k57iyar
Prelude
[?]
The word k57iyar is derived from k57u, ‘blowing horn’. The horn of animals is perhaps its primary meaning. Thus strictly the word would mean ‘those blowing the horn’. Dancers blew the horn during rituals. This is clearly seen in the TMA
[திருமுருகாற்றுப்படை]: during the worship when Murukan is invoked, many tuneful instruments are played. While the dancing-arena resounds with sweet music and frenzied dances, numerous horns blow and harsh bells ring. Elsewhere in the same song the priest-dancer plays the flute and blows the horn and sounds other minor instruments. Thus we see that the horn was used during ritual dancing. It is not possible to trace back how the people blowing the horn came to be identified with regular dancers. But the meaning is quite clear. It might of course go back to a stage when music and dance were undifferentiated. (K. Kailasapathy Tamil Heroic Poetry 2002 pp 107-109).
கோடியர்
அறிமுகம்
கோடு என்னும் இசைக் கருவியைக் கொண்டதால் ‘கோடியர்’ எனப்பட்டனர் எனப் பொதுவாகக் கூறிவிடலாம். கையாளும் இசைக் கருவிகளால் பெயர் பெறும் இசைக் கலைஞர்கள் பலர் உள்ளார்கள். ஆனாலும், சொற் பொருளை மட்டும் பொருத்திப் பொதுவாக முடிவெடுப்பது ஆய்வாகாது. ஆகவே, அதற்கான சான்றுகள் உள்ளனவா எனத் தேடிப் பார்க்க வேண்டும். கோடியர் சங்க இலக்கியங்களில் கையாளப்படும் சொல்லாக இருப்பதால், இத் தேடல் சங்க இலக்கியங்களை முதன்மையாகக் கொண்டது. முதலில் கோடு என்னும் இசைக் கருவிக்கும் கோடியருக்கும் உள்ள உறவைப் பார்க்கலாம். தொடர்ந்து கோடியர்பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
1. கோடு
கோடு பல் பொருள் கிளவி. மிருகங்களின் கொம்பு, சங்கு, யாழ் உறுப்பு, மரக் கொப்பு, மலை உச்சி, மேடு, எல்லை என இன்னும் பல பொருட்பட பல இடங்களில் சங்க இலக்கியங்களில் காணலாம். இங்கு கவனத்தில் கொள்வது கோடு என்னும் இசைக் கருவியையே.
1-1. சங்கு
கோடு என்பதைச் சங்கு என்னும் பொருளில் பல இடங்களில் காணலாம்.
மாலையில் விளக்கேற்றும் நேரம் முரசு முதலியவற்றுடன் சங்கு முழங்குகிறது:
முரசுமுதற் கொளீஇய மாலை விளக்கின்
வெண்கோடு இயம்ப … (நற் 58: 6-7)
வெண்கோடு – வெண் சங்கு
போர்க்களத்தில் முரசுடன் சங்கு முழங்குகிறது:
முரசுகடிப்பு இகுப்பவும் வால்வளை துவைப்பவும்
அரசுடன் பொருத… (புற: 158: 1-4)
வால்வளை – வெண் சங்கு
திருச்செந்தூரில் பல இசைக் கருவிகளுடன் சங்கின் ஓசையும்:
அந்தரப் பல்லியம் கறங்கத் திண்காழ்
வயிர் எழுந்து இசைப்ப வால்வளை ஞரல
உரல்தலைக் கொண்ட உரும்இடி முரசமொடு (திரு 119-121)
நிர்த்துறைகளிலும் சங்கு ஒலிக்கிறது:
விருந்தின் பாணர் விளர்இசை கடுப்ப
வலம்புரி வான்கோடு நரலும் இலங்குநீர்த்
துறை … … (நற் 172: 7-9)
கோடியர் சங்கு இசைத்ததாக எங்கும் கூறப்படவில்லை. சங்கு என்னும் பொருளில் கோடு இசைபவர்களை கோடியர் எனக் கொள்வதற்கு எங்கும் தரவுகள் இல்லை.
1-2 கொம்பு
கோடுக்குப் பொருளாகச் சங்கிற்கு வேறாகக் கொம்பு கூறப்படுகிறது:
கருங்கோட்டு எருமை … (ஐங் 92: 1)
தடங்கோட்டு எருமை (ஐங் 94: 1)
காலம் காலமாக விலங்குகளின் கொம்பு ஓசைக் கருவியாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அவற்றைச் சங்க இலக்கியங்களிலும் காணலாம்.
முருக வழிபாட்டில் பல இசைக் கருவிகளுடன் கொம்பின் ஓசையும்:
ஆடுகளம் சிலம்பப் பாடி பலவுடன்
கோடு வாய்வைத்து கொடுமணி இயக்கி (திரு: 245-249)
கொல்லைக் காவலர் பன்றி விரட்ட ஊதும் கொம்பு:
சிறுகண் பன்றிப் பெருநிரை கடிய
முதைப்புனம் காவலர் நினைத்திருந்து ஊதும்
கருங்கோட்டு ஓசையொடு … … (அக 94: 9-11)
பசுநிரை மேய்ப்போர் ஊதும் கொம்பு:
… … … பயம்கெழு பெருநிரை
வாடுபுலம் புக்கென கோடுதுவைத்து அகற்றி (அக 399: 8-9)
வேட்டையில் நாய்களைக் கூட்ட ஊதும் கொம்பு:
ஊதல் வேண்டுமால் சிறிதே வேட்டொடு
வேய்பயில் அழுவத்துப் பிரிந்தநின்
நாய்பயிர் குறிநிலை கொண்ட கோடே (அக 318; 13-15)
கோடு துவையாக் கோள்வாய் நாயொடு
காடுதேர்ந்து அசைஇய வயமான் வேட்டு (நற் 276: 1-2)
பாசறையில் முழங்கும் கொம்பு:
பகைவெம் மையின் பாசறை மரீஇப்
பாடுஅரிது இயைந்த சிறுதுயில் இயலாது
கோடுமுழங்கு இமிழ்இசை எடுப்பும் (பதி 50: 23-25)
கொம்பு என்னும் பொருளில் கோடு இசைபவர்களையும் கோடியர் எனக் கொள்வதற்கும் எங்கும் தரவுகள் இல்லை. அவ்வாறாயின் கோடு இசைப்பவர்களை எவ்வாறு அழைக்கலாம்?
1-3 கோட்டர்
குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன் (திரு: 209)
குழல் ஊதுபவர் ‘குழலன்’;
கோடு முழுக்குபவர் ‘கோட்டன்’;
குறும்பல்லியத்தை இசைப்பவர் ‘குறும் பல்லியத்தன்’.
கையாளும் இசைக் கருவிகளால் பெயர் பெறும் இசைக் கலைஞர்கள் இன்னும் ‘வயிரியர்’ போலப் பலர் உள்ளார்கள். அது வேறு ஆய்வு.
அவ்வாறு கோடு என்னும் இசைக் கருவியை முழக்குபவரைக் ‘கோட்டர்’ என அழைக்கலாம்.
கோட்டர் என்போர் கோடியர் அல்லர். சங்க இலக்கியங்களில் கோடியருடன் கோடு எங்கும் இணைத்துக் கூறப்படவில்லை. ‘கோடு என்னும் இசைக் கருவியைக் கொண்டதால் கோடியர் எனப்பட்டனர்’ என்ற கருதுகோளுக்குச் சான்று இல்லை. எனவே இக் கருதுகோள் கைவிடப்படுகிறது. ஆகவே கோடியர் என்போர் யாவர்? சங்க காலக் கூத்தர் குழுமத்தில் கோடியரின் வகிபாகம் என்ன?
2. கோடியர்
இங்கு எடுத்தாளப்படும் சங்க இலக்கியப் பாடல் அடிகளில் கோடியர்பற்றி பல்வேறு விடயங்கள் ஆங்காங்கு கூறப்படுகின்றன: கோடியர் அரங்கு, முதுவாய்க் கோடியர், நாஉழவர், கோடியர் விழா, கோடியர் பல்லியம், கோடியர் வாழ்வியல், கோடியர் குழுமம், கோடியரும் ஆற்றுப்படையும். வெவ்வேறு தலைப்புகளில் கோடியரை அறிந்துகொள்ளும் முயற்சியில் கூறியது கூறல் தவிர்க்கமுடியாதுள்ளது. பாடல் அடிகள் தலைப்புகளுக்கு ஏற்ப மீண்டும் மீண்டும் கூறப்படுகின்றன. விரிவஞ்சிப் பெரும்பாலான பாடல்களுக்குப் பொருள் கூறல் தவிர்க்கப்படுகிறது. தடித்த எழுத்துகளால் சொற்கள் தலைப்புகளுடன் தொடர்புபடுத்தப் படுகின்றன. இதுவே இத் தேடலின் செயல் முறை – modus operandi.
2-1 கோடியர் அரங்கு
உரையாசிரியர்கள் விளக்கம் கூறாது கோடியர் எனப்படுவோர் கூத்தர் எனப் பொதுவாகப் பொருள் கூறுவர். கூத்தும் பல வகையின. கூத்தரும் பல வகையினர். ஏனைய கூத்தர்களிடம் இருந்து கோடியரை வேறாக அடையாளப்படுத்துவது யாது? அவர்களின் தனித்துவம் எது?
ஆடுகளம்
கோடியர் ஆடுகளம் எவ்வாறு அமைந்திருக்கும் என்பது ஆய்வுக்குரியது. முதலில் ஆடலுக்கான இடத்தைக் காணலாம்.
அருவிலை நறும்பூத் தூஉய்த் தெருவில்
முதுவாய்க் கோடியர் முழவொடு புணர்ந்த
திரிபுரி நரம்பின் தீந்தொடை ஓர்க்கும்
பெருவிழாக் கழிந்த பேஎம்முதிர் மன்றத்து (பட்: 252-255)
இங்கு கவனத்திற்கு உரிய சொற்கள்: ‘தெருவில்’, ‘மன்றத்து’ ஆகியவை. தெருவில் உள்ள மன்றத்தில் கோடியர் ஆடல் நிகழ்கிறது. மன்றம் என்றால் ஊருக்கு நடுவே உள்ள வெளி. விழாக் காலத்தில் தெருவில் உள்ள பொது வெளியில் மக்கள் கூடுகிறார்கள். அங்கு கோடியர் ஆடல் நிகழ்கிறது.
முறைமுறை ஆடல்
… … … விழவில்
கோடியர் நீர்மை போல முறைமுறை
ஆடுநர் கழியுமிவ் வுலகத்து … (புற 29: 22-24)
விழாவில் ஆடுநர் முறைமுறை ஆடிப் போகிறார்கள். இது அவர்கள் ஆடலின் தன்மை.
‘முறைமுறை … கழியு மிவ் வுலகத்து’ என்ற புறநானூற்று (29) பாடல் அடியை எடுத்துக்காட்டாகக் கொண்டு ‘முறை’ என்ற சொல்லுக்குப் பொருள் கூறப்படுகிறது: முறை – Order, manner, plan. arrangement, course, அடைவு (Tamil Lexicon).
கோடியர் ஆடலை ‘முறைமுறை’ என்ற சொற் தொடரால் விளங்கிக் கொள்ள முயற்சிக்கலாம். அவர்கள் ஆடல் ஓர் ஒழுங்கில் நடக்கிறது. அது இவ்வுலக வாழ்வின் சுழற்சிக்கு (circle of life) மாதிரியாகக் கூறப்படுகிறது.
Circle – A series of events or actions that repeat themselves regularly and in the same order With the birth of a child so soon after the death of a grand parent we were once again reminded of the circle of life. (www.merriam–webster.com/dictionary).
சங்க இலக்கியத்தில் கோடியருடன் தொடர்பு படுத்தி ஒரு குறிஞ்சி நிலக் காட்சி:
முடவுமுதிர் பலவின் குடம்மருள் பெரும்பழம்
பல்கிளைத் தலைவன் கல்லாக் கடுவன்
பாடுஇமிழ் அருவிப் பாறை மருங்கின்
ஆடுமயில் முன்னது ஆக கோடியர்
விழவுகொள் மூதூர் விறலி பின்றை
முழவன் போல அகப்படத் தழீஇ
இன்துணைப் பயிரும் … (அக 352: 1-7)
ஆண் குரங்கு பலாப் பழத்தை தழுவிய வண்ணம் நிற்கிறது. அதற்கு முன்னால் மயில் ஆடுகிறது. அக்காட்சி கோடியர் விழாவில் ஆடுமகளாகிய விறலி பின்னால் (அரையில் கட்டிய முழவுடன்) முழவன் நிற்பது போல உள்ளது.
கோடியர் கூத்தில் ஆடுபவர் பின்னால் முழவன் நிலைகொள்வான் என்பதற்குச் சான்றாக மேலும் ஒரு பாடல்.
விழவு வீற்றிருந்த வியலுள் ஆங்கண்
கோடியர் முழவின் முன்னர் ஆடல்
வல்லான் அல்லன் … (பதி 56: 1-3)
இங்கு ‘கோடியர் முழவின் முன்னர் ஆடல்’ என்பதால் ஆடுகளத்தில் ஆடுபவர் பின் முழவு வாசிப்பவர் நிலை கொள்கிறார் எனக் கொள்ளலாம்.
தொகுசொல்
இவ்வகையான கூத்தர்களின் ஆடல் தொகுத்துச் சொல்ப்படுகிறது. தொகுத்துச் சொல்லுதல் (narrartion) ஊடு கதைப்படுத்தல் நிகழ்கிறது. தொகுத்துச் சொல்லுதலைக் ‘கோடீகரித்தல்’ என்பர்.
கோடீகரித்தல் – தொகுத்துச் சொல்லுதல் (Tamil Lexicon)
கோடீகரித்தலால் ‘கோடியர்’ எனப் பெயர் பெற்றனர் எனக் கொள்ளலாம்.
தொகுசொற் கோடியர் (அக 111: 9).
என்பது அவர்களின் தனித்துவத்தை வலியுறுத்துவதாகும்.
கோடியர் செயல்முறையைக் குறிக்க திருக்குறள் பாடல் ஒன்றை எடுத்துக்காட்டாகக் கூறுலாம்:
அரங்குஇன்றி வட்டாடி அற்றே நிரம்பிய
நூல்இன்றிக் கோட்டி கொளல் (குறள் 401)
கோட்டி கொளல் – கூட்டத்தில் பேசுதல் (Tamil Lexicon)
கோட்டி என்ற சொல்லைக் கோடியருடன் இணைத்துப் பார்க்கலாம். கோடியர் என்றால் கூட்டத்தில் தொகுத்துச் சொல்பவர்கள் எனப் பொருள் கொள்ளலாம்.
2-2 முதுவாய்க் கோடியர்
மேலும், ‘முதுவாய்க் கோடியர்’ என்ற சொற் தொடரை நோக்கலாம்.
அருவிலை நறும்பூத் தூஉய்த் தெருவில்
முதுவாய்க் கோடியர் முழவொடு புணர்ந்த
திரிபுரி நரம்பின் தீந்தொடை ஓர்க்கும்
பெருவிழாக் கழிந்த பேஎம்முதிர் மன்றத்து (பட்: 252-255)
பெருவரை மிசையது நெடுவெள் ளருவி
முதுவாய்க் கோடியர் முழவின் ததும்பிச்
சிலம்பின் இழிதரும் இலங்குமலை வெற்ப (குறு 78: 1-3)
‘முதுவாய் இரவல‘ எனப் பலரைப் பலர் விளித்துள்ளார்கள்.
புலவர் ஆற்றுப்படுத்துகிறார்:
… … … நீயும்
எம்மும் உள்ளுமோ முதுவாய் இரவல (புற 48: 6-7)
சாறுஅயர் களத்து வீறுபெறத் தோன்றி
அளியன் தானே முதுவாய் இரவலன் (திரு: 283-284)
சீறியாழப் பாணர் ஆற்றுப்படுத்துகிறார்:
வினவல் ஆன முதுவாய் இரவல
… … …
இன்நகை விறலியொடு மென்மெல இயலிச்
செல்வை ஆயிற் செல்வை ஆகுவை (புற 70: 5, 15-16)
சங்க இலக்கியங்களில் மேலும் பலர் முதுவாயுடன் இணைத்துக் கூறப்பட்டுள்ளார்கள்.
முதுவாய்ப் பாணர்
ஈங்கிருந் தீமோ முதுவாய்ப் பாண (புற 319: 9)
யாழ்ப்பாணரை முதுவாய் இரவலன் என அழைத்து ஆற்றுப்படுத்தியது.
… … … பாண்பசிப் பகைஞன்
இன்மை தீர வேண்டின் எம்மொடு
நீயும் வம்மோ முதுவாய் இரவல (புற 180: 7-9)
பொன்வார்ந் தன்ன புரிஅடங்கு நரம்பின்
இன்குரல் சீறியாழ் இடவயின் தழீஇ
… … …
முனிவுஇகந் திருந்த முதுவாய் இரவல (சிறு: 34-35, 40)
வாங்குஇரு மருப்பின் தீந்தொடை பழுனிய
இடனுடைப் பேரியாழ் பாலை பண்ணிப்
படர்ந்தனை செல்லும் முதுவாய் இரவல (பதி 66: 1-3)
முதுவாய்ப் பெண்டிர்
நெடுவேள் பேணத் தணிகுவள் இவள்என
முதுவாய்ப் பெண்டிர் அதுவாய் கூற (அக 22: 6-7)
… … … முதுவாய்ப்
பொய்வல் பெண்டிர் பிரப்புஉளர்பு இரீஇ
முருகன் ஆர்அணங்கு என்றலின் … (அக 98: 8-10)
முதுவாய் வேலன்
ஆகுவது அறியும் முதுவாய் வேல
கூறுக மாதோநின் கழங்கின் திட்பம் (அக 195: 14-15)
… … … வெறிஎன
அன்னை தந்த முதுவாய் வேலன்
எம்இறை அணங்கலின் வந்தன்று இந்நோய்
தணிமருந்து அறிவல் என்னும் … (அக 388: 18-21)
முருகுஅயர்ந்து வந்த முதுவாய் வேல (குறு 362: 1)
அணங்குறு கழங்கின் முதுவாய் வேலன்
கிளவியின் தணியின் நன்றுமன் … (நற் 282: 5-6)
முதுவாய் ஒக்கல்
பல்ஆயமொடு பதிபழகி
வேறுவேறு உயர்ந்த முதுவாய் ஒக்கல் (பட்: 213-214)
முதுவாய் ஒக்கல் பரிசிலர் இரங்க (புற 237: 12)
முதுவாய்ப் பல்லி
… … … இமையாது
இரைநசைஇக் கிடந்த முதுவாய்ப் பல்லி
சிறிய தெற்றுவாயின் பெரிய
ஓடை யானை உயர்ந்தோராயினும்
நின்றாங்கு பெயரும் … (அக 387: 15-19)
முதுவாய்க் குயவன்
கண்ணி கட்டிய கதிர அன்ன
ஒண்குரல் நொச்சித் தெரியல் சூடி
யாறுகிடந் தன்ன அகல்நெடுந் தெருவில்
சாறென நுவலும் முதுவாய்க் குயவ (நற் 200: 1-4)
மணிக்குரல் நொச்சித் தெரியல் சூடிப்
பலிகள் அர்க்கைப் பார்முது குயவன்
இடுபலி நுவலும் அகன்தலை மன்றத்து
விழவுத்தலைக் கொண்ட பழவிறல் மூதூர்ப் (நற் 293: 1-4)
விழாபற்றி அறிவிப்பவனாக குயவன். குயவனும் முதுவாய்க் குழுமத்தில் கூறப்படுவது கவனத்திற்குரியது.
முதுவாய்
‘முதுவாய்’ செல்வர்கள்பற்றி விரிவாக ஆய்வு செய்ய இதுவல்ல இடம். இங்கு கோடியருடன் தொடர்புபடுத்தி ‘முதுவாய்’ என்ற சொல் மட்டும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
முதுவாய் என்றால் என்ன பொருள்?
ஏலவே கூறியவற்றைத் தொகுத்துப் பார்க்கையில் முதுவாய் என்பதற்கு ‘பேரறிவுடைய சொல்’ எனப் பொருள் காணலாம்.
இங்கு ‘முதுமொழிக்காஞ்சி’ என்பதைப் பொருத்திப் பார்க்கலாம்: முதுமொழிக்காஞ்சி – ‘அறிவுடையோர் அறம்பொருளின்பங்களைப் பலரும் அறியச் சொல்லும் புறத்துறை’, முதுமொழி – Theme of wise men giving instruction on aram, porul, and inpam to the people at large (Tamil Lexicon). இங்கு முதுமொழி என்பதை எடுத்துக் கொள்ளலாம்.
முதுமொழிக்கு தொல்காப்பியம் இலக்கணம் வகுக்கும்:
நுண்மையும் சுருக்கமும் ஒளியு முடைமையும்
மென்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக்
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்
ஏது நுதலிய முதுமொழி யென்ப (தொல். பொருள் 480)
முதுமொழி என்றால் முதுவாய் எனக் கொண்டு, ‘முதுவாய்க் கோடியர்’ என்போரை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் அறிவுடையோர் எனப் புரிந்து கொள்ளலாம்.
2-3 நா உழவர்
பொதுமொழி பிறர்க்குஇன்றி முழுதாளும் செல்வர்க்கு
மதிமொழி யிடல்மாலை வினைவர்போல் வல்லவர்
செதுமொழி சீத்த செவிசெறு வாக
முதுமொழி நீராப் புலன்நா உழவர்
புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ் புனல்ஊர (கலி 68: 1-5)
இப்பாடலுக்குப் பொழிப்புரை:
இப்பாடலில் இருவகைச் செல்வங்கள் ஒப்பு நோக்கப்படுகின்றன: ஒன்று கல்விச் செல்வம், மற்றது செவிச் செல்வம். ஒரு புறம் கல்விச் செல்வர், மறுபுறம் நாஉழவர்.
கல்விச் செல்வம்பற்றி திருக்குறள் கூறும்:
கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடுஅல்ல மற்றை யவை (குறள்: 400)
கல்விச் செல்வர்பற்றி கலித்தொகை பாடல் அடிகள்:
பொது மொழி பிறர்க்கு இன்றி முழுதாளும் செல்வர்க்கு
மொழி பொதுவானது, அதைப் பிறர்க்கு இல்லாமல் முழுவதுமாக ஆளும் செல்வர். அவர்கள் யாவர் என்றால், மெத்தப் படித்தவர்கள், புலவர்கள், கல்வியைச் செல்வமாக உடையவர்கள்.
மதி மொழி யிடல் மாலை வினைவர் போல் வல்லவர்
அவர்கள், மாலை கட்டுபவர் போல, அறிவுமிக்க மொழியை இட்டுக் கட்டுவதில் வல்லவர்கள்.
செவிச் செல்வம்பற்றி திருக்குறள் கூறும்:
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை (குறள் 411)
செவிச் செல்வம்பற்றி கலித்தொகை பாடல் தரும் விளக்கம்:
செது மொழி சீத்த செவி செறுவாக
முது மொழி நீராப் புலன் நா உழவர்
மொழிக் குற்றம் நீக்கிச் செவியை வயலாகக் கொண்டு, ‘முது மொழி’ தன்மைத்தாய அறிவுடைய நாவால் உழுபவர்கள்.
புது மொழி கூட்டுண்ணும் புரிசை சூழ் புனல் ஊர
அவர்களால் புதிதாக மொழிந்தவற்றை கூடிச் சுவைப்பவர்கள் யாவர் எனின், மதில் சூழ்ந்த, நீர்வளம் நிறைந்த ஊரவர்.
இப்பாடலில் இங்கு கவனத்திற்குள்ளாவது ‘முது மொழி … நா உழவர் … புதுமொழி’ ஆகிய சொற் தொடர்கள். முதுமொழி என்பதை முதுவாய் என்பதுடன் ஒப்பு நோக்கி கோடியர் எனப்படுபவர் அறிவுமிக்க நா உழவர் எனக் கொள்ளலாம். அவர்கள் புதியவற்றைக் கூறுபவர்கள். கோடியர் கூத்தச் செயலுக்கு ‘நா உழவர்’ என்பது சாலப் பொருந்தும். ஊரவர் செவிகளை நாவால் உழுபவர்கள் கோடியர். ஊரவர் கூடிச் சுவைக்கிறார்கள்.
நா உழவர்க்கு நூல் அறிவும் வேண்டும். வள்ளுவர் கூறுவார்:
அரங்குஇன்றி வட்டாடி அற்றே நிரம்பிய
நூல்இன்றிக் கோட்டி கொளல் (குறள் 401)
அரங்கு – கட்டளை அன்ன வட்டரங்கு … (நற் 3: 3)
கட்டம் இட்ட தன்மையானவையாய் தாய விளையாட்டுக் களம்.
கட்டம் – chequered space as in a chess-board (Tamil Lexicon)
வட்டாடல் – பகடைக் காய் உருட்டி விளையாடல்.
அரங்கு இல்லாமல் வட்டாடியது போன்றது நிரம்பிய நூல் அறிவு இல்லாமல் கோட்டி கொள்வது. வெற்றுத் தரையில் வட்டாட முடியாது. அதுபோல் நூல் அறிவு இல்லாமல் கோட்டி கொள்ள முடியாது. கோட்டி கொள்வதற்கு படிப்பறிவு வேண்டும்.
கோடியர் படிப்பறிவும் உள்ளவர்கள். படித்தவற்றைப் பொதுவில் பகிர்ந்துகொள்பவர்கள்.
2-4 கோடியர் விழா
கோடியர் பெரும்பாலும் ஊர் விழாக்களுடனே தொடர்புபடுத்திக் கூறப்படுகின்றனர்.
விழவு வீற்றிருந்த வியலுள் ஆங்கண்
கோடியர் முழவின் முன்னர் ஆடல்
வல்லான் அல்லன் … (பதி 56: 1-3)
…. … … கோடியர்
விழவுகொள் மூதூர் விறலி பின்றை
முழவன் …. (அக 352: 4-6)
அருவிலை நறும்பூத் தூஉய்த் தெருவில்
முதுவாய்க் கோடியர் முழவொடு புணர்ந்த
திரிபுரி நரம்பின் தீந்தொடை ஓர்க்கும்
பெருவிழாக் கழிந்த பேஎம்முதிர் மன்றத்து (பட்: 252-255)
… … … விழவில்
கோடியர் நீர்மை பொல முறைமுறை
ஆடுநர் கழியு … (புற 29: 22-24)
கோடியர் ஊர் விழாக்களில் மட்டுமல்லாது மன்னர்களையும் நாடிச் சென்று, வாழ்த்திப் பரிசில்கள் பெற்றுள்ளனர்.
ஆடுபசி உழந்தநின் இரும்பேர் ஒக்கலொடு
நீடுபசி ஒராஅல் வேண்டின் நீடுஇன்று
எழுமதி வாழி ஏழின் கிழவ (பொரு: 61-63
கோடியர் தலைவனை ஆற்றுப்படுத்தியது
… … … கோடியர்
பெரும்படைக் குதிரை நற்போர் வானவன்
திருந்துகழற் சேவடி நசைஇப் … (அக 309: 9-11)
கொடும்பறைக் கோடியர் கடும்புடன் வாழ்த்தும்
தண்கடல் நாடன் ஒண்பூங் கோதை (மது: 523-524)
குறும்பொறை நன்னாடு கோடியர்க்கு ஈந்த (சிறு: 109)
பல்லியக் கோடியர் புரவலன் (சிறு: 125)
இஞ்சிவீ விராய பைந்தார் பூட்டிச்
சாந்துபுறத்து எறிந்த தசும்புதுளங்கு இருக்கைத்
தீம்சேறு விளைந்த மணிநிற மட்டம்
ஓம்பா ஈகையின் வண்மகிழ் சுரந்து
கோடியர் பெருங்கிளை வாழ ஆடியல்
ஊளைஅவிர் கலிமா பொழிந்தவை எண்ணின் (பதி 42: 10-14)
2-5 கோடியர் பல்லியம்
கோடியர் பல வகையான இசைக்கருவிகளை விழாக்களில் பயன்படுத்தியுள்ளார்கள்.
பல்லியக் கோடியர் … … … (சிறு: 125)
இவர்களுடன் ‘இன்னியம்’ கூறப்படவில்லை, பல்லியம் கூறப்படுகின்றது என்பது கவனத்திற்குரியது. பல்லியம், இன்னியம் வேறுபாடு இங்கு மேற்கொள்ளப் படவில்லை. பல்லியம் எனப் பொதுவாகக் கூறினாலும் சிறுபல்லியம் கோடியர்களுக்கான இசைக் கருவிகளின் கூட்டு. பல்லிய, சிறுபல்லிய வேறுபாடும் விரிவஞ்சித் தவிர்க்கப்படுகிறது.
செறிநடைப் பிடியொடு களிறுபுணர்ந் தென்னக்
குறுநெடுந் தூம்பொடு முழவுப்புணர்ந்து இசைப்ப
கார்வான் முழக்கின் நீர்மிசைத் தெவுட்டும்
தேரை ஒலியின் மான சீர்அமைத்து
சில்அரி கறங்கும்சிறுபல் லியத்தொடு
பல்ஊர் பெயர்வனர் ஆடி ஒல்லென
தலைப்புணர்ந்து அசைத்த பல்தொகைக் கலப்பையர்
இரும்பேர் ஒக்கல் கோடியர் … … (அக 301: 16-23).
இசைக் கருவிகள் பற்றிய விளக்கமும் மேற்கொள்ளப்படவில்லை. இது இசைக் கருவிகள்பற்றிய ஆய்வு அல்ல, ஆகவே கோடியர் கையாண்ட இசைக் கருவிகளின் பெயர்கள் மட்டும் கொடுக்கப்படுகின்றன.
முழவு
… … … கோடியர்
முழவுமருள் திருமணி மிடைத்ததோள் (புற368:16-17)
பெருவரை மிசையது நெடுவெள் ளருவி
முதுவாய்க் கோடியர் முழவின் ததும்பி (குறு 78: 1-2)
அருவிலை நறும்பூத் தூஉய்த் தெருவில்
முதுவாய்க் கோடியர் முழவொடு புணர்ந்த
திரிபுரி நரம்பின் தீந்தொடை ஓர்க்கும்
பெருவிழா … (பட்: 252-255)
குறுநெடுந் தூம்பொடு முழவுப்புணர்ந்து இசைப்ப (அக 301: 17)
… … … கோடியர்
விழவுகொள் மூதூர் விறலி பின்றை
முழவன் …. (அக 352: 4-6)
சுரஞ்செல் கோடியர் முழவின் தூங்கி
முருஞசுகொண்டு இறைஞ்சின அலங்குசினைப் பலவே (மலை: 143-144)
விழவு வீற்றிருந்த வியலுள் ஆங்கண்
கோடியர் முழவின் முன்னர் ஆடல்
வல்லான் அல்லன் … (பதி 56: 1-3)
பறை
கொடும்பறைக் கோடியர் கடும்புடன் வாழ்த்தும் (மது: 523)
கடும்பறைக் கோடியர் மகாஅர் அன்ன
நெடுங்களைக் கொம்பர் கடுவன் உகளினும் (மலை: 236-237)
கிணை
பாடுஇன் தெண்கிணை கறங்க … (அக 301: 10)
தூம்பு
செறிநடைப் பிடியொடு களிறுபுணர்ந் தென்னக்
குறுநெடுந் தூம்பொடு முழவுப்புணர்ந்து இசைப்ப (அக 301: 16-17)
ஒய்களிறு எடுத்த நோயுடை நெடுங்கை
தொகுசொற் கோடியர் தூம்பின் உயிர்க்கும் (அக 111: 8-9)
நரம்பு
நெடுங்கால் கணந்துள்அம் புலம்கொள் தௌ;விளி
சுரம்செல் கோடியர் கதுமென இசைக்கும்
நரம்பொடு கொள்ளும் … (நற் 212: 2-4)
அருவிலை நறும்பூத் தூஉய்த் தெருவில்
முதுவாய்க் கோடியர் முழவொடு புணர்ந்த
திரிபுரி நரம்பின் தீந்தொடை ஓர்க்கும்
பெருவிழா … (பட்: 252-255)
நரம்பு – யாழ்
… … … மருவுஇன் பாலை
வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும்
சீருடை நன்மொழி நீரொடு சிதறி (பொரு 22-24)
பாலை – பாலையாழ்
பாலை யாழ் விளக்கம் பெறுகிறது (பொரு 4-22). கோடியரின் இசைக் கருவிகளுள் யாழ் கூறப்பட்டாலும் கோடியரின் இசை பேரோசை உடையவை. கோடியர் இசை யானையின் முழக்கத்திற்கு ஒப்பாகக் கூறப்படுகிறது.
ஒய்களிறு எடுத்த நோயுடை நெடுங்கை
தொகுசொற் கோடியர் தூம்பின் உயிர்க்கும் (அக 111: 8-9)
செறிநடைப் பிடியொடு களிறுபுணர்ந் தென்னக்
குறுநெடுந் தூம்பொடு முழவுப்புணர்ந்து இசைப்ப (அக 301: 16-17)
அருஞ்சுரக் கவலை அசைஇய கோடியர்
பெருங்கல் மீமிசை இயம்எழுந் தாங்கு
வீழ்பிடி கெடுத்த நெடுந்தாள் யானை
சூர்புகல் அடுக்கத்து மழைமாறு முழங்கும் (அக 359: 8-11)
2-6 கோடியர் வாழ்வியல்
கோடியர் விழா முடிந்த மன்றத்தின் காட்சியுடன் தலைவன் பிரிவை ஒப்பு நோக்கித் தோழியிடம் தலைவி கூறிய அகப் பாடல் ஒன்றில் கோடியர் வாழ்க்கை விளக்கம் பெறுகிறது.
நல்குனர் ஒழித்த கூலிச் சில்பதம்
ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு
நீர்வாழ் முதலை ஆவித் தன்ன
ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடத்து
ஊர்இஃது என்னா ஊறுஇல் வாழ்க்கை
சுரமுதல் வருத்தம் மரமுதல் வீட்டி
பாடுஇன் தெண்கிணை கறங்க காண்வர
குவிஇணர் எருக்கின் ததரப்பூங் கண்ணி
ஆடூஉச் சென்னித் தகைப்ப மகடூஉ
முளரித் தீயின் முழங்குஅழல் விளக்கத்து
களரி ஆவிரைக் களர்பூங் கோதை
வண்ண மார்பின் வனமுலைத் துயல்வர
செறிநடைப் பிடியொடு களிறுபுணர்ந்தென்னக்
குறுநெடுந் தூம்பொடு முழவுப்புணர்ந்து இசைப்ப
கார்வான் முழக்கின் நீர்மிசைத் தெவுட்டும்
தேரை ஒலியின் மான சீர்அமைத்து
சில்அரி கறங்கும்சிறுபல் லியத்தொடு
பல்ஊர் பெயர்வனர் ஆடி ஒல்லென
தலைப்புணர்த்து அசைத்த பல்தொகைக் கலப்பையர்
இரும்பேர் ஒக்கல் கோடியர் … … (அக 301: 4-23).
இப் பாடல் கோடியர் வாழ்வியல்பற்றிப் பல செய்திகளைத் தொகுத்துக் கூறுவதால், இப் பாடலை விரிவாகப் பார்க்கலாம்.
நல்குனர் ஒழித்த கூலிச் சில்பதம்
ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு
கொடையாளர் எஞ்சியதைக் கொடுத்து முடித்த கூலியாகிய சிறிய உணவை இடைவிடாதும் பாதுகாத்து வைக்காமலும் உண்டு.
சுருக்கமாகக் கூறுவதாயின் நாளைக்கென்று சேர்த்து வைக்காத ‘அன்றாடங்காய்ச்சிகள்’. பல இடங்களில் ‘இரவலர்’ என்று குறிக்கப்பட்டுள்ளதும் கவனத்திற்குரியது.
நீர்வாழ் முதலை ஆவித் தன்ன
ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகடத்து
நீரில் வாழ்கின்ற முதலை வாயை அகலத் திறந்தாற் போன்றதும் புற்பாயால் வேயப்பெற்றதுமான ஒலி எழுப்புகின்ற வண்டிலில்
ஊர்இஃது என்னா ஊறுஇல் வாழ்க்கை
ஊர் இது என்று இல்லாததும் இடையூறு இல்லாததுமான வாழ்க்கை.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எதற்கோ சொன்னது இதற்கும் பொருந்தும். வண்டில் பயண வாழ்க்கை.
சுரமுதல் வருத்தம் மரமுதல் வீட்டி
வழியில் ஏற்படும் களைப்பை மரத்தடியில் ஆற்றி
பாடுஇன் தெண்கிணை கறங்க
ஓசை இனியதும் தெளிந்ததுமான கிணைப்பறை ஒலிக்க
காண்வர
குவிஇணர் எருக்கின் ததரப்பூங் கண்ணி
ஆடூஉச் சென்னித் தகைப்ப
அழகிய குவிந்த இதழ்களை உடைய எருக்கின் நெருங்கிய மலர்களால் ஆன கண்ணி ஆடவர் தலையில் தகைமை காட்டும். கண்ணி – தலையில் அணியும் மாலை.
மகடூஉ
முளரித் தீயின் முழங்குஅழல் விளக்கத்து
களரி ஆவிரைக் களர்பூங் கோதை
வண்ண மார்பின் வனமுலைத் துயல்வர
மகளிர்
காட்டுத் தீயின் ஒலிக்கின்ற தழல் ஒளிபோல்
காட்டு ஆவிரைக் கழுத்துப் பூமாலை
வண்ண மார்பின் வனமுலை அகத்தே அசைய
கோதை – மகளிர் அணியும் மாலை
செறிநடைப் பிடியொடு களிறு புணர்ந்தென்னக்
குறுநெடுந் தூம்பொடு முழவுப் புணர்ந்து இசைப்ப
பொருந்த நடக்கின்ற பெண் யானையுடன் ஆண் யானை சேர்ந்தாற் போல
குறுகிய நெடிய இரு தூம்புகளுடன் முழவு இணைந்து இசைக்க
கார்வான் முழக்கின் நீர்மிசைத் தெவுட்டும்
ஈதரை உலியின்மான சீர்அமைத்து
மழை மேகத்தின் முழக்கம் போல நீர்மேல் உமிழும் தேரையின் ஒலிபோல தாளம் அமைத்து
சில்அரி கறங்கும் சிறுபல்லியத்தொடு
சில் வண்டு ஒலிப்பது போன்ற ‘சிறுபல்லிய’ இசைக் கருவிகளுடன்
பல்லியம் எனப் பொதுவாகக் கூறினாலும் (சிறு: 125), சிறுபல்லியம் கோடியர்களுக்கான இசைக் கருவிகளின் கூட்டு. பல்லிய, சிறுபல்லிய வேறுபாடு விரிவஞ்சித் தவிர்க்கப்படுகிறது.
பல்ஊர் பெயர்வனர்
பல ஊர்களிலும் கூத்தாடுபவர்
ஆடி ஒல்லென
தலைப்புணர்த்து அசைத்த பல்தொகைக் கலப்பையர்
ஆடி முடித்து விரைவாக நுனியில் சேர்த்துக் கட்டப்பட்ட, பல கூட்டு இசைக் கருவிகளின் பையை உடையவர்கள்.
இரும்பேர் ஒக்கல் கோடியர்
மிகப் பெரிய சுற்றம் உடைய கோடியர்.
2-7 கோடியர் குழுமம்
கோடியர் சுற்றம் பெரிது.
கோடியர் பெருங்கிளை வாழ (பதி 42: 14)
ஆடுபசி உழந்தநின் இரும்பேர் ஒக்கலொடு (பொரு: 61)
இரும்பேர் ஒக்கல் கோடியர் (அக 301: 20-21)
கொடும்பறைக் கோடியர் கடும்புடன் வாழ்த்தும் (மது: 523)
கோடியர் பிள்ளைகளையும் காணலாம்.
கடும்பறைக் கோடியர் மகாஅர் அன்ன
நெடுங்களைக் கொம்பர் கடுவன் உகளினும் (மலை: 236-237)
கோடியர் குழுவில் விறலியும் பாடினியும் அடங்குவர்.
…. … … கோடியர்
விழவுகொள் மூதூர் விறலி பின்றை
முழவன் …. (அக 352: 4-6)
பேடை மயில் உருவின் பெருந்தகு பாடினி (பொரு: 47)
பொருநர் ஆற்றுப்படையில் கோடியருடன் பாடினியும் கூறப்படுகிறாள். பாடினியின் அழகுமிகு தோற்றம் முடி முதல் அடி வரை விளக்கிக் கூறப்படுகிறது. (பொரு: 25-47)
2-8 கோடியரும் ஆற்றுப்படையும்
ஆற்றுப்படைக்கு இலக்கணம்:
கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்றுபயன் எதிரச் சொன்ன பக்கமும்
(தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணையியல் நூற்பா 30: 3-6)
கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் (வழியில்)
காட்சி உறழத் தோன்றிப் (உறழ – மாறுபட)
(ஒரு பக்கம் செல்வச் செழிப்பு மறுபக்கம் வறுமையின் கோரம்)
பெற்ற பெருவளம்
பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்று பயன் எதிரச்
சொன்ன பக்கமும் (பக்கம் – தன்மை)
ஆற்றுப்படை இலக்கணத்திற்கு அமைய இங்கு ஆற்றுப்படுத்துபவர் பொருநர்:
அறாஅ யாணர் அகன்தலைப் பேரூர்
சாறுகழி வழிநாள் சோறுநசை உறாது
வேறுபுலம் முன்னிய விரகுஅறி பொருந (பொரு: 1-3)
ஆகவே இது ‘பொருனர் ஆற்றுப்படை’ எனப் பெயர் பெற்றது. பொருநர் பற்றியது வேறு ஆய்வு.
இதில் ஆற்றுப்படுத்தப்படுபவர் கோடியர்:
முரசு முழங்குதானை மூவருங் கூடி
அரசவை இருந்த தோற்றம் போல
பாடல் பற்றிய பயனுடை எழாஅல்
கோடியர் தலைவ கொண்டது அறிந
… … …
எழுமதி வாழி ஏழின் கிழவ (பொரு: 53-63)
எழாஅல் கோடியர் தலைவ – (எழாஅல் – யாழ்)
ஏழின் கிழவ – கோடியர் தலைவன் யாழ் வாசிக்கும் ஏழிசை வல்லவர்.
மூன்று வேந்தர்களும் கூடி ஓர் இடத்தில் இருந்ததைப் போல கோடியர் இருந்தனர் எனப் பொருநன் கூறுகிறார். மூவரசர்களும் ஓர் இடத்தில் கூடி இருந்தார்கள் என்ற பொருநன் கூற்று வெறும் கற்பனை அல்ல. சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஓர் இடத்தில் கூடி இருந்தார்கள் என்பதற்குச் சான்றாகச் சங்கப் பாடல் ஒன்று உள்ளது.
ஒளவையார் மூவரையும் ஒருங்கே வாழ்த்திப் பாடுகிறார்:
கொற்ற வெண்குடைக் கொடுந்தேர் வேந்திர்
யான்அறி அளவையோ இதுவே வானத்து
வயங்கித் தோன்றும் மீனினும் இம்மென
இயங்கு மாமழை உறையினும்
உயர்ந்தமேந் தோன்றிப் பொலிகநும் நாளே (புற 367:14-18)
கோடியர் தலைவனின் அவையில் பொருநன் கண்ட ‘கூடியிருந்த’ மூவர் யாவரோ எனின்: ‘இயல் இசை நாடகம்’ ஆகிய முத்தமிழும் கைவந்த முத்தமிழ்க் கூத்தர்: இயலுக்கு நாஉழவர், இசைக்குப் பாடினி, ஆடலுக்கு விறலி என வகுத்தும் கொள்ளலாம். முத்தமிழும் கைவந்த வல்லுனர்கள் எனத் தொகுத்தும் கொள்ளலாம்.
தொகுப்புரை
கோடியர் பெரும் குழுவினர்; ஆடிப்பாடிச் சிறுபல்லியம் முழங்க முறை முறையாகத் தோன்றிக் கதை சொல்பவர்கள்; பழைய கதைகளைப் புதியதாய்ச் சொல்பவர்கள்; ஊரூராய்ச் சென்று விழாக்களில் கதை சொல்பவர்கள். இவர்கள் முத்தமிழ் வல்லவர்கள்; அறிவு மிக்கவர்கள். இவை சங்க இலக்கியங்கள் ஊடு கோடியர் பற்றி அறிந்துகொண்டவை.
என ஆங்கு,
தமிழ் நாடகத்தின் தோற்றுவாயைக் ‘கோடியர் கூத்தில்’ காணலாமோ?
இவ்வகையான அரங்காடலுக்கான ஆடல் அமைப்பாண்மை (Choreography) பற்றியும்; அரங்கில் கூத்தர்கள், கூட்டுப் பாடகர், கூட்டிசைக்கருவியாளர் ஆகியோரின் நிலைகோள்பற்றியும், குறிப்பாகத் தொகு சொல்லாடல்பற்றியும் மேலும் விளக்கம் வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக கோடியர்ஆடுகளம் எவ்வகைத்து என்பதற்கான விளக்கம் வேண்டும்.
தமிழ் ஈழத்தின் ‘நாட்டுக் கூத்து’ ஆடுகளமாகிய வட்டக் களரி (round stage); தமிழ் நாட்டின் ‘தெருக்கூத்து’ ஆடுகளமாகிய முப்பக்கக் களரி (thrust stage); ஆகியவற்றுடன் பொருத்திப் பார்க்கவேண்டும்.
தமிழ் நாடகத்தின் தொன்மத்தை அறிய கோடியர் கூத்து மீழாக்கம் செய்யப்பட வேண்டும்.
இது அரங்கர், அரங்கியலாளர் (theatreist, theatreologist) ஆகியோர் கவனத்திற்கு.
உசாத்துணை
எட்டுத்தொகை:
அகநானூறு (அக)
புறநானூறு (புற)
ஐங்குறுநூறு (ஐங்)
பதிற்றுப்பத்து (பதி)
கலித்தொகை (கலி)
குறுந்தொகை (குறு)
நற்றிணை (நற்)
பத்துப்பாட்டு:
திருமுருகாற்றுப்படை (திரு)
பொருநர் ஆற்றுப்படை (பொரு)
சிறுபாணாற்றுப்படை (சிறு)
மதுரைக் காஞ்சி (மது)
பட்டினப்பாலை (பட்)
மலைபடுகடாம் (மலை)
திருக்குறுள் (திரு)
தொல்காப்பியம் (தொல்)
Kailasapathy, K . 2002 Tamil Heroic Poetry, Kumaran Book House, Colombo.
ஆங்கிலம் – தமிழ்ச் சொற்களஞ்சியம்
Tamil Lexicon
www.merriam–webster.com/dictionary
[குறிப்பு: இக் கட்டுரை பற்றிய உங்கள் எண்ணங்களை ‘தொடர்பாடல்’ ஊடாக தெரியப்படுத்தவும், நன்றி.]