குப் போன்றது, அது உடுக்கிலும் சற்றுப் பெரியது, ஒரு குச்சியால் அடித்து வாசிக்கப் படுவது. அந்த வாத்தியம் இங்கு விளக்கம் பெறவில்லை.
ஆமந்திரிகை என்ற சொல் சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையில் உள்ளது. சாந்திக் கூத்தியின் ஆடலுக்கான இசைக் கருவிகளுடன் இணைந்தே ஆமந்திரிகை வருகிறது. சீவகசிந்தாமணியில் அவ்வாறான ஆடல் நிகழும் இடத்தில் இசைக் கருவிகளை விளக்கி உரை கூறும் போதும் ஆமந்திரிகை கூறப்படுகிறது. இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஆமந்திரிகை விளக்கம் பெறும் இடம் செவ்வியல் ஆடலரங்கு. குழல், யாழ், தண்ணுமை, முழவு ஆகிய குயிலுவக் கருவிகள் இணைத்துக் கூறப்படுகின்றன. செவ்வியல் ஆடலரங்கில் இயைக்கப்படும் செவ்வியல் இசை கருவிகளின் செவ்வியல் கூட்டிசையே ஆமந்திரிகை என உறுதியாகக் கூறலாம்.
ஆமந்திரிகை என்ற சொல்லுக்குச் சமனாகப் பொருள்படும் ஆங்கிலச்சொல் – orchestra.
Orchestra – a group of instrumentalists, especially one combining string, wood wind, brass, and percussion sections and playing classical music.
(https://en. oxforddictionaries.com/definituion/orchestra)
‘ஓகெஸ்ற்றா’ – ஒரு குழு இசைக்கருவியாளர்களால், சிறப்பாக நரம்பு, மரத் துளைக் காற்று, உலோகவகை, மேலும் தட்டும் பகுதிகள் ஆகியவற்றின் கூட்டில் வாசிக்கப்படும் செவ்வியல் இசை (தமிழாக்கம்).
முடிவுரை
‘ஆமந்திரிகை’ என்ற செவ்வியல் கூட்டிசைக்கான சொல்லை இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் அரங்கேற்றுகாதையில் அறிமுகம் செய்கிறார்.
கூடிய குயிலுவக் கருவிகளெல்லாம்
குழல்வழி நின்ற தியாழே யாழ்வழித்
தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப்
பின்வழி நின்றது முழவே முழவொடு
கூடிநின் றிசைத்த தாமந் திரிகை
குயிலுவம், ஆமந்திரிகை இரண்டும் தொடர்புடைய சொற்கள். குயிலுவக் கருவிகளின் கூட்டிசையே ஆமந்திரிகை.
கூத்தநூல் அறுதியிட்டுக் கூறுகிறது:
குழல்வழி யாழெழீஇத் தண்ணுமைப் பின்னர்
முழவியம்ப லாமந்திரிகை
ஆமந்திரிகைக்கு கூத்தநூல் சூத்திரம் வரைவிலக்கணமாகும்.
ஆதார நூல்கள்
அகநானூறு
2004, முதன்மைப் பதிப்பாசிரியர்கள்: முனைவர் தமிழண்ணல், முனைவர் சுப அண்ணாமலை, கோவிலூர் மடாலயம், கோவிலூர்.
ஐங்குறுநூறு
2003 முதன்மைப் பதிப்பாசிரியர்கள்: முனைவர் தமிழண்ணல், முனைவர் சுப அண்ணாமலை, கோவிலூர் மடாலயம், கோவிலூர்.
களவியல்
களவியல் என்ற இறையனார் அகப்பொருள் நக்கீரனார் உரையுடன் சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை.
சிலப்பதிகாரம்
இளங்கோவடிகள், அரும்பதவுரையும் அடியார்க்குநல்லலுரையும், 1950 டாக்டர் வே. சாமிநாதையரவர்கள், சென்னை, ஐந்தாம் பதிப்பு.
சீவகசிந்தாமணி
திருத்தக்கதேவர், நச்சினார்க்கினியர் உரையும், 1949 டாக்டர் வே. சாமிநாதையரவர்கள், சென்னை, ஐந்தாம் பதிப்பு.
நற்றிணை
2003 முதன்மைப் பதிப்பாசிரியர்கள்: முனைவர் தமிழண்ணல், முனைவர் சுப அண்ணாமலை, கோவிலூர் மடாலயம், கோவிலூர்.
பத்துப்பாட்டு
2003 முதன்மைப் பதிப்பாசிரியர்கள்: முனைவர் தமிழண்ணல், முனைவர் சுப அண்ணாமலை, கோவிலூர் மடாலயம், கோவிலூர்.
பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்
2017 டாக்டர் உ.வே.சாமிநாதையரவர்கள் ஆராய்ச்சிக் குறிப்புகளுடன், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை.
பதிற்றுப் பத்து
2003 முதன்மைப் பதிப்பாசிரியர்கள்: முனைவர் தமிழண்ணல், முனைவர் சுப அண்ணாமலை, கோவிலூர் மடாலயம், கோவிலூர்.
புறநானூறு
2003 முதன்மைப் பதிப்பாசிரியர்கள்: முனைவர் தமிழண்ணல், முனைவர் சுப அண்ணாமலை, கோவிலூர் மடாலயம், கோவிலூர்.
மணிமேகலை, சீத்தலைச்சாத்தனார்
1998 டாக்டர் வே. சாமிநாதையரவர்கள், சென்னை, நூற்றாண்டு விழா பதிப்பு.
நிகண்டு
அபிதானமணிமாலை, திருவம்பலத்தின்னமுதம்பிள்ளை
1988 பதிப்பாசிரியர்: வித்துவான் சு. பாலசாரநாதன், டாக்டர் உ.வெ.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை.
சூடாமணி நிகண்டு
1999 பதிப்பாசிரியர்: கவிஞர்கோ. கோவை இளஞ்செரனார், சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்.
சேந்தன் திவாகரம்
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.
Tamil Lexicon
1982 University of Madras, Madras.
https://en. oxforddictionaries.com/definituion/orchestra
[குறிப்பு: இக் கட்டுரை பற்றிய உங்கள் எண்ணங்களை ‘தொடர்பாடல்’ ஊடாக தெரியப்படுத்தவும், நன்றி.]