[மேல்பேணில் 15-11-97 அன்று நடைபெற்ற இலக்கிய விழாவில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டபோது ஆற்றிய உரை]
அரங்கக் கலைகளில் நான் நாட்டுக்கூத்தை முன்னெடுக்கிறேன். ஏன் என, இவ்வுரையில் விளக்குகிறேன். அத்துடன் நாட்டுக்கூத்து நாடகத் தமிழில் ஒருவகை என்றும், நாடக அரங்கம் கற்றறிய வேண்டிய கலை என்றும் கூறுகிறேன்.
1
நான் வேலூரில் அகதியாக இருந்த போது, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எனது நண்பர் ஒருவர் முனைவர் பட்டப் படிப்பை மேற்கொண்டிருந்தார். அவரைக் காண நான் வேலூரில் இருந்து சிதம்பரத்திற்குச் சென்றிருந்தேன். இருவரும் சிதம்பரம் கோயிலைப் பார்க்கச் சென்றேம். மாலைப் பொழுதில் கோயிலைச் சுற்றிப் பார்த்துக்கொண்டு வரும் பொழுது, உள்வீதி ஒன்றில் போடப்பட்டிருந்த பந்தலின் கீழ், அருமையான வயலின் கர்நாடக இசைக்கச்சேரி நடந்துகொண்டிருந்தது. அதில் ஏனைய பக்கவாத்தியங்களுடன் வலைங்கைமான் சண்முகசுந்தரம் சிறப்பு வாத்தியமாக தவில் வாசித்துக் கொண்டிருந்ததாக ஒரு ஞாபகம்.
கச்சேரியை இருந்து இரசித்துவிட்டு, இருவரும் பல்கலைக்கழக விடுதியை நோக்கி ஒரு சைக்கிளில் வந்துகொண்டிருக்கிறோம், சிறிது தூரத்தில் ஒலி பெருக்கியில் ஒரு இசை கேட்கிறது. அந்த இசை வந்த திக்கை நோக்கி இருவரும் செல்கிறோம். தில்லைஅம்பல நடராசர் கோயிலுக்குச் சிறிது தொலைவில், ஒரு சந்து முடுக்கில் ‘சிறுதெய்வம்’ வீற்றிருக்கும் கொட்டில் ஒன்று. அதற்கு முன் இருவர் ‘காத்தவராயன் கதைப் பாட்டு’ பாடிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர் ‘பம்பை’ வாசித்துக் கொண்டிருக்கிறார். சில சனங்கள் அவர்கள் முன் அமர்ந்திருக்கிறார்கள். பெரும் கூட்டம் கூடவில்லை. ஓலி பெருக்கியில் பாட்டு அப்பகுதி முழுவதும் கேட்கிறது. அருமையான இசை. மக்கள் வீட்டில் இருந்தபடியே பாடலைக் கேட்பார்களாம்.
ஒரு மாலைப் பொழுதில் இரு அனுபவங்கள். இந்த வகையான இரு அனுபவங்களையும் நான் அடிக்கடி சந்தித்திருக்கிறேன். ஒரு புறத்தில் பெரும் தெய்வ வழிபாடு, பெருங்கோயில்கள், கோபுரங்கள், சிற்பங்கள், கர்நாடக இசை, பரத நாட்டியம், கதாகாலட்சேபம் இத்தியாதி. ஆவற்றுடன் சபா நாடகங்களையும் சேர்த்துக் கொள்ளலாம். மறுபுறத்தில் சிறுதெய்வ வழிபாடு, சிறுகொட்டில் கோயில்கள், கரகம், காவடி, ஒயிலாட்டம், தேவராட்டம், கணியான் கூத்து, வசந்தன் கூத்து, தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, கதைப்பாடல், புசாரிப்பாட்டு முதலியன. ஒரு ஊருக்குள்ளேயே இரு கலாச்சாரங்கள். இரு வேறுபட்ட கலை வடிவங்கள். இந்த வேறுபாட்டை ஒரு இனத்துக்குள்ளே மிகவும் பரவாலாகக் காணலாம். ‘ஒவ்வொரு தேசிய இனத்துக்குள்ளும் இரு வேறுபட்ட தேசியக் கலாச்சாரங்கள்’ என்று லெனின் கூறியது புரிகிறது. இந்த உண்மையை சாதியத்தின் அடிப்படையில் மட்டும் நின்று பார்க்கவில்லை, அடக்கி ஒடுக்கிப்பட்ட சகல மக்களின் கலை கலாச்சாரங்களின் சார்பின் நின்று பார்க்கிறேன். ஆவற்றுள்ளும் தமிழ் இன அடையாளங்களைக் காண்கிறேன். தமிழர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அவர்களின் இன அடையாளங்களுள் இவ் வேறுபட்ட கலை வடிவங்களும் அமையும்.
பாடுபவர்களுக்கும் தெரியாத, கேட்பவர்களுக்கும் புரியாத மொழிகளில் ‘நாமமது தமிழரென பெயர்கொண்டு வாழ்பவர்கள்’ சிலர் செய்யும் கர்நாடக இசைக் கச்சேரிகளைக் கேட்கும் போதும், அவ்வகைப் பாடல்களுக்கு அடிதலை புரியாது எமது நர்த்தகிகள் அபிநயம் பிடித்து ஆடுவதைப் பார்க்கும் போதும், சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் நேர்காணல் ஒன்றில் கூறப்பட்ட உண்மைச் சம்பவம் ஒன்று நினைவுக்கு வரும்:
(இந்திய) மத்திய நிதி அமைச்சராக இருந்த சர் ஆர். கே. சண்முகம் செட்டியார் ஒரு சமயம் அமெரிக்காவில் இருந்தபோது நடந்த நிகழ்ச்சி இது:
இங்கிருந்து (சென்னை) போன பத்திரிகைகளில் எல்லாம் தமிழ் இசைபற்றிய செய்திகள் அச்சாகியிருப்பதைப் படித்த ஆர். கே. சண்முகம் செட்டியாரின் அமெரிக்க நண்பர் கேட்டாராம், ‘இதென்ன பயித்தியக்காரத்தனம், உங்க நாட்டிலே ஏன் தமிழ்பாட்டு வேணும்’னு கேட்கிறாங்க?’
ஆர். கே. ஏஸ். சொன்னார்: ‘தமிழ்தான் எங்கள் தாய் மொழி, அதனால் தாய் மொழியிலேயே பாட்டுகள் இருக்கணும்’னு கேட்கிறாங்க, இதிலென்ன தப்பு?’
அமெரிக்கருக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. ‘அப்படியானால் தாய் மொழியல் அல்லாமல் வேறு மொழியிலா நீங்கள் பாடுவது வழக்கம்!’
(பேசும்படம் ஏப். 86)
அதே நேர்காணலில் ‘தமிழ் இசை’ பற்றிக் கேட்கப்பட்டபோது சீர்காழி அடித்துச் சொல்கிறார்:
சுருக்கமாகச் சொல்கிறேன், தமிழ்நாட்டில் தமிழ் இசைதான் வேணும். இந்த விஷயத்திலே நாம் யார்க்கும் குடியல்லோம் யமனையஞ்சோம் என்கிற தைரியத்திலே சொல்கிறேன். நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி என்கிற அதைரியமே கிடையாது, நல்ல உறுதியா எழுதுங்க.
சங்கம் வைத்து மொழி வளர்த்த இனம், ‘தமிழிசைச் சங்கம்’ வைத்து இசை வளர்க்கிறது. ஆனாலும் அந்த ‘இரவல் நிலை’ இன்னும் மாறவில்லை. ‘இரவல் புடவையில் இது நல்ல கொய்யகமோ’ என்று கேட்கிறது.
இவ்வாறு கூறும்போது ஒருசிலர் இசைக்கு மொழி வேறுபாடு கிடையாது, மொழி அவசியமில்லை எனக் கூறலாம்; கூறுகிறார்கள். வாத்திய இசைக்கு மொழி வேண்டதிருக்கலாம், ஆனால் மிடற்றிசைக்கு? இங்கு இன்னொருவர் கூறிய, என்னை உறுத்திய சில கருத்துகளைக் கூறுகிறேன். அவர் ஒரு தெலுங்கர். சென்னையில் நடக்கும் இசைவிழாக் காலத்தில் அவரைக் காணதிருக்க முடியாது. குறிப்பாகச் சகல பரதநாட்டியக் கச்சேரிகளிலும் அவர் ஒரு பிரமுகர், பரதநாட்டியமும் முறைப்படி பயின்றவராம், கருத்தரங்குகளிலும் பங்குபற்றுவார், காரசாரமாகக் கருத்துகளை முன்வைப்பார். அவரைத் தெலுங்கர்களின் கலைப் பிரதிநிதியோ என்று நான் நினைத்ததுண்டு. அவர் ஒரு கருத்தரங்கில் எங்கள் கர்நாடக இசை வித்துவான்களைப் பார்த்துச் சொன்னார், ‘நீங்கள் தெலுங்குக் கீரத்தனைகளைப் பாடும்போது எனக்குக் கர்ணகடூரமாக இருக்கிறது’ என்று. ஏனென்றால், எம்மவரின் தெலுங்கு உச்சரிப்பு அப்படி இருக்கிறது. அவர் எங்கள் பரத நடனமணிகளைப் பார்த்துக் கேட்டார், ‘நீங்கள் உண்மையில் தெலுங்கு ஜாவளிகளின் அர்த்தம் புரிந்துதான் அபிநயிக்கிறீர்களா’, என்று. அவர் கேட்பதில் நியாயம் இருக்கிறது. ஆவர் படும் அவஸ்த்தையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவர் இன்னொரு கருத்தை சென்னை ‘பிரிட்டிஸ் கவுன்சிலில்’ நடந்த கூட்டம் ஒன்றில் முன்வைத்தார்: ‘எல்லா மொழிகளும் இசைக்கான மொழிகளல்ல’. இதில் சுந்தரத் தெலுங்குதான் இசைக்கான மொழி, தமிழில் இசை இல்லை, என்ற கருத்து தொக்கு நிற்கிறது. ஏல்லா மொழிகளிலும் இசை உண்டு என, அங்கு இருந்த பலரால் அவரின் கூற்று மறுக்கப்பட்டது. ஆனாலும், எம்மவர் சிலரிடம் இன்னும் அக்கருத்து மேலோங்கி இருப்பதைக் காணலாம்.
அவ்வாறான கருத்தை மறுதலித்தே, தமிழிசை வளர்க்க ‘தமிழிசை சங்கம்’, ‘தமிழிசை மன்றம்’ முதலியன தோன்றின; இன்னும் தமிழ் நாட்டில் இயங்குகின்றன. அங்கும் தமிழில் பாடிவிட்டால் போதும் தமிழிசையாகிவிடும் எனச் சிலர் கருதுகிறார்கள். சிலர் தேவாரப் பண்ணுக்குள்ளே மட்டும் தமிழிசையைத் தேடுகிறார்கள். இன்னும் சிலர் தேவாரப் பதிகங்களையே, பல்லவி, அனுபல்லவி, சரணம் எனப் பிரித்துப் பாடி கர்நாடக இசைக்குள் தமிழிசையைக் காண்கிறார்கள். ஆனால், நாட்டுப் பாடல்கள், கூத்துப் பாடல்கள், வில்லுப் பாடல்கள், கதைப் பாடல்கள், காவடிப் பாடல்கள், கரகப் பாடல்கள் என இன்னும் பல; கிராமம் கிராமமாகத் தேடி இருந்தால்; மேலும் அயலில் உள்ள கதகளி போன்ற நாடக வடிவங்களுக்குள்ளும் தேடியிருந்தால்; பல இசைத் தமிழ் ஓசைகளை இனங் கண்டிருக்க முடியும். இசைத் தமிழை நான் கூத்துகளிலும் காண்கிறேன். அவற்றைத் தமிழ் இன அடையாளங்களில் ஒன்றாகக் கருதுகிறேன்.
2
கூத்தும் நாடகமா எனக் கேட்கிறார்கள். நாட்டுக் கூத்து, இசை நாடகம் (கொட்டகைக் கூத்து), வசன நாடகம், இன்னும் இன்னோரன்ன பல அரங்க (Theatre) நிகழ்வுகள் யாவற்றையும் அவற்றின் பாணி கருதிப் பிரித்தும் பார்க்கலாம், பொதுவாக, ‘நாடகம்’ என்றும் கூறலாம். கூத்துப்பற்றி விரிவாக இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம். இங்கு நாடக அரங்கக் கற்றல் பற்றிக் கூற விழைகிறேன்.
இந்தியாவுக்கு அகதியாகக் குடிபெயர்ந்த புதிதில், அங்குள்ள கற்றறிந்த நாடக ஆசான்களின் உறவு ஏற்படுவதற்கு முன்பு ‘அமெச்சூர் சபா நாடகக்காரர்’ ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அவர் அங்கு பரதம் பயிலச் சென்ற ஒரு யாழ்ப்பாணத்துப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்த ‘மட்றாஸ்காரர்’. அந்த யாழ்ப்பாணத்துச் சம்பந்த உறவில்தான் எனக்கும் அறிமுகமானார். ஆவர் ஒரு நாடகக்காரர் என்பதால், தமிழ் நாட்டில் நாடகம் கற்க, பயில ஏதாவது வசதிகள் உண்டா என்று அவரிடம் கேட்டேன். அவருக்குப் பெரும் ஆச்சரியமாகப் போய்விட்டது. நாடகப் பயிற்சியா! நாடகத்துக்கும் பள்ளிப்படிப்பா! பிரதியைக் கையில் எடுத்தால், ஒத்திகை பார்த்தால், மேடை ஏறினால், திரை திறந்தால் – நாடகம். இந்தவகையில் நாடகம் பற்றிக் கருதுபவர்கள் இன்னும் எம்மத்தியில் இல்லாமல் இல்லை.
நடனம் பயில ஆசிரியரைத் தேடிச் செல்கிறோம். இசை பயில ஆசிரியரைத் தேடிச் செல்கிறோம். ஆனால் நாடகம் என்றதும் வெறுமனே நாடகப் பிரதிகளை மட்டும் தேடிச் செல்கிறோம். நாடகமும் பயிலவேண்டிய ஒன்று, முறைப்படி பாடங்கேட்டுப் படிக்கவேண்டிய ஒன்று எனக் கருதுவதில்லை. இங்கு நான் நாடக ஒத்திகைகள் பற்றியோ, அல்லது நாடக வசனங்களை ஒப்புவிப்பது பற்றியோ குறிப்பிடவில்லை. முறையான நடிகர் பயிற்சிகள், நாடகப் பட்டறைகள், நாடக அரங்கக் கல்வி பற்றியே கூறுகிறேன்.
அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா, மற்றும் ஐரொப்பிய நாடுகள் எங்கும் நாடகமும் பட்டப் படிப்புக்கான கல்வி முறைகளில் ஒன்று. நாடகம் வெறுமனே இலக்கியம் சார்ந்த படிப்பல்ல. அது அரங்கு சார்ந்த பயிற்சி. இந்தியாவிலும் பல பல்கலைக்கழகங்களில் நாடகமும் பட்டப் படிப்புக்கான துறையாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. நாடகப் பயிற்சிக்கு மட்டுமான கலாசாலைகளும் உள்ளன. டெல்லியிலும், திருச்சூரிலும், பாண்டிச்சேரியிலும் உள்ள நாடகக் கல்லூரிகளைக் கூறலாம். சென்னையில் ‘கூத்துப் பட்டறை’ நடிகர் பயிற்சிகளையும், காஞ்சிபுரத்தில் கூத்துக் கற்பிக்கும் ‘கட்டைக் கூத்து’ பள்ளியையும் குறிப்பிடலாம். மேலும், நாடகப் பயிற்சி முகாங்களும், நாடகப் பட்டறைகளும் பல. இலங்கையிலும் பொதுத் தராதரக் கல்விப் பாடத்திட்டத்தில் நாடகமும் ஒரு பாடமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. வட இலங்கை சங்கீத சபா நடாத்தும் பரீட்சைகளிலும் நாடகமும் ஒரு பாடமாக இணைக்கப்பட்டுள்ளது. நாடக அரங்கக் கல்லூரியின் நடிகர் பயிற்சிகளும் குறிப்பிடத்தக்கன. அங்கும் நாடகப் பட்டறைகள் பல நடாத்தப் பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக் கழகங்களிலும் பட்டப் படிப்புக்கான நாடக அரங்கத் துறைகள் உள்ளன. நாடக அரங்கும் கற்கை நெறிக்குள் வந்துவிட்டது.
இருந்தாலும், இன்னும் பலர் நாடகமும், அரங்கமும் கற்றறிய வேண்டியவை என்று கருதுவதில்லை. நாடகப் பனுவல் மொழி, நாடக அரங்க மொழி வேறுபாடுகள் பற்றியோ, அல்லது அரங்கிலும் எமது அடையாளம் காணமுடியும், காணவேண்டும் என்பது பற்றியோ சிந்தித்தும் பார்க்கவில்லை. தமிழ் இனஅடையாளத் தேடல் அரங்கிலும் தொடரவேண்டும். இன்றைய வரலாற்றுக் காலகட்டத்தில், நாடக அரங்கப் பயிற்சியும் கல்வியும் அதற்கு உதவவேண்டும். அரங்கில் தமிழ் இன அடையாளத்தை நான் கூத்துகளில் காண்கிறேன்.
இன்று கிராமங்கள் தோறும் ஆடப்படுகின்ற பலவகைக் கூத்துகளையும் அப்படியே பேணிப் பாதுகாத்து அவ்வாறே ஆடவேண்டும் என்பதல்ல என் கருத்து, அல்லது அக்கூத்துகளை நவீனமயப்படுத்துவது என்ற பெயரில் திறந்த வெளியிலும், வட்டக் களிரியிலும், சமதரையிலும் ஆடியதை படச்சட்ட மேடைக்குள் முடக்குவதையோ, அல்லது மெருகேற்றுவதையோ நான் குறிப்பிடவில்லை. பேணுபவர்கள் பேணிப் பாதுகாக்கட்டும், நவீனமயப்படுத்துபவர்கள் நவீனமயப்படுத்தட்டும், ஆனால் நான் கருதுவது கூத்துப் பாரம்பரியங்களை அடிப்படையாகக் கொண்டு புதிய பாரம்பரியங்கள் உருவாகவேண்டும் என்பதையே. வடமோடிகள் தென்மோடிகளில் இருந்து ‘புது மோடிகள்’ தோன்ற வேண்டும். அவை எமது இன்றைய வாழ்க்கையை, வாழ்க்கைப் பிரச்சனைகளை, போராட்டங்களை அரங்காக்க வேண்டும். புராண, இதிகாச, நாட்டுப்புற, இன்னும் கர்ணபரம்பரைக் கதைகளில் புதிய கருத்துகளைக் காணவேண்டும். புதிய படைப்புகளுக்கான கருத்துகளை, கதைகளை வாழ்க்கை ஊற்றிலும் காணலாம் இலக்கிய ஆற்றிலும் காணலாம். அரங்கில் இவை நிகழ்கின்றன, தேடல்கள் தொடர்கின்றன.
வெளிநாட்டார் நல்லறிஞர் நாடக அரங்கச் சாத்திரங்களையும் கற்கவேண்டும். கற்பது அவற்றை அப்படியே கடைப்பிடிப்பதற்காக அல்ல, எமது நாடக அரங்கை மேலும் புரிந்துகொண்டு வளப்படுத்துவதற்காக. ஊதாரணமாக ஜேர்மன் நாடக ஆசான் பேட்டோல் பிறேக்ற் அவர்களின் அரங்கைக் கூறலாம். எமது கூத்தரங்க மொழியை முழமையாகப் புரிந்துகொள்ள அவரின் அரங்கச் சிந்தனைகள் பெரிதும் உதவும். எமது கூத்தைப் பார்த்துத்தான் அவர் தமது அரங்கக் கொள்கையை வகுத்துக் கொண்டாரோ என எண்ணத் தோன்றும். அவ்வளவு ஒற்றுமை. ஆனால், அவர் சீன இசை நாடகம் ஒன்றைப் பார்த்தே புத்துணர்வு பெற்றார் என்பது வரலாறு. எமது பழமைவாய்ந்த நாடக இலக்கணங்களில் ஒன்று சாத்தனாரின் ‘கூத்தநூல்’. அதில் உள்ள சில பகுதிகளை நடைமுறையில் விளங்கிக்கொள்ள ரூசிய நாடக மேதை ஸ்ரனிஸ்லாவிஸ்கியின் நடிகர் பயிற்சி பெரிதும் உதவும். குறிப்பாக ‘உள்ளாளம்’ (Inner Governance) பற்றிய விளக்கங்களைக் கூறலாம். போலந்து நாட்டைச் சேர்ந்த நாடகயோகி குரோட்டோவிஸ்கி கதகளி போன்ற மலையாள நாடக வடிவங்களில் இருந்தும், யோகாசனப் பயிற்சிகளில் இருந்தும் கூறுகளைப் பயன்படுத்தி தமது நடிகர் பயிற்சிகளை வளம்படுத்திக் கொண்டார். இவர் போல பல மேற்குலக நாடகக்காரர்கள், ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க பாரம்பரிய கலை வடிவங்களில் இருந்து பெற்ற அனுபவங்களால் தமது அரங்கை வளப்படுத்திக் கொண்டார்கள். இவர்களின் அனுபவங்கள் எமது பாரம்பரிய அரங்கின் மகிமையை மேலும் புரிந்துகொள்ள எமக்கு உதவும்.
சுருக்கமாகக் கூறுவதாயின் நாடக அரங்கம் கற்றறிய வேண்டிய ஒரு கலை; இன அடையாளம் அரங்கிலும் காணவேண்டியது இன்றைய வரலாற்றுத் தேவை. இசைத் தமிழை, நாடகத் தமிழை, தமிழ் இன அடையாளத்தை நான் கூத்துகளிலும் காண்கிறேன். ஆகவே அரங்கக் கலைகளில் நான் கூத்தை முன்னெடுக்கிறேன், குறிப்பாக நாட்டுக் கூத்துப் பாரம்பரியங்களை முன்னெடுக்கிறேன்.
[குறிப்பு: இக் கட்டுரை பற்றிய உங்கள் எண்ணங்களை ‘தொடர்பாடல்’ ஊடாக தெரியப்படுத்தவும், நன்றி.]