Vayiriyar
Prelude
[?]
The word vayiriyar is derived from ‘bamboo, bugle’. Hence vayiriyar are buglers or trumbeters. … Here again, as in the poems, we do not know how exactly the ‘buglers’ came to be identified with the dancers. … The buglers seem to have played the drum too. … In another song their singing is praised as faultless. This shows that besides playing the instrument and dancing they also used to sing. (K. Kailasapathy Tamil Heroic Poetry 2002 pp 107-109).
வயிரும் வயிரியரும்
அறிமுகம்
தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon) கூறும்:
வயிர் – Large trumpet, horn, bugle; ஊது கொம்பு.
வயிரியர் – Professsional dancers, actors; கூத்தர்.
வயிரிய மாக்கள் – Professsional musicians; பாடகர்.
இவை ஆய்வுசெய்யப்பட வேண்டியவை. மேலும், உரையாசிரியர்களும் ஆய்வாளர்களும் பலவாறு விளக்கிக் கூறியுள்ளார்கள். அவர்கள் கூறியவற்றைக் கூறி மேலும் குளப்பாமல், நேரடியாகவே மூலங்களுக்குள் தேடி தெளிவு பெற முயற்சிக்கலாம். சங்க இலக்கியங்களில் இச் சொற்கள் வரும் இடங்களைத் தொகுத்தும் வகுத்தும் காணலாம்.
1. வயிர்
1 – 1. வயிரின் பொருள்
முதலில் ‘வயிர்’ என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்று தேடலாம்:
முளிவயிர்ப் பிறந்த வளிவளர் கூர்எரிச் (ஐங் 395: 1)
காய்ந்த மூங்கிலில் நெருப்புப் பற்றி காற்றில் பரவியது; சங்க இலக்கியத்தில் இருந்து எடுத்துக்காட்டாகக் கூறப்படுகிறது (தமிழ்ப் பேரகராதி)
வயிர் என்பது ‘மூங்கில்’ என்ற புல் வகையைக் குறிக்கும் ஒரு சொல்.
1 – 2. இசைக்கருவி
வயிர் என்பது ஓர் இசைக் கருவியைக் குறிக்கும் சொல் என்பதும் பல பாடல்களில் விளக்கம் பெறுகிறது. பல இசைக் கருவிகளுடன் சேரப் பல இடங்களில் வயிரும் இசைக்கப்பட்டுள்ளது.
முருகனின் திருச்செந்தூர் வரவின் போது, பல்லிய இசைக்கருவிகளுடன் வயிர்:
அந்தரப் பல்லியம் கறங்கத் திண்காழ்
வயிர் எழுந்து இசைப்ப வால்வளை ஞரல
உரல்தலைக் கொண்ட உரும்இடி முரசமொடு (திரு: 119-121)
போர்க்களங்களில்:
கொல்படை தெரிய வெல் கொடி நுடங்க
வயங்குகதிர் வயிரொடு வலம்புரி ஆர்ப்ப
பல்களிற்று இனநிரை புலம்பெயர்ந்து இயல்வர
அமர்கண் அமைந்த அவிர்நிணப் பரப்பில் (பதி 67: 5-8)
வளைநரல வயிர் ஆர்ப்ப
பீடுஅழியக் கடந்துஅட்டு அவர்
நாடு அழிய எயில்வெளவி (மது: 185-187)
வெற்றிவாகை சூடி வரும் போது:
வெண்டுபுலங் கவர்ந்த ஈண்டுபெருந் தானையொடு
விசய வெல்கொடி உயரி வலன்ஏர்பு
வயிரும் வளையும் ஆர்ப்ப …(முல் 90-92)
வேட்டுவ வரியில் பலிமுக மடை:
துடியொடு சிறுபறை வயிரொடு துவைசெய (சிலப் 12: 20)
குரவைக் கூத்தில்:
பொலங்காசு நிரைத்த கோடுஏந்து அல்குல்
நலம்கேழ் மாக்குரல் குழையொடு துயல்வரப்
பாடுஊர்பு எழுதரும் பகுவாய் மண்டிலத்து
வயிர்இடைப் பட்ட தௌ;விளி இயம்ப
வண்டற் பாவை உண்துறை தரீஇத்
திருநுதல் மகளிர் குரவை அயரும் (அக 269: 15-20)
இவற்றால், போர்க்களங்களிலும் விழவுகளிலும் ஊர்வலங்களிலும் இயக்கப்படும் ஓர் இசைக்கருவி வயிர் என்பது புலனாகிறது.
ஆனால், வயிர் எவ்வகையினது? அது தோல் கருவியா, துளைக் கருவியா, நரம்புக் கருவியா, கஞ்சக் கருவியா என்பதைக் காண வேண்டும்.
வயிரின் ஓசையைக் கொண்டும், அதன் பிண்டத்தைக் கண்டும் வகைப்படுத்தலாம்.
1 – 3. வயிரின் ஓசை
வயிரின் ஓசை பறவைகளின் ஒலியுடன் பல இடங்களில் ஒப்ப நோக்கப்பட்டுள்ளது.
அன்றில் பறவையின் அகவல்:
ஏங்குவயிர் இசைய கொடுவாய் அன்றில்
ஓங்குஇரும் பெண்ணை அகமடல் அகவப் (குறி 219-220)
நாரையின் பிளிற்றல்:
வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும்
தண்ணுமை செரீஇய தடந்தாள் நாரை
செறிமடை வயிரின் பிளிற்றி … (அக 40: 13-15)
கிளியின் விளி பயிற்றல்:
சாரல் வரைய கிளையுடன் குழிஇ
வளிஎறி வயிரின் கிளிவிளி பயிற்றும் (நற் 304: 2-3)
மயிலின் அகவலுடன் பல இடங்களில்:
காமர் பீலி ஆய்மயில் தோகை
… … …
ஆடுகள வயிரின் இனிய ஆலி (அக 378: 5-8)
கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப்பெடை
அயிரியாற்று அடைகரை வயிரின் நரலும் (அக 177: 10-11)
ஒலிநெடும் பீலி ஒல்க மெல்லியல்
கலிமயில் அகவும் வயிர்மருள் இன்னிசை (நெடு: 98-99)
பறவைகளின் ஒலிகள், வயிர் தாளக்கருவி அல்ல, பாடற் கருவி என்பதைத் தெரிவிக்கின்றன. இங்கு எழும் கேள்வி, வயிர் துளைக் கருவியா, அல்லது நரம்புக் கருவியா என்பதுவே.
1 – 4. வயிரின் பிண்டம்
வயிர் என்னும் பெயர் கொண்டதால், இது ‘வயிர்’ என்ற சொல்லால் குறிக்கப்படும் மூங்கிலால் ஆனது எனக் கொள்ளலாம்.
திண்மையான மரவைரத்தால் செய்யப்பட்டது எனவும் விபரிக்கப்படுகிறது:
‘திண் காழ் வயிர்’ (திரு: 119-120)
இன்னும் ஒரு விபரம்: ‘நெடுவயிர்‘ (சிலப் 26: 193) – நெடிய வயிர். ஆகவே, இது வளைந்த கொம்பு அல்ல.
மேலும்:
பாடுஊர்பு எழுதரும் பகுவாய் மண்டிலத்து
வயிர்இடைப் பட்ட தெள்விளி இயம்ப (அக 269: 15-20)
பாடு ஊர்பு எழுதரும் – ஓசை மிகுந்து பரவச் செய்யும்
பகுவாய் மண்டிலம் – வட்டமான அகன்ற வாய்
இடைப்பட்ட தெள்விளி இயம்ப – மத்திமமான தெளிந்த ஓசை ஒலிக்க
அகன்ற வாய்ப்புறத்தால் ஓசை பரவும்.
முடிவாக:
வயிர்:
ஒரு துளைக் கருவி.
மரவைரத்தில் செதுக்கி வடிவமைக்கப்பட்டது.
கொம்புபொல் வளைந்தது அல்ல.
நெடிய வடிவமானது.
ஆகவே இது ‘கொம்பு’ அல்ல.
ஓசை மிகுந்து பரவச் செய்யும் வட்டமான அகன்ற வாய்.
அகன்ற வாய் உள்ளதால் இது ‘புல்லாங்குழல்’ அல்ல.
மயிலின் அகவல் என மருட்டும்,
மத்திமமான தெளிந்த ஓசை உடைய
இதுவும் ஒரு ஊதுகுழல்.
போர்க்களங்களிலும்
ஊர்வலங்களிலும்
வரிக் கூத்துகளிலும்
குரவைக் கூத்துகளிலும்
ஏனைய பல்லியக் கருவிகளுடனும் இணைந்து இசைக்கப்படுவது.
2. வயிரியர்
2 – 1. வயிரியர் விளக்கம்
வயிர் எனும் இசைக் கருவியைக் கையாள்வதால் வயிரியர் எனப் பெயர் பெற்றனர் எனக் கொள்ளலாம். வயிரியர் கூட்டு முழவரும் வேறாகப் பெயர் கொள்ளாது ‘வயிரியர்’, ‘வயிரிய மாக்கள்’ என்றே விளிக்கப் பெற்றனர். ‘வயிரிய மாக்கள்’ என்பது வயிரியர் குழுமத்தைக் குறிக்கும் சொல்.
(1) வயிரியரும் ஆடலும்
விழவின் ஆடும் வயிரியர் (மது 628)
ஆடல் – செய்கை, performing (தமிழ்ப் பேரகராதி). இங்கு நடனத்தைக் குறிக்காது, ஆற்றுகையைக் குறிக்கும். வயிரியர் விழாக்களில் வயிர் என்னும் இசைக் கருவியை இசைப்பவர்கள். அவர்கள் ஆடும் கூத்தர்கள் அல்ல.
(2) வயிரியரும் பாடலும்
வாங்குபு தகைத்த கலப்பையர் ஆங்கண்
மன்றம் போந்து மறுகுசிறை பாடும்
வயிரிய மாக்கள் … (பதி 23: 4-6)
மன்றம் நண்ணி மறுகுசிறை பாடும் (பதி 29: 9)
மறுகு – மறுத்தல், நீக்குதல்
சிறை – ஒலியெழாமல் தடைப்படுத்தி வைக்கும் குற்றம்
ஆடுசிறை அறுத்த நரம்புசேர் இன்குரல் (பதி 43: 21)
பாடு – ஓசை (தமிழ்ப் பேரகராதி)
எடுத்துக் காட்டு:
பாடி னருவிப் பயங்கெழு மீமிசைக் (மலை: 278)
பாடு இன் அருவி – ஓசை இனிய அருவி, இனிய ஓசை உள்ள அருவி. இங்கு ‘பாடும்’ என்பது இசைக்கும் எனப் பொருள் படும்.
மறுகு சிறை பாடும் – குற்றம் அற இசைக்கும்.
அரும்கறை அறைஇசை வயிரியர் (பரி 10: 130)
குற்றமின்றி இசைக்கின்ற வயிரியர்.
… … … வயிரியர்
இன்னிசை ஆர்ப்பினும் (அக 45: 11-12)
வயிரியர் இன்னிசை பேரிசையாகும்.
வயிரியர் இசைக் கலைஞர்கள், ஆனால் மிடற்றுப் பாடகர்கள் அல்ல.
(3) வயிரியர் தெருவோரக் கலைஞர்கள்
பழைய, புதிய உரையாசிரியர்கள் பலரும் ‘மறுகு’ என்றால் தெரு எனப் பொருள் கொண்டு, ‘மறுகு சிறை’ என்றால் ‘தெருவின் இரு புறங்கள்’ என்று பொருள் கொள்கின்றனர்.
இவ்வாறு பொருள் கொள்வதற்கும் வலுவான தரவுகள் உள்ளன.
எடுத்துக்காட்டாக:
மன்றம் படர்ந்து மறுகுசிறைப் புக்குக்
கண்டி நுண்கோல் கொண்டுகளம் வாழ்த்தும்
அகவலன் பெறுக மாவே … (பதி 43: 26-28)
முழவுஇமிழ் இன்னசை மறுகுதொறு இசைக்கும் (ஐங் 171: 2)
தொண்டகப் பறைச்சீர் பெண்டிரொடு விரையி
மறுகில் தூங்கும் சிறுகுடிப் பாக்கத்து (அக 118: 3-4)
… … … கொங்கர்
மணிஅரை யாத்து மறுகின் ஆடும்
உள்ளி விழவின் அன்ன … (அக 368: 16-18)
இவற்றால் பெறுவது: ஆடலும் பாடலும் விழாக்களும் தெருக்களில் நிகழ்த்தப்பட்டுள்ளன. ஆகவே, ‘மறுகு சிறை பாடும் வயிரிய மாக்கள்’ என்பதற்கு தெருவில் நின்று இசைக்கும் வயிரியர்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.
2 – 2 வயிரியர் முழவு
வயிரியர் முழவும் அதிர்ந்து முழங்குகிறது.
… … … வயிரியர்
முழவுஅதிர்ந் தன்ன முழக்கத்து … (அக 328: 1-2)
… … … பேரிசைப்
புலம்பிரி வயிரியர் நலம்புரி முழவின்
மண்ணார் கண்ணின் அதிரும் (நற் 100: 9-11)
செயிர்தீர் நாவின் வயிரியர் பின்றை
மண்ஆர் முழவின் கண்ணகத்து அசைத்த
விரலூன்று வடு … … (அக 155: 12-15)
மண்ணார் கண் – மார்ச்சனை வைத்த பக்கம்
கண்ணகத்து அசைத்த விரலூன்று வடு – விரலால் முழக்கப்பட்டதற்கான அறிகுறி;
2 – 3. வயிரியர் யாழ்
… … … அடுக்கிய
பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ்
மண்ணமை முழவின் வயிரியர் (புற 164: 10-12)
அழியா விழவின் இழியாத் திவவின்
வயிரிய மாக்கள் பண் அமைத்து எழீஇ
மன்றம் நண்ணி மறுகுசிறை பாடும் (பதி 29: 7-9)
‘யாழ்’, ‘திவவு’ என்பவவற்றால் வயிரியர் இசைக் கருவியாக யாழும் இருப்பது தெளிவாகிறது. வயிரியர் யாழின் பயன்பாடு என்ன?
‘இழியாத் திவவின் வயிரிய மாக்கள் பண் அமைத்து’ என்பதால், இங்கு பண் அமைக்க யாழ் பயன்படுகிறது எனக் கொள்ளலாம். பண்ணுதல் – To tune musical instruments, சுருதியமைத்தல் (தமிழ்ப் பேரகாதி)..
மேலும், யாழ் ‘சமன் கொள்ளும் கருவியாகக் கூறப்படுவதையும் காணலாம்:
யாழின் இளிகுரல் சமங்கொள் வோரும் (பரி 19: 42)
குரல் என்றால்:
… … … குரல் குரலாக
நூல்நெறி மரபின் பண்ணி … (பத்துப்பாட்டு 2003 சிறுபாணாற்றுப்படை ப170 பா229-230)
குரல் குரலாக – குரல் (சட்சம்) ஏழிசையில் முதலாவது ஆதார சுருதிசேர்த்து
பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின்
தொடைஅமை கேள்வி இடவயின் தழீஇ (பெரு 15-16)
கேள்வி என்றால் இசைச்சுருதி (தமிழ்ப் பேரகராதி)
தற்கால ‘தம்பூரா’ என்னும் சுருதி சேர்க்கும் கருவியை ஒப்பு நோக்கலாம்.
மேலும், ‘ஒத்து’ என்னும் சுருதி சேர்க்கும் கருவியையும் ஒப்பு நோக்கலாம்.
ஒத்த குழலின் ஒலியெழ முழவுஇமிழ்
மத்தரி தடாரி தண்ணுமை மகுளி
ஒத்துஅளந்து சீர்தூக்கி ஒருவர் பிற்படார்
நித்தம் திகழும் நேர்இறை முன்கையால்
அத்தக அரிவையர் அளத்தல் காண்மின் (பரி 12: 36-44)
ஆகவே, வயிரியர் யாழ் இசைக்கும் யாழ்ப்பாணர்கள் அல்ல என்பதையும் காணலாம். இங்கு யாழ் கேள்வி சமன் கொள்ளும் கருவி.
2 – 4. வயிரியர் பரிசில்
வரிஉளை மாவும் களிறும் தேரும்
வயிரியர் கண்ணுளர்க்கு ஓம்பாது வீசிக் (பதி 20: 16)
… … … வயிரியர்
உண்டெனத் தவாஅக் கள்ளின் (பதி 43: 34-35)
இருஞ்சேறு ஆடிய மணல்மலி முற்றத்துக்
களிறுநிலை முணைஇய தார்அரும் தகைப்பின்
புறஞ்சிறை வயிரியர்க் காணின் வல்லே
எஃகுபடை அறுத்த கொய்சுவல் புரவி
அலங்கும் பாண்டில் இழைஅணிந்து ஈம்என (பதி 64: 6-10)
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈந்த (புற 9: 9)
பாணர் வருக பாட்டியர் வருக
யாணர்ப் புலவரொடு வயிரியர் வருக என
இருங்கிளை புரக்கும் இரவலர்க்கு எல்லாம்
கொடுஞ்சி நெடுந்தேர் களிற்றொடும் வீசி (மது 749-752)
மான விறல்வேள் வயிரியம் எனினே
… … …
பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு
குரூஉக்கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர் (மலை: 164-169)
குதிரையும் யானையும் தேரும் பொன்னும் கள்ளும் நெய்யில் இட்ட உணவும் பரிசாகப் பெறுவர்.
முடிவாக:
வயிரியர் என்போர் வயிர் எனும் இசைக் கருவியை முழவுடன் இசைப்பவர்கள். இவர்கள் குழுவில் விறலியரும் பாணரும் இடம்பெறவில்லை. இவர்கள் ஆடுவதும் இல்லை பாடுவதும் இல்லை.
வயிரிய மாக்கள் என வயிரும் முழவும் இணைந்து இயங்கும் தன்மையை நோக்கின் இன்றைய மேளக்காரருக்கு ஒப்பாகக் காணலாம். ஒப்பு நோக்கி வரலாற்றுப் பார்வையில் இது ஆய்வு செய்யப்பட வேண்டும்.
மேளம்: நாகசுரம், ஒத்து, தவில், தாளம் என்பவற்றின் தொகுதி (தமிழ்ப் பேரகராதி).
உசாத்துணை
சங்க இலக்கியங்கள்:
அகநானூறு (அக)
ஐங்குறுநூறு (ஐங்)
குறிஞ்சிப் பாட்டு (குறி)
திருமுருகாற்றுப்படை (திரு)
நற்றிணை (நற்)
நெடுநல் வாடை (நெடு)
பதிற்றுப்பத்து (பதி)
பரிபாடல் (பரி)
புறநானூறு (புற)
மதுரைக் காஞ்சி (மது)
மலைபடுகடாம் (மலை)
முல்லைப் பாட்டு (முல்)
ஏனையவை:
சிலப்பதிகாரம் (சிலப்)
தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon)
Kailasapathy, K
2002 Tamil Heroic Poetry, Kumaran Book House, Colombo.
[குறிப்பு: இக் கட்டுரை பற்றிய உங்கள் எண்ணங்களை ‘தொடர்பாடல்’ ஊடாக தெரியப்படுத்தவும், நன்றி.]