கண்ணன் கீதா தலை அரங்கேற்ற பிரதம உரை

எல்லோருக்கும் எனது அன்பார்ந்த வணக்கம். இவ்அரங்கேற்ற வேளையில், இப்பேரவையின் முன் ஒரு கூத்தாடிக்கு முதல் மரியாதை செய்ததற்காக முதற்கண் மனோகரன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், குறிப்பாக அரங்கேறும் பிள்ளைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

 

வீரம் விளைந்த நிலம் வல்வெட்டித்துறை. அந்த நெய்தல் நிலப் பட்டினம் கலைகளிலும் பொலிந்தது. ஆண்டுதோறும் ஊர் எடுத்தது ‘இந்திர விழா’: இரவெல்லாம் களியாட்டம், மூலை முடுக்கெல்லாம் கொண்டாட்டம், தெருவெல்லாம் மக்கள் கூட்டம். நான் பார்த்த அன்று, ஒரு புறம் கதகளிக் கலைஞர் வேலானந்தன், இன்னொரு புறம் பரதக் கச்சேரி, வேறு ஒரு வெளியில் மெல்லிசைக் குழு, திறந்தவெளி அரங்கில் நாடகம், எதை என்று பார்ப்பது? சிலப்பதிகாரம் கூறும் காவிரிப்பூம் பட்டினத்தில் ‘இந்திரவிழாவூரெடுத்த காதை’ நினைவுக்கு வருகிறது. அது ஒரு காலம்.

 

அங்கிருந்துதான் வருகிறார் எங்கள் மனோகரன், எனது இனிய நண்பன். நிலத்திலும் கலைகளோடு தொடர்பு, தரமான பல நாடகங்களைத் தந்தார். புலப்பெயர்விலும் தொடர்கிறது அரங்க ஈடுபாடு. அந்தப் பட்டியலின் நீளம், சிட்னி அறியும். எல்லாவற்றுக்கும் மேலாக, அவர் ஒரு திறமான ஒப்பனைக் கலைஞர். சிட்னி நாடக மேடைகள் எங்கும், குறிப்பாகச் சிறுவர் அரங்குகளில், அவர் எழுதிய முகங்கள்தான் எல்லாம். தாறுபாச்சி உடுத்த தனையனும், தாயும், இதை ஒரு சமூக சேவையாகவே செய்கிறார்கள்.

 

அவர்கள் குடும்பம் ஒருகலைப் பூங்கா. திருமதி தேவி மனோகரன் அவர்களும் பரதம் பயின்றவர், நாடகங்களிலும் நடித்திருக்கிறார். மனோகரனின் தந்தையார் சிவகுரு ஐயா அவர்களும் கலை ஈடுபாடு உள்ளவர். சிறுவயதில் ‘தாத்தா’ பாத்திரம் ஏற்று நடித்ததால் இன்றுவரை ‘தாத்தா’ என்னும் பட்டப் பெயராலேயே அழைக்கப்படுபவர். ஊரூராகத் திரிந்து நாடகங்கள் பார்த்ததை இரசித்து இரசித்துச் சொல்கிறார். எண்பத்தைந்து அகவையைத் தாண்டிய இந்த இளவல், பேரப்பிள்ளைகளின் ஆடலைக் கண்டு ‘இதுவரை நான் உயிருடன் இருந்தது இந்த அரற்கேற்றத்தைக் காணத்தானோ’ என்று புளகாங்கிதமடைகிறார். இவரின் தந்தையும் ஒரு கூத்தர். தேவி வழியில் தந்தை ‘இராஜபாட்’ கூத்தர், பாட்டனுக்குக் ‘கட்டியக்காரன்’ என்ற பட்டப் பெயரும் உண்டு. பாட்டன் பூட்டன் வழிவந்த இந்தக் கலைப் பூங்காவில் பூத்த இரு மலர்கள்: கண்ணனும், கீதாவும். இன்னொன்று மொட்டு அவிழ்ந்து மணம் பரப்பிக்கொண்டு இருக்கிறது. அது வேறு கதை. அது பைரவியின் கதை.

 

கண்ணன், கீதா, இவர்களின் தந்தை மனோகரன் ஆகியோரை நான் முதலில் சந்தித்தது, 1999 காலப்பகுதியில் ஒரு பயணத்தின் கதை என்ற நாடகக் கூத்துக்காக அரங்கப் பட்டறைகள் நடத்தியபோது. மூவருமே அதில் பங்குபற்றிக் கூத்தாடினார்கள். கண்ணனையும், கீதாவையும், அப்போதே இனங்கண்டு கொண்டேன். அங்க அசைவுகள் அவ்வளவு சுத்தமாகவும், இயல்பாகவும் இருந்தன. இவர்கள் எல்லோ கூத்தர்கள்! இவர்களைப் போல இன்னும் ஒரு சிலர் கிடைத்தால் போதும், நாடகக் கூத்துக் கலையை அதன் உன்னத நிலைக்குக் கொண்டுபோய் விடலாம். இவர்களை என்னுடன் கூத்தாட அனுமதித்ததற்காக நடன ஆசிரியை திருமதி உஷா கருணாகரன் அவர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன். ஆசிரியரின் கைவண்ணத்தில் பட்டைதீட்டப்பட்டவர்கள் அல்லவா இவர்கள். மிக்க நன்றி!

 

நடுநாயகமாக ஆடலாசிரியரின் நட்டுவாங்கமும், அருகே மிடற்றுப் பாடகரும், சூழக் குயிலுவக் கருவியாளரும், பருந்தும் நிழலும் போல ஒத்திசைக்க, தலை அரங்கேறும் இந்த ஆடல் வேள்வியில், செவி நிறைந்ததா, கண் நிறைந்ததா, மனம் நிறைந்தா என்று திக்குமுக்காடிப்போய் இருக்கிறேன். சுவைத்ததைச் சொல்லத்தான் முடியுமா அல்லது சொல்லித்தான் விளங்கவைக்க முடியுமா? இயற் சொற்களால் அது ஆகாது. சுவை பேச்சற்ற ஒரு மொழி. அதை விளங்கிக் கொள்ள ஒத்த மனங்களால்தான் முடியும். அது மௌனத்தின் மொழி. இதைத்தான் ‘சஹிருதய’ என்றார்களோ!

 

நான் தகித்துப்போய் இருக்கிறேன். அந்த உணர்வுகளில் சஞ்சரித்துக் கொண்டிருக்கவே விரும்புகிறேன். அதையே நீங்களும் விரும்புவீர்கள். ஆனால், என் செய்வது? இடையில் எனக்கு இன்னும் ஒரு கடமை இருக்கிறதே. இது காலத்தின் கட்டாயம், வரலாற்றுக் கடமை. ஆகவே சற்றுப் பொறுத்தருளுங்கள்.

 

ஒரு சிற்றுரை. இது, இந்த அரங்கேற்றம் பற்றியதல்ல. அரங்கேற்றம் நடன ஆசிரியர்களின் பாடத்திட்டத்துக்குள் அமைவது. ஆட்டத்தில் ஒரு படிமுறை வளர்ச்சியும் தேர்ச்சியும் உள்ளது. இது, ‘இங்கிருந்து எங்கே’ என்ற தலைப்பில், ஆடல்பற்றிய ஒரு பொதுவான சிற்றுரை. ஆடல்பற்றிய ஒரு கொள்கைப் பிரகடனம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

 

இங்கிருந்து எங்கே?

 

‘பரதநாட்டியம்’ என்று பெயர் சூட்டப் பெற்ற இந்த செவ்வியல் ஆடலின் நீண்டகால இரசிகர்களில் நானும் ஒருவன். தமிழகத்தில் இருந்த பத்தாண்டுகளில் மிகத் தரமான ஆடல்வல்லாரின் ஆடல்களை, அவர்களின் உன்னதமான காலப்பகுதிகளில் பார்க்கும் பேறு கிடைத்தது. I have seen the best in their best. அப்போதெல்லாம் இரு கேள்விகள் என்னுள்ளே உறுத்தும். அந்தக் கேள்விகளை இத்தருணத்தில் கேட்பது சற்று இசகுபிசகாக இருக்குமோ, என்ற மனக் கூச்சம் ஏற்படுகிறது. ஆனால், இதுவே நல்ல தருணம் என்ற ஒரு மன உந்துதலும் உண்டு. ஆகவே, இந்தக் கேள்விகளை நான் வேறு யாரிடமும் கேட்காமல், ஆடலாசிரியர்கள், கலைஞர்கள், இரசிகப் பெருமக்கள் முன்னிலையில், என்னிடமே உரக்கக் கேட்கிறேன்.

 

முதல் கேள்வி: ஏன்?

 

தமிழர்களாகிய நாங்கள் ‘பரதநாட்டியம்’ என்று சொல்லப்படுகின்ற இந்த ஆடலை ஏன் ஆடவேண்டும்? ஏன் என்றால், இதில் ஆடப்படும் ஆடல் தமிழர்களுடையது. பெயர்தான் சற்று மாறிவிட்டது. இந்தப் பெயர் மாற்றம் எல்லாத் துறைகளிலும் நடந்தேறியுள்ளது. பெயர் மாற்றத்திற்கூடாக உரிமைச் சாசனத்தையும் மாற்றி, வரலாற்றையே மாற்றிவிட்டார்கள். இன்று தெருக்களின் பெயர்களையும், ஊர்களின் பெயர்களையும் மாற்றி, புதிய கற்பனை வரலாறுகளைப் படைத்து, பேரின ஆக்கிரமிப்பு செய்வது போல, அன்றும் நடந்துவிட்டது. ஆடலரங்கிலும் நடந்துவிட்டது. அது நீண்ட வரலாறு.

 

பரதமுனி என்ற ஒருவரால் எழுதப்பட்டதாகக் கூறப்படுகின்ற ‘நாட்டிய சாஸ்திரம்‘ என்பது, சமஸ்கிருத நாடகங்களை எழுதுவதற்கும், தயாரித்து அரங்கேற்றுவதற்குமான ஒரு சமஸ்கிருத நாடக இலக்கணத் தொகை நூல். அன்று நாடகமும் ஆடப்பட்டதால், நடன விபரங்களும் இதில் அடங்கும். நாடகர்களுக்கும், நர்த்தகர்களுக்கும் மிகவும் பயனுள்ள ஒரு நூல். அவர்களால் கட்டாயம் படிக்கப்படவேண்டிய நூல். இங்கு எழும் கேள்வி: இந்த நாட்டிய சாஸ்திர நூல்தான் தமிழர் ஆடலின் தோற்றுவாயா?

 

இறந்துபட்டுப்போயின என நாடகத்தமிழ் இலக்கண நூல்களின் பெயர்ப் பட்டியல் ஒன்று உண்டு. ஆனால், இன்றுவரை அந்த நூல்கள் கிடைக்க வில்லை. தமிழரின் ஆடல் பாடல்கள்பற்றிப் பெயரளவில்தானும் அறிந்து கொள்வதற்கு, எம்மிடம் எஞ்சியுள்ள தொன் நூல் சிலப்பதிகாரம் என்னும் காப்பியம் மட்டும்தான்.

 

இருவகைக் கூத்தி னிலக்கண மறிந்து
பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப்
பதினோ ராடலும் பாட்டுங் கொட்டும்
விதிமாண் கொள்கையின் விளங்க வறிந்தாங்
காடலும் பாடலும் பாணியும் தூக்கும்
கூடிய நெறியின் கொளுத்துங் காலைப்
பிண்டியும் பிணையலு மெழிற்கையுந் தொழிற்கையும்
கொண்ட வகையறிந்து கூத்துவரு காலைக்
கூடை செய்தகை வாரத்துக் களைதலும்
வாரஞ் செய்தகை கூடையிற் களைதலும்
பிண்டி செய்தகை யாடலிற் களைதலும்
ஆடல் செய்தகை பிண்டியிற் களைதலும்
குரவையும் வரியும் விரவல செலுத்தி

 

என, சிலப்பதிகாரம் நாடகத்தமிழ்பற்றியும், இசைத்தமிழ்பற்றியும் மேலும் பல கூறும். பாடல் அடிகளை விளங்கிக் கொள்வது சற்றுக் கடினம். தவறான விளக்கங்களும் தரப்பட்டுள்ளன. ஆய்வு செய்து அவற்றை அறிந்து கொள்ளவேண்டும். கூத்த நூல், பஞ்சமரபு என இரு இலக்கண நூல்கள் உள்ளன. அவற்றிலும் ஆடல்பற்றியும், இசைபற்றியும் பல விளக்கங்களைக் காணலாம்.

 

சிலப்பதிகாரம் கூறும் ஆடல்வகைகள், நாட்டிய சாஸ்திர நூலில் இல்லை. சிலவற்றில் ஒற்றுமை இருந்தாலும், இரண்டு நூல்களுக்கும் இடையில் ஆடல் பாடல் பல்லியம், இன்னியம் ஆகியவை பற்றி நிறையவே வேறுபாடுகளும் உள்ளன. ‘காலவகையினானே’ பல மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன. அவைபற்றி இங்கு விவரிக்கில் விரியும். இச்சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான ஒன்றை மட்டும் எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

 

நாட்டிய சாஸ்திர நூலில், நாடக மாந்தர் அரங்கில் தோன்றுமுன் நிகழ்த்தப்படவேண்டிய பூர்வரங்கச் சடங்குகளின் விபரங்கள் உள்ளன. ஆனால், ஓரு தலைக்கோலியின் தலை அரங்கேற்றம்பற்றி இதில் எதுவும் கிடையாது. தலை அரங்கேற்றம்பற்றி சிலப்பதிகாரம் பரக்கக் கூறும். இந்த அரங்கேற்ற மரபு தமிழருக்கு சிலப்பதிகாரம் ‘அரங்கேற்று காதை’ ஊடாகத்தான் தொடர்கிறது. அதைத்தான் சில மாற்றங்களுடன் அரங்கேற்றங்களில் இன்றும் பார்க்கிறோம்.

 

சங்ககாலத்தில் விறலியர் ஆடல் என்றும், சிலப்பதிகாரம் கூறும் பலவகைக் கூத்துள் சாந்திக் கூத்து என்றும், பின்பு சதுர் என்றும், மீண்டும் பரதம் என்றும், அறுபடாத ஒரு மரபின் தொப்பூழ் கொடித் தொடர்ச்சி இந்தப் பரதக்கூத்து. ‘கூவி ஆடல் கூத்தெனப் படுமே.’ பாடி ஆடப்படுகின்ற எல்லாமே தமிழில் கூத்து என்ற பொதுச் சொல்லால் குறிக்கப்படுவன. பரதமும் கூத்துள் அடங்கும். பரதம், பரதர் என்ற ஒருவரால் இயற்றப்பட்டதாகக் கூறப்படுவதால் பெற்ற பெயரும் அல்ல. பாவ, ராக, தாளம் என்ற தவறான விளக்கத்தால் கொண்ட பெயரும் அல்ல. விறல், சதுர் என்பவற்றின் தொடர்ச்சி பரதம். விறல், சதுர், பர என்பவற்றின் பொருள் ‘உயர்ந்த’ என்பதாகும். இவைபற்றி விரிவாகப் பேச இதுவல்ல நேரம். உயர்ந்த ஆடலாகிய பரதத்தின் ஆடல் வகை தமிழ்த்தேசத்தில் தோன்றி, தமிழ்கூறும் நல்லுலகெங்கும் வளர்வது. பரதம் தமிழர்களுடைய மரபு. தமிழர்களுடைய அடையாளங்களுள் ஒன்று. ஆகவே தொடர்ந்து பரதம் ஆடுவோம். ‘தமிழோடிசை’ பாடி ஆடுவோம்.

 

ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைத்துவிட்டோம் – என்று
ஆடுவோமே …

 

இங்குதான் இரண்டாவது கேள்வி எழுகிறது. என்ன?

 

இன்றைய வரலாற்றுக் காலகட்டத்தில்; என்ன ஆடப்போகின்றோம்? ஆடல்களின் ஊடாக என்ன சொல்லப்போகின்றோம்?

 

எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு – நாம்
எல்லோரும் சமம் என்ப துறுதியாச்சு
சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே – இதை
தரணிக்கெல்லாம் எடுத்து ஓதுவோமே

 

என்று, விடுதலை கிடைக்குமுன்பே விடுதலைக் கீதம் இசைத்தானே பாரதி, இதை ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ என்றானே. இது ஒரு முன் உதாரணமாக வேண்டாமா? பயிற்சி, பயிற்சி, சிறப்பு, உச்சம், உன்னதம், ஆகா, ஓகோ, அற்புதம், அழகு – இந்த அழகுணர்வு மட்டும்தான் கலையின் கடமையா? அறிவூட்டல் என்ற ஒரு கடமையும் உண்டே. இன்றும், அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கப் போகின்றோமா? அல்லது, இன்றைய வரலாற்றுக் கடமையைச் செய்யப்போகின்றோமா?

 

பரதத்தின் இன்றைய வரலாற்றுக் கடமை என்ன? கதைகளில் கதைப்புலம் மாறிவிட்டது, கரு மாறிவிட்டது. குறும்படங்களில் இன்றைய வரலாறு பதியப்படுகிறது. கவிதைகள் புறப்பொருள் பாடுகின்றன. மெல்லிசைப் புறப் பாடல்கள் ஆயிரக் கணக்கில் இறுவட்டுகளில் வெளிவந்துவிட்டன. ஆனால், பரதத்திலும் அதற்கான இசையிலும் கடவுள்களின் பெயரால் சம்போக, விப்ரலம்ப சிருங்கார நிலைகளை ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் இருக்கிறோம்! இன்னும் எவ்வளவு காலத்திற்கு சந்தனம் அரைப்பதும், தலை முடிப்பதும், பூச்சூடுவதும், முந்தானை திருத்துவதும், கடைவாயில் பார்ப்பதும்? அகக்கூத்து, புறக்கூத்து என்று சிலப்பதிகாரம் கூறும் இருவகைக் கூத்துள், இவ்வகையான அகக் கூத்துகளை ஆடியது இப்போதைக்குப் போதும். இன்றைய தேவை புறக்கூத்து. சங்ககாலப் புறநானூற்றையும் விஞ்சிய வீர வரலாறு இன்று நிகழ்த்தப்படுகிறது. அந்த அற்புதங்களை ஆடுவோம், பாடுவோம், கொண்டாடுவோம்.

 

அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில புற நடனங்கள் ஆடப்படுகின்றன. இல்லை என்று சொல்லவதற்கில்லை. ஆனால், அவை மெல்லிசை இறுவட்டுப் பாடற் சொற்களுக்குப் பிடிக்கப்படுகின்ற பதார்த்த (பத+அர்த்த) அபிநயங்களாக அரங்கில் எஞ்சிவிடுகின்றன.

 

பரதம் வேறு, அதற்கான இசை வேறு. அதன் கனதியே வேறு. அதிலும் இன்று வேண்டப்படுவது அகம் அல்ல, புறம் – புதிய புறம். அதற்கேற்பப் பரதம் புதிய கோலம் கொள்ள வேண்டும். உடலும் உள்ளமும் இரண்டறக் கலந்து தகிக்கும் புதிய தாண்டவங்கள் வேண்டும். புதிய பரதர்களிடம் காலம் வேண்டிநிற்பது இதைத்தான்.

————————————————————————————————————————————————————————————————————————————–

கண்ணன் கீதா தலைஅரங்கேற்ற
வாழ்த்து மடல்

 

என்னதான் எண்ணி உங்கள் அன்னை
இன்னோர் பெயர் இட்டு அழைத்தாளோ
கண்ணன் கீதா உபதேசம்
எண்ணியே இப்படி அழைத்தாளோ

 

அரங்கனின் நாமங்கள் சூட்டியே
அரங்காட உங்களை வைத்தானோ
விரதம் பல்லாண்டிருந்து அப்பன்
அரங்கேற்றம் காண வைத்தானோ

 

பல்லாண்டுகளாய் பயின்று ஆடல்
வல்லோராய் நீங்கள் ஆட
எல்லோர் பார்வையிலும் மற்ற
எல்லாமே மறைந்தே போச்சு

 

அரங்கேற்றம் ஆரம்ப ஆட்டம்
இருக்கிறது இனிமேல்தான் ஆட்டம்
பொறுத்திருப்போம் எதிர்பார்த்திருப்போம்
வருங்காலம் உங்கள் கையிலே

 

பல்லாண்டு பல்லாண்டு பலநூறு அரங்கேறி
எல்லோரும் போற்றவே ஏற்றம் பெற்றிடுவீர்
கல்வியுடன் தொழிலும் குறையாத செல்வமுடன்
நல்லதோர் இல்வாழ்வும் நலமே பெற்றிடுவீர்

 

வாழ்க!

 

சிட்னி / 27-10-2007                                         – பத்அங்கிள்

 

 

 

[குறிப்பு: இக் கட்டுரை பற்றிய உங்கள் எண்ணங்களை ‘தொடர்பாடல்’ ஊடாக தெரியப்படுத்தவும், நன்றி.]