புலம்பெயர்ந்த கூத்துகள்

ஆபிரிக்கர்கள் அடிமைகளாக அமெரிக்காவுக்குக் கூட்டம் கூட்டமாகக் கடத்திச் செல்லப்பட்டார்கள். அவ்வாறு புலப்பெயர்ப்புச் செய்யப்பட்டவர்களின் உடலிலும் உள்ளத்திலும் ஒன்றிக் கலந்துவிட்ட ஆடலும் இசையும் லயமும்; அவர்களுடன் புலம் பெயர்ந்தன. இடம் மாறிப்போனாலும், மொழி மாறிப்போனாலும், வாழ்க்கை முறைகள் மாறிப் போனாலும், அவர்களின் ஆற்றுகலைகள் அவர்களுடன் தலைமுறை தலைமுறையாக வாழ்கின்றன. ஆபிரிக்க-ஆமெரிக்கர்களின் (Afro-Americans) ஆற்றுகலை வடிவங்கள் அமெரிக்காவின் ஐரோப்பியக் கலைப் பாரம்பரியங்களையே மாற்றியமைத்துவிட்டன. ஆபிரிக்க-அமெரிக்கர்களின் ஆற்றுகலை வடிவங்களே இன்று பெரும்பான்மை அமெரிக்க ஆடல், இசை வடிவங்களாக உள்ளன.

 

அது போல, ஆடலும் இசையும் புலம் பெயர்வதும், புத்துயிர் பெற்று வாழ்வதும் உலகெங்கும் காலாகாலமாக நிகழ்வதுதான். அவற்றின் வரலாறு மிகவும் நீண்டு பரந்தது. அவற்றுள், குறிப்பாக அண்மைக் காலங்களில் புலம் பெயர்ந்த தமிழ்க் கூத்துகள் பற்றித் தேடிப் பார்ப்பதே இச் சிற்றுரையின் நோக்கம். தமிழகத்தில் இருந்து பிஜித் தீவுகளுக்குப் புலம் பெயர்க்கப்பட்ட தமிழர் மத்தியிலும், ஈழத்தில் இருந்து வெளி நாடுகள் பலவற்றிற்குப் புலம் பெயர்ந்த தமிழர் மத்தியுலும் பல தமிழ்க் கூத்துகள் வளமுடன் வாழ்கின்றன. மக்களின் புலப் பெயர்வு இன்றும் தொடர்கிறது. கூத்துகளின் புலப் பெயர்வும் தொடர்கிறது. இடம், காலம் கருதி மூன்று கூத்துகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

 

1. பிஜித் தமிழ்த் தெருக்கூத்து
2. கண்டி அரசன் நாட்டுக் கூத்து
3. காத்தான் கூத்து

 

அறிமுகநெறிமுறையில் அவைபற்றிச் சொல்வேன். மாதிரிக்கு அவற்றின் சில காட்சிகளையும் இறுவெட்டிலிருந்து பார்க்கலாம்.

 

1. பிஜித் தமிழ்த் தெருக்கூத்து

 

பிஜியில் இருந்து அவுஸ்திரேலியாவிற்குக் குடிபெயர்ந்து, மெல்பேண் நகரில் குடியேறிக் கட்டடத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் எனக்கு நண்பரானார். அவர் வீட்டுக்கு ஒரு நாள் போயிருந்தேன். வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்கும் போதே சாம்பிராணி வாசனை கமழ்கிறது. எட்டிப் பார்க்கிறேன் சுவாமி அறை. அங்கு சகல இந்துத் தெய்வங்களின் படங்களும் இருக்கின்றன. சாயிபாபா படமும் வரம் கொடுத்துக்கொண்டு இருக்கிறது. நண்பரின் கட்டடத் தொழில் சம்பந்தமான கல்விச் சான்றிதழ்களும் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருக்கின்றன.

 

உரையாடல் ஆங்கிலத்தில்தான். இருவருக்கும் தெரிந்த பொதுமொழி ஆங்கிலம்தான். எட்டி உள்ளே பார்த்து ஏதோ மொழியில் ஏதோ சொல்கிறார். என்ன மொழியில் பேசுகிறீர்கள் என்கிறேன், ஹிந்தி என்கிறார். அவர்கள் வீட்டில் இப்போ ஹிந்தியில்தான் பேசுவார்களாம். பிஜியில் அவரின் தாத்தாவும் பாட்டியும் தமிழில்தான் பேசினார்களாம். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தமிழ் புரியுமாம், ஆனால் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாதாம். தங்கள் வீட்டில் இப்போ தனக்குக் கொஞ்சம் புரியுமாம், மற்றவர்களுக்குத் தமிழ் துப்பரவாகத் தெரியாதாம். மூன்று தலைமுறைக்குள் மொழி மாறிவிட்டது, ஆனால் பண்பாடு வாழ்கிறது. தனது மகனை இப்பொழுது வாரம் ஒரு நாள் இயங்கும் தமிழ்ப் பள்ளி ஒன்றுக்கு அனுப்புகிறார். அவரும் ஒருமுறை தனது மூதாதைகளின் கிராமத்தைத் தேடி தமிழ்நாட்டிற்குச் சென்று உறவினர் யாரையும் காணமுடியாது கவலையுடன் திரும்பி வந்துவிட்டார். அடிவேரைத் தேடுகிறார். பேச்சுத் தொடர்கிறது. தேனீர் வருகிறது, குடித்துவிட்டு நன்றிகூறி விடைபெறுகிறேன். அவர் எட்டி உள்ளே பார்த்து ஹிந்தியில் கூறியது எனக்கு இப்போ சாடைமாடையாகப் புரிகிறது.

 

இந்தியாவிலிருந்து கரும்புத்தோட்டக் கூலிகளாக பிஜித் தீவுகளுக்கு பலர் குடும்பம் குடும்பகாகப் புலம் பெயர்க்கப்பட்ட வரலாறு தெரிந்ததே. பிஜித் தீவுகள் என்றாலே பாரதியாரின் ‘கரும்புத் தோட்டத்திலே’ என்ற பாடல் நினைவுக்கு வரும். ஆனால், நம்மில் பலருக்குத் தெரியாத ஒன்று அங்கு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. தமிழ் நாட்டில் இருந்து புலப்பெயர்வு செய்யப்பட்ட தமிழர்கள், தங்கள் சொந்தக் கிராமங்களில் ஆடிய தெருக்கூத்துக் கலை அறிவையும் ஆர்வத்தையும் தம்முடன் எடுத்துச் சென்று விட்டார்கள். தலைமுறை தலைமுறையாகப் பழகிக் கூத்து ஆடுகிறார்கள்.

 

பிஜியில் உள்ள ஹிந்திச் சூழலில் தமிழ் அழுத்திக் கூறப்படவேண்டி உள்ளது. ஆகவே, தமிழகத் தெருக்கூத்து பிஜியில் தமிழ்த் தெருக்கூத்து ஆகிறது. பிஜியில் ஆடப்படும் தெருக்கூத்தைத் தமிழ் நாடகம் என்றும் அழைக்கின்றார்கள். அத்துடன் இன்று தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள கூத்துப் பெயர் மாற்றச் சூழலில், ‘தெருக்கூத்து’ என்ற பெயர் வரலாற்று ரீதியாக எடுத்துக் கூறவேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் பிஜித் தமிழ்த் தெருக்கூத்தை நோக்குவோம். அவர்கள் நாவில் தெருக்கூத்து, ‘திருக்கூத்து’ என்று வருகிறது.

 

பிஜியில் தமிழ்த் தெருக்கூத்து உயிர்த் துடிப்புடன் இன்றும் வாழ்கிறது. பிஜியில் தமிழர்கள் வாழும் கிராமங்கள், நகரங்கள் எங்கும் கோயில் திருவிழாக்களிலும், கலியாணவீடுகளிலும் தெருக்கூத்து நிகழ்த்தப்படுகிறது. கூத்தர்கள் ஊர்ஊராகச் சென்று இரவிரவாகக் கூத்தாடுகிறார்கள். அங்கு கூத்தாடும் குழுக்கள் பல உள்ளன. அவர்களுக்குக் கூத்து வருவாய் ஈட்டும் வாழ்க்கைக்கான தொழில் அல்ல. வருவாயைவிட செலவுதான் அதிகம். செலவையும் கூத்தர்களே ஏற்றுக்கொள்ளுகிறார்கள். அவர்கள் விருப்பத்தின் பேரில், சந்தோசத்திற்காகவும், பொழுதுபோக்காகவும் கூத்தைப் பழகி ஆடுகிறார்கள். கோயில் சடங்கு, பொழுதுபோக்கு என்பதைவிட, அவற்றுக்கும் மேலாக அவர்களுக்கு அதில் ஒரு பற்று இருப்பதை அறியமுடிகிறது. இதில் படித்தவர் படிக்காதவர் என்ற வேறுபாடே இல்லை. எல்லோரும் கூத்தை விரும்பிப் பார்க்கிறார்கள். கூத்து வாத்தியாரை மிகவும் மதிக்கிறார்கள். அவரை மாஸ்ரர் என்றும் குருஜீ என்றும் அழைக்கிறார்கள்.

 

முன்னர், தமிழகத்தில் இருந்து பிஜிக்குத் தெருக்கூத்தையும் எடுத்துச் சென்றார்கள். இப்போ, பிஜியிலிருந்து அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா போன்ற நாடுகளுக்குக் குடிபெயரும் பிஜித் தமிழர்கள் பிஜித் தமிழ்த் தெருக்கூத்தையும் தாம் புலம்பெயரும் நாடுகளுக்கு விருப்புடன் கொண்டுசெல்கிறார்கள். சென்றவிடமெல்லாம் தமிழ்த் தெருக்கூத்தை ஆடுகிறார்கள்.

 

இவ் விபரங்களை அவுஸ்திரேலிய நகரங்களில் ஒன்றான சிட்னியில் வாழும், பிஜித் தமிழ்த் தெருக்கூத்துடன் தொடர்புடைய அறிஞர் ஆதிநாராயணன் அவர்களிடம் கலந்துரையாடிப் பெறக்கூடியதாக இருந்தது. இவர் உயர் பட்டப்படிப்புப் படித்தவர,; சிட்னியில் பிஜிக் கூத்தர்களை ஒன்றுசேர்த்து, தானும் ஒரு கூத்தராகக் கூத்தை முன்னெடுக்கிறார்.

 

அவர்கள் ஆடிய கூத்துகளின் ஒளிநாடாக்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. அத்துடன் அவர்களுடைய ‘வாதாபிசூரன்’ என்னும் தெருக் கூத்தையம் சிட்னி நகரில் நேரில் பார்க்கும் வாய்ப்பும் கிட்டியது. திரைக்குப் பின் தீபாராதனை, தீர்த்தம் பருகல், தீர்த்தம் தெளித்தல், குருவணக்கம், துதிப் பாடல், ஆரம்பக் கொட்டு என ஆரம்பச் சடங்கு விரிந்து செல்கிறது. ஒரு வேரைத் தண்ணீர் விட்டு உரைத்து எல்லோரும் பருகுகிறார்கள். தொடர்ந்து திரை விலக கட்டியக்காரன் தோன்றுகிறான். பின்னே சனைய் வாத்தியம் வாசிப்பவர், டோல்கி வாசிப்பவர், தாளக்காரர், பக்கப்பாட்டுக்காரர் எனப் பலர். சிலர் நாற்காலிகளில் அமர்ந்திருக்கிறார்கள். பலர் பின்னே வரிசையாக நிற்கிறார்கள். கூத்து நடக்கிறது. தமிழகத்தில் காணும் அதே தெருக்கூத்து அமைப்பு, அதே கூத்துப் பிரதி, அதே வேடங்கள், அதே பாடல்கள், அதே ஆடல்கள், அதே நடிப்பு, அதே கிறுக்கி. தெருக்கூத்தின் அடையளங்கள் தென்படுகின்றன.

 

ஆனால் பேச்சு மொழி வேறு. தமிழில் பாடுகிறார்கள், மிகவும் சிரமப்பட்டுத் தமிழில் உச்சரித்து பாடுகிறார்கள். ஹிந்தியில் பேசுகிறார்கள். அவர்களுக்குத் தமிழ் புழக்கத்தில் இல்லாத மொழி. நடிப்பவர்களுக்கும் தமிழ் தெரியாது. பார்ப்பவர்களுக்கும் தமிழ் புரியாது. ஆனாலும் தமிழில் பாடுகிறார்கள். ஆனால், கூத்து வசனங்களைத் தமிழில் பேசுவதில்லை, ஹிந்தியில் பேசுகிறார்கள். பாடல்களை பார்வையாளர்களுக்குப் புரியவைப்பதற்காக ஹிந்தியில் ஒருவர் விளக்கம் கூறுகிறார். அந்தக் கடமையை சிட்னியில் ஆதிநாராயணன் செய்கிறார். இங்கு ஒர் அதிசயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது, தமிழில் கூத்துப் பாடல்களைப் பாடுகிறார்கள். கூத்து வசனங்களைக் ஹிந்தியில் பேசுகிறார்கள், பாடல்களுக்குக் ஹிந்தியில் விளக்கம் கூறுகிறார்கள். ஆங்கிலத்திலும் விளக்கிக் கூறப்படுகிறது.

 

பொழுதுபோக்காகவோ அல்லது கோயில் சடங்காகவோ கூத்தின் ஆடலும் பாடலும் வேண்டும் என்றால், அவர்களுக்குத் தெரிந்த ஹிந்தி மொழியிலேயே கூத்து முழுமையையும் மொழியாக்கம் செய்து ஆடலாமே. இப்பொழுது ஐந்தாவது தலைமுறையும் ஆகிறது. ஏன் இவ்வளவு சிரமப்பட்டு தமிழில் பாடவேண்டும், தமிழ்த் தெருக்கூத்தை ஏன் ஆடவேண்டும். அவர்களின் அடிமனதில் எதோ ஒன்று உறுத்திக் கொண்டு இருக்கிறது. அது கோயில் சடங்குமல்ல, கேளிக்கைப் பொழுது போக்குமல்ல. அவற்றுக்கெல்லாம் மேலானது. அதுதான் தமிழன் என்ற அடிமன உணர்வு, அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாள வேட்கை. இப்பொழுது கட்டடத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் எனது பிஜி நண்பரை எண்ணிப்பார்க்கிறேன். அவரின் அடிவேர்த் தேடல் புரிகிறது.

 

(பிஜித் தமிழ்த் தெருக்கூத்தின் இறுவெட்டில் இருந்து ஒருசில காட்சிகளை மாதிரிக்குப் பார்ப்போம் …)

 

2 பாசையூர் கண்டி அரசன் நாட்டுக்கூத்து

 

யாழ்ப்பாண நகரை அண்டிய கரையோரக் கிராமங்களிலும் வடக்கின் தீவுப் பகுதிகளிலும் இன்றும் நாட்டுக்கூத்து வாழ்கிறது. வட்டக் களரியில் ஆடப்பட்ட கூத்துகள் இப்போ படச்சட்ட மேடைகளில் இசை நாடகப் பாணியில் நடத்தப்படுகின்றன. கத்தோலிக்க மதக் கதைகள் பல படச்சட்ட மேடை ஏறுகின்றன. அவற்றில் ஆட்டம் விட்டுப்போயிற்று. ஆனால் தென்மோடி இசையில் இன்றும் பாடப்படுகின்றன. ஞானசவுந்தரி போன்ற கத்தோலிக்க மத நம்பிக்கைக் கதைகளுடன் கண்டி அரசன் வரலாற்றுக் கதையும் மேடை ஏற்றப்படுகின்றது. பாசையூர் போன்ற ஒரு கத்தோலிக்க மீனவக் கிராமத்தில் கண்டி அரசன் கூத்து எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது ஆய்வுக்குரியது.

 

பாசையூரைச் சேர்ந்த மிக்கோர்சிங்கம் என்ற புலவர் இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன் கண்டி அரசன் கூத்தை ஏழுதி அரங்கேற்றினார் என்று கூறப்படுகின்றது. கடைசியாகக் கண்டியை ஆண்ட ஸ்ரீவிக்ரமராஜசிங்கனின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்ட கதை. மன்னனை மிகவும் கொடுமைக்காரனாகவும், காமுகனாகவும் வர்ணிக்கப் பட்டுள்ளது. கண்டி மன்னனை மட்டுமல்ல, கண்டி மாநகரையே ஆங்கிலேயருக்குக் காட்டிக் கொடுத்த சிங்கள ‘அதிகார்கள்’ (Adigars) நல்லவர்களாக நியாயப்படுத்தப் பட்டுள்ளார்கள்.

 

இதே கண்டி அரசன் கதை சங்கரதாஸ் சுவாமிகளாலும் இசைநாடகமாகப் படைக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட ஒரு நாடகக் குழுவினரின் நாடகங்களை ஈழத்தில் எனது கிராமத்தில் நான் சிறுவனாக இருந்தபோது பார்த்த நினைவு. தந்திரக் காட்சிகள் என் மனதில் பதிந்துவிட்டன. பால கண்ணன் அங்கும், இங்கும் என ஒரே நேரத்தில் தோன்றுவதும், கண்ணனின் வாய்க்குள் சுழலும் உலகத்தைக் காட்டியதும் அதிசயம்தான். அற்புதங்கள் இன்னும் பல. புகைவண்டியும் மேடையில் வந்து சென்றது, எந்த நாடகத்தில் என்று நினைவில்லை.

 

அவற்றுடன் இன்றும் என் மனதில் நிற்பது, கொடுமைக்காரனான கண்டி அரசன், எகலப்பொல என்ற ‘அதிகார்’, தன்னைக் காட்டிக் கொடுக்கிறான் என்ற காரணத்திற்காக, அவரின் ஆண் குழந்தைகளின் தலைகளை வெட்டி உரலில் இட்டு, அவரின் மனைவியைக்கொண்டு உலக்கையால் இடிப்பித்த காட்சி. அந்த ஒப்பாரியும் அழுகையும் எனது சிறிய பிராயத்தில் மனதில் பதிந்துவிட்டன. பார்வையாளர்கள் அரசனைத் திட்டித்தீர்த்தார்கள்.

 

புலம் பெயர்ந்த நாடுகளில் ஆடப்படும் கூத்துகளில் கண்டி அரசன் கூத்துப் பாணி வித்தியாசமானது. பழகுவதற்குச் சற்றுக் கடினமானது. பாடல்களும் மெட்டுகளும் நிறையவே உள்ளன. மெட்டுகள் எண்பத்தைந்திற்கும்மேல் எனவும் கூறப்படுகிறது. முறைப்படி அண்ணாவியாரிடம் பயிலவேண்டும். ஐரோப்பிய நாடுகளில் வாழும் பாசையுர் கூத்தர்கள் பலரை ஒன்று கூட்டி ‘பாசையூர் புனித அந்தோனியார் கலை விளையாட்டு அபிவிருத்திச் சற்கத்தினர்’ ஐரோப்பிய நகரங்களில் ஒன்றான ஹோல்ட் நகரில் அந்த முயற்சியை செவ்வனே நிறைவேற்றியுள்ளார்கள். அவர்கள் வெளியிட்ட இறுவெட்டைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. மிகவும் அற்புதமான படைப்பு.

 

இந்தியாவில் இருந்து பிழைப்புத் தேடி வந்து கண்டியில் கரும்புத் தோட்டத் தொழிலாளியாக ஒருவர் வாழ்ந்துகொண்டிருக்கிறார். கண்டி மன்னன் வாரிசு இல்லாமல் இறந்துபோகின்றான். பட்டத்து யானையிடம் ஒரு மாலையைக் கொடுத்து மன்னனைத் தேர்ந்தெடுக்கும்படி அனுப்பி வைக்கின்றார்கள். யானையும் கண்ணுசாமி என்ற அந்தக் கரும்புத் தோட்டத் தொழிலாளிக்கு மாலையிட்டுத் தேர்ந்தெடுக்கிறது. எங்கோ புராணக்கதை கேட்பது போல இருக்கிறதா? இதுதான் கூத்தின் ஆரம்பம். அந்தத் தொழிலாளி ஸ்ரீவிக்கிரமராஜசிங்கன் என்ற பட்டப் பெயருடன் மன்னனாகின்றான். அதிகார மமதையில் கொடியவனாகின்றான். காட்டிக் கொடுக்கும் துரோகிகள் என்ற சந்தேகத்தின் பேரில் பல சிங்கள  ‘அதிகார்கள்’ தண்டிக்கப்படுகின்றார்கள். அவர்களின் குடும்பங்களும் தண்டிக்கப்படுகின்றன. ஆங்கிலேயருடன் யுத்தம் நிகழும்போது எஞ்சிய ‘அதிகார்களால்’ காட்டிக் கொடுக்கப்பட்டு சிறைப்பிடிக்கப்படுகிறான். கண்டி ஆங்கிலேயர் கையில் வீழ்கிறது. கொஞ்சம் வரலாறு, கொஞ்சம் பொய், கொஞ்சம் புனை என்று கூத்துச் செல்கிறது.

 

சிறைப்பிடிக்கப்பட்ட கண்டி அரசன் வேலூர்ச் சிறையில் இறந்துபோனான் என்பது வரலாறு. கடைசியாகக் கண்டியை ஆண்ட நாயக்கர் பரம்பரையில் வந்த, தமிழில் இறுதிக் கையெழுத்திட்ட அரசன் ஸ்ரீவிக்கிரமராஜசிங்கனின் கல்லறை வேலூரில் உள்ளது. அந்த வரலாற்றுச் சின்னம் புதுப்பிக்கப்பட்டு பெரிதாகக் கட்டப்பட்டால் வரலாற்றில் நிலைக்கும்.

 

அருமையான கூத்துப் பாணி. பாணி தமிழர்களுடையது. கத்தோலிக்க மதக் கூத்துகளில் விட்டுப்போன ஆட்டங்களையும் தேடிச் சேர்த்துக்கொண்டால் கூத்து மேலும் சிறக்கும். ஆனால் கண்டி அரசன் கூத்துக் கதையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இன்றைய தேவை கருதி, உண்மையான வரலாறு கூத்தாக்கப்பட வேண்டும். கண்டியைக் காட்டிக் கொடுத்த சிங்கள ‘அதிகார்கள்’ அம்பலப்படுத்தபட வேண்டும். புதிய கண்டி அரசன் கூத்து உருவாக்கப்பட வேண்டும். முதல் அரங்கேற்றம் கண்டி அரசன் கல்லறையில் நிகழவேண்டும். கண்டி அரசனை வரலாறு வேலூர்ச் சிறையிலிருந்து விடுவிக்கவேண்டும். வரலாறு கண்டி அரசனை விடுவிக்கும். கூத்தின் கடமைகளில் இதுவும் ஒன்று.

 

(கண்டி அரசன் கூத்தின் இறுவெட்டில் இருந்து ஒருசில காட்சிகளை மாதிரிக்குப் பார்ப்போம் …)

 

 

[fvplayer src=”http://www.annaviyar.com/wp-content/uploads/2018/10/Kandy_Arasan.mp4″ splash=”http://www.annaviyar.com/wp-content/uploads/2018/10/Kandy_Arasan.jpg” controlbar=”yes” speed=”buttons” playlist_advance=”true” splashend=”show” caption=”கண்டி அரசன் நாட்டுக்கூத்து” splash_text=”மாட்டேன் என்று சொல்லிவிட்டாளோ?”]

 

3. காத்தான் கூத்து

 

காத்தவராயன் கதை: கதைப் பாடலாக, பூசாரிப் பாட்டாக, வில்லுப் பாட்டாக, தெருக் கூத்தாக, இசை நாடகமாக, பலவகை வடிவங்களில் தமிழகத்தில் நிகழ்த்தப்பட்டு வருகிறது. ஒவ்வொன்றுக்குள்ளும் வெவ்வேறு பாணிகள். பாணி வேறுபாடுகளை இசையிலும், ஆற்றுகையிலும் மட்டுமல்லாது, ஒத்திசைக்கும் குயிலுவக் கருவிகளிலும் காணலாம். இவ்வகையான தமிழ்ப் பாரம்பரியங்களைப் பிராந்திய, கிராமிய வடிவங்களாக மட்டும் பேணாது, தமிழின அடையாளத் திறங்களாகக் காணவேண்டும். காத்தவராயன் கதை இரண்டு திரைப்படங்களாகவும் வந்துள்ளது. முன்னது பி. யு. சின்னப்பா நடித்தது, பின்பு சிவாஜி கணேசன் நடித்துள்ளார்.

 

காத்தவராயன் கதை தமிழீழத்திலும் பாரம்பரியக் காத்தான் கூத்தாக ஆடப்பட்டு வருகிறது. தமிழீழத்தில் ஆடப்படும் கதைக்கும், தமிழகத்தில் வழக்கில் உள்ள கதைக்கும், வேறுபாடுகள் உள்ளன. தமிழீழத்தில் ஆடப்படும் காத்தான் கூத்து மோடியும், தமிழகத்தின் ஆற்றுகையிலிருந்து முற்றுமுழுதாக வேறானது. இவை ஒப்பாய்வு செய்யப்பட வேண்டியவை. இவ் ஆய்வில் தமிழீழக் காத்தான் கூத்தை மட்டும் நோக்குவோம். இங்கும் அண்ணாவிமார்கள் மத்தியில் பாடும் முறையில் சிறு மாறுபாடுகள் உள்ளன, பாடல்களிலும் சில வேறுபாடுகளைக் காணலாம். ஆனாலும், ஒரே பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.

 

காத்தான் கூத்துப் பாடல்களை அம்மன் வழிபாட்டுப் பாடல்களுடன் ஒப்பு நோக்கலாம். கதைப் பாடலின் சாயலையும் இதில் காணலாம். இதில் தாலாட்டு ஓசை இழை ஓடுகிறது. இப்பாடல்களை ‘முத்துமாரி அம்மன் தாலாட்டு’ என்றும் குறிப்பிடுவர்.

 

காத்தான் கூத்து இசை வகையை, அவ்வாறே முழுமையாக வேறு எங்கும் காணமுடியவில்லை. இவ் வகையில் வேறு கூத்துகள் முன்னர் ஆடப்பட்டதாகவும் தெரியவில்லை. காத்தான் கூத்து ஒரு தனித்துவமான வகை. இது தமிழர்களின் தனித்துவமான இசைப் பாரம்பரியங்களிலும் ஒன்றாகும். தமிழீழத்தில் பரவலாகப் பாடி ஆடப்பட்டு வருகிறது. ஈழத்தில் தமிழ் மக்களால் பெரிதும் விரும்பிப் பார்க்கப்படும் கூத்துகளில் இதுவும் ஒன்று.

 

காத்தான் கூத்து வகையில் அடுத்து வந்த முதல் நாடகம், அம்பலத்தாடிகளின் கந்தன் கருணை காத்தான் கூத்துப் பாணி இசை நாடகம் (1970) ஆகும். அதைத் தொடர்ந்து பல நாடகங்களில் காத்தான் கூத்து இசை பயன்படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாகச் சில: ஏகலைவன் நாடகக் கூத்தில் (1978) வேடுவர்களுக்கான பாடல்கள் யாவும் காத்தான் கூத்து இசையிலேயே அமைக்கப்பட்டுள்ளன; மீண்டும் இராமாயணம் மீண்டும் பாரதம் நாடகப் பாடத்தில் (1987) காத்தான் கூத்து கழுவேற்றப் பாடலிலிருந்து சில பாடல் அடிகள் பாத்திரத்துடன் பொருந்தி வருவதைக் காணலாம்; காத்தான் கூத்திலிருந்து மெட்டுகளும் பாடல் அடிகளும் தீனிப்போர் நாடகக் கூத்தில் (1991) குதிரைகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. இவை எனது ஆக்கங்கள். வேறு பலரின் ஆக்கங்களிலும் காத்தான் கூத்துப் பாணியைக் காணலாம். களத்தில் காத்தன் என்ற கூத்து வட ஈழத்தில் மிகவும் பிரபல்யமானது. இன்னும் பல. [இங்கே, ஆண்டுகள், தலை அரங்கேற்றங்களைக் குறிப்பன.]

 

தமிழீழக் காத்தான் கூத்து இசையும் அரங்க மோடியும் தமிழீழ அரங்க அடையாளத்; திறங்கள். புலம் பெயர்ந்த நாடுகளிலும் ஈழத் தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றாகக் கண்டு முன்னெடுக்கப்படுகிறது. பலருக்கு இது தாயக நாட்டம், நினைவு கூரல் (nostalgia) ஆகும். காத்தான் கூத்து புலம் பெயர்ந்த நாடுகளில் மிகவும் பரவலாக ஆடப்படும் கூத்து. இலண்டன், கனடா, பிரன்சு, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில், அங்கு வாழும் ஈழத் தமிழர்களால் ஆடி அரங்கேற்றப்பட்ட காத்தான்கூத்து இறுவெட்டுகளைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. கூத்துகள் தரத்தில் எந்தவகையிலும் குறைந்தவையல்ல. நாட்டில் அன்று நாம் காணாத புதுமை, புலம் பெயர்ந்த நாடுகளில் பெண்களும் காத்தான் கூத்தில் ஆடுறார்கள். இலண்டனில் முத்துமாரி அம்மன் வேடம் தாங்கி ஆடிய அந்தப் பெண்பிள்ளையின் பாணி தப்பாத ஆடலும் பாடலும், நான் கண்ட எந்தக் கூத்தரையும் விஞ்சும் அளவுக்கு மிளிர்ந்தது. அந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய எமது புகழ்பூத்த நாடகர் தாசீசியஸ் அவர்கள் தலைமை உரையில் அந்தப் பெண் கூத்தரை மிகவும் விதந்து பேசியதைக் காணக்கூடியதாக இருந்தது. அவ்வாறு, காத்தான் கூத்து புலம்பெயர்ந்த நாடுகளில் கொடிகட்டிப் பறக்கிறது.

 

(காத்தான் கூத்தின் இறுவெட்டில் இருந்து ஒருசில காட்சிகளை மாதிரிக்குப் பார்ப்போம் …)

 

ஆனால், காத்தவராயன் கதையை இன்றும் அப்படியே ஆடுவது பற்றி எம்மவர் மத்தியில் வேறுபட்ட கருத்துகளும் உள்ளன. சாமிக் கதை என்பதையும் தவிர, அந்தக் கதையும், அதில் கூறப்படும் சங்கதிகளும் இன்றைய காலத்திய சிந்தனா வளர்ச்சிக்குத் தற்கரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் பொருந்துமா என்ற கேள்விகள் எழுகின்றன. காத்தவராயன் கதையே ஒரு வரலாற்றுத் திரிபு என்ற ஆய்வுகளும் உள்ளன. ஆகவே அந்தக் கூத்தை ஆடவோ ஆல்லது ஆட்டுவிக்கவோ மறுப்பவர்களில் நானும் ஒருவன்.

 

ஆனால் காத்தான் கூத்துப் பாணி எமது அரங்கத் திறம். காத்தான் கூத்துப் பாணியில், சுதந்திரம், சமத்துவம், சமாதான சகவாழ்வு ஆகியவற்றைக் கருத்தாகக்கொண்ட பாடல்கள் காலத்தின் தேவை கருதி இன்று ஒலிக்க வேண்டும். ‘காலவகையினானே’ கருக்கொள்ளும் போதே கூத்தும் இசையும் முழுமை பெறும். அந்த வகையிலேயே காத்தான் கூத்துக்கு மாற்றாக ‘காத்தவன் கூத்து’ அரங்காக்கம் செய்யப்பட்டுள்ளது. 7.6.2003 சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு, ‘காத்தவன் கூத்து’ சிட்னி லிட்கம் யுக்கிறேனியன் மண்டபத்திலே முதல் அரங்கேற்றம்.

 

காத்தவன் கூத்து தமிழீழக் காத்தான் கதையைத் தழுவியது, ஆனால் நோக்கு வேறு. கதாபாத்திரங்களும் அவ்வாறே, ஆனால் குணம் வேறு.

 

காத்தவன் கூத்துப் பாடல்கள்: காத்தான் கூத்து, திருக்குறள், சிலப்பதிகாரம், பாரதியார் கவிதைகள், இன்னும் சிலவற்றிலிருந்தும், நேரடியாகவும் மாற்றங்களுடனும் எடுத்தாளப்பட்டவை.

 

காத்தவன் கூத்துப் பாடல்கள் தமிழீழக் காத்தான் கூத்து இசைக்கு அமைவன, அரங்க மோடியும் அவ்வாறே, திரை நோக்கும் சேர்க்கப்பட்டுள்ளது, கழுமரம் மேடைப் பொருளாக அல்லாமல் தமிழகத் ‘தெருக் கூத்து’ அருச்சுனன் தவசு மரம்போல ஆடுகளமாகிறது.

முழுமையாகப் பார்த்தால் ‘காத்தவன் கூத்து’ இன்றையது.

காத்தவன் கூத்து நூல் மிகவிரைவில் வெளிவரவுள்ளது.

 

(காத்தவன் கூத்தின் இறுவெட்டில் இருந்து ஒரு காட்சியை மாதிரிக்குப் பார்ப்போம் …)

 

[fvplayer src=”http://www.annaviyar.com/wp-content/uploads/2018/10/Kaathavan.mp4″ splash=”http://www.annaviyar.com/wp-content/uploads/2018/10/Kaathavan.jpg” controlbar=”yes” speed=”buttons” playlist_advance=”true” splashend=”show” caption=”காத்தவன் கூத்து” splash_text=”காத்தவன் பள்ளிக்கூடம் செல்லல்”]

 

 

 

[குறிப்பு: இக் கட்டுரை பற்றிய உங்கள் எண்ணங்களை ‘தொடர்பாடல்’ ஊடாக தெரியப்படுத்தவும், நன்றி.]