1. அறிமுகம்
இக்கதையின் பேசுபொருள் ‘பிரிவுத் துயர்’. காதலில் பிரிவுத் துயர் ஒரு நிலை. இவ்வாறான ஒரு காதல் நிலைக்கு இலக்கண இலக்கியங்களில் இருந்து சிலவற்றை எடுத்துக் காட்டலாம்.
இதனை வடமொழியில் ‘விப்ரலம்ப’ என்பர்.
vipralambha: (love in separation) involves the condition of sticking to hopeful expectation (of reunion ) out of yearning and anxiety (The Natya Sastra.2006 p77)
‘பிரிவினும் சுடுமோ பெரும் காடு’ (கம்பராமாயணம் அயோத்தியா காண்டம் 4: 221)
அஞ்செஞ் சீறடி யணிசிலம் பொழிய
மென்றுகி லல்குன் மேகலை நீங்கக்
கொங்கை முன்றிற் குங்கும் மெழுதாள்
மங்கல வணியிற் பிறிதணி மகிழாள்
கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள்
திங்கள் வாண்முகஞ் சிறுவியர்ப் பிரியச்
செங்கய னெடுங்க ணஞ்சன மறப்பப்
பவள வாணுத றிலக மிழப்பத்
தவள வாணகை கோவல னிழப்ப
மையிருங் கூந்த னெய்யணி மறப்பக்
கையறு நெஞ்சத்துக் கண்ணகி (சிலப்பதிகாரம் 4: 47-57)
இத்தகைய பிரிவுத்துயர் சித்திரங்களைச் சங்க இலக்கியங்களில் பரக்கக் காணலாம். இங்கு எடுத்தாளப்படும் கதை இவற்றில் ஒன்று. இக் கதைக்குச் சான்றாகச் சங்கப் பாடல்களில் கிடைப்பன சில செய்திகள் மட்டுமே.
பேகனைக் குறித்த பாடல் அடிகள்:
சிறுபாணாற்றுப்படை … நந்தத்தனார் …………………………… 84-87
அகநானூறு ……………………… பரணர் …………………………………….. 202: 13-17
புறநானூறு ……………………… பரணர் ……………………………………… 141: 1-14
புறநானூறு ……………………… பரணர் ……………………………………… 142: 1-6
புறநானூறு ……………………… கபிலர் ……………………………………… 143: 1-15
புறநானூறு ……………………… பரணர் ……………………………………… 144: 1-14
புறநானூறு ……………………… பரணர் ……………………………………… 145: 1-10
புறநானூறு ……………………… அரிசில்கிளார் ……………………… 146: 1-12
புறநானூறு ……………………… பெருங்குன்றூர் கிழார் …….. 147: 1-9
புறநானூறு ……………………… பெருஞ்சித்திரனார் ……………. 158: 10-12
இதே ஒழுங்கில் பின் இணைப்பாக உள்ள பாடல் அடிகளும் விளக்க உரைகளும் விரிவஞ்சித் தவிர்க்கப்பட்டுள்ளன.
சங்கப் பாடல்களில் கிடைத்த செய்திகளைத் தொகுத்துப் ‘பெருங்கல் நாடன் பேகன் கதை’ கட்டப்படுகிறது. பேகன் ‘அவளை’ விட்டுப் பிரிந்து போகிறான். இதுவே கதையின் பின்புலம்.
இவற்றில் கூறப்படும் செய்திகள் பல ‘புறம்’ இலக்கணத்துள் அமைந்தாலும், அகக் காதல் வலியுறுத்திக் கூறப்படுகிறது.
மேலும், இலக்கண விளக்கங்கள் ஊடாக இக்கதை நிகழ்வுகளுக்கு நியாயங்கள் தேடப்படுகின்றன.
இது ஒரு நாடகத்திற்கான முன்னோடித் தேடல். இறந்தகாலப் பழங் கதையாக அல்லாமல், அரங்காக்கத்தை வேண்டிநிற்கும் நிகழ்வுகளாகக் காணலாம்.
2 பிரிவுக்கான காரணம்
பிரிவுக்கான காரணங்களை தொல்காப்பியம், கற்பியலில் கூறும்:
பரத்தையிற் … (பா 46)
வேண்டிய கல்வி … (பா 47)
வேந்துறு தொழிலே … (பா 48)
ஏனைய பிரிவும் … (பா 49)
அகப்பொருள் விளக்கம், கற்பியலில் அவற்றை விரித்துக் கூறும்:
இல்வாழ்க் கையே பரத்தையிற் பிரிவே
ஓதற் பிரிவே காவற் பிரிவே
தூதிற் பிரிவே துணைவயிற் பிரிவே
பொருள்வயிற் பிரிவெனப் பொருந்திய ஏழும்
வளமலி கற்பின் கிளவித் தொகையே (பா 201)
கற்பியலின் சொல்லாடலில் முதலில் இல்வாழ்க்கையைக் கூறித் தொடர்ந்து பிரிவுக்கான ஆறு காரணங்கள் கூறப்படுகின்றன.
ஊர்விட்டுக் காடு மேடு எனச் சுற்றுலாப் போவதையும், துறவறம் பூணுவதையும், பிரிவுக்கு மேலும் காரணங்களாகக் கொள்ளலாம்.
சுற்றுலாப்பற்றி:
யாறுங் குளனுங் காவும் ஆடிப்
பதிஇகந்து நுகர்தலும் உரிய என்ப (தொல்காப்பியம் கற்பியல் – பா 50)
பதி இகந்து நுகர்தலாவது – தமக்குரிய ஊரினைக் கடந்து நாட்டிற் பல்வேறிடங்களிலும் சென்று இயற்கைச் சூழலில் திளைத்து இன்புறுதல் (தொல்காப்பியம் கற்பியல் 1983 ப.215).
பேகனின் பிரிவுக்கான காரணம் இவற்றில் எது?
பொருள்வயிற் பிரியவேண்டிய தேவை அவனுக்கில்லை.
கல்வியில் பிரியவேண்டிய காலம் இதுவல்ல.
போரும் நிகழவில்லை வேந்துறு தொழிலும் அவனுக்கில்லை.
துறவில் பிரிவுக்கு அகவை இன்னும் முதிரவில்லை.
பரத்தையில் பிரிவு என்பதற்கும் பாடல்களில் சான்றுகள் இல்லை.
ஆகவே எஞ்சி இருப்பது ‘பதி இகந்து நுகர்தல்’ ஒன்றுதான். இதற்கான தரவுகளைத் தேடிப் பார்க்கலாம்.
3. பதி இகந்து நுகர்தல்
மலை வர்ணனையும் பேகன் மகிழ்வும்:
பூமலிந்து
அருவி ஆர்க்கும்
அயம்திகழ் சிலம்பின்
நுண்பல் துவலை
புதல்மிசை நனைக்கும்
வண்டுபடு நறவின்
வண்மகிழ்ப் பேகன்
கொண்டல் மாமலை நாறி (அகநானூறு – 262: 13-17)
மேலும் மலை வர்ணனை:
ஈர்ந்தண் சிலம்பின்
இருள்தூங்கு நளிமுழை
இருந்திறல் கடவுள் காக்கும்
உயர்சிமைப்
பெருங்கல் நாடன்
பேகனும் (புறநானூறு – 158: 10-12)
இவ்வாறான,
வானம் வாய்ந்த
வளமலைக் கவாஅன்
கான மஞ்சைக்குக்
கலிங்கம் நல்கிய (பத்துப்பாட்டு, சிறுபாணாற்றுப்படை 84-85)
மழை தப்பாத செழிப்பு மிக்க மலைச் சரிவில், காட்டு மயிலுக்குப் போர்வை கொடுக்கிறான்:
என்றும்
உடாஅ போரா
ஆகுதல் அறிந்தும்
படாஅம் மஞ்ஞைக்கு
ஈத்த எம்கோ (புறநானூறு 141: 8-10)
மயில் உடுப்பதும் இல்லை, போர்ப்பதும் இல்லை என அறிந்தும், மயிலுக்குப் போர்வை கொடுக்கிறான்.
மடத்தகை மாமயில்
பனிக்குமென்று
அருளிப்
படாஅம் ஈத்த
கெடாஅ நல்லிசைக்
கடாஅ யானைக்
கலிமான் பெக (புறநானூறு – 145: 103)
மென்மையான இயல்புடைய மயில் குளிரில் நடுங்கும் என்று போர்வை கொடுக்கிறான்.
அறுகுளத்து உகுத்தும்
அகல்வயல் பொழிந்தும்
உறும்இடத்து உதவாது
உவர்நிலம் ஊட்டியும்
வரையா மரபின்
மாரிபோலக்
கடாஅ யானைக்
கழற்கால் பேகன்
கொடைமடம் படுதல்
அல்லது
படைமடம் படான்
பிறர் படைமயக் குறினே (புறநானூறு – 142: 1-6)
இச்செயல் மடத்தனமானதுதான். மழை புலம் பார்த்துப் பெய்வதில்லை. இது போல இவன் கொடையும் மடம்பாற் படுகிறது. ஆனால் இவன் போர்அறம் மடம் படாது. ஆகவே மடம் என்ன என்பது இவன் அறிந்ததே.
இவன் மடம் என அறிந்தும் கொடுக்கிறான், ஏன் என்றால்:
எத்துணை ஆயினும்
ஈத்தல் நன்றுஎன
மறுமை நோக்கின்றோ
அன்றே
பிறர் வறுமை நோக்கின்று
அவன் கைவண் மையே (புறநானூறு – 141: 12-14)
இவ்வாறாக இவன் கைவண்மையைப் பலரும் பாடுகிறார்கள். இவையே கடை ஏழு வள்ளல்களில் ஒருவனாக பேகனை நிலைநிறுத்துகின்றன. இவற்றில், கான மஞ்சைக்குக் கலிங்கம் நல்கும் கதையே பெரிதும் விதந்து பேசப்படுகிறது. இதுவே இவனது தனித்துவம். இவற்றை மேலோட்டமாகப் பார்த்தபின், இன்னும் பல கேள்விகள் எழுகின்றன. இந்த மயில் கதைக்குள் இன்னும் ஒரு கதை இருக்குமோ! என எண்ணத் தோன்றுகிறது.
பேகன், காடு மலை எனச் சுற்றித் திரிவதை மயிலுடன் தொடர்பு படுத்தியே, காணக் கூடியதாக உள்ளது. யாறுங் குளனுங் காவும் ஆடித் திரிவதே இவன் பிரிவுக்குக் காரணம் என்று கூறக்கூடியதாகவும் உள்ளது. அவ்வாறு பதிஇகந்து நுகர்ந்து ஆடித் திரிந்தாலும் இவன் மனநிலை எவ்வாறு இருக்கிறது?
4 பேகனும் பாணர் கடனும்
தலைவியைப் பிரிந்து தலைவன் ஊர்விட்டுத் தூரம் சென்று உறைவானாகில், அந்தப் பிரிவுபற்றித் தலைவனைக் கண்டு பேசும் உரிமை உள்ளவர்கள் யாவர்? அதற்கும் இலக்கண வரையறை உண்டு:
நிலம் பெயர்ந் துரைத்தல் அவணிலை உரைத்தல்
கூத்தர்க்கும் பாணர்க்கும் யாத்தவை உரிய
(தொல்காப்பியம் கற்பியல் – பா 28)
நிலம் பெயர்ந்துரைத்தல் என்பது – தலைவன் பிரிந்தவிடத்தில் சென்று கூறுதல்; அவள்நிலை யுரைத்தல் என்பது – தலைவி நின்ற நிலையைத் தலைவற்குக் கூறுதல் (தொல்காப்பியம் கற்பியல் 1983 ப.170).
இங்கு சீறியாழ்ப்பாணர்களே பேகனைக் காண வருகிறார்கள், பேகனைக் காணப் பாணர்கள் ‘நிலம் பெயர்ந்து’ வருகிறார்கள்.
தலைவியின் நிலையை, ‘அவணிலை’ பேகனுக்கு உரைக்கிறார்கள். பலவாறாக உரைக்கிறார்கள்:
நிலம் பெயர்ந்துரைத்தல்
பாணர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பதே முதல் கேள்வி.
இருள்வரச்
சீறியாழ் செவ்வழி பண்ணி
யாழநின்
கார்எதிர்
கானம் பாடினேம் ஆக (புறநானூறு – 144: 1-3)
நெருநல்
சுரன் உழந்து வருந்திய
ஒக்கல் பசித்தெனக்
குணில்பாய் முரசின்
இரங்கும் அருவி
நளியிரும் சிலம்பில்
சீறூர் ஆங்கண்
வாயில் தோன்றி
வாழ்த்தி நின்று
நின்னும்நின் மலையும் பாட (புறநானூறு – 143: 7-12)
கன்மழை அருவிப்
பன்மலை நீந்திச்
சீறியாழ் செவ்வழி பண்ணி
வந்ததைக்
கார்வான்இன் உறை
தமியள் கேளா
நெருநல் ஒருசிறைப்
புலம்பு கொண்டு உறையும்
அரிமதர் மழைக்கண்
அம்மா அரிவை (புறநானூறு – 147: 1-5)
இவற்றால் பெறப்படுவது: பாணர்கள் முதலில் பேகனைக் காண ஊர் நோக்கிச் செல்கிறார்கள்; வாயிலில் நின்று யாழ் இசைக்கிறார்கள்; இவர்கள் இசையைக் கேளாது புலம்பும் ‘அவளைக்’ காண்கிறார்கள்; பின்பு பேகனைத் தேடி வருகிறார்கள், தாம் கண்டதைப் பேகனிடம் கூறுகிறார்கள்.
மேலும் ‘அவள்’ நிலை உரைத்தல்
யார்கொல் அளியள் தானே …
இன்னாது
இகுத்த கண்ணீர்
நிறுத்தல் செல்லாள்
முலையகம் நனைப்ப
விம்மிக்
குழல் இனைவது போல்
அழுதனள் பெரிதே (புறநானூறு – 143: 1, 12-15))
நல்கா மையின்
நைவரச் சாஅய்
அருந்துயர் உழக்கும்
நின் திருந்திழை அரிவை (புறநானூறு – 146: 6-7)
‘அவள்’ புலம்புவது மட்டும் அல்ல ஊரும் புலம்புகிறது.
ஊர் அலரெடுத்து அரற்றுவது
ஒரு பெண் அழுகிறாள்.
நீல்நறு நெய்தலில் பொலிந்த உண்கண்
கலுழ்ந்துவார் அரிப்பணி பூணகம் நனைப்ப
இனைதல் ஆனாள் ஆக
எங்களவனுக்கு உறவோ என்று கேட்கிறார்கள்.
இளையோய்
கிளையைமன் எம்கேள் வெய்யோற்கு என
யாம் தற்றொழுதனம் வினவக்
யாம் உறவல்ல என்கிறாள்,
காந்தள்
முகைபுரை விரலில் கண்ணீர் துடையா
யாம் அவன் கிளைஞரேம் அல்லேம் கேள் இனி
எம் போல் ஒருத்தியை விரும்பி என்றும் தேரில் வரும் பேகன் என்கிறாள்.
எம்போல் ஒருத்தி நலன்நயந்து என்றும்
வரூஉம் என்ப வயங்குபுகழ்ப் பேகன்
ஒல்லென ஒலிக்கும் தேரொடு
முல்லை வேலி நல்லூ ரானே (புறநானூறு – 144: 4-14)
பேகன் இப்போ வருவதில்லை என்பதே ஊரவர் பழிச் சொல்.
பலவாறாக ‘அவள்’ நிலையை ஊரைத்ததுடன் நிற்காமல், பாணர்கள்; வேண்டுதலும் வைக்கிறார்கள். பேகன் ‘அவளிடம்’ செல்வதே தாம் பெறும் உயர்ந்த பரிசில் என்றும் வலியுறுத்துகிறார்கள்.
அருளாய் ஆகலோ கொடிதே (புறநானூறு – 142: 1)
பசித்தும் வாரேம்
பாரமும் இலமே
களங்கனி யன்ன
கருங்கோட்டுச் சீறியாழ்
நயம்புரிந் துறையுநர்
நடுங்கப் பண்ணி
அறஞ்செய்து ஈமோ
அருள்வெய் யோய்என
இஃதியாம் இரந்த பரிசில்
அஃது இருளின்
இனமணி நெடுந்தேர் ஏறி
இன்னாது உறைவி
அரும்படர் களைமே (புறநானூறு – 142: 4-10)
நெய்யொடு துறந்த
மை இருங் கூந்தல்
மண்உறு மணியில்
மாசற மண்ணிப்
புதுமலர் கஞல
இன்று பெயரின்
அதுமன் எம்பரிசில்
ஆவியர் கோவே (புறநானூறு – 147: 6-9)
இவ்வாறான பாடல்கள் சங்க இலக்கிய மரபில் ஏற்றுக்கொள்ளப்படுபவை. மற்றவர் அகவாழ்வில் இவர்கள் யார் தலையிடுவதற்கு என்ற கேள்வி எழுவதில்லை. இவற்றைப் பேகனும் விரும்புகிறான் என்பது கண்கூடு. பரிசில் வேண்டி வரவில்லை என்று பாடுபவர்கள் கூறினாலும், இவர்கள் இரவலர்கள், புரவலன் பேகனும் அள்ளி அள்ளிக் கொடுக்கிறான் என்று கொள்ளலாம்.
பாணர்கள் பாடலை பேகன் விரும்பாதிருந்தால், அவர்கள் பாடுவதை அனுமதித்திருப்பானா? அவர்களும் பாடத் துணிந்திருப்பார்களா? பாடத் துணிந்தவர்கள் அறம் பாடியிருப்பார்கள்! அனால் பாணர்கள் பலரும் ‘அவணிலை’ பாடுகிறார்கள்.
5 பேகனும் மயிலும் ‘அவளும்’
பேகன் பற்றிய பாடல்களில் பிரிக்கமுடியாத அளவிற்கு இணைத்துப் பெரிதும் பேசப்படுவன:
இவன் கொடை
‘அவள்’ பிரிவுத்துயர்
அவற்றில் சிறப்பாகப் பேகனை அடையாளப்படுத்துவது, இவன் கானமயிலுக்குக் கலிங்கம் நல்குவது. இதற்கான காரணங்களை சங்கப் புலவர்கள் முதல் தற்கால இலக்கிய ஆய்வாளர்கள், அரசியல்வாதிகள் வரை பலவாறு விளக்குகிறார்கள்:
மயில் குளிரில் நடுங்கும் என்று போர்வை கொடுக்கிறான்.
இது மடத்தனமானது எனத் தெரிந்தும் கொடுக்கிறான்.
இவன் உயிர்நேயவாதி ஆகவே கொடுக்கிறான்.
பாணர் கூற்றாகப் புலவர்கள் பேகன் கொடையை விபரிக்கிறார்கள். இவர்கள் கண்டதைக் கேட்டதைக் கூறுகிறார்கள் எனக் கொள்ளலாம். இதை, அதீத கற்பனை என மறுக்கவேண்டிய அவசியமும் இல்லை. எங்கள் ‘கோந்துரு’ உயிர்நேயவாதி எனப் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். புலம் பார்க்காது பொழியும் மழை போலத் தரம் பார்க்காது கொடுப்பவன் என்றாலும், மயிலுக்குப் போர்வையா! மடமைதானே. ஆனாலும், மயிலுக்குப் போர்வை கொடுக்கிறான்.
உயிர் நேயவாதி என்றால், ஒரு மயிலுக்கு மட்டும்தான் போர்வையா? ஏனையவை இவன் கண்ணில் படவில்லையா? சற்று நெருடலாக இருக்கிறதே.
குளிரை உணர்கிறான், மயிலைக் காண்கிறான், அதற்கு அப்பால் இவன் அறிவுக் கண்ணை மறைப்பது என்ன? ஒரு மயிலுக்குப் போர்வை கொடுக்கிறானே! காதலுக்குக் கண் இல்லை என்பார்கள், இதுவா அது! இதுவென்றால், இவன் மனக்கண், மயிலில் யாரைக் காண்கிறது?
இந்த மயில் கதைக்குள் இன்னும் ஒரு கதை இருக்குமோ, என்ற கேள்வி ஏலவே எழுந்தது. இதற்கு விடை காண, ஒரு பாடலை நோக்கலாம்.
அன்ன வா
நின் அருங்கல வெறுக்கை
அவைபெறல் வேண்டேம்
அடுபோர்ப் பேக
சீறியாழ் செவ்வழி பண்ணி
நின் வன்புல நன்னாடு பாட
என்னை நயந்து
பரிசில் நல்குவை ஆயின்
குரிசில் நீ
நல்கா மையின்
நைவரச் சாஅய்
அருந்துயர் உழக்கும்
நின் திருந்திழை அரிவை
கலிமயில் கலாவம்
கால்குவித் தன்ன
ஒலிமென் கூந்தல்
கமழ்புகை கொளீஇத்
தண்கமழ் கோதை புனைய
வண்பரி நெடுந்தேர் பூண்க
நின் மாவே (புறநானூறு – 146: 1-12)
கதைக்குள் கதையாகப் புதைந்து கிடப்பது, ‘கலிமயில் கலாவம் கால்குவித் தன்ன ஒலிமென் கூந்தல்’. மயிலின் கலாவம் காலோடு குவிந்து கிடக்கிறது. இப்பொழுது மயில் தோகை விரித்து ஆடவில்லை இவ்வாறான மயில் தோகை ‘அவளுடைய’ கூந்தலுக்கு ஒப்பாகக் கூறப்படுகிறது.
வேறு ஒரு இடத்திலும் மயில் தோகை கூந்தலுடன் பேசப்படுகிறது:
ஐதுவீழ் இகுபெயல் அழகுகொண்டு அருளி
நெய்கனிந்து இருளிய கதுப்பின் கதுப்புஎன
மணிவயின் கலாபம் பரப்பிய பலவுடன்
மயில்மயிற் குளிக்கம் சாயல் … (சிறுபாணாற்றுப்படை: 13-16)
மென்மையாகத் தாழ்ந்து சொரிகின்ற மழைமேகத்தின் அழகை உடையதாகிய; நெய் பூசப்பெற்றுக் கறுத்த கூந்தலுள் கூந்தல், அழகுடைய தோகை விரித்த, பல ஒரே இன மயில் மயிலில் மறையும் அழகு …
கூந்தல், மயிலின் விரிந்த தோகைக்கு உவமையாகிறது; அத்தகைய தோகையுடைய பல மயில்கள் ஒன்றில் ஒன்று மறைவது விறலியர் சாயலுக்கு உவமையாகிறது.
பேகன் போர்வை கொடுப்பது தோகை குவித்த மயிலுக்கா, அல்லது தோகை விரித்த மயிலுக்கா, என்பது கேள்வி.
தோகை விரித்த மயிலுக்கென்றால்; ஆடும் விறலியர்க்குப் பொன்னும் பொருளும் பட்டும் கொடுப்பது அரசர்களுக்கு வழமையானது. ஆகவே ஆடும் மயிலுக்குப் போர்வை கொடுப்பதையும், இத்தகைய ஒரு கொடை எனக் கொள்ளலாம்.
இவ்வாறாயின், ஆடும் மயிலில் விறலியைக் கண்டிருக்கவேண்டும். அவன் மனம் விறலியைக் கொண்டிருக்கவேண்டும். ‘அவன்’ பிரிவும் விறலியின் காரணமாக நிகழ்ந்திருக்கவேண்டும். இது பரத்தையிற் பிரிவாகும். பாடல்கள் இவ்வாறு கூறாவிட்டாலும் காரண காரியங்களை ஆய்ந்து இவ்வாறான ஒரு முடிவுக்கு வரலாம்.
ஆனால், இன்னும் ஒரு மயில் உள்ளதே, இது தோகை குவித்த மயில். இவற்றில் எந்த மயிலுக்குப் போர்வை கொடுக்கிறான், என்ற சிக்கலைத் தீர்ப்பதற்குப் ‘பனிக்கும்’ என்ற ஓரு சொல்லில் விளக்கத்தைத் தேடலாம்.
மடத்தகை மாமயில் பனிக்குமென்று அருளிப்
‘பனிக்கும்’ – பனித்தல் என்றால் குளிரால் நடுங்குதல் (Tamil Lexicon).
‘பனிக்கும் மயில்’ என்றிருந்தால் நடுங்குகின்ற மயில் என, நிகழ் காலத்தில் வைத்துப் பொருள்கொள்ளலாம். மயில் தோகை விரித்து ஆடும்போது இறகுகள் நடுங்குவது போல இருக்கும். இது ஆடுகின்ற மயில்.
ஆனால், இங்கு ‘மயில் பனிக்கும்’ என்றுள்ளது. மயில் குளிரால் நடுங்கும் என்று, பேகன் எதிர் காலத்தில் வைத்துச் சிந்திக்கிறான். ஆகவே, மயில் இப்பொழுது நடுங்கவில்லை. மயில் இப்பொழுது தோகை விரித்து ஆடவில்லை. இது ‘கலாவம் கால் குவித்த’ மயில். இந்த மயிலுக்கே பேகன் போர்வை கொடுக்கிறான் எனக் கொள்ளலாம்.
கலிமயில் கலாவம் கால்குவித் தன்ன ஒலிமென் கூந்தல்
கலாவம் கால்குவித்த மயிலில் பேகன் யாரைக் காண்கிறான்! அவன் கண்ணை மறைத்தது யாருடைய தோற்றம்? யார் என எண்ணி, பேகன் போர்வை கொடுக்கிறான்?
6 நிறைவாக
மங்களம்! மங்களமே!!
கலிமயில் கலாவம்
கால்குவித் தன்ன
ஒலிமென் கூந்தல்
கமழ்புகை கொளீஇத்
தண்கமழ் கோதை புனைய
வண்பரி நெடுந்தேர் பூண்க
நின் மாவே
பாரி கதையை ‘அற்றைத் திங்கள்’ என நாடகமாக்கியது போல, பேகன் கதையையும் நாடகமாக்க விழைந்ததன் பயனே இத்தேடல். பாரியில் வீரத்தையும் முடிவில் போரின் அவலத்தையும் காண்கிறேன். பேகனில் பிரிவுத் துயரையும் நிறைவில் மன ஆழத்தையும் காண்கிறேன். பேகனின் கதை ஒரு காதல் கதை, மயிலை நடு நிறுத்தி விரியும் ‘இது ஒரு காதல் கதை’.
மயிலின் பின் சென்று பிரிவுக்கான காரணத்தைக் காண்கிறேன்.
போர்வையில் பேகனின் மன ஆழத்தைக் கண்கிறேன்.
———————————————————————————————————————————————————————————————
மூல நூல்கள்
அகநானூறு – மணிமிடைப் பவளம்
2004 உரையாசிரியர்கள்: கவிஞர் நா. மீனவன், முனைவர் சுப. அண்ணாமலை, கேவிலூர் மடாலயம், கோவிலூர்.
அகப்பொருள் விளக்கம் – நாற்கவிராச நம்பி
2004 திருநெல்வேலி. தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை (முதற் பதிப்பு 1948).
கம்பராமாயணம் அயோத்தியா காண்டம்
1958 எஸ். ராஜம், சென்னை.
சிலப்பதிகாரம் – இளங்கோவடிகளருளிச்செய்த
1950 ஐந்தாம் பதிப்பு: எஸ்.கலியாணசுந்தரையர், சென்னை (மூன்றபம் பதிப்பு: 1927)
தொல்காப்பியம்
1986 புலியூர்க் கேசிகன், பாரிநிலையம், சென்னை (முதல் பதிப்பு: 1961)
தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்
1983 க.வெள்ளைவாரணன், மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.
சிறுபாணாற்றுப்படை, பத்துப்பாட்டு
2003 உரையாசிரியர்: முனைவர் ச.வே.சுப்பிரமணியன், கேவிலூர் மடாலயம், கோவிலூர்.
புறநானூறு
2003 உரையாசிரியர்: புலவர் இரா இளங்குமரன், கேவிலூர் மடாலயம், கோவிலூர்.
உசாத்துணை
பாட்டும் தொகையும்
1958 ஆசிரியக் குழவினரால் வெளியிடப்பெற்றது, சென்னை.
Tamil Lexicon
1982 University of Madras. Madras.
[குறிப்பு: இக் கட்டுரை பற்றிய உங்கள் எண்ணங்களை ‘தொடர்பாடல்’ ஊடாக தெரியப்படுத்தவும், நன்றி.]