அறிமுகம்
பெயரிலேயே எதிர்ப்பைத் தாங்கி, அதிகார அரசியலக்கு எதிரான அவதாரம் அன்ரிகனி. முதல் அவதாரம் பண்டைய கிரெக்கத்தில். ஆகவே கிரேக்கப் பெண்பாற் பெயர் சூட்டப்பெற்றது. ‘அன்ரி (anti)’ என்றால் எதிர்வு, ‘கனி (gony)’ என்றால் பிறவி. பொருள்படக் கூறுவதாயின் அன்ரிகனி ஒர் எதிர்ப் பிறவி.
உலகம் எங்கும், அற்றைக் கிரேக்கம் முதல் இற்றை ஈழம் வரை எல்லாக் காலங்களிலும், பலரின் கைகளில் தவழ்ந்தவள் அன்ரிகனி. சாகப் பிறந்தவளுக்குச் சாவில்லை. இன்றும் தவழ்கிறாள். அவளின் பரந்துபட்ட அவதாரங்கள் பற்றி விரிவாகப் பார்க்க இதுவல்ல நேரம். ஆறிமுக நெறிமுறைக்கு விரிவுரையும் உகந்தது இல்லை. ஆகவே அவளின் முந்தைய மூன்று அவதாரங்கள்பற்றி மிகச் சுருக்கமாகக் கூறி அவளை அறிமுகம் செய்து, எங்கள் மகள் ‘ஐராங்கனி’ பற்றிக் கூறி நிறைவு செய்யலாம் என்று என் உரையை வரையறை செய்துள்ளேன்.
சோவ்ஓகிளிஸ் – அன்ரிகனி
கிரேக்கத்தில் நாடகம் பிறந்து, வளர்ந்து, பல உச்சங்களைத் தொட்ட காலமாகிய ஐந்தாம் நூற்றாண்டில் சோவ்ஓகிளிஸ் (Sophocles) என்ற நாடக ஆசான் 123 நாடகங்கள் எழுதியுள்ளார் என்றும், அதென்ஸ் (Athens) நகரில் டயோநிசஸ் (Dionysus) என்ற வளம் சேர்க்கும் சிறுதெய்வத்திற்காக எடுக்கப்படும் விழாவில் நாடகத்திற்காகப் பல பரிசுகள் பெற்றார் என்றும் வரலாறு உள்ளது. அவர் எழுதி அரங்கிட்டவற்றுள் இன்று ஏழு நாடகங்கள் மட்டுமே முழுமையாகக் கிடைத்துள்ளன. அவற்றுள் தேபன் (Theban) நகரப் புராணக் கதை கூறுவன மூன்று. அவை ஈடிபஸ் (Oedipus) என்ற மன்னனின் குடும்பச் சோகக் கதைகளாகும். அன்ரிகனி (Antigony) அவற்றுள் ஒன்று. கி.மு. 442ஆம் ஆண்டளவில் அன்ரிகனி தலை அரங்கேற்றம் கண்டது. அதனல் பெற்ற பெரும் புகழால், நாடக ஆசான் சோவ்ஓகிளிஸ் செல்வாக்கு மிக்க பல அரச உத்தியோகங்கள் பெற்றார் என்றும் கூறப்படுகிறது. நாடக ஆசான்கள் பலவாகச் சிறப்பிக்கப்பட்ட காலம் அது.
ஈடிபஸ் மன்னனின் விழ்ச்சியும் மறைவும் பெரும் துன்பியல் நாடகம். அவனுக்கு நான்கு பிள்ளைகள்: ஆண்கள் இருவர் பெண்கள் இருவர். அவர்களுள் அன்ரிகனி இளையவள். அண்ணன்மார் இருவரும் ஆட்சியைக் கைப்பற்றும் போட்டியில் ஆளுடன் ஆள் மோதி களத்திலே இறந்துபோக, தாய்மாமன் கிறியோன் (Creon) ஆட்சி பீடம் ஏறுகிறார். இறந்தவர்களுள், நகரைக் காத்து நின்றவனின் உடல் சகல அரச மரியாதைகளுடனும் அடக்கம் செய்யப்படுகின்றது. எதிர்துப் படைஎடுத்து வந்தவனின் உடல் பறவைகளுக்கும் நாய்களுக்கும் விருந்தாக வெட்டவெளியில் விடப்படுகிறது. அவனுக்கு எவ்வகை இறுதிக் காரியங்களும் செய்யக்கூடாது என்றும், மீறுபவர்களுக்கு மரண தண்டனை என்றும் கிறியோனின் ஆணை பிறப்பிக்கப்படுகிறது. அவ்வாணையை மீறி அன்ரிகனி அண்ணனின் உடலை அடக்கம்செய்கிறாள். இதுவே நாடக முரண். தொடர்வது, அன்ரிகனியின் இறப்பு, கிறியோனின் மகன், அன்ரிகனியின் காதலனின் இறப்பு, கிறியோனின் மனைவியின் இறப்பு என மரபுரீதியான துன்பியல் முடிவுகள்.
ஜோன் அனுயி – அன்ரிகனி
ஹிட்லரின் (Hitler) இராணுவ ஆக்கிரமிப்புக்குள் இருந்த பாரிஸ் (Paris) நகரில், அன்ரிகனி மீண்டும் அவதாரம் செய்கிறாள். ஜோன் அனுயி (Jean Anouilh) 1942 வாக்கில் ஆக்கிய அன்ரிகனி நாடகம் முதலில் தடைசெய்யப்படுகிறது. பின்பு மேடை ஏற்றம் அனுமதிக்கப்பட்டு 1944-இல் மேடை ஏறுகிறது. அனுமதிக்கப்பட்டதற்கான காரணம் விவாததிற்குரியது. ஆக்கிரமிப்புக்காரர்களாலும், ஆக்கிரமிக்கப்பட்ட பாரிஸ் மக்களாலும் நாடகம் பொது வரவேற்பைப் பெற்றதும் ஆச்சரியத்திற்கு உரியது. அன்ரிகனி என்ற நாடகத்தின் வழமையான பாத்திரங்களும் பழமையான கதையும் ஒரு காரணமாக இருக்கலாம். பழமைக்குள் மறைந்து அன்ரிக்கனியின் எதிர்ப்புக் குரல் உரத்துக் கேட்டது. ஆனாலும் கிறியோனின் பாத்திரப் படைப்பும் ஆதிகார அரசியலின் காதுகளுக்கு இதமாக இருந்தது. ஆகவேதான் ஜோன் அனுயியின் அரசியல் நிலைப்பாடு விமர்சனத்துக்கு உள்ளானது. இருந்தபோதும் ஜொன் அனுயியின் அன்ரிகனியும் அதிகார அரசியல் எதிர்ப்பு நாடக வரிசையில் வைத்து எண்ணப்படுகிறது.
பேற்றோல் பிறெஷ்ற் – அன்ரிகனி
பேற்றோல் பிறெஸ்ற் (Bertolt Brecht) என்ற உலகப் புகழ்பெற்ற ஜேர்மன் (German) நாடக ஆசிரியரின் படைப்பில் அன்ரிகனி மீண்டும் மறுஅவதாரம் செய்கிறாள். 1948-ஆம் ஆண்டில் சுவிற்சலாந்தில் முதல் மேடை. மூலக் கதையில் இருந்து பாத்திரப் பெயர்களையும் கருவையும் எடுத்துக்கொண்டாலும் வேறு கதையையே நாடகம் கூறுகிறது. படையை விட்டோடியதற்காக ஒருவர், தூக்கிலிட்டுக் கொல்லப்படுகிறார். அவரின் சகோதரிகள் இருவரும் பட்டாளத்தின் கண்ணில் படாமல் அச்சடலத்தை தூக்குக் கயிற்றில் இருந்து கீழ் இறக்குவது என்பதே, கதைப் பின்னல். கிறியோன் ஒரு ஆக்கிரமிப்புக் காரனாகவே படைக்கப்பட்டுள்ளார். பிறெஸ்ற்றின் படைப்பில் பாத்திரங்கள் வெள்ளை கறுப்பு எனத் தெளிவாக வகைப்பட்டுள்ளன, இடைப்பட்ட சாம்பல் நிறமாகப் பாத்திரங்கள் படைக்கப்படவில்லை. அவர் இடைப்படாமல் பக்கம் சார்ந்தே படைத்துள்ளார்.
மூவரினதும் அரங்காக்கங்கள்
ஏலவே கூறப்பட்ட மூன்று நாடகங்களின் அரங்காக்கப் பாணிகளும் தீர்க்கமான வேறுபாடுகளை உடையன. சோவ்ஓகிளிசின் அரங்கு மிகவும் கட்டுப்பாட்டுடைய கிரேக்க அரங்க இலக்கணங்களுக்குள் அமைவது.
கால ஒருமை (Unity of Time)
கள ஒருமை (Unity of Place)
காரிய ஒருமை (Unity of Action)
பொய் முகங்கள் (Masks)
குழுக் கூத்தர் (Chorus) பதினைந்து பேர்
நடிகர் (Actors) மூவர்
அரங்கக் கட்டட அமைப்பு:
மலைச் சரிவில் திறந்த வெளியில்
அரைவட்டப் படிக்கட்டுகளாக அமைந்த இருக்கைகள்
ஆடுகளம் நீள் சதுரமான மேடை
அதன் பின் வாசல்களுடன் மாடிக் கட்டட அமைப்பு
முன்னே வட்டத் தரை
வரவுப் பாதை
என்ற இவற்றுக்கு அமைய நாடகங்கள் எழுதப்பட்டு பெருந்தொகையான பார்வையாளர்களுக்காக அரங்கேற்றம் செய்யப்பட்டன.
ஜோன் அனுயி கிரெக்க அரங்கப் பாரம்பரியங்களைக் கவனத்தில் கொள்ளவில்லை. ஆடுகளமும் வேறு. ‘கோறசும்’ ஓன்றாகக் குறைந்துவிட்டது. சில பாத்திரங்களும் மாற்றப்பட்டன. புதிய பாத்திரங்கள் சேர்க்கப்பட்டன. பாத்திரங்களின் அன்றாட நடைமுறைகளும் நவீன காலத்திற்கு மாற்றப்பட்டன. காப்பி குடித்தார்கள், கார்களில் ஓடித் திரிந்தார்கள். நாடகம் உடையிலும் நடிப்பிலும் நவீனமானது.
பேற்றோல் பிறெஸ்ற் பராதீனப்படுத்தல் (Bertolt Brecht) என்ற அவர் பாணியிலேயே நாடகத்தை அரங்காக்கம் செய்தார். அதற்காக நாடக ஒத்திகைகளில் வசனங்களைப் படற்கையில் பேசவைத்தார், நடிப்பைச் சொல்லியபடி செய்யவைத்தார். நடிகர்களைப் பாத்திரங்களுடன் உணர்வுரீதியாக ஒட்டாமல் செய்தார். அவரின் மாதிரி நாடகங்களில் (model plays) ஒன்றாக அவர் அரங்காக்கம் செய்த அன்ரிகனி கணிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் அன்ரிகனி
இவற்றின் தொடர்ச்சியாக எங்கள் நாடக ஆசான் ஏனெஸ்ட் தளையசிங்கம் மக்கின்ரையர் அவர்களின் சிறிலங்காவின் அன்ரிகனி ஆகிய ஐராங்கனி என்ற நாடகத்தைப் பார்க்கலாம். அதை வாசித்தபோது மிக நீண்ட அரசியல் வரலாற்றுக் கூடாக வழிகாட்ட நடந்து வந்த அனுபவம் கிடைக்கிறது. அவை அரசியல் பிரசங்கங்களாகவும், அரசியல் விமர்சனங்களாகவும், அரசியல் விவாதங்களாகவும் பாத்திரப் படைப்புகளில் ஒளிவு மறைவின்றி எங்கும் பரந்து கிடக்கின்றன. மிகவும் துணிச்சலான எழுத்து.
கதைக் களம் சிறிலங்கா.
பரந்த அரசியல் வரலாறு ஒருமனிதனின் எல்லைக்குள் சுருக்கப்பட்டுள்ளது.
நாடகமுரண் அன்ரிகனி நாடகங்களுக்கு அடையாளமாகிய ஈமச்சடங்கு உரிமை.
கோரஸ் இல்லாவிட்டாலும் கதைசொல்லியாக அலிஸ் அம்மா உள்ளார்.
அந்தகத் தீர்கதரிசியின் இடத்தில் இந்தியச் சாத்திரியார்.
துன்பியல் நாடகங்களின் இலக்கணத்திற்கு அமையப் பல இறப்புகள்:
திக்குளித்து – அன்ரிகனி
அன்ரிகனியுடன் இணைந்து – மஹிந்த ராஜகருண
கைத்துப்பாப்பியால் சுட்டுத் தற்கொலை – லலிதா ராஜகருண
தற்கொலைக் குண்டுதாரி – சித்தாத்த ராஜகருண
கதை வேறு, களம் வேறு, பாத்திரப் படைப்புகள் வேறு, அரங்காக்கமும் வேறு. ஆனாலும். கிரேக்க அன்ரிகனிக்கும் சிறிலங்கா அன்ரிகனிக்கும் சாயல் ஒன்றுதான்.
சில இடங்களில் மிகவும் ஒற்றுமையைக் காணலாம். இங்கு குறிப்பாகத் தாயின் துயர முடிவைக் கூறலாம்.
சோவ்ஓகிளிசின் அன்ரிகனியில் ஒரு கட்டம்:
Chorus Leader:
What do you make of that? The lady’s gone,
without a word, good or bad.
Messenger:
I am alarmed too
but here’s my hope – faced with her son’s death
she finds it unbecoming to mourn in public.
Inside, under her roof, she’ll set her women
to the task and wail the sorrow of the house.
She’s too discreet. She won’t dp something rash.
Leader:
I’m not sue. To me, at least,
a long heavy silence promises danger,
just as much as a lot of empty outcries.
Messenger:
We’ll see if she’s holding something back,
hiding some passion in her heart,
I’m going in. You may be right – who knows?
Even too much silence has its dangers
தாய் உள்ளே சென்று தற்கொலை செய்துகொள்கிறாள். அவளின் உடல் வெளியே கொண்டுவரப்படுகிறது.
ஐராங்கனியில் இந்தக் கட்டம்:
… உக்கிரக் கவனிப்பிலே மௌனத்தில் கழிந்த காலப்பகுதியில் லலிதா மேல்மாடிக்குத் திரும்பிச் செல்வதை அனைவரும் உணருகின்றனர். அவர்கள் அவளைப் பார்ப்பதற்காக மெதுவாகவும் ஒன்றாகவும் திரும்புகின்றனர், அவள் கதவடிக்குச் செல்லும்வரை பார்க்கின்றனர். தனது அறையில் தனித்துத் துக்கத்;தைத் தாங்க அவள் செல்கிறாள் எனக் கருதி …
இவ்வாறு நாடகம் தொடர்கிறது ‘துவக்குச் சுட்டுச் சத்தம் ஒன்று கேட்கிறது’.
இந்த நாடகப் படைப்பில் பொருட்களைக் கையாளும் திறமையையும் காணலாம். அரங்கில் நாடகப் பொருட்களுக்கும் உயிர் உண்டு வரலாறும் உண்டு. லலிதா தற்கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கி எலவே அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. அதன் வரலாறும் கூறப்பட்டுவிட்டது. தாயும் மகனும் சந்தித்த வேளை துப்பாக்கியும் காட்சிக்கு வந்துவிடுகிறது, வந்த வரலாறும் கூறப்படுகிறது.
… லலிதாவின் இடுப்பின் வலதுபுறத்தில் சாறியின் மடிப்பில் கடினமான பொருளொன்று இருப்பதை மஹிந்த உணர்ந்து, அதை அவதானிக்கும் வேளையில் அதை வெளிக்காட்டுவதற்காக லலிதா எடுக்க அவன் அதைத் தாயிடமிருந்து எடுத்துக் கொள்கிறான். அது ஒரு சிறிய துப்பாக்கி.
மேலும், சுடப் பயிற்சி கொடுத்த வரலாறும் தொடர்கிறது.
அலிஸ் அம்மாவும் முடிவில் கதை சொல்கிறார்:
மிஸ்ரர் சேரசிங்க அவரிடம் கொடுத்து, அவரின் சொந்தத் தற்பாதுகாப்புக்காக ஆயுதத்தை எப்படிப் பயன்படத்துவது என்று பயிற்சி கொடுத்திருந்தார். அந்தத் துவக்குச் சூட்டுச் சத்தத்தைத்தான் நீங்கள் கேட்டீர்கள்.
நாடக மேடையின் பின்னே துப்பாக்கி இருந்தால், அதற்கு முன் மேடையில் வேலை இருக்கும் என்று, முன்பு எங்கோ படித்ததை இங்கு கண்டேன்.
இன்னும் ஒரு நாடகப் பொருளின் கையாள்கையை மிகவும் விதத்து கூறுலாம்.
அவள் அந்த சட்டம்போட்ட சிறிய படத்தை எடுக்கிறாள்
அலிஸ்
அதென்ன?
ஐராங்கனி
றொபட் அண்ணா எழுதித் தன் படுக்கைக்கு மேலே தொங்கவிட்டிருந்த கவிதை …
ஐராங்கனி ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடிய வேளையில்:
ஐராங்கனி
நான் எரி நெருப்பு வளையத்தின் விளிம்பு வரை போவேன், அங்கே நின்று இந்தப் பிரார்த்தனையைச் சொல்லுவேன். (மஹிந்தவிடமுள்ள சட்டமிடப்பட்ட ஆவணத்தை அவள் காட்டுகிறாள், அப்பொழுது அதனை மஹிந்த அவளிடம் கொடுக்கிறான் … ஆவணத்தைச் சுட்டிக் காட்டிவிட்டு, அவள் வாசிக்கிறாள்).
ஐராங்கனியால் கவிதை வாசிக்கப்படுகிறது.
ஈமத் தீயின் ஆருகே ஒரு சோக நாடகம்:
சேரசிங்ஹ
மீண்டும் தீச்சுவாலையின் பக்கமாகத் திரும்பினாள்
கையில் வைத்திருந்த சட்டகத்திற் காணப்படும்
பிரார்த்தனையை அவள் வாசித்து முடித்தாள்
…
தீச்சுவாலைக்குள் திடீரென அவள் தன்னைத் திணித்துக் கொண்டாள்.
எரியுண்டு கிடந்த சட்டகத்தைக் காட்டி
நெருப்பு வளையத்தின் விளிம்பில் இருந்து
எரிந்த இதை மட்டும் எடுத்துவந்தேன்
மேற்பகுதி மிஞ்ச ஒரு எச்சக் கூறாய்
எரிந்த சட்டகத்தை ஓர் இருக்கையில் வைக்கிறார்.
நாடக முடிவில்:
ஃபாதர் விக்கிரமசிங்ஹ
இருக்கையில் கிடக்கும் அந்த எரிந்த சட்டகத்தை அவதானிக்கிறார். அவர் அதை எடுக்கிறார். எஞ்சியிருக்கும் பகுதியை வாசிக்கிறார்:
அவர்களது நாகரிகம் செத்துக் கொண்டிருக்கும் பொழுது …
நாடகம் முற்றும்.
அன்ரிகனி நாடகங்களின் பேசுபொருள் (Theme)
அன்ரிகனி நாடகங்களின் பேசுபொருளாகப் (Theme) பலவற்றைக் கொள்ளலாம்:
அரசியல் அதிகாரமும் அதிகார அரசியலும்
அதிகார மையமும் தனிமனித சுதந்திரமும்
ஆணாதிக்கமும் பெண்விடுதலையும்
மேலாதிக்கமும் விடுதலை வேட்கையும்
போராட்டமும் உயிர்த் தியாகமும்
கற்பனா வாதமும் நடைமுறை வாதமும்
பிடிவாதமும் தாராளவாதமும்
மேலும் …
பாத்திரப் படைப்புகளின் நிறங்கள்:
வெள்ளை
கறுப்பு
சாம்பல் என இன்னும் தொடரலாம் …
உறுதியாக ஒன்றைக் கூறி என் உரையை இறுதி செய்கிறேன்:
எங்கள் ‘யாழ்ப்பபாணத்துப் பொடியன்’ ஏனெஸ்ட் தளையசிங்கம் மக்கின்ரையர் அவர்களை உலக நாடகர் வரிசையில் சரியாசனம் வைத்து நாங்களும் பெருமைப்படலாம்.