வாரம் தேவாரம்

காப்பு

 

‘காப்பு’ என்றால் இங்கு பொருந்தும் பொருள், ‘எடுத்த விடயம் இனிது முடியும்பொருட்டு நூலின் தொடக்கத்திற் செய்யும் தெய்வவணக்கம்’ (Tamil Lexicon).

 

இவ்வகையில்; ‘சீரியல் பொலிய நீரல நீங்க’ வேண்டிக் காப்புப் பாடியதை, சிலப்பதிகாரம் மாதவியின் அரங்கேற்றத்தில் காணலாம்.

 

                        சீரியல் பொலிய நீரல நீங்க

                        வார மிரண்டும் வரிசையிற் பாடப் (சிலப். 3: 135-136)

 

          அரும்பதவுரையாசிரியர்:

 

நன்மையுண்டாகவும் தீமை நீங்கவும் வேண்டித் தெய்வப்பாடல் பாடவென்றவாறு (உ.வே. சாமிநாதையர் 2018, 73)

 

            பாடிய வாரத் தீற்றினின் றிசைக்கும்

            கூடிய குயிலுவக் கருவிக ளெல்லாம் (சிலப். 3: 137-138)

 

தெய்வப்பாடலின் ஈற்றிலேநின்று கூடி இசைக்கப்படாநின்ற கருவிகளெல்லாமென்றவாறு (உ.வே. சாமிநாதையர் 2018, 73)

 

இங்கு கவனத்தைப் பெறும் சொல் ‘வாரம்’. ‘வாரம்’ என்றால் ‘தெய்வப் பாடல்’ என உரையாசிரியர்கள் பொருள் கொள்கிறார்கள்.

 

‘வாரம்’ என்ற சொல்லுக்குத் ‘தெய்வப் பாடல்’ என்று உரையாசிரியர்கள் கூறும் பொருள் பொருத்தமுடையதா என்பதே இங்கு எழும் கேள்வி. ‘தேவாரம்’ என்பதற்குக் கண்ட பொருளின் தொடர்ச்சியாகவே ‘வாரம்’ என்பதற்கும் ‘தெய்வப் பாடல்’ என்று பொருள் காணப்படுகிறது எனக் கருதலாம். இக்கருதுகோளுக்கான விளக்கத்தை, ‘தேவாரப்’ பாடல்களில் தேடலாம்.

 

தேவாரம்

 

தெய்வங்கள் மேல் பாடியவர்கள் பலர். அவர்களுள் அருளாளர்களும் உளர், புலவர்களும் உளர். அவர்கள் பாடியவை ‘தேவாரம்’, ‘திவ்யப்பிரபந்தம்’, ‘திருவாசகம்’ ‘திருப்புகழ்’, ‘திருவருட்பா’, என்பன முதல் இன்றைய ‘பக்திப் பாடல்கள்’ வரை பல. அவற்றுள் ‘தேவாரம்’ இங்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. அருளாளர்களுள் திருநாவுக்கரசு சுவாமிகள், திருஞானசம்பந்த சுவாமிகள், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகிய சமயகுரவர் மூவர், சிவன் மேல் தமிழில் பாடியவை ‘தேவாரம்’ எனப் போற்றப்படுகின்ற சைவத்திருமுறைகளாகும்.

 

மூவர் திருப்பதிகங்களைத் தேவாரம் என வழங்கும் வழக்கம் இரட்டைப் புலவர்கள் பாடிய ஏகாம்பரநாதருலாவில் தான் முதன்முதற் காணப்படுகின்றது.

 

மூவாதபேரன்பின் மூவர் முதலிகளும்

தேவாரஞ்செய்த திருப்பாட்டும்

 

என்பது அவ்வுலாவிலுள்ள தொடராகும். இத்தொடரில் தேவாரஞ் செய்த திருப்பாட்டு என்புழித், தேவாரம் எனப் பெயர் நிலையில் வைத்துரையாமல் தேவாரஞ் செய்த என வினைநிலையில் வைத்துரைத்தலால், ‘திருப்பாட்டு’ என்பது மூவர் பாடிய திருப்பாடல்களையும், ‘தேவாரஞ் செய்த’ என்பது அத் திருப்பாடல்களையும் இசைப்படுத்திப் பாடிய எனத், தொழில் நிலையையும் குறித்து நின்றன எனக் கொள்ள வேண்டியுள்ளது (வெள்ளைவாரணார் 1979, ப.57).

 

திருப்பாட்டு தேவாரஞ் செய்யப்படுகிறது. இங்கு தேவாரம் என்பது ‘இசைபடுத்திப் பாடிய’ எனப் பொருள் கூறப்படுகிறது. இது மேலும் ஆய்வுக்குரியது.

 

தேவாரம் என்பது இரு சொற்களின் கூட்டு. அதைத் ‘தே+வாரம்’ என்றும், ‘தே+ஆரம்’ என்றும் பிரித்து, அப்பிரிவினைகளுக்கு ஏற்பப் பொருள் காணலாம்

 

தே + வாரம்

 

‘தே’ என்ற ஓரெழுத்து ஓரு மொழியின், இங்கு பொருந்தும் பொருள், ‘தெய்வம்’ ஆகும். ‘வாரம்’ என்றால், இங்கு பொருந்துவனவாக இரு பொருள்களைக் கூறலாம்: (1) அன்புவைத்தல்; (2) சொல்லொழுக்கமும் இசையொழுக்கமுமுடைய இசைப்பாட்டு (Tamil Lexicon).

 

‘அன்புவைத்தல்’ என்ற பொருளுக்கு: ‘வாரமாகித் திருவடிக்குப் பணி செய் தொண்டர் பெறுவ தென்னே’ என்ற சுந்தரர் தேவாரத்தை எடுத்துக்காட்டுவர் (வெள்ளைவாரணர் 1979, ப.58). அன்புவைத்தல் என்ற பொருளில் ‘வாரம்’ என்ற சொல், திருப்பதிகத்தைத் தொகுத்துக் கூறுமா?

 

வாரம் என்பதற்கு, ‘சொல்லொழுக்கமும் இசையொழுக்கமுமுடைய இசைப் பாட்டு’ எனப் பொருள் கொண்டால், கடவுளர் மேல் இசைபாடல் எனப் பொருள் கொள்ளலாம். ‘தமிழோடிசை பாடல் மறந்தறியேன்’ எனத் திருநாவுக்கரசர் திருவாய் மொழிந்தது (1992, ப.377) இங்கு பொருந்தக் காணலாம்.

 

ஆனால், ‘தேவாரம்’ என்ற சொல்லை தேவாரங்களில் காணமுடியவில்லை. ‘வாரம்’ என்ற சொல்லால், தேவாரப் பதிகங்கள் தொகுத்துக் கூறப்படவும் இல்லை. இசைப்பாட்டு எனப் பொருள்படும் வேறு சொற்களால் கூறப்பட்டுள்ளதா என்பது தேடலுக்கு உரியது.

 

தே + ஆரம்

 

இஈ ஐவழி யவ்வு மேனை

உயிர்வழி வவ்வு மேமுனிவ் விருமையும்

உயிர்வரி னுடம்படு மெய்யென் றாகும் (அ.தாமோதரன் 1999, 229.; நன்னூல் சூ.162)

 

என்ற உயிரீற்றுச் சிறப்புப் புணர்ச்சிக்கு அமைய தே+ஆரம், ‘தேவாரம்’ ஆகிறது. ஆவ்வாறே தேவ+ஆரம் எனப் பிரித்துப் புணர்த்தினாலும் ‘தேவாரம்’ ஆகும். இங்கு இரு புணர்ச்சிக் கண்ணும் ஆரம் வருவதைக் காணலாம். ஆரம் என்றால்: மணிவடம், பூமாலை (Tamil Lexicon) ஆகிய பொருட்குப் பொருத்திப் பார்க்கலாம். பொதுவாக மாலை எனக் கொண்டால், தேவாரம் கடவுளர்களுக்குத் தொடுக்கப்பட்ட மாலை எனப் பொருள்படும். அவ்வாறு மாலைகள் தொடுக்கப்பட்டுள்ளன என்பதையும் காணலாம்.

 

ஆரமும் வாரமும்

 

திருஞானசம்பந்த சுவாமிகளும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும் ‘முத்திரையிட்டுப்’ பாடியுள்ளார்கள். அங்கு திருப்பதிகங்களைத் தொகுத்துப் பல சொற்களை எடுத்தாண்டுள்ளார்கள். சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் அத்தனையையும் ஆய்வுக்கான மாதிரியாகக் கொண்டு திருப்பதிகங்களைத் தொகுத்துக் குறிக்கும் சொற்கள் தேடப்படுகின்றன.

 

திருப்பதிகங்களைத் தொகுத்துக் கூறும் பல பாடல்களில் ‘ஆரம்’ என்பதைக் குறிக்கும் ‘மாலை’ என்ற சொல் வருவதைக் காணலாம். (பார்க்க பின் இணைப்பு).

 

‘வாரம்’ என்பதைக் குறிக்கும் பாடல், இசை எனவும் பல இடங்களில் உள்ளன. (பார்க்க பின் இணைப்பு).

 

மேலும் உரை, சொல், தமிழ் எனவும் குறிக்கப்பட்டுள்ளன.

 

‘தேவாரம்’ ஆரத்துள்ளும் வாரத்துள்ளும் மட்டுப்படாது. ‘தேவாரம்’ என்ற சொல்லையும் தேவாரங்களில் காணமுடியவில்லை.

 

தேற்றம்

 

சீரியல் பொலிய நீரல நீங்க

வார மிரண்டும் வரிசையிற் பாடப் (சிலப். 3: 135-136)

 

‘சீரியல் பொலிய நீரல நீங்க’ பாடுவது காப்புப் பாடல், அடுத்து வருவது ‘வாரம்’ பாடல். காப்புப் பாடலுக்கு வேறானது வாரம் பாடல். இரண்டும் வரிசையில் பாடப்படுகின்றன.

 

வாரம் என்ற சொல்லைத் தேவாரத்தில் காணமுடியவில்லை.

 

வாரத்திற்கான விளக்கத்தைத் தேவாரத்தில் பெறமுடியவில்லை.

 

‘வாரம்’ மேலும் விளக்கத்தை வேண்டி நிற்கிறது.

 

பின் இணைப்பு

 

மாதிரி எடுத்துக்காட்டு (சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் – 1992)

 

மாலை என வரும் இடங்கள்:

 

தொழுவான் நாவலர்கோன் ஆரூரன் உரைத்த தமிழ் வழுவா மாலைவல்லார் வானோர்உல காள்பவரே (ப.5), அடியன்கேட்ட மாலைபத்தும் (7), உளங்குளிர் தமிழ்மாலை   பத்தர்கட் குரையாமே (ப.9), ஆரூரன்னடி காண்பதற்கன்பாய் ஆத ரித்தழைத் திட்டஇம் மாலை (ப.22), வண்தமிழ் மாலை  (ப.50), உரை விலையார் மாலை (ப.57). எந்தைபி ரானை உரைக்கும் ஊரான் ஒளிதிகழ் மாலை (ப.64), நாவலஊரன் சொன்ன மாலை மதித்துரைப் பார் (ப.70), சிறந்த மாலைகள் அஞ்சினோ டஞ்சும் (ப.79), நாவலா லூரன் பன்ன லங்கனல் மாலை (ப.92), ஆரூரன் தமிழ்மாலைகள் பாடுமடித் தொண்டர் (ப.133), ஊரான் உரைத்தசொல் மாலைகள் பத்திவை (ப.145), ஆரூரன் தமிழ்மாலைபத் தறிவார்துயர் இலரே (ப.146), வளர்நாவ லர்கோன் நம்பியூ ரன்சொன்ன சந்தம் மிகுதண் தமிழ்மா லைகள் (ப.148), செஞ்சொல் தமிழ்மா லைகள்பத் தும் (ப.155), ஆரூரன் உரைத்தன நற்றமிழின் மிகுமாலையோர் பத்திவை (ப.160), பாடும் இடத்தடி யான்புகழ் ஊரன் உரைத்தஇம் மாலைகள் பத்தும் (ப.193), நாவலா ரூரன் உரைதரு மாலையோர் அஞ்சினோ டஞ்சும் (ப.207), செஞ்சொல் நாவன் வன்றொன்டன் பன்னு தமிழ்நூல் மாலை (ப.210), அல்லலவை தீரச்சொன தமிழ்மாலைகள் (ப.213), தமிழ் மாலை (ப.224)

 

மலர் என வரும் இடங்கள்:

 

தண்டமிழ் மலர் பத்தும் (ப.68), பன்னெடுஞ் சொல்மலர்கொண் டிட்டன பத்தும் (ப.119),

 

பாடல், இசை எனக் குறிக்கும் சொற்கள்:

 

பாடிய பத்தும் (ப.11) சேர்த்திய பாடல் (ப.24), நலத்தமிழைப் பாடவல்ல, ஆட்படுமாறு சொல்லிப் பாடவல்லார் (ப.27), பாடல் வல்லார் (30), தமிழ் பாடவல்லார் (35), வன்றொன்டன் வாய்மொழி பாடல் பத் துன்னி இன்னிசை பாடுவார் (ப.53), நாவலாரூரன் சொன்ன பங்கமில் பாடல் (ப.61), நம்பி சொன்ன நற்றமிழ்கள் பாடும் அடியார் (ப.77), திரு வாரூரன் பாடிய பத்தும் (94) ஊரான் பாடிய பாடல் பத்திவை (ப.100), செஞ்சொல்லால் நயந்த பாடல் (ப.105), நாவலாரூரன் சந்தமிசை யோடும் (ப.117), ஒலிகொள் இன்னிசைச் செந்தமிழ்ப் பத்தும் (ப.128). ஆரூரன் பன்னும் இசைக்கிளவி பத்திவை பாடவல்லார் (ப.143). சீரேறு பாடல்கள் (ப.150), நாவலவூரான் சொல் பாடல்கள் பத்தும் (ப.161), உரைத்த பாடலாந் தமிழ் பத்திவை (ப.164), சொன்ன இறையார் பாடல் (ப.171), சொன்ன சீரூர் பாடல் (ப.188), சொன்ன பாவணத் தமிழ் பத்தும் (ப.191), ஒண் தமிழ்கள் பத்தும் பாடி ஆடுவார் (ப.197), ஊரான் உரைத்த பாடல் பத்திவை (ப.203), ஊரான் உரைத்த கற்றுப் பாடக் (ப.204), ஊரன்னுரைசெய்த பாவின் தமிழ் (ப.214), ஏழிசை இன் தமிழால் இசைந்தேத்திய பத்தினையும் (ப.217),

 

உரை, சொல் என்ற பொருளில்:

 

நவின்ற பத்திவை (ப.14), உரைத்த உறுதமிழ் பத்தும் (ப.15), உள்ளத்தால் உகந் தன்பினாற் சொன்ன ஐந்தோடைந்தும் (ப.19), பன் னுரைத்த வண் தமிழ்களே (ப.32), ஆரூரன் உரைத்த தமிழ் (ப.38), உரைசெய்த ஒண் தமிழ்கள் (ப.41), ஆரூரன் உரைத்த தமிழ் (ப.47), ஊரன் சொற்றான் இவை (ப.59), வன்றொண்டன் சொல் (ப.72), உரைத்த தமிழ் (ப.74), வன்றொண்டன் நற்றமிழ் பாதம் ஓத வல்லார் (ப.82), ஆரூரன் சொல் இவை (ப.84) ஆரூரன் அருந்தமிழைந்தினோ டைந் தழகால் உரைப்பார் (ப.86), நாவின் நயந்துரைசெய் பண்பயிலும் பத்தும் (ப.89), வன்றொண்டன் செஞ்சொற் கேட்டுகப்பார் (97), நாவ லாரூரான் சொன்ன அருந்தமிழ்கள் (ப.102), ஊரான் சொன்ன பாடுமின் பத்தரே (ப.106), அடியன் சொல் (ப.112), ஆரூரன்னடி நாய்உரை (ப.115), உரைத்தன பத்திவை (ப.123), திருவாரூரான் உரைத்த பாடீராகிலும் பாடுமின் (ப.125), வேண்டி நினைந் தேத்திய பத்தும் (ப.181), ஆருரன் உரைத்தன பத்திவை (ப.135), தொண்டன் உரை செய்த குறையாத்தமிழ் பத்துஞ் (ப.136), நாவலவூரன் உரைத்தன (ப. 141), உரைத்தன பத்துங் (ப.152), ஊரான் சொல் இவை (ப.157), ஆரூரன் உரைத்த தமிழ் (ப.169), தொண்டநூரன் பிதற்றிவை (ப.173), பொய்யாத் தமிழ்ஊரன் உரைத்தன (ப.181), ஊரான் சொல் (ப.184), ஊரூரன் னுரை (ப.196), ஆரூரான் தமிழ் (ப.199), சொன்ன சீரூர் செந் தமிழ்கள் (ப.200), ஊரன் வனப்பினால் சொல்லல் (ப.211), வன் றொண்டன் சொல் பாணியால் இவை ஏத்துவார் (ப.218), தொண்டன்றான் ஏசின பேசுமின் தொண்டர்காள் (ப.222),

 

 

அதார நூல்கள்

 

 

சாமிநாதையர், உ.வே. இளங்கோவடிகளருளிச்செய்த சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்குநல்லாருரையும், டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை 2018.

 

 

சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் ஆடிச்சுவாதி வெளியீடு. ஸ்ரீகாசிமடம், திருப்பனந்தாள் (ஆறாம் பதிப்பு) 1992.

 

 

தாமோதரன்,அ. பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் மூலமும் விருத்தியுரையும்,; உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 1999.

 

 

திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம் மேலாளர், ஸ்ரீகாசிமடம், திருப்பனந்தாள் (ஐந்தாம் பதிப்பு) 1993.

 

 

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் மேலாளர், ஸ்ரீகாசிமடம், திருப்பனந்தாள் (ஆறாம் பதிப்பு) 1992.

 

 

வெள்ளைவாரணர், க. இசைத்தமிழ், ஸ்ரீ இராமகிருட்டிண வித்தியாசாலை, சிதம்பரம் 1979.

 

 

Tamil Lexicon  (in six volumes) University of Madras, Madras 1982.

 

 

[‘வாரம்’ தொடரும் …]