தொல்காப்பியம் சொல் ‘வாரம்’ – பாகம் 3

-3-

3 – 1. ‘வாரம்’ சுரிதகம்

 

பரிபாடலில் சுரிதகம்

 

தொல்காப்பியத்தில் ‘சுரிதகம்’ என்ற சொல் பரிபாடல் இலக்கணம் கூறும் ஓர் இடத்தில் வருகிறது.

 

கொச்சகம் அராகஞ் சுரிதகம் எருத்தொடு
செப்பிய நான்கும் தனக்குறுப்பாகக்
காமங் கண்ணிய நிலைமைத் தாகும் (3.426 / 588)

 

இளம்பூரணம்:

 

சுரிதகம் என்பது ஆசிரிய இயலானாதல் வெண்பா இயலானாதல் பாட்டிற் கருதிய பொருளை முடித்து நிற்பது. (591)

 

வாரம், சுரிதகம் பொருள் மயக்கம்

 

உரையாசிரியர்கள் பலரும் ‘வாரம்’ என்றால் ‘சுரிதகம்’ என உரை கூறி வண்ணகவொத்தாழிசைக்கலிப்பாவின் ‘தரவே தாழிசை எண்ணே வாரம்’ என்னும் நான்கு உறுப்புகளில் ‘சுரிதகம்’ என்ற உறுப்பின் பெயரைச் சேர்த்துள்ளார்கள் (இளம்பூரணம் 670, நச்சினார்க்கினியம் 671).

 

வாரம், சுரிதகம் மயக்கத்திற்கு மேலும்; சில எடுத்துக்காட்டுகள்:

 

அடக்கியல் வாரம் தரவோ டொக்கும் (3.447 / 678)

 

இளம்பூரணம்:

 

அடக்கியலலாகிய சுரிதகம் தரவோடொத்த இலக்கணத்தென்றவாறு.

 

பேராசிரியம்:

 

அடக்கியல் வாரமென்பது அடக்கும் இயல்பிற்றாகிய வாரமென்றவாறு.

 

நச்சினார்க்கினியம்:

 

அடக்கியல்பிற்றாகிய சுரிதகம் தரவோடொக்கும் (679)

 

வெள்ளைவாரணர் ஆய்வுரை:

 

அடக்கும் இயல்பிற்றாகிய வாரம் என்றது சுரிதகத்தினை.

 

அம்போதரங்கவொத்தாழிசைக்கலிப்பாவின் உறுப்புகளைக் கூறும் இடத்திலும்:

 

எருத்தே கொச்சகம் அராகஞ் சிற்றெண்
அடக்கில் வாரமோ டந்நிலைக் குரித்தே (3:455 / 743)

 

இளம்புரணம்:

 

அம்போதரங்கத்திற்கு உறுப்பாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

 

பரிபாடற்கும் இவைதாமே உறுப்பாயின் … (744)

 

‘அடக்கில் வாரத்தை’ ஒரு உறுப்பாகக் கொண்டு [?], ‘எருத்தே கொச்சகம் அராகஞ் சிற்றெண்’ ஆகியவற்றையும் சேர்த்தால் உறுப்புகள் ஐந்தாகும். பரிபாடலுக்கு உறுப்புகள்: ‘கொச்சகம் அராகஞ் சுரிதகம் எருத்தொடு’ நான்கு என பரிபாடலுக்கான இலக்கணம் கூறும் (3.447). இங்கு பரிபாடல் உறுப்பு விளக்கத்தில் முரண் உள்ளது. அதனை விடுத்து, அம்போதரங்க உறுப்புகளைப் பார்க்கலாம்.

 

பேராசிரியம்:

 

தரவும் கொச்சகமும் அராகமும் சிற்றெண்ணும் அடக்கியல்வாரமுமென ஐந்துறுப்புடையது அம்போதரங்க வொருபோகு (746)

 

அவ்வுறுப்புகளிற் கூறிய பொருளை அடக்குமியல்பிற்று வாரமாகலின் அதனை அடக்கில் வாரமென்றான் (747)

 

அடக்கியல் என்ற பாவின் கூறுக்குக் கொடுக்கும் விளக்கத்தில் குழப்பம் உள்ளது. அடக்கியல், வாரம் ஆகிய இரு சொற்களும் இணைந்தே வந்துள்ளதால் அடக்கியல் என்பதனைப் பெயரடையாகக் கொண்டு ‘அடக்கியல் வாரம்’ எனப் பொருள் காணப்பட்டுள்ளது.

 

‘பலசொல் லொருபொருள்’ சுரிதகம்

 

அடக்கியல் வாரத்துடன் இணைத்துக் கூறப்படாத நூற்பாவில் அடக்கியல் பெயர்ச்சொல்லாகச் ‘சுரிதகம்’ எனப் பொருள் கொள்வதைக் காணலாம்.

 

கொச்சகவொருபோகு என்னும் பாவகையின் கூறுகளை கூறும் இடத்து:

 

அடக்கிய லின்றி அடி நிமிர்ந்தொழுகியும் (3:452.4 / 699)

 

இளம்பூரணம்:

 

அடக்கிய லின்றி அடி நிமிர்ந்தொழுகியும் என்பது – சுரிதகமின்றித் தரவு தானே நிமிர்ந்தொழுகி முடியினும் என்றவாறு (700)

 

மேலே கூறியவாறு அடக்கியல் என்றால் சுரிதகம் எனப் பொருள்படும்.

 

அவ்வாறே ‘போக்கு’ என்றாலும் சுரிதகம் எனப் பொருள் படும்.

 

இடைநிலைப் பாட்டே தரவுபோக் கடையென
நடைநவின் றொழுகும் ஒன்றென மொழிப (3.437 / 636)

 

வெள்ளைவாரணன் ஆய்வுரை:

 

(இ-ள்) மேற்கூறிய ஒத்தாழிசைக் கலியிரண்டனுள் முதற்கண்ணதாகிய ஒன்று, இடைநிலைப்பாட்டு (தாழிசை), தரவு, போக்கு (சுரிதகம்), அடைநிலைக் கிளவி (தனிச்சொல்) என்னம் நான்குறுப்படையதாகப் பயின்று வரும் (எ.று) (642)

 

அது வைப்பெனவும் படும்:

 

போக்கியல் வகையே வைப்பெனப் படுமே
தரவியல் ஒத்தும் அதனகப் படுமே
புரைதீர் இறுதி நிலையுரைத் தன்றே (3.441 651)

 

இளம்பூரணம்:

 

சுரிதகம் என்பது வைப்பெனவும் படும். அது தரவோடொத்த அளவிற்றாகியும் அதனிற் குறைந்த அளவிற்றாகியும் குற்றம் தீர்ந்த பாட்டின் இறுதி நிலையை உரைத்ததென்றவாறு. (651)

 

வெள்ளைவாரணர் ஆய்வுரை:

 

சுரிதகமாவது, உள்ளுறுப்பின் பொருளெல்லாம் ஒருவகையான் அடக்கிக் கூறுதலின் ‘அடக்கியல்’ எனவும், குறித்த பொருளை முடித்துப் போக்குதலின் ‘போக்கு’ எனவும், அவை எல்லாம் தன் கண் வைக்கப்படுதலின் ‘வைப்பு’ எனவும், முற்கூறிய பகுதியைப் பின்னும் பற்றிக் கூறுதலின் ‘வாரம்’ எனவும் வழங்கப்படும். (664)

 

இவற்றுள் ‘வாரம்’ என்ற பாவின் உறுப்பைச் சுரிதகத்துடன் பொருத்திக் கூறியதும், அதற்குக் கொடுக்கப்பட்ட விளக்கமும் ஆய்வுக்குரியது.

 

‘சுரிதகம்’ என்னும் பெயர்ச் சொல் கலித்தொகை என்னும் சங்க இலக்கிய நூலில் பாவின் கூறாகக் குறிக்கப்பட்டுள்ளதைப் பல இடங்களில் காணலாம் (தமிழண்ணல் 2003 – 13, 17, 21, … … …). அதே போலப் பரிபாடல் நூலிலும் காணலாம் (தமிழண்ணல் 2003 – 49, 50). இலக்கியப் படைப்புகளில் ‘வாரம்’ குறிக்கப்படுவதில்லை என்பதற்கு கலித்தொகை, பரிபாடல் ஆகிய சங்க இலக்கியங்கள் எடுத்துக்காட்டு.

 

ஆகவே, வாரமும் சுரிதகமும் ஒன்றல்ல எனத் தீர்மானமாகக் கூறலாம்.

 

தொல்காப்பியம் சொல் ‘வாரம்’ தீர்மானம்

 

சிலப்பதிகாரம் அமைத்த ஆடுகளங்களில் ‘வாரம் பாடும் தோரிய மகளிர்’ வாரம் பாடியதைக் கண்டோம். மேலும் வாரம் பற்றிய பல விளக்கங்களைத் தொல்காப்பியம் கூறும். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகியவற்றில் வாரம் பற்றிய இலக்கணக் கோட்பாடுகள் உள்ளன.

 

தொல்காப்பியம் எழுத்திகாரம் பிறப்பியலில், வாரம் என்பது எண்ணும் எழுத்தும் அமைந்த இசையாம் என்ற வரைவிலக்கணத்தைப் பெறலாம்.

 

சொல்லதிகார இலக்கணத்திற்கமைய வாரமும் பொருள் உள்ள சொற்கட்டு என்பதைக் காணலாம்.

 

வண்ணகம், அம்போதரங்கம் என்னும் இரு கூறுகளாக வாரம் தோன்றுகிறது. தேவர் பராஅய முன்னிலைக் கண்ணே வாரம் பாடப்படுகிறது; அகநிலைப் பாடல்களில் வாரம் இல்லை என்பவற்றைக் கூறும் பொருளதிகாரம் யாப்பியல்.

 

நூல் புனைவதிலும் வேறானது வாரம் புனையும் வல்லமை என்பதை விளக்கும் மரபியல்.

 

இலக்கிய நூல்களில் வாரம் சேர்க்கப்படவில்லை. சங்க இலக்கியங்களில், சிலப்பதிகாம் உட்பட, வாரம் சொற்கட்டுகள் இல்லை. வாரம் சொற்கட்டுகளைத் தாள நூல்களில் காணலாம், கூத்துகளில் கேட்கலாம்.

 

‘வாரம்’, தாளவல்லுநர் திறம்.

 

குறிப்பாகக் கூறுவதாயின் ‘வாரம்’ ஆடல் ஆசான்கள் திறம்.

 

நூலாசிரியர்களும், உரையாசிரியர்களும், ஆய்வாளர்களும் வாரம் புரிய வல்லார் அல்லர்.

 

மேலும்,

 

‘வாரம்’ வழி; ‘விறல் கூத்து’, ‘சாந்திக் கூத்து’, ‘சதுர்க் கூத்து’, ‘பரதக் கூத்து’ எனக் கால வரிசையில் தமிழ்த் தேசிகக்கூத்தின் தொன்மையையும், தொடர்ச்சியையும் காணலாம். அது வரலாற்று ஆய்வு. அது இங்கு மேற்கொள்ளப்படவில்லை. இது ‘வாரம்’ என்ற சொல்லின் தேடல்.

 

ஆதார நூல்கள்

 

தொல்காப்பியம்

 

கந்தசாமி, ஞா. தேவநேயப் பாவாணர், ஆ. பூவராகம் பிள்ளை, தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையருரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. 1974.

 

கௌமாரீஸ்வரி, எஸ். தொல்காப்பியம் எழுத்து-சொல்-பொருள் இளம்பூரணனார் உரை, சாரதா பதிப்பகம் சென்னை, 2019 (முதற் பதிப்பு: 2005).

 

சிதம்பரம் பிள்ளை, வா. உ. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணம், முல்லை நிலையம் சென்னை, 1991,

 

பாலசுப்பிரமணியன், க. தொல்காப்பியச் சொற்பொருளடைவு, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், 2016.

 

வெள்ளைவாரணன், க. தொல்காப்பியம் செய்யுளியல் உரைவளம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை, 1989.

 

வெள்ளைவாரணன், க. தொல்காப்பியம் பொருளதிகாரம் மரபியல் உரைவளம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை, 1994.

 

வெள்ளைவாரணன், க. தொல்காப்பியம் – நன்னூல் எழுத்திகாரம், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், 2001.

 

சங்க இலக்கியம்

 

கேசிகன், புலியூர்க். திருக்குறள் பரிமேலழகர் உரை, பூம்புகார் பதிப்பகம், சென்னை, 1988.

 

சாமிநாதையர், உ.வே. பரிபாடல் மூலமும் பரிமேலளகர் உரையும், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை, 2017 (முதற் பதிப்பு: 1918)

 

சாமிநாதையர், உ.வே. சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்குநல்லாருரையும், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை, 2018 (முதற் பதிப்பு: 1918)

 

தமிழண்ணல், அண்ணாமலை, சுப. பதிப்பாசிரியர்கள் பரிபாடல் உரையாசிரியர்: சாரங்கபாணி, இரா. கோவிலூர் மடாலயம், கோவிலூர், 2003.

 

தமிழண்ணல், அண்ணாமலை, சுப. பதிப்பாசிரியர்கள் கலித்தொகை உரையாசிரியர்: சுப. அண்ணாமலை, கோவிலூர் மடாலயம், கோவிலூர், 2003.

 

கூத்தநூல்கள்

 

சுந்தரம், வீ.பா.கா. சேறை அறிவனார் இயற்றிய பஞ்சமரபு, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிட், சென்னை 1991.

 

தெய்வசிகாமணிக் கவுண்டர், வே.ரா. அறிவனார் இயற்றிய பஞ்சமரபு, சக்தி அறநிலைய வெளியீடு, ஈரோடு, 1975.

 

யோகியார், ச.து.சு. கூத்த நூல் (இரண்டாம் தொகுதி), வெளியிடுவோர்: திருமதி ச.து.சு. யோகியார், சென்னை 1987,

 

ஆய்வு நூல்கள்

 

பத்மநாதன், இளைய. அரங்கத் திறம் சிலப்பதிகாரம், களரி வெளியீட்டகம், சென்னை, 2020.

 

மௌனகுரு, சி. மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள், பார்க்கர், சென்னை, 1998.

 

விக்டர், ம.சோ. தமிழும் சமற்கிருதமும், யாத்திசைப் பதிப்பகம், அரியலூர் 2020.

 

அகரமுதலிகள்

 

க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, சென்னை, 2009 (First Edition 1992)

 

கதிரவேற்பிள்ளை, நா. தமிழ்மொழியகராதி Asian Educational Services, Madras 1992.

 

Tamil Lexicon, University of Madras, Madras 1982.