ஆரம்பக் கொட்டு
சிலப்பதிகாரம் அமைத்த ஆடுகளங்களில் ஆடற் கூத்தி, வாரம்பாடும் கூத்தி, தலைப்பாட்டுக் கூத்தி, இடைப்பாட்டுக் கூத்தி ஆகிய நால்வகைக் கூத்தியரையும்; அவர்களுள் தலைக்கோலியரையும், மேலும் ஆசான்மார்கள் பலரையும் கண்டு, கேட்டு, ‘கூடை’ பாடல்களையும் ‘வாரம்’ பாடல்களையும், கூத்துகளையும் பற்றி ஓரளவு அறியமுடிந்தது (இளைய பத்மநாதன் 2020).
சிலப்பதிகாரத்தில் தேடியது ‘சிலப்பதிகார அரங்கத் திறம்’, ஆகையால் தொல்காப்பியம் போன்ற இயற் தமிழ் இலக்கண நூல்கள் கவனத்தைப் பெறவில்லை. அதனால் குறை நேர்ந்துவிட்டது.
‘இறந்தது காத்தல்’ (3.656,12), இளம்பூரணர் விளக்கம்: ‘மேற் கூறப்பட்ட சூத்திரத்தால் கூறப்படாத பொருளைப் பின்வருகின்ற சூத்திரத்தா னமைத்தல்’ (வெள்ளைவாரணன் தொல் மரபியல் 1994, ப.202). இறந்தது காத்தலாவது முன்னர் கூறத்தவறியதைப் பின்னர் கூறி, அதன் இலக்கணத்தைக் காத்தல் என்ற உத்தி எனக் கொள்ளலாம். ‘இறந்தது காத்தல்’ என்ற உத்திக்கு அமைய, ‘அரங்கத் திறம் சிலப்பதிகாரம்’ (இளைய பத்மநாதன் 2020) கூறத் தவறியதை, தொல்காப்பியம் இயற்தமிழ் இலக்கண நூலில் கண்டு, ‘வாரம்’ பற்றி மேலும் விளக்கம் பெறலாம்.
இது தொல்காப்பியம் நூலில் ‘வாரம்’ தேடல். தொல்காப்பியம் மூல பாடத்தில் எங்கெல்லாம் ‘வாரம்’ உள்ளதோ அவற்றையும், அவற்றுடன் தொடர்புடைய ஏனையவற்றையும் தேடித் தொகுத்துப் பகுத்தாய்வு செய்வதே இவ் ஆய்வின் நெறிமுறை.
உரைகள் இன்றி மூலபாடங்களைப் புரிதல் கடினம். ஆனாலும், உரைகள் பல இடங்களில் குளப்பம் மிக்கவையாகவும், முரணானவையாகவும் உள்ளன. ஆகவே, உரைகளுள் தள்ளுவனவற்றைத் தள்ளி, கொள்வனவற்றைக் கொண்டு ‘வாரம்’ தேடித் தொடர்கிறது இவ் ஆய்வு.
இவ் ஆய்வுரையில் எடுத்தாளப்பட்ட பாவியல் சொற்கள் பல விரிவஞ்சி விளக்கப்படவில்லை. ‘வாரம்’ என்பதுடன் நேரடியாகத் தொடர்புடைய பாவியல் சொற்கள் ஆய்வுரையில் விளக்கம் பெற்றுள்ளன.
இவ் ஆய்வுரையின் கட்டுமானம் மூன்று பாகங்ளாக வகுக்கப்பட்டுள்ளது. வாரம் பிறப்பு, தோற்றும் முறைமை, யாப்பமைதி ஆகியன முதலாம் பாகம். வாரம் புனைவு, சொற்கட்டு ஆகியன இரண்டாம் பாகம். வாரம், சுரிதகம் வேறுபாடு மூன்றாம் பாகம்; முடிவாகத் தீர்மானம்.
-1-
1 – 1. ‘வாரம்’ பிறப்பு இயல்:
தொல்காப்பியம் எழுத்ததிகாரம் பிறப்பியல், எழுத்துகளின் பிறப்பிலக்கணத்தை உணர்த்துகிறது. அங்கு, ஒவ்வொரு எழுத்தின் பிறப்பும் அறிவியல் முறையில் நுண்மையாய் விளக்கப்பட்டுள்ளன (பா83-101). அவற்றை விவரிக்கில் விரியும், விரிவஞ்சி இங்கு ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ‘வாரம்’ பற்றிப் பார்க்கலாம். எழுத்ததிகாரம் பிறப்பியலில் எழுத்துகளின் பிறப்பிலக்கணம் கூறும் வரிசையில் அடுத்து (பா102), ‘வாரம்’ பிறப்பிலக்கணம் இடம் பெறுவது கவனத்திற்குரியது.
எல்லா வெழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி யெழுதரு வளியின்
பிறப்பொடு விடுவழி யுறழ்ச்சி வாரத்
தகத்தெழு வளியிசை யரிறப நாடி
யளபிற் கோட லந்தணர் மறைத்தே (தொல் எழுத்ததிகாரம் பா102)
‘வாரம்’ என்பதன் பிறப்பியலை அறிந்துகொள்ள வரிக்கு வரி இந்நூற்பாவின் பொருளறிதல் அவசியமாகின்றது.
நூற்பா பொருள் விளக்கம்:
(இளம்பூரணர் உரை; வெள்ளைவாரணனார் தெல்காப்பியம் – நன்னூல் எழுத்ததிகாரம் ஒப்பாய்வுரை; மற்றும் பேரகராதி அகியவற்றின் துணைகொண்டு இந்நூற்பாவுக்குப் பொருள் காணப்பட்டுள்ளது).
எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து சொல்லிய பள்ளி – எல்லா எழுத்துக்களும் வெளிப்பட விதந்து சொல்லப்பட்ட இடங்களில்,
கிளந்து – கிளத்தல் – புலப்படக் கூறுதல், விதந்து கூறுதல்.
பள்ளி – இடம் (Tamil Lexicon)
எழுதரு வளியின் பிறப்பொடு விடுவழி – தோன்றும் காற்றினால் பிறக்கும் அவ்வியல்போடு விவரமாகக் கூறுமிடத்து,
விடுவழி – விடு + வழி@ விடுதல் – விவரமாகக் கூறுதல்; வழி – இடம் (Tamil Lexicon)
உறழ்ச்சி வாரத்து அகத்தெழு வளியிசை – திரிதலும் தன்மையுடைய மூலாதாரத்திலிருந்து தோன்றும் வளியானாகிய ஒலியினை,
உறழ்ச்சி – திரிகை, changing (Tamil Lexicon)
இளம்பூரணனார் உரை:
‘உறழ்ச்சி வாரம்’ என்றது, உந்தி முதலா எழும் வளி தலை காறும் சென்று மீண்டும் நெஞ்சின்கண் நிலைபெறுதல் எனக்கொள்க. ‘வளி’ என்னாது ‘வளியிசை‘ என்றது, அவ்வாறு நெஞ்சின்கண் நிலைபெறும் அளவும் வளி எனப்படுவது பின்னை நெஞ்சினின்றும் எழுவழியெல்லாம் வளித்தன்மை திரிந்து எழுத்தாம் தன்மைத்தாம் என்பது விளக்கிநின்றது (எஸ்.கௌமாரீஸ்வரி 2019, 47)
அரிதப நாடி அளபிற் கோடல் – இடைவிடுகை இல்லாமல் அளபினைக் கொள்ளுதல்,
அரிதப – அரி + தப; அரி – இடைவிடுகை, Interval of space or time. தபுதல் – கெடுதல் (Tamil Lexicon), இல்லாமை.
அந்தணர் மறை
அந்தணர் மறைத்தே என்றால் ‘பார்ப்பார் வேதத்துக் கண்ணது’ என்ற, இளம்பூரணர் உரை (எஸ்.கௌமாரீஸ்வரி 2019, 47) மேலும் ஆய்வுக்குரியது.
அந்தணர் என்றால்:
ஆசிரியர்களும், அந்தணர், அறவோர், மேலோர், மறையோர், பார்ப்பார், ஐயர் என்றவாறெல்லாம் அழைக்கப்பட்டனர் (ம.சோ. விக்டர், 2020. 168)
புலமை பெற்றிருந்தோரும் அறிவர்களும் அந்தணர்களாகவே கருதப்பட்டு மன்னர்களுக்கும் மற்றவர்களுக்கும் அறிவுரைகள் வழங்கிவந்தனர்
(ம.சோ. விக்டர், 2020. 103)
அந்தணர்பற்றித் திருக்குறள் கூறும்:
அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்வுயிர்க்கம்
செந்தண்மை பூண்டு ஒழுகலான் (புலியூர்க் கேசிகன் 1986, 3.30)
மறை என்றால்:
அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீட்டலும்
உளவென மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர் (தொல் எழுத் 1. 33)
நரம்பின் மறைய – நரம்பினையுடைய யாழினது இசைநூல் (எஸ்.கௌமாரீஸ்வரி 2019, 21)
அந்தணர்க்கும், நூலுக்கும், அறத்திற்கும் உள்ள உறவைத் திருக்குறள் கூறும்:
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல் (543)
மேற்கூறிய விளக்கத்திற்கு அமைய ‘அந்தணர் மறைத்தே‘ என்றால், புலமைபெற்றோர்களின் நூல்களில் கண்டவாறே, எனப் பொருள் கூறலாம்.
‘வாரம்’ பிறப்பு இயலில் பெறுவது
‘வாரம்’ தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இலக்கணத்துள் அமைகிறது.
‘வாரம்’ எழுத்தாம் தன்மைத்தாம் – எல்லா வெழுத்தும்
‘வாரம்’ இசையாம் தன்மைத்தாம் – அகத்தெழு வளியிசை
‘வாரம்’ எண்ணாம் தன்மைத்தாம் – அளபிற் கோடல்
ஆதாரம் – அந்தணர் மறைத்தே.
‘வாரம்’ என்பது, எண்ணும் எழுத்தும் அமைந்த இசையாம்.
1 – 2. ‘வாரம்’ தோற்று இயல்
வாரம் தோன்றும்வாறைத் தொல்காப்பியத்தில் காணலாம்:
பா எண்: தொல்காப்பியம் முழுமையாக இளம்பூரணர் உரை, எஸ்.கௌமாரீஸ்வரி 2019.
தொல்காப்பியச் சொற்பொருளடைவு, க. பாலசுப்பிரமணியன் 2016.
பக்க எண்: தொல்காப்பியம் செய்யுளியல், க.வெள்ளைவாரணன் 1989.
சுட்டு எண் பா பக்கம்
(1) ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியேன
நாலியற் றென்ப பாவகை விரியே (3.410 523)
(2) ஒத்தா ழிசைக்கலி கலிவெண்பாட்டெ
கொச்சகம் உறளொடு கலிநால் வகைத்தே (3.435 628)
(3) அவற்றுள்
ஒத்தா ழிசைக்கலி இருவகைத் தாகும் (3.436 635)
(4) இடைநிலைப் பாட்டே தரவுபோக் கடையென
நடைநவின் றொழுகும் ஒன்றென மொழிப (3.437 636)
(5) ஏனை யொன்றே
தேவர்ப் பராய முன்னிலைக் கண்ணே (3.442 665)
அதுவே
வண்ணகம் ஒருபோ கெனவிரு வகைத்தே (3.443 778)
(6) வண்ணகம் தானே
தரவே தாழிசை எண்ணே (*)வாரமென்
றந்நால் வகையில் தோன்று மென்ப (3.444 470)
(7) ஒருபோ கியற்கையும் இருவகைத் தாகும் (3.450 696)
(8) கொச்சக வொருபோ கம்போ தரங்க மென்
றொப்ப நாடி உணர்தல் வேண்டும் (3.451 697)
எருத்தே கொச்சகம் அராகஞ் சிற்றெண்
அடக்கியல் (*)வாரமோ டந்நிலைக் குரித்தே (3.455 743)
ஏலவே தொல்காப்பிய நூற்பாக்களில் கண்டவாறு, (*) வாரம் எங்கு, எவ்வகையில் தோன்றும் என்பதைக் காண, அதன் ‘குடும்ப மரபுக்கிளை’ கட்டமைக்கப்படுகிறது.
‘வாரம்’ குடும்ப மரபுக்கிளை (Family Tree)
(1)
பா
|
————————————————————————————————–
| | | |
ஆசிரியப்பா வஞ்சிப்பா வெண்பா (2)கலிப்பா
|
—————————————————————————————————-
| | | |
(3)ஒத்தாழிசைக்கலி கலிவெண்பாட்டு கொச்சகக்கலி உறள்கலி
|
——————————————————————————————————-
| |
(4)ஒன்று (அகநிலை ஒத்தாழிசைக் கலி) (5)ஏனையொன்று
| (தேவர் பராஅய ஒத்தாழிசைக் கலி)
| |
——————————————————————-
| | | |
இடைநிலைப்பாட்டு தரவு போக்கு அடை |
|
——————————————————————————————————-
| |
(6)வண்ணகம் (7)ஒருபோகு
| |
———————————————————————-
| | | | |
தரவு தாழிசை எண் (*) வாரம் |
|
——————————————————————————————————–
| |
கொச்சகவொருபோகு (8)அம்போதரங்கம்
|
—————————————————————————————————–
| | | | | |
எருத்து கொச்சகம் அராகம் சிற்றெண் அடக்கியல் (*) வாரம்
(சுட்டு எண்கள் (*) வாரம் கிளை முறையைச் சுட்டும்)
‘வாரம்’ குடும்ப மரபுக்கிளைத் தேடலில் பெறுவது
(*) வாரம் இரண்டு கிளைகளாகத் தோன்றுகிறது,
(2)கலி–> (5)தேவர்பராஅய ஒத்தாழிசைக்கலி–> (6)வண்ணகம்–> (*)வாரம்
(2)கலி–> (5)தேவர்பராஅய ஒத்தழிசைக்கலி–> (8)அம்போதரங்கம்–> (*)வாரம்
(*) ‘வாரம்’ எனப்படும் எண்ணும் எழுத்தும் அமைந்த இசைக்கூறு, (6) ‘வண்ணகம்’, (8) ‘அம்போதரங்கம்’ ஆகிய பா வகைகளில் தோன்றும்வாறை விரிவாகக் காண வேண்டும்.
1 – 3. ‘வாரம்’ யாப்பு இயல்
(2)கலிப்பாவகையின் (3)ஒத்தாழிசைக்கலி என்னும் பாவகை மேலும் முறையே (4) ‘ஒன்று’, (5) ‘ஏனையொன்று’ என இரு கூறுபடும். ‘ஏனையொன்று’ என்ற கூறே (*) ‘வாரம்’ வரை நீழ்கிறது. எனவே இங்கு ‘ஏனையொன்று’ கவனத்திற் குள்ளாகிறது.
(5)ஏனையொன்று – (தேவர் பராஅய ஒத்தாழிசைக் கலி)
ஏனை யொன்றே
தேவர் பராஅய முன்னிலைக் கண்ணே (3.442 / 665)
பராவுதல் – புகழ்தல்; to praise (Tamil Lexicon).
முன்னிலைக் கண்ணே – தெய்வத்தை முன்னிலைப் படுத்தி என்று கூறும்போது, தெய்வத்தைப் படர்க்கையிலும் அல்ல, தெய்வம் தன்னைத்தானே தன்மையிலும் அல்ல என்பது புலனாகிறது. முன்னிலை கவனத்தைப் பெறுகிறது.
வெள்ளைவாரணர் விளக்கக் குறிப்பு:
ஏனையொன்று என்றது ஒத்தாழிசைக்கலியின் இருவகையாக முற்குறித்த இரண்டினுள் இரண்டாவது வகையாக அமைகிறது. அது தேவர்பராஅய ஒத்தாழிசைக்கலி யெனப்படும். ஏனையொன்று எனப்பட்ட ஒத்தாழிசை முன்னிலையிடமாகத் தேவரைப் பரவும் பொருண்மைத்து, எனவே இஃது அகத்திணையொழுக்கலாறு பற்றிய ஒத்தாழிசையாகாதென்பதூஉம், எனவே ஒன்றெனப்பட்ட முன்னையது அகநிலையொத்தாழிசைக் கலிப்பா வெனப்படும் என்பதூஉம் உய்த்துணரப்படும். (665)
(4)ஒன்று – ‘அகநிலை’ ஒத்தாழிசைக் கலிப்பா
(5)ஏனையொன்று – ‘தேவர் பராய’ ஒத்தாழிசைக் கலிப்பா
அதுவே [ஏனையொன்றே]
வண்ணகம் ஒருபோ கெனவிரு வகைத்து (3.443 / 668)
இளம்பூரணம்:
தேவரிடத்து முன்னிலைப் பரவலாகிய அதுதான் (6)வண்ணகமெனவும், (7)ஒருபோகு எனவும் இருவகைப்படும் என்றவாறு (668)
(6)வண்ணகம் பாவகையில் (*)வாரம்
வண்ணகம் தானே
தரவே தாழிசை எண்ணே வாரமென்
றந்நால் வகையில் தோன்று மென்ப (3.444 670)
பேராசிரியம்:
தரவும் தாழிசையும் எண்ணும் வாரமுமென்னும் உறுப்பு முறையானே வருவது வண்ணகவொத்தாழிசையாம் என்றவாறு. (670)
வண்ணித்துப் புகழ்தலின் வண்ணக மெனப்படும். என்னை? தரவினாலே தெய்வத்தை முன்னிலையாகத் தந்து நிறீஇப் பின்னர் அத்தெய்வத்தினைத் தாழிசையானே வண்ணித்துப் புகழ்தலின் அப்பெயர் பெற்றதாதலின் (670)
(2)கலி–> (5)தேவர்பராஅய ஒத்தாழிசைக்கலி–> (6)வண்ணகம்–> கிளை முறையில் (*)வாரம் தோன்றும் பாவின் பெயர் ‘வண்ணக ஒத்தாழிசைக்கலி’.
‘வண்ணகவொத்தாழிசைக்கலி’ பா வகையில் வாரம் இடம்பெறும் என்றவாறு.
தரவு, தாழிசை, எண், ஆகியவை பாவின் உறுப்புகள். அவற்றை மேலும் விளங்கிக் கொள்ள வேண்டும். விரிவஞ்சி அவற்றின் விளக்கத்தை விடுத்து, இங்கு வாரம் இடம்பெறுவதைக் கவனத்தில் கொள்ளலாம்.
(8)அம்போதரங்கம் பாவகையில் (*)வாரம்
ஒருபோ கியற்கையும் இருவகைத்தாம் (3.450 / 696)
கொச்சக வொருபோ கம்போ தரங்கமென்
றொப்ப நாடி உணர்தல் வேண்டும் (3.451 / 697)
நச்சினார்க்கினியம்:
கொச்சகவுடை போலப் பெரும்பான்மையுந் திரண்டுவருவது கொச்சகமெனவும்@ பல வுறுப்புகளும் முறையே சுருங்கியும், ஓரோவழிப் பெருகியும், முடுகியும் கடைக்கண் விரிந்து நீர்த்தரங்கம்போறலின் அம்போதரங்க மெனவும் கூறினர். (699)
கொச்சகம் – ஆடை கொய்தடுக்கிக் கட்டுவது (Tamil Lexicon), கொய்யகம்.
(8)அம்போதரங்கம் என்ற சொல்லின் விளக்கத்தைப் பார்க்கலாம்:
அம்பு – கடல்; தரங்கம் – அலை (Tamil Lexicon)
அம்போதரங்கம் – கடல் அலை
அம்போத ரங்கம் அறுபதிற் றடித்தே
செம்பால் வாரஞ் சிறுமைக் கெல்லை (3.454 / 740)
எருத்தே கொச்சகம் அராகஞ் சிற்றெண்
அடக்கியல் வாரமோ டந்நிலைக் குரித்தே (3.455 / 743)
(8)அம்போதரங்கம் என்பது ஒரு பாவகை. அதன் உறுப்புகளாகிய எருத்து, கொச்சகம், அராகம், சிற்றெண், அடக்கியல், (*)வாரம் ஆகியவை அமைய, அதன் அடி அளவு அறுபது ஆகும். அதில் சரி பாதி, முப்பது அடிக்குக் குறையாமல் (*)வாரம் அமைகிறது, அதுவே அவற்றிற்குரிய நிலை.
(2)கலி–> (5)தேவர்பராஅய ஒத்தாழிசைக்கலி–> (8)அம்போதரங்கம்–> கிளை முறையில் (*)வாரம் தோன்றும் பாவின் பெயர் ‘அம்போதரங்க ஒத்தாழிசைக் கலி’.
‘அம்போதரங்கவொத்தாழிசைக்கலி’ பா வகையில் (*)வாரம் இடம்பெறும் என்றவாறு.
எருத்து, கொச்சகம், அராகம், சிற்றெண், அடக்கியல், ஆகியவை பாவின் உறுப்புகள். அவற்றையும் மேலும் விளங்கிக்கொள்ள வேண்டும். விரிவஞ்சி அவற்றின் விளக்கத்தையும் விடுத்து, (8)அம்போதரங்க வகையில் (*)வாரம் இடம்பெறும் வாறைக் கவனத்தில் கொள்ளலாம்.
வண்ணகம், அம்போதரங்கம் ஒற்றுமையும் வேற்றுமையும்
ஒற்றுமை
இரண்டும் (3)ஒத்தாழிசைக்கலிப்பா வகையை அடிப்படையாகக் கொண்டவை.
இரண்டும் (5)’தேவர் பராய முன்னிலைக் கண்ணே’ தோன்றுவன.
இரண்டும் (*)வாரத்தை முறையே உறுப்பாகக் கொள்வன.
வேற்றுமை
ஒருபோகு:
(5)ஏனையொன்று, முறையே (6)வண்ணகம், (7)ஒருபோகு என இரண்டாக வகைப்படுகிறது. ஒருபோகும் முறையே கொச்சகவொருபோகு, (8)அம்போதரங்கம் என இரண்டாக வகைப்படுகிறது.
(5)ஏனையொன்றும், (7)ஒருபோகும் இடையில் வருவன. ஏனையொன்று, ‘தேவர்ப் பராய முன்னிலைக் கண்ணே’ என, விளக்கம் பெறுகிறது. அதுவே ஒருபோகிற்கும் தொடர்பாகிறது.
(5)ஏனையொன்றையும், (8)அம்போதரங்கத்தையும் இணைப்பது (7)ஒருபோகு. (6)வண்ணகத்தையும், (8)அம்போதரங்கத்தையும் இடையில் நின்று பிரிப்பதும் (7)ஒருபோகு.
‘வாரம்’ குடும்ப மரபுக்கிளையிலிருந்து எடுத்துக்காட்டு
(5)ஏனையொன்று
(தேவர் பராஅய ஒத்தாழிசைக் கலி)
|
————————————————————————————————————–
| |
(6)வண்ணகம் (7)ஒருபோகு
| |
——————————————————————————-
| | | | |
தரவு தாழிசை எண் (*)வாரம் |
|
(8)அம்போதரங்கம்
|
———————————————————————————————————————
| | | | | |
எருத்து கொச்சகம் அராகம் சிற்றெண் அடக்கியல் (*)வாரம்
போகுதல் என்றால் ‘மாறுதல்’ எனப் பொருள் கொள்ளலாம் (நா. கதிரவேற்பிள்ளை 1992). (7)ஒருபோகைத் தொடர்ந்து வருவன மாறுதல் அடைகின்றன. (6)வண்ணகத்திற்கு மாறுதல் (8)அம்போதரங்கம்.
(7)ஒருபோகின் இன்னொன்று ‘கொச்சகவொருபோகு’. அது ‘யாப்பினும் பொருளினும் வேற்றுமையுடையது’ (3.452). அதில் (*)வாரம் இடம் பெறுவதில்லை. ஆகவே, அது இங்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
வாரம் யாப்பு இயலில் பெறுவது
(6)வண்ணகம், (8)அம்போதரங்கம் அகிய பாவகைகள் இரண்டும் அடிப்படையில் ஓர் இனமானாலும், உறுப்புகளினாலும் கட்டமைப்பினாலும் வேறுபடுவன.
இரண்டு பாவகைகளும் வேறுபட்டாலும், இரண்டிலும் (*)வாரம் இடம்பெறும்.
(*)வாரம் கட்டுமான வேறுபாடுகள், அத்துறை வல்லோரின் ஆய்வுக்குரியது.
[‘வாரம்’ தொடரும் …]