அறிமுகம்
‘சிறுவர் அரங்கு’ பற்றி உரக்கச் சிந்திப்பதே இவ்வுரையின் நோக்கம். சிறுவர் அரங்கு என்றால் என்ன? ‘சிறுவர்’, ‘அரங்கு’ ஆகிய இரண்டின் இணைப்பில் ஒரு புதிய பொருள் விரிகிறது. அப் பொருள் பற்றி அறிய, சிறுவர் பற்றியும் அரங்கு பற்றியும் முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். இவை பற்றி அறிமுக நெறிமுறையில் சுருக்கமாகக் பார்க்கலாம்.
குழந்தைப் பருவம்
சிறுவர்களுக்கான பாடல்கள், ஆடல்கள், விளையாட்டு என உலகெங்கும் அவரவர் வாழ்வுடன் பின்னிப்பிணைந்திருப்பது போல, தமிழர் வாழ்விலும் உள்ளன. கைக்குழந்தைப் பருவத்திலேயே கலைத் தொடர்பு தொடங்கிவிடுகிறது. குழந்தைக்கும் தாலாட்டு இசைக்கும் உள்ள தொடர்பு ஆத்மார்த்தமானது. குழந்தை இசையைக் கேட்டு இலயித்துப்போய்விடுகிறது. இது குழந்தைக்கும் கலை உலகிற்கும் உள்ள முதல் தொடர்பு. ‘கூத்துக் கூத்து தெய்யாம் கூத்து’ என்று குழந்தைகள் உடம்பு பிரட்ட முன்னரே, தூக்கிப் பிடித்துக் கால்களை மிதிக்கச் செய்வதும்; குழந்தைகள் இருக்க ஆரம்பித்ததும் ‘சஞ்சாடம்மா சாஞ்சாடு, தாமரைப் பூவே சாஞ்சாடு, குத்துவிளக்கே சாஞ்சாடு, கோயில் மணியே சாஞ்சாடு’ என்று குழந்தைகளைச் சாய்ந்தாடச் செய்வதும்; ‘சாளச் சாளக் கொண்டலம் சக்கப் பணியாரம் கொண்டலம்’ என்று கை கொட்டச் செய்வதும்; ‘கைவீசம்மா கைவீசு கடைக்குப் போகலாம் கைவீசு’ என்று கைவீசச் செய்வதும்; போன்ற ஆடல்கள் குழந்தைகள் வளர வளர, குழந்தைகளின் பருவத்திற்கு ஏற்ப வளரும்; பாட்டிமார்கள் பாடல்களும் வளர்ந்து கொண்டு போகும். ‘நண்டூருது நரியூருது’ என்று குழந்தைகள் கையைப் பிடித்து கிச்சுக் கிச்சு மூட்டுவதும்; உள்ளங் கையில் முழங்கையால் மாவரைத்துப் பகிர்ந்துண்பதும்; முகத்தை சேலைத் தலைப்பால் மறைத்தும் விலக்கியும் ‘பிகப்பூ’ காட்டுவதும்; என குழந்தைகளுக்கு விரியும் உலகம் மிகப் பரந்தது. குழந்தைகள் வளர்ந்து சிறுவர்களானதும் அவர்கள் உலகம் கட்டுக்கடங்காதது.
சிறுவர்
வயதெல்லையைக் கொண்டு மனித வாழ்வை இரு பருவங்காளாக வகுக்கலாம். பதினெட்டு அகவை வரை பிள்ளைப் பருவம், அதாவது சிறுவர்கள். பதினெட்டு அகவைக்கு மேல் முதிர் பருவம், அதாவது பெரியவர்கள். இவ்வுரை சிறுவர்கள் பற்றியதாகையால், சிறுவர்களின் வகைப்பாட்டை நோக்கலாம். இங்கும் அறிஞர்கள் மத்தியிலும், அரங்கச் செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் ஒத்த கருத்து இருப்பதாகத் தெரியவில்லை. ஆளுக்கு ஒருமாதிரி வயதெல்லையைக் குறிக்கிறார்கள். நாட்டு வழப்பம், பண்பாடு, கல்வி வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி போன்றவற்றுடன், பால் வேறுபாடும் உள வளர்ச்சியைப் பாதிக்கின்றன. வயதுக்கேற்ற உள வளர்ச்சியே வகைப்பாட்டுக்கான அடிப்படை. இது சிறுவர் உளவியல் துறை சார்ந்தது. பரிசோதனை முயற்சியாக சிறுவர் வயதெல்லையை இவ்வாறு வகுக்கலாம்.
3 வயது வரை – நடைபயிலும் பருவம்.
4 முதல் 6 வரை – விளையாட்டால் அறியும் பருவம்.
7 முதல் 10 வரை
11 முதல் 14 வரை
15 முதல் 18 வரை
அரங்கு
அடுத்து, அரங்கு பற்றிப் பார்க்கலாம். அரங்கு என்பதை ‘theatre’ என ஆங்கிலத்தில் சொல்வர். பார்வைக்கானது என்பதே இதன் முதற் பொருள். இன்றைய நாடகவியல் சிந்தனையில் அரங்கு என்பது அரங்கச் செயற்பாடுகள் முழுமையையும் குறிக்கும். நாடக அரங்கமொழி இலக்கணம், நாடகப் பாடமொழி இலக்கணத்திலும் வேறானது. இசையுடன் பொருத்திப் பார்த்து இந்த இலக்கண வேறுபாட்டைப் புரிந்துகொள்ளலாம். பாடல் எழுதுவதற்கு யாப்பிலக்கணம் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அப் பாடலை இசைப்பதற்கு இசைப் பயிற்சி வேண்டும். அவ்வாறே நாடகம் எழுதுவது ஒரு பயிற்சி. நாடகத்தை அரங்காக்கம் செய்வது வேறு பயிற்சி. இரண்டு பயிற்சிகளையும் ஒருவர் பெற்றிருக்கலாம், ஆனாலும் அவை இரண்டும் வேறு.
அரங்குபற்றி அழுத்திக் கூறுவதற்கு ஒரு சீனப் பழமொழியை எடுத்துக் காட்டலாம்:
Tell me and I will forget.
Show me and I will remember.
Involve me and I will understand.
என்னிடம் சொல்லு நான் மறந்துபோவேன்.
என்னிடம் காட்டு நான் நினைவில் கொள்வேன்.
என்னைத் தொடர்புபடுத்து நான் புரிந்து கொள்வேன்.
தொடர்புபடுத்துவது அரங்கு.
சிறுவர் அரங்கு
ஏலவே விளக்கப்பெற்ற சிறுவர், அரங்கு ஆகிய இரண்டையும் இணைத்து சிறுவர் அரங்கு உருவாகிறது. Children’s Theatre என்பதன் நேரடித் தமிழாக்கமாகச் சிறுவர் அரங்கு என்ற கூட்டுச் சொல் உள்ளது. சிறுவர் நாடகச் செயற்பாட்டில் அரங்கு முதன்மை பெறுகிறது என்பதால், சிறுவர் அரங்கு என்றே சிறுவரின் இக் கலைவடிவம் எடுத்தாளப்பட்டு விளக்கப்படுகிறது.
பொதுவாகச் சிறுவர்களுக்கு நினைவாற்றல், கற்பனைவளம், போலச் செய்தல் போன்றவை இயல்பாக வரும். சிறுவர்களால் இயலும் என்பதால், பெரியவர்கள் தமது பார்வைக்காகவும், சுவைக்காகவும், கவர்ச்சிக்காகவும் சிறுவர்களைக் கொண்டு செய்விப்பவை சிறுவர் அரங்கு அல்ல. சிறுவர்கள் சிலர் கருவில் திருவுடையவர்களாக வியத்தகு சாதனையாளர்களாக இருப்பார்கள், உன்னதங்களைச் செய்வார்கள், உச்சங்களைத் தொடுவார்கள். அவையும் பெரியவர்களுக்குப் பிரமிப்பு ஊட்டுபவையே அல்லாமல் சிறுவர்களுக்கானவை அல்ல. மிகச் சிறிய வயதில் அவ்வை சண்முகம் அவர்கள் சங்கரதாஸ் சுவாமிகள் நாடகங்களில் பெரும் பேரும் புகழும் பெற்றார் என்றாலும், அவரின் சாதனைகளும் பெரியவர்களுக்கானவையே, சிறுவர்களுக்கானவை அல்ல. அன்றைய ‘போய்ஸ் நாடகக் கம்பனிகள்’ சிறுவர்களால் ஆனவையே, ஆனாலும் சிறுவர்களுக்காக ஆனவை அல்ல. அவை சிறுவர் அரங்கு அல்ல. சிறுவர் அரங்கைப் புரிந்து கொள்ளாது, இன்றும் சங்கரதாஸ் சுவாமிகளின் சத்தியவான் சாவித்திரி நாடகத்தையும், சிலப்பதிகாரக் கண்ணகி மதுரையை எரித்த காட்சியையும் பள்ளிச் சிறுவர்களைக் கொண்டு செய்விக்கின்றார்கள். சிறுவர்களுக்குப் புரியாததை, அவர்களின் மன வளர்ச்சிக்கு ஒவ்வாததை, அவர்களுக்குத் தொடர்பற்றதை பெரியவர்களின் மகிழ்வுக்காகச் சிறுவர்களைக் கொண்டு செய்விப்பது தவறு. இது சிறுவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும். பரத நாட்டியம் பயிற்றுபவர்கள் இதில் கவனம் செலுத்தவேண்டும். சிறுவர் அரங்காற்றுவதால் மட்டும் சிறுவர் அரங்காகிவிடாது.
சிறுவர் அரங்கை சிறுவர்களுக்காகச் சிறுவர்களும் ஆற்றுவார்கள், சிறுவர்களுக்காகப் பெரியவர்களும் ஆற்றுவார்கள். ஆகவே, யார் செய்தாலும் சிறுவர்களுக்காக ஆனதே சிறுவர் அரங்கு. பார்வையாளர்கள் சிறுவர்கள். சிறுவர் அரங்கு பார்வையாளர்களைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. சிறுவர்கள் வித்தியாசமானவர்கள். நடப்பவற்றில் ஈடுபாடு ஏற்படாவிட்டால் அவர்களைப் பார்வையாளர்களாக உட்காரவைக்கமுடியாது. அவர்கள் உட்கார்ந்து பார்ப்பதாலும் சிறுவர் அரங்காகிவிடாது. அவர்கள் கவனத்தைத் திசைதிருப்பக்கூடிய பல காட்சிப்படுத்தப்பட்டிருக்கலாம். இங்கு கவனிக்கப்படவேண்டியது அரங்கு சிறுவர்களுக்காக ஆனதா என்பதே. நாடக எழுத்தில் மட்டும் அல்ல, அதைக் கொடுக்கும் தன்மையிலும், இலக்கு சிறுவர்கள்.
அரங்கப் பயிற்சி
சிறுவர்கள் ஆற்றுனர்கள் ஆகும் போது அவர்கள் மேலதிகப் பயன் பெறுகிறார்கள். அரங்கப் பயிற்சியால் பெறும் பயன்கள் பல. மனம் வாக்கு காயம் என்று சொல்லப்படுகின்ற மூன்றும் வளர்ச்சி அடைகின்றன.
உளப் பயிற்சியால் மனம் பண்படுகிறது. உளக் கூச்சம் அகல்கிறது, தன்நம்பிக்கை உருவாகிறது, ஒழுங்குமுறை ஏற்படுகிறது. இவை மட்டும் அல்லாது உணர்வுகளுக்கும், எண்ணங்களுக்கும், கனவுகளுக்கும் வடிகாலாய் அமைகிறது. இவை பாதுகாப்பான சூழலில், முறையான வழிகாட்டலில் நடைபெறுகின்றன. அரங்கு கூட்டு முயற்சி ஆகையால் உடனுழைத்தல், தன்னடக்கம், விட்டுக்கொடுப்பு, சகிப்புத் தன்மை, அனுபவப் பகிர்வு ஆகியவை அவசியமாகின்றன. அரங்கில் தானக இல்லாமல் இன்னொன்றாய் உருவாவதால் வேறு கண்களால் உலகைக் காணமுடிகிறது. உலகை வேறு கோணத்தில் புரிந்துகொள்ள முடிகிறது. வேறு எண்ணங்களையும் சீர்தூக்கிப் பார்க்க முடிகிறது. அவற்றுள் உள்ள நியாயங்களை ஏற்றுக்கொள்ளவும் முடிகிறது. மறைமுகமாக உள்ள உட்கருத்துகள் வெட்டவெளிச்சமாகின்றன. வாழ்வில் ஏற்படும் நடைமுறைப் பிரச்சனைகளுக்கும் தீர்வுகள் காணமுடிகிறது.
அரங்கு என்றாலே அடிப்படையாக அமைவது தொடர்பு. தமக்குள் தொடர்பு, அவையினருடன் தொடர்பு எனத் தொடர்பு தொடரும், தொடர்பு ஏற்படுத்தும் முறைகளும் பரந்து விரிகின்றன. குறிப்பாக மூச்சுப் பயிற்சியும், குரற் பயிற்சியும், உச்சரிப்புப் பயிற்சியும், பேச்சுப் பயிற்சியும் அவசியமாகின்றன. வாக்கு வன்மை பெறுகிறது. அவைக்கு அஞ்சா ஓர்மம் வந்துவிடுகிறது.
அரங்குக்கான உடற் பயிற்சி தனித்துவமானது. உடற் கூச்சத்தை அகற்றுவது. உடற் தளர்வுப் பயிற்சியால் இறுகங்களை இளக்கி உடலை நெகிழ்வுடையதாக்குகிறது. நினைத்த கோலம் கொள்ளச் செய்கிறது. ‘காயமே இது பொய்யடா’ என்பதை அரங்கப்பயிற்சியில் காணலாம்.
மனம் வாக்குக் காயத்திற்கான அரங்கப் பயிற்சிகள் பல. அவற்றால் பெறும் நன்மைகளும் பல. யோகப் பயிற்சி, தியானப் பயிற்சி, ஏகாந்தப் பயிற்சி, ஒருமுகப் பயிற்சி, அவதானப் பயிற்சி, தற்காப்புப் பயிற்சி, வீர விளையாடல்கள், அரங்க விளையாட்டுகள் என, சும்மா இருக்கவும், செயற்படவும், அமைதிக்கும், ஆரவாரத்திற்கும் பயிற்சிகள் பல. கூத்து வகைகளும் பயிற்றப்படுகின்றன. இவை பொதுவாக அரங்க ஆற்றுனர்களுக்கான பயிற்சிக் கூறுகள். சிறு பராயத்திலேயே அவர்களின் உடல் வளர்ச்சிக்கும் உள வளர்ச்சிக்கும் ஏற்ப பயிற்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, வரைமுறைப்படுத்தி அறிமுகம் செய்யப்படுகின்றன. அவற்றின் பலாபலன்கள் வாழ்நாள்ப் பூராவும் பயன்தரக் கூடியன.
உள்ளடக்கம்
சிறுவர் அரங்கு சிறுவர்களுக்கான அரங்கு ஆகையால், அவர்களுடன் பரிமாறிக் கொள்ளப்படுபவை அவர்களுக்கானவையாக இருக்கவேண்டியது அவசியம். பரிமாறப்படுபவைக்கு ஒரு வரையறை வேண்டும். சிறுவர்கள் எல்லோருக்கும் பொதுவான சிறுவர் அரங்கு என்று இல்லை. சிறுவர்கள் எல்லோரும் பொதுவான பார்வையாளர்களும் இல்லை. சிறுவர்களின் மனவளர்ச்சிக்கு ஏற்ப வகைப்படுத்தப்பட்ட வயது எல்லைக்குத் தகக் கொடுக்கப்பட வேண்டியவை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
சிறுவர்கள் விரும்பிப் பார்க்கிறார்கள் என்பதால் மட்டும் அவை சிறுவர்களுக்கானவை ஆகி விடா. சில திரை இசைகளையும், திரை வசனங்களையம் சிறுவர்கள் விரும்பிக் கேட்கிறார்கள், திரும்பச் சொல்கிறார்கள் என்பதாலும் அவை சிறுவர்களுக்கானவை ஆகிவிடா. திரைப்படங்களை இருந்து பார்க்கிறார்கள் என்பதாலும் அவை சிறுவர்களக்கானவை அல்ல. பல வேளைகளில் அவற்றால் தீமையே அல்லாது நன்மை இல்லை. அங்கு காட்டப்படும் விடயங்கள் அவர்களின் மன வளர்ச்சிக்கு உகந்ததாக இருப்பதில்லை. ஆகவேதான் திரைப்படங்கள் யாருக்கானவை என்று தரப்படுத்தப்படுகின்றன. தரப்படுத்தல் தமிழ்த் திரைக்கு இல்லை. அந்தச் சிந்தனையே இல்லை. ஆகவே குஞ்சு குழாத்தியுடன் குடும்பமாக உட்கார்ந்து படம் பார்க்கிறோம். தொலைக் காட்சியும், கணனியும் வந்தபின் இவை யாவும் வீட்டுக்குள்ளேயே வந்துவிட்டன.
ஒரு சிறுவர் அரங்காளர் கூறியதாகப் பலரும் எடுத்தாளும் ஒரு கூற்று: ‘If you give children nothing but shit, they will come to love shit’.
நாடகத்துறையில் சிறுவருக்கானவை பற்றிப் பலர் சிந்திக்கிறார்கள், செயற்படுகிறார்கள். அவர்கள் எடுத்தாளும் விடயங்களும் சிறுவர் ஈடுபாடு கொண்டதாக உள்ளன. சிறுவர்களுக்கு ஏற்படும் அன்றாடப் பிரச்சினைகளை, துன்பங்கள் துயரங்களை, சந்தோசங்களை, கொண்டாட்டங்களை, அவர்களின் தேவைகளை அரங்காக்குகிறார்கள். சின்னச் சின்னப் பாடல்களையும், வனதேவதைக் கதைகளையும், மிருகங்களையும் பறவைகளையும் பாத்திரங்களாகக் கொண்ட கதைகளையும் வைத்து சிறுவர்கள் சம்பத்தபட்ட விடயங்களை அரங்காக்குகிறார்கள். மேலும் வரலாற்றில் இருந்தும் இலக்கியங்களில் இருந்தும் வயதுக்குப் பொருத்தமானவை எடுத்தளப்படுகின்றன. கற்கை நெறிக்கும் அரங்கு உதவுகிறது. கணிதமும் அரங்கிற்கு ஊடாகக் கற்பிக்கமுடியும்.
போதை, வன்முறை, பாலுணர்வு போன்ற விடையங்களை சிறுவர் அரங்காக்குவதுபற்றி சர்ச்சை உள்ளது. இவைபற்றிச் சிறுவர்கள் அறியமாட்டார்கள் என்று சொல்லமுடியாது. ஆகவே முற்றுமுழுதாக இருட்டடிப்புச் செய்வதில் அர்த்தம் இல்லை. அவற்றைக் கையாளும் முறையில் கவனம் வேண்டும். இவை கவர்ச்சிக்குரியனவாக அல்லாமல் படிப்புக்குரியனவாக அமையவேண்டும். இவ்வாறு சிறுவர்களுடன் பரிமாறப்படுபவற்றை ஒருமுறைக்கு இருமுறை சீர்தூக்கிப்பார்த்துச் செய்யவேண்டும்.
விமர்சனம்
அடிப்படையான இன்னும் ஒன்றைக் கூறி இவ்வுரையை முடிக்கிறேன். சிறுவர்களுடன் கலந்துரையாட வேண்டும். அரங்கச் சிறுவர்களும், பார்வையாளச் சிறுவர்களும் கூடி விமர்சிக்கச் சந்தர்ப்பங்களை ஏற்படுத்த வேண்டும். சிறுவர்கள் விமர்சகர்கள் ஆக வேண்டும். அவர்களின் விமர்சனங்களைக் கேட்டால் இன்னும் பல விடயங்கள் புரியும்.
முடிவுரை
சிறுவர் அரங்கின் சகல செயற்பாடுகளிலும் சிறுவர்கள் பங்குகொள்ளும் போதே சிறுவர் அரங்கு முழுமை பெறுகிறது. ஆகவே, சிறுவர் அரங்கில் சிறுவருக்கான அரங்கப் பயிற்சியும் வலியுறுத்தப்படுகிறது. அவர்கள் ஆற்றுனர்கள் ஆகும் போதே சிறுவர் அரங்கின் முழுப்பயனையும் பெறுகிறார்கள்.
முன்பு கூறிய சீனப் பழமொழியை மீட்டுப் பார்க்கலாம்:
Tell me and I will forget.
Show me and I will remember.
Involve me and I will understand.
என்னிடம் சொல்லு நான் மறந்துபோவேன்.
என்னிடம் காட்டு நான் நினைவில் கொள்வேன்.
என்னைத் தொடர்புபடுத்து நான் புரிந்து கொள்வேன்.
ஆற்றுனர்கள் ஆகும்போது புரிதல் மேலும் விரிவடைகிறது.
மக்களாட்சியை விளக்கும் ஒரு வாசகம்:
Government of the people, by the people and for the people.
இதுவே சிறுவரரங்கிலும் வேண்டப்படுவது:
Theatre of the children, by the children and for the children.