தொல்காப்பியம் சொல் ‘வாரம்’ – பாகம் 2

-2-

 

2 – 1. ‘வாரம்’ படைப்பு இயல்

 

நூல் யாப்பதும் வாரம் புனைவதும்

 

முதல்வழி யாயினும் யாப்பினுட் சிதையும்
வல்லோன் புனையா வாரம் போன்றே (தொல் பொருளதிகாரம் மரபியல் (3.653)

 

முதல்வழி யாயினும் யாப்பினுட் சிதையும் – முதல் நூலாயினும் வழி நூலாயினும் அவற்றை ஆக்கும் போது ‘சிதைவு’ ஏற்படலாம்.

வல்லோன் புனையா வாரம் போன்றே – வாரம் புனையும் வல்லமை உள்ளவன் கட்டாத வாரம் போல.

 

யாப்பினுள் ஏற்படும் சிதைவெனப்படுபவை யாவை எனின்:

 

சிதைவெனப் படுபவை வசையற நாடிற்
கூறியது கூறல் மாறுகொளக் கூறல்
குன்றக் கூறல் மிகைபடக் கூறல்
பொருளில கூறல் மயங்கக் கூறல்
கேட்போர்க் கின்னா யாப்பிற் றாதல்
பழித்த மொழியான் இழுக்கக் கூறல்
தன்னான் ஒருபொருள் கருதிக் கூறல்
என்ன வகையினும் மனங்கோள் இன்மை
அன்ன பிறவும் அவற்றுவிரி யாகும் (மரபியல் 3.654)

 

இவ்வாறாக நூல்களில் ஏற்படக்கூடிய சிதைவுகளுக்கு ஒப்புமையாகக் கூறப்படுவது ‘வல்லோன் புனையா வாரம்’. வல்லோன் புனைய வாரமும் சிதைவுறும் என்றவாறு. வாரம் புனையும் வல்லமையும், அவ் வல்லமை இல்லாத இடத்தில் வாரத்தில் ஏற்படும் சிதைவும், அத்துறை வல்லோர் ஆய்வுக்குரியது.

 

இவ் ஒப்புமையால் பெறுவது:

 

நூல் யாப்பதும், வாரம் புனைவதும் இரு வேறு வல்லமைகள். ஆகையால் நூல்களில் இடம்பெறும் பாக்களில் ஒரு கூறாக வாரம் இடம்பெறுவதில்லை.

 

ஏலவே கூறப்பட்டவையால் வாரம் பற்றிப் பெறுவது

 

பாடலின் கூறுகளில் ஒன்றாக ‘வாரம்’ கூறப்பட்டாலும், அது வேறு. கலிப்பாவின் குடும்ப மரபுக் கிளையின் உறுப்பாகக் கூறப்பட்டாலும், அதன் பிறப்பு வேறு.

 

ஏனையொன்று என்ற ‘தேவர் பராஅய’ ஒத்தாழிசைக் கலியின் வகைகளாகிய வண்ணகஒத்தாழிசைக்கலி, அம்போதரங்கம் ஒத்தாழிசைக்கலி அகியவற்றில் மட்டும் வாரம் என்னும் பாவின் கூறு கூறப்படுகிறது. ‘அகநிலைப்’ பாவகைகளில் வாரம் கூறப்படவில்லை.

 

தரவு முதல் சுரிதகம் வரை பாடப்படும் கூறுகளுக்கு வேறானது அவற்றைத் தொடர்ந்து பாடப்படும் வாரம் என்னும் கூறு. அது நூல் யாப்பதிலும் வேறான வல்லமை. ஆகவே இலக்கியங்களில் வாரம் இடம்பெறுவதில்லை.

 

வாரம் புனையும் வல்லமை யாது?

 

2 – 2. வாரம் சொற்கட்டு

 

வாரம் சொன்மையும் பொருண்மையும்

 

ஏனைய பாவகைகளும் பாவின் கூறுகளும் சொற்களால் அமைய, ‘வாரம்’ என்னும் பாவின் கூறு ‘சொற்கட்டுகளால்’ அமையும். வாரம் என்றதின் சொன்மையையும் பொருண்மையையும் விளங்கிக்கொள்ள சொல்லுக்கும் சொற்கட்டுக்கும் இடையிலான ஒற்றுமை, வேற்றுமைகளைக் காணவேண்டும்.

 

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே (தொல். சொல். 2.152)

 

எல்லாச் சொல்லும் என்றால், உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் உள்ள எல்லாச் சொற்களும் எனப் பொருள் கொள்ளலாம். இதற்கு விதிவிலக்கில்லை. பொருளின் குறியாகும் சொல். குறி என்றால் ‘ஒரு கருத்து செயல்முறை போன்றவற்றைத் தெரிவிக்கும் அடையாளம்; குறியீடு’ (க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி) பொருள் முந்தியதா, சொல் முந்தியதா என்றால் பொருள்தான் முந்தியது. இது ‘பொருள் முதல் வாதம்’.

 

சொல், பொருளை மட்டுமல்ல, தன்னையும் தெரிவிக்கும்.

 

பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்
சொல்லி னாகும் என்மனார் புலவர் (தொல். சொல். 2.153)

 

வாரம் பாவகையில் சொன்மையையும் அதற்கான பொருண்மையையும் காணலாம்.

 

  சொல்
(வாரம்)

      |     

———————————————————————-

                   |                                                                                  |

சொன்மை  (இயலொலி)                         பொருண்மை (செயலொலி)

                                                

மூன்றன்நடை (திச்ரலகு)                         – தகிட
நாலன்நடை (சதுர்ச்ரலகு)                       – தகதிமி
ஐந்தன்நடை (கண்டலகு                          – தக தகிட
ஏழன்நடை (மிச்ரலகு)                               – தகிட தகதிமி
ஒன்பான்நடை (சங்கீர்ணலகு)             – தகதிமி தகதகிட

 

இவ்வாறாக தாளக்கட்டின் இயலொலியும் செயலொலியும் ஏராளம், ஒவ்வொரு தாளத்திற்கும் சொன்மையும் உண்டு பொருண்மையும் உண்டு. சொற்கட்டே பொருண்மையாகும்.

 

வாரத்தில் வேத்துஇயல் பொதுஇயல்

 

கூத்தநூல் இயலொலியைப் பொதுவியலாகவும் செயலொலியை வேத்தியலாகவும் வகுத்துக் கூறும்.

 

இயலொலி பொதுவே செயலொலி வேத்தே (ச.து.சு. யோகியார் 1987, 1252 ப.247)

 

பொதுவியல், வேத்தியல் பற்றிக் கூத்தநூல் விளக்கிக் கூறும்:

 

இரண்டு இயல் பொதுஇயல் வேத்துஇயல் என்ப.
பார்ப்பது பொதுஇயல் படைப்பது வேத்து.
உள்ளது பொதுஇயல் உள்ளதை விரித்துக்
கற்பனை காட்டும் கனவது வேத்து (இளைய பத்மநாதன் 2020, 156)

 

கொன்னக்கோல் செயலொலி

 

செயலொலியாகிய ‘கொன்னக்கோல்’ இசை நிகழ்ச்சிகளில் பக்கவாத்திய வகைகளில் ஒன்றாக வழக்கில் உள்ளது.

 

கூத்தநூல் கூறும்:

 

கொன்னத் தாளம் கோப்பது குரலே (ச.து.சு. யோகியார் 1987, 1303 ப.255)

 

கொன்னக்கோல் என்றால் பொதுவாகக் குரல்தாளம் எனப் பொருள்படும். வாய் என்னும் கருவியால் தாளத்தைக் கணக்காய் உச்சரிப்பது.

 

கொன் என்றால்:

 

அச்சம் பயமிலி காலம் பெருமையென்று
அப்பால் நான்கே கொன்னைச் சொல்லே (தொல். சொல். 2.249)

 

கொன்னைச் சொல்லுக்குக் ‘காலம்’ என்னும் பொருள் உள்ளது. இங்கு கொன் என்றால் தாளத்தின் காலக் கணக்கு எனக் கொள்ளலாம். தாளங்களின் காலக் கணக்கைத் தாளம்பற்றி விவரிக்கும் நூல்களில் காணலாம்.

 

தாள நூல்கள்

 

எடுத்துக்காட்டாக:

 

சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையில்,

 

யாழும் குழலும் சீரு மிடறும் (3.26)

 

 

‘சீர்’ என்றதை விளக்கும்போது அடியார்க்குநல்லார் கூறுவார், ‘இதன் பகுதியெல்லாம் ஈண்டரைப்பிற் பெருகும்; வந்தவழிக்கண்டுகொள்க. அஃதன்றித் தாளவகையோத்தினுள்ளும் காணலாம்’, என தாளவகையோத்து என ஒரு தாள நூலை அறிமுகம் செய்கிறார் (உ.வே சாமிநாதையரவர்கள் 2018, 101).

 

சிலப்பதிகாரம் மூன்றாம் பதிப்பின் முகவுரையில் ‘இவற்றிலுள்ள இசைநாடகப் பகுதிகள் எனக்குக் கிடைத்த கச்சபுட வெண்பா, தாளசமுத்திரம், சுத்தானந்தப் பிரகாசம் முதலிய பழைய தமிழ் நூல்களைக் கொண்டும் … (உ.வே சாமிநாதையரவர்கள் 2018, xiv). சுவாமிநாதையர் கண்ட நூல்களில் தாளசமுத்திரம் உள்ளது.

 

தாளசமுத்திரம் – பரதசூடாமணி என்ற அரசன் இயற்றிய தாளவகையைக் கூறும் பழைய நூல் (Tamil Lexicon).

 

சாத்தனார் இயற்றிய கூத்தநூல் தாளம் பற்றி விவரிக்கும் (யோகியார் 1987, 181-263).

 

அறிவனார் இயற்றிய பஞ்சமரபு நூலிலும் தாள மரபுகளை அறியலாம் (வீ.ப.க.சுந்தரம் 1991; வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் 1975).

 

மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள் என்னும் ஆய்வு நூலில் தாளக் கட்டுகள் பல கொடுக்கப்பட்டுள்ளன (சி.மௌனகுரு 1998, இயல் – 6, 409-455).

 

‘சதிர்’ ஆடல்களில் எடுத்தாளப்படும் சதிக் கோர்வைகளுக்கும், நாட்டுக் கூத்துகளில் கையாளப்படும் சொற்கட்டுகளுக்கும், இடையிலான ஒப்பீட்டு ஆய்வு வேண்டும். அது இயலுக்கும் வேறான திறம், இங்கு மேற்கொள்ளப்படவில்லை.

 

சொற்கட்டாய்வில் பெறுவது

 

வாரம், சொற்கட்டுகளால் ஆனது. சொற்கட்டு என்பதும் தாளக்கட்டு என்பதும் ஒரு பொருளைக் குறிக்கும். கொன்னக்கோல் என்பதும் அவ்வாறே. அவற்றுக்குப் பெயரும் உண்டு பொருளும் உண்டு. ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்னும் தொல்காப்பிய இலக்கணத்துள் அமைவது வாரம் சொற்கட்டு.

 

வாரம் சொற்கட்டு வேத்தியலின் பாற்பட்டது. இது செயலொலி, வல்லோரால் ‘கொன்னக்கோல்’ அளவுகொண்டு எழுத்துகளால் கட்டப்பட்டது.

 

[‘வாரம்’ தொடரும் …]