சங்க இலக்கியங்களில் கூத்தும் கூத்தரும்

In the heroic poems ku#ttar seem to be dancers-cum-actors, who performed some sort of choral dramas (K. Kailasapathy, Tamil Heroic Poetry 2002 p.100) [?]

 

 

அறிமுகம்

 

 

சங்க இலக்கியங்களில் பேசுபொருளாகக் கூத்தும் கூத்தரும் இருந்தாலும், ஆய்வாளர்களும் உரையாசிரியர்களும் பல விளக்கங்களைக் கூறினாலும், கூத்தையும் கூத்தரையும், அச்சொற்களுடன் நேரடியாகத் தொடர்புபடுத்திச் சங்க இலக்கியங்கள் ஊடாக, விரிவாக விளங்கிக்கொள்ள முடியவில்லை என ஒரு பார்வை உள்ளது. அவ்வாறுதானா என முதலில் ‘கூத்து’ என்ற சொல்லையும் ‘கூத்தர்’ ஏன்ற சொல்லையும் சங்க இலக்கியங்களில் தேடிப்பார்க்கலாம்.

 

 

1. கூத்து வகை

 

 

உவகைக்கூத்து

 

ஒரு தாய் தன் குழந்தைக்கு உணவு ஊட்டுகிறாள். உண்ணாமல் அடம்பிடிக்கும் குழந்தையைச் சிறிது கோபித்துக் கொள்கிறாள். கோபித்தவர்களை குழந்தை மகிழ்ச்சியால் கூத்தாடவைக்கிறது (கலித்தொகை 85).

 

செருக்குறித் தாரை உவகைக்கூத் தாட்டும் (கலி 85: 34)

 

செருக்குறித்தாரை – கோபித்தவர்களை
உவகைக் கூத்தாட்டும் – மகிழ்ச்சிக் கூத்தாட்டும்

 

இது அரங்கில் ஆடும் கூத்திற்கு நேரடி விளக்கம் அல்ல. குழந்தைக்கு தாய் உணவூட்டும் பெரும்பாடு உவகைக்கூத்தாட்டு என உருவகப்படுத்திக் கூறப்படுகிறது.

 

மருதக்கலி ஆசிரியர் மருதனிளநாகநார் ‘உவகைக்கூத்து‘ என ஒரு சொல்லாக்கத்தை; அறிமுகம் செய்கிறார். ‘உவகைக்கூத்து’ விளக்கத்தை வேண்டிநிற்கும் நாடகக் கலைச்சொல். ‘கொமெடி’ (Comedy) என்ற ஆங்கில நாடகக் கலைச் சொல்லுடன் ஒப்பு நோக்கலாம்.

 

Comedy – a drama of light and amusing character and typically with a happy ending // a comedy about parenthood (merrriam-webster.com/dictionery).

 

கருங்கூத்து

 

கலித்தொகையில் (65) ஒரு வேடிக்கை நிகழ்ச்சி கூறப்படுகிறது:

 

ஒர் இளம் பெண் தன் காதலனைக் காண இரவு நேரத்தில் குறித்த இடத்தில் தனிமையில் நிற்கிறாள். அங்கே ஒரு ‘முதுபார்ப்பான்’ வருகிறான்; அவள் தனிமையில் நிற்பதைக் காண்கிறான்; அவளைக் காம எண்ணத்துடன் சீண்டுகிறான்; அவளைப் பெண் பிசாசாகவும் தன்னை ஆண்பிசாசாகவும் கூறி அவளை அணுகுகிறான்; அவள் ‘எஞ்சாது ஒருகை மணற்கொண்டு மேல் தூவ’; அவளை உண்மையில் பிசாசு என நினைத்து அலறுகிறான்.

 

பாத்திரங்களின் விவரிப்புடன் நிகழ்ச்சி விரிவாகக் கூறுப்படுகிறது, இந்த நிகழ்வைப் … பெருங்கருங் கூத்து (கலி 65: 29) என உருவகப்படுத்துவது இங்கு கவனத்தைப் பெறுகிறது.

 

பெருங் கருங்கூத்து – பெரும் வேடிக்கைக் கூத்து

 

இதுவும் கூத்தராடியதற்கு நேரடி விளக்கம் அல்ல. ஒரு வேடிக்கை நிகழ்வின் விவரணம்.

 

கபிலர் குறிஞ்சிக்கலியில் ‘கருங்கூத்து‘ என, ஒரு நாடகக் கலைச் சொல்லாக்கத்தை அறிமுகம் செய்கிறார். ‘கருங்கூத்து’ என்ற நாடகக் கலைச் சொல்லை ‘ஃபார்ஸ்’ (Farce) என்ற ஆங்கில நாடகக் கலைச் சொல்லுடன் ஒப்பு நோக்கலாம்.

 

Farce – a funny play or movie about ridiculous situations and events (merrriam-webster.com/dictionery).

 

உவகைக்கூத்து, கருங்கூத்து ஆகியவைபற்றிய நாடகக் கோட்பாடுகள் அரங்கியலாளர்களால் கவனிக்கப்பட வேண்டியவை.

 

சொற்களை மட்டும் எடுத்துக்கொண்டு விரிவஞ்சி மேலதிக விளக்கம் இங்கு தவிர்க்கப்படுகிறது.

 

 

2. கூத்தரங்கம்

 

கூத்தர் ஆடுகளம்

 

புய்த்தெறி கரும்பின் விடுகளை தாமரைப்
பூம்போது சிதைய வீழ்ந்தெனக் கூத்தர்
ஆடுகளம் கடுக்கும் … (புற 28: 12-14)

 

புய்த்தெறி கரும்பின் விடுகளை – பிய்த்து எறியும் கரும்பின் நீங்கியகுழை
தாமரைப்பூம் போது சிதைய வீழ்ந்தெனக் – தாமரை மலரும் பருவத்தரும்பு சிதைய விழ்ந்ததென்பது
கூத்தர் ஆடுகளம் கடுக்கும் – கூத்தர் ஆடுகளம் போலத் தோன்றும்

 

கரும்பின் தளிர்கள் பிய்த்து எறியப்படுகின்றன, அவை தாமரை மொட்டுகள் மேல் விழுகின்றன. தாமரை மொட்டுகள் சிதைகின்றன. இது ஒரு சாதாரண நிகழ்வு. இதற்குக் கூத்தர் ஆடுகளம் உவமையாகக் கூறப்படுகிறது. ஒரு சாதாரண நிகழ்வு ‘உவமை அணியால்’ அழகு பெறுகிறது. கூத்தர் ஆடுகளம் நேரடியாகக் காடசிப்படுத்தப்படவும் இல்லை; விளக்கம் பெறவும் இல்லை.

 

இங்கு கவனத்தைப் பெறுவது ‘கூத்தர் ஆடுகளம்‘.

 

கூத்தாட்டவை

 

கூத்தாட்டு அவைக்குழாத்தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று (திருக்குறள் 332)

 

கூத்தாட்டு அவைக் கூட்டம் போன்றது பெரும் செல்வம். போவதும் அது கலைதல் போன்றது.

 

கூத்தாட்டத்தில் கூட்டம் கூடுவது போலச் செல்வம் சேர்கிறது. கூத்தாட்டம் முடிந்து கூட்டம் கலைவது போலச் செல்வம் குறைகிறது. பெரும் செல்வம் சேர்வதற்கும் அது அழிவதற்கும் ‘கூத்தாட்டவைக் குழாம்’ எடுத்துக்காட்டாகக் கூறப்படுகிறது. இதைத் திருவள்ளுவர் அவையில் அமர்ந்து கூத்துப் பார்த்த கதையாகக் கூறலாம்.

 

இங்கு கவனத்தைப் பெறுவது ‘கூத்தாட்டவை’.

 

கூத்தர் ஆடுகளம், கூத்தாட்டவை ஆகியவை பற்றி விரிக்கில் பெருகும்.

 

 

3 கூத்தர் வகைப்பாடு

 

சங்க இலக்கியங்களில் உள்ள தரவுகளைக் கூட்டிப் பார்க்கும் போது, எங்கும் சொல்லாலும் பொருளாலும், கூத்தும் கூத்தரும் நேரடியாக விளக்கம் பெறவில்லை. ஆனால், ‘கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்’ எனத் தொல்காப்பியம் புறத்திணையியலில் எனையவர்களுடன் கூத்தரை முதன்மையாக வரிசைப்படுத்தும்.

 

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும் (30: 3-6)

 

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
வழியில் பார்வைக்கு வேறுபட்ட தோற்றத்தினராய்
பெற்ற பெரும் வளத்தைப் பெறாதவர்க்கு அறிவுறுத்தி
சென்று பயன் பெறச் சொன்ன பகுதியும்

 

புரவலரிடம் சென்று பெற்ற வளத்தால் தோற்றப் பொலிவுடன் உள்ளவர் வறுமையில் வாடுபவர்களை வழியில் கண்டு புரவலரிடம் சென்று பயன் பெற வழி கூறுவது இப் பகுதி. இங்கு தொல்காப்பிய காலத்தில் கூத்தர் என்ற பிரிவு வேறாகப் பேசப்பட்டுள்ளது என்பது கவனத்திற்குரியது.

 

எல்லோரையும் கூத்தர் எனப் பொதுவாகக் கூறாது; பாணர், பொருநர், விறலியர், ஆகியோர் வேறாக வகுக்கப்படுகின்றனர். அவர்கள் செய்யும் வேறுபட்ட கலைத்தொழிலால் அவர்கள் சார்ந்த குழுப் பெயர்கள் வேறுபடுகின்றன எனக் கொள்ளலாம். விறலியரையும் கூத்தியராகக் கொண்டு, பெண்பால் கூத்தர் எனக்கூறாது, வேறாகக் கூறினர். பாணர், பொருநர், விறலியர் ஆகியோர்பற்றி விரிவாகப் பின்பு பார்க்கலாம்.

 

தான் பெற்ற வளத்தைப் பெறாதவர்களுக்கு சென்று பெறுமாறு வழி கூறுவது ஆற்றுப்படை. சங்க இலக்கிய வகைகளில் ஒன்றாகிய ஆற்றுப்படையிலும் ஆற்று கலைஞர் வரிசைப்படுத்தப்படுகின்றனர்:

 

பொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை
மலைபடுகடாம்
விறலியரும் ஆற்றுப்படுத்தப்பட்டுள்ளதைப் பாடல்களில் காணலாம்.

 

சங்க இலக்கியங்களுக்கு முந்தைய நூலாகிய தொல்காப்பியத்தில் கூத்தர் வகைப் படுத்தப் பட்டிருந்தும், பாணரைப் போல், பொருநரைப் போல், விறலியரைப் போல், கூத்தர் என்ற சொல் சங்க இலக்கியங்களில் ஏன் ஆற்றுப்படையில் இடம்பெறவில்லை என்ற கேள்வி தொக்கு நிற்கிறது.

 

கூத்தராற்றுப்படை எனக் கூறப்படும் மலைபடுகடாம் பாட்டிலும் கூத்தர் என்ற சொல் இல்லை. அங்கு ஆற்றுப்படுத்தப்படுபவர் ‘கண்ணுளர்’. கண்ணுளர் பெயரால் ஆற்றுப்படை, சங்க இலக்கியங்களில் இல்லை. ஆனால் கூத்தராற்றுப் படை தொல்காப்பிய வகைப்பாட்டில் உள்ளது. ஆகவே கண்ணுளரைக் கூத்தர்களாகக் கொள்ளலாம். கண்ணுளர் பற்றிப் பின்பு தெளிவாகப் பார்க்கலாம்.

 

 

முடிவுரை

 

சங்க இலக்கியங்களில் கூத்தும் கூத்தரும் எடுத்துக்காட்டாகச் சில இடங்களில் கூறப்பட்டபோதும், கூத்து, கூத்தர் ஆகிய சொற்களுக்கு நேரடியான தெளிவான விளக்கம் இல்லை. சிலப்பதிகாரம் தெளிவாக விளக்கிக் கூறும். சங்க காலத்திற்கும் சங்கமருவிய காலத்திற்கும் இடையில் கூத்துக்கும் கூத்தருக்கும் ஏற்பட்ட வரலாற்று மாற்றங்களை இலக்கியங்களுக்கு ஊடாகவும், தொல்பொருள் ஆய்வுகளுக்கு ஊடாகவும் அறிந்து கொள்ளலாம். எவை நின்று நிலைத்தன, எவை மாற்றமடைந்தன, எவை மறைந்து போயின என்பது வரவாற்றுத் தேடல். வரலாற்றுத் தேடல் இங்கு மேற்கொள்ப்படவில்லை.

 

இத்தேடல் சங்க இலக்கியங்களுக்குள் மட்டுப்பட்டுள்ளது, ஆகவே அந்த எல்லைக்குள் நின்று சில விளக்கங்களைக் கொண்டுகூட்டிப் பெறலாம். சங்க இலக்கியங்களில் கூத்து, கூத்தர் பற்றி விரிவான விளக்கம் இல்லாவிட்டாலும், பொதுவாகக் கூத்தும் கூத்தரும் சங்கப் புலவர் மனங்களில் வலுவாக இடம்பிடித்துள்ளதை ஏலவே தந்துள்ள எடுத்துக்காட்டுகள் ஊடாக உய்த்து உணரலாம். கூத்து மிகவும் விரிந்து பரந்து உயர்ந்த நிலையில் இருந்தது என்பதையும் உணர்ந்து கொள்ளலாம்.

 

 

உசாத்துணை

 

கலித்தொகை (கலி)
புறநானூறு (புற)
திருக்குறள் (திரு)
தொல்காப்பியம் (தொல்)

Kailasapathy, K. 2002 Tamil Heroic Poetry, Kumaran Book House, Colombo.

 

 

[குறிப்பு: இக் கட்டுரை பற்றிய உங்கள் எண்ணங்களை ‘தொடர்பாடல்’ ஊடாக தெரியப்படுத்தவும், நன்றி.]