எங்கு ஆரம்பிப்பது? என்ன செய்ய வேண்டும்?

Where To Begin? What Is To Be Done?” எங்கு ஆரம்பிப்பது? என்ன செய்யவேண்டும்? இவ்விரண்டு தலைப்புகளுக்கும் உரியவர் யார் என்று மாக்சிய இயலுடன் தொடர்புடையவர்கள் அறிவார்கள். லேனின் ரூசியப் புரட்சிக்காக நீண்டகாலம் சிந்தித்து, எழுதி, தலைமை தாங்கிச் செயற்பட்டுக் கொண்டிருந்த வேளை, இவ்விரு கேள்விகளையும் எழுப்புகிறார். எங்கு ஆரம்பிப்பது? என்ன செய்யவேண்டும்? ஆரம்பத்தில் அல்ல, இடையில் எழுப்பி விடையும் காண்கிறார். தத்துவார்த்த நிலைப்பாட்டை வலியுறுத்தி செயற்பாட்டை வகுக்கிறார்.

 

It is not a question of what path we must choose … but of what practical steps we must take upon the known path and how they shall be taken. It is a question of system and plan of practical work.(V.I. Lenin, Collected Works, Vol. 5, Moscow 1964 p.17)

 

இது அரசியலுக்குமட்டுமல்ல, எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும். நான் ஒரு நாடகக் கூத்தன். எனது துறை அரசியல் அரங்கு (Political Theatre). அறுபத்தைந்து அகவையைத் தாண்டியபின், முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் அரசியலிலும் நாடகத்திலும் கூத்திலும் நேரடியாக ஊடாடியபின், இதுகாலவரை நான் கண்டும் கேட்டும் செயற்பட்டும் பெற்ற பட்டறிவின்பால் நின்று, லெனின் அரசியல் செயற்பாட்டுக்காக அன்று எழுப்பிய இரு கேள்விகளையும், இன்று அரங்கு சார்ந்து எழுப்புகிறேன். எங்கு ஆரம்பிப்பது? என்ன செய்யவேண்டும்?

 

முன்னர், இவைபற்றிய எனது எண்ணங்களைப் பொதுவாகக் கூறிய வேளைகளில், சில நாடக நண்பர்களின் கோபதாபங்களுக்கு ஆட்பட்டேன். எனது அறியாமையில் நின்று பேசுவதாகக் குற்றம் சாட்டப்பட்டேன். அவர்கள் கூறியதிலும் நியாயம் உண்டு. ஆகவே, அவையடக்கமாக இதை நான் சொல்லியாகவேண்டும். இக்கேள்விகளை எழுப்புவதன் மூலம் தனிப்பட்ட முறையில் எவரையும் நான் குறை கூறவில்லை, அவர்களின் அரங்கச் செயற்பாடுகளைக் குறைத்து மதிப்பிடவும் இல்லை. எனது நாடக அரங்கச் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, சுயவிமர்சனப் பார்வையில், இக்கேள்விகளை எழுப்புகிறேன். இவை அரங்க அரசியல் (Theatre Politics) சார்ந்த இரு கேள்விகள். தமிழ்த் தேசிய அரங்கு (Tamil National Theatre) பற்றி எழுப்பப்படும் கேள்விகள். அரங்க வடிவம்பற்றிய கேள்விகள். உள்ளடக்கம்பற்றியவை அல்ல. உள்ளடக்கம் மிகவும் முக்கியமான வேறு விடயம். இது வடிவம்பற்றியது.

 

அடக்கி ஒடுக்கப்பட்ட ஒரு தேசியஇனம் விடுதலை வேட்கை கொள்ளும்போது தேசிய அடையாளமும் (National Identity) வலிமை பெறும். பொருளாதார ஆதிக்கத்துடன் தேசிய கலை கலாச்சார விழுமியங்களை (values) பூகோளமயம் (globalism) பாம்பாக விழுங்கிக்கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில், தேசிய அடையாளம் மிகவும் வலியுறுத்தப்படவேண்டியது. அவற்றுடன் புலப்பெயர்வும் சேர்ந்துகொண்டுள்ளது. அதுவும் அடையாளத் தேடலுக்கு ஒரு காரணியாகும். இன்றைய வரலாற்றுத் தேவை தேசிய அடையாளம். இது கலை வடிவங்களையும் பாதிக்கும். அரங்குபற்றிய நோக்கு நேற்று வேறாக இருந்தது, நாளை இன்னும் வேறாக மாறலாம். அம்பலத்தாடிகளின் கந்தன் கருணை (1970) நாடகத்துடன் தொடர்பு கொண்டிருந்த காலத்தில் அரங்கில் அடையாளம்பற்றி நான் சிந்திக்கவில்லை. “பார்வையாளர்கள் நாடகத்தின் உள்ளடக்கத்தில் மட்டுமல்ல, அரங்க வடிவத்திலும் தம்மை அடையாளம் காணவேண்டும், … உள்ளடக்கம் மட்டுமல்ல உருவமும் செய்தியாகும்” என்ற அளவிலேயே எனது அரங்கத் தேடல் இருந்தது. நடிகர் ஒன்றியத்தின் கந்தன் கருணை நாடகத்தில் பெற்ற அனுபவத்துடன் ஏகலைவன் (1978) புதுமோடிக் கூத்தாக உருவாகியது. கூத்து வடிவங்களின் இணைப்பைப் (synthesis) பரீட்சித்துப் பார்க்கும் முயற்சியாகவே ஏகலைவன் அரங்காக்கம் அமைந்தது. அன்றும் அரங்கில் அடையாளம்பற்றி நான் சிந்திக்கவில்லை. நான் அகதியாக இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்தபின்பே (1985) அடையாளம் என்னைத் தாக்கியது. அரங்கில் அடையாளம்பற்றிய தேடலும் ஆரம்பித்தது. சென்னை பல்கலை அரங்கத்தின் ஒரு பயணத்தின் கதை (1990) உருவானபோது “நாங்கள் உலகின் எந்த மூலையிலிருந்தும் நாடகப் பாடங்களை எடுக்கத் தயங்கப்போவதில்லை. ஆனால், எதைச் செய்தாலும் எமக்குரிய மரபோடு வழங்கவே விரும்புகிறோம்” என்ற அரங்கக் கோட்பாடு உருவானது. தீனிப்போர் (1991) அரங்காக்கமும் கூத்து வடிவங்களின் இணைப்பாகவே தொடர்ந்தது. ஆனாலும், இன்றைய நோக்கில் அவை யாவும் அரங்கில் தமிழின அடையாளத் தேடலின் சுவடுகளாகவே எண்ணப்படுகின்றன. கூத்துகளில் அரங்கத் தனித்துவங்களைக் கண்டதால் கொண்ட முடிவு.

 

ஆனால், அடையாளம்பற்றி ஆழமான, விரிந்த பார்வை இருக்கவில்லை. அடையாளம்பற்றிய தத்துவார்த்த ரீதியிலான, வரலாற்று ரீதியிலான, தர்க்க ரீதியிலான விவாதத்தை முன்னெடுக்கவில்லை. ஏனைய தேசிய இனங்களின் அடையாளத் தேடல்களை அறிந்துகொள்ளவில்லை. குறிப்பாக இலத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளின் அரங்க அடையாளச் செயற்பாடுகளைக் கண்டுகொள்ளவில்லை. அடையாளத்தை அடிப்படை வாதம் (fundamentalism) எனக் குற்றம் சாட்டுபவர்களின் வாதங்களுக்கு முகங்கொடுக்க வில்லை. சுருங்கக் கூறின், அடையாளம் ஒரு கோஷமாகவே என்னுள் எஞ்சியது. அடையாளத் தேடல் ஓர் உச்சாடனமாக மாறிவிட்டது. ஆகவே, தமிழ்த் தேசிய அரங்கை எங்கு ஆரம்பிப்பது என்ற கேள்வி இன்று என்னுள் உறுத்துகிறது.

 

எங்கு ஆரம்பிப்பது என்ற கேள்வியுடன் கூடப் பிறந்த கேள்வி என்ன செய்ய வேண்டும் என்பது. இக்கேள்வியையும் முன்நிலைப் (second person) படுத்தாமல், அவையடக்கமாகத் தன்மையிலேயே (first person) எழுப்புகிறேன். இன்றுவரை எனது அரங்கச் செயற்பாடுகளை எண்ணிப்பார்க்கிறேன். பல கூத்து வகைகளிடம் கடன்பட்டே, கந்தன் கருணை முதல் காத்தவன் கூத்து வரை அரங்காக்கங்கள் செய்யப்பட்டுள்ளன. காத்தவராயன் கூத்து, மட்டக்களப்பு வடமோடிக் கூத்து, யாழ்ப்பாணம் தென்மோடிக் கூத்து, கட்டுவன் வசந்தன் கூத்து, மன்னார் கர்ணன்போர்க் கூத்து, வடஆர்க்காடு தெருக்கூத்து, நாத்தேவன்குடி பிரகலாதன் கூத்து, கரகம், காவடி, கோலாட்டம், தப்பாட்டம் முதலிய கூத்துக்களின் ஆடல்களையும் மெட்டுகளையும் அவைக்காற்றும் முறைகளையும், கண்டும் கேட்டும் கொண்ட கூட்டுக் கோலங்களே அரங்காக்கங்களாயின. அவ்வடிவங்களின் நுணுக்கங்களை முழுமையாக அறிந்துகொள்ளவில்லை. அக்கூத்துகளை தேர்ந்த அண்ணாவிமார்களிடம் கற்றுத் தேறவில்லை. முறையான பயிற்சியும் இல்லை, பயிலும் முறையும் இல்லை. மேற்கத்திய அரங்கப் பயிற்சி முறைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பொறுக்கி, குறுகிய காலப் பயிற்சியில், உடலும் வசங்காமல், உள்ளமும் ஒன்றாமல், குரல் ஓசையும் இன்றி அரைகுறைப் பிரசவிப்புகளைச் செய்துவிட்டு -என்னையே நான் கேட்கிறேன்- தமிழ்த் தேசிய அரங்குபற்றிப் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது. உன்னதங்களைக் காண வேண்டாமா. தகுதியைப் பெற என்ன செய்யவேண்டும்.

 

மீண்டும் லெனினிடமிருந்து அதே மேற்கோள்:

 

It is not a question of what path we must choose … but of what practical steps we must take upon the known path and how they shall be taken. It is a question of system and plan of practical work.

 

உங்கள் மனதிலும் அடையாளம்பற்றி (identity), உன்னதம்பற்றி (excellence) கேள்விகள் எழுந்தால், கூறுங்கள் கூட்டாக விடை காண்போம், கூட்டாகச் செயற்படுவோம். அரங்கு ஒரு கூட்டுக் கலை. கூட்டாக நீண்ட காலம் தொடர்ச்சியாக, விடாப்பிடியாக உழைப்பதன் மூலமே தமிழ்த் தேசிய அரங்கை உன்னத நிலைக்குக் கட்டிஎழுப்பமுடியும். செயற்பாடுகளை நோக்கி விவாதங்கள் தொடரட்டும். எங்கு ஆரம்பிப்பது? என்ன செய்ய வேண்டும்? முதலில் சுய விமர்சனம் அவசியம். அதுவே அடுத்தகட்டப் பாய்ச்சலுக்கு அடித்தளம்.

 

இக்கட்டுரையை கேள்விகளுடன் முடிக்கிறேன். கூட்டாக விடைகளைத் தேடுவோம்.

——————————————————————————————————————————————
இக்கட்டுரை 25-01-2004 அன்று அவுஸ்திரேலிய தலைநகர் கன்பெராவில் நடந்த எழுத்தாளர் விழாவில் படிக்கப்பட்டது. சிட்னியில் ஒலிபரப்பாகும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (ATBC ) சிந்தனைச் சிதறல் நிகழ்வில் 07-02-2004 அன்று நேயர்களுடனான கலந்துரையாடலுக்கு (talk back) முன்னுரையாகக் கூறப்பட்டவை, பின் இணைப்பாகச் சேர்க்கப்பட்டுள்ளன.
——————————————————————————————————————————————

ஈழத் தழிழர்களுக்கு இது ஒரு முக்கியமான வரலாற்றுக் காலகட்டம்.

விடுதலைப்போர், புலப்பெயர்வு இரண்டும் நிகழ்ந்துகொண்டிருக்கும் காலகட்டம்.

இரண்டும் ஒன்றுக்கொன்று உதவும் காலகட்டம்.

நாளை என்ன நிகழுமோ என்று திட்டவட்டமாகக் கூறமுடியாவிட்டாலும்,

நம்பிக்கையுடன் நடைபோடும் காலகட்டம்.

பெரும் பாய்ச்சல்களுக்காக அடிகோலும் காலகட்டம்.

இது கேள்விகளுக்கும் தேடல்களுக்குமான காலகட்டம்.

 

இக்காலகட்டத்தில் ஈழத்தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும்,

அவர்களைப் பல கேள்விகள் எதிர்கொள்ளுகின்றன.

ஒவ்வொரு துறை சார்ந்தவரும், அவரவர் துறை சார்ந்து

ஆழமாகச் சிந்திக்க ஆரம்பித்துள்ளார்கள்.

கலை கலாச்சாரம் அடையாளம்பற்றிய கேள்விகளும் எழுகின்றன.

 

எனது துறை நாடகம்.

 

நாடகத்துறை சார்ந்து சிந்திப்பவர்களில் நானும் ஒருவன்.

அரங்கில் அடையாளம்பற்றிய கேள்விகள் எழுகின்றன.

தமிழ் அரங்கை உன்னத நிலைக்கு இட்டுச் செல்வதற்கான

செயல்முறைபற்றியும் கேள்விகள் எழுகின்றன.

 

அடையாளம் என்றால் என்ன?

 

அரங்கில் எம்மை அடையாளம் காட்டும் அம்சங்கள் எவை?

அரங்கு தமிழைப் பேசவேண்டும்.

ஆனால், தமிழில் பேசிவிட்டால் மட்டும்,

“அரங்கத் தமிழ்” ஆகிவிடுமா?

 

நாடகப் பாடமொழிக்கும் நாடக அரங்கமொழிக்கும் உள்ள வேறுபாட்டைக்
கவனத்தில் கொள்ளவேண்டும்.

 

தமிழ் இசைக்கும் இசைத் தமிழுக்கும் உள்ள வேறுபாடு போன்றதே இதுவும்.

தமிழில் பாடிவிட்டால் மட்டும் இசைத் தமிழாகிவிடாது.

இசைத் தமிழுக்கும் இலக்கணம் உண்டு.

தமிழ் பாடல் எழுதுவதற்கு யாப்பு இலக்கணம்,

இசைப்பதற்குப் பண் இலக்கணம்.

எழுத்து வேறு இசை வேறு.

அது போல, தமிழில் பேசிவிட்டால் மட்டும் நாடகத் தமிழாகிவிடாது.

நாடகத் தழிழுக்கும் இலக்கணம் உண்டு.

அதுவே “அரங்கத் தமிழ்” இலக்கணம்.

“அரங்கத் தமிழ்” தமிழர் அரங்கை அடையாளம் காட்டும்.

 

தமிழர் அரங்கை அதன் உன்னத நிலைக்கு இட்டுச்செல்வது எப்படி?

இதில் ஒரு கேள்வி தொக்கு நிற்கிறது.

தமிழர் அரங்கு அதன் உன்னத நிலையில் இன்று இல்லையா?

இது சர்ச்சைக்கு உரியது.

இல்லை என்றால், என்ன செய்யவேண்டும் என்ற கேள்வியை எழுப்பலாம்.

 

என்ன செய்யவேண்டும் என்பது நடைமுறைபற்றிய கேள்வி.
அரங்கும் கற்றுத்தேறவேண்டியது.

 

கேரளாவில் கதகளிக்கு வள்ளத்தோல் கலாமண்டலம் அமைத்தார்.

தமிழ்நாட்டில் பரதத்திற்கு ருக்மணிதேவி கலாச்சேத்திரம் அமைத்தார்.

இவை வரலாற்றுத் தேவையாக அன்று அமைந்தன.

இன்று உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களுக்கு

ஒரு “கூத்தப் பள்ளி” வேண்டும்.

அது தமிழீழத்தில் அமையவேண்டும்.

 

நாடகத் தமிழ், இசைத் தமிழ்

ஆய்வும் ஆக்கமும் வேண்டும்.

அதன் நோக்கு : அடையாளம், உன்னதம்.

 

இது இன்றைய வரலாற்றுத் தேவை.

அரங்கிலும் வரலாறு நிகழட்டும்.

 

 

 

[குறிப்பு: இக் கட்டுரை பற்றிய உங்கள் எண்ணங்களை ‘தொடர்பாடல்’ ஊடாக தெரியப்படுத்தவும், நன்றி.]