மதம், மதச்சார்பு, மதமாற்றம்

அறிமுகம்

 

ஆய்வு மாணவனாகப் பயின்ற காலை, ‘paradigm’ என்ற ஆங்கிலச் சொல்லை அறிந்து கொண்டேன். அதன் பொருள்:

 

paradigm – (in philosophy of science) a pattern of thinking, a set of background assumptions taken for granted (Thomas Mautner, 2000).

 

paradigm – a philosophical and theoretical framework of a scientific school or discipline within which theories, laws, and generalizations and the experiments performed in support of them are formulated.

 

broadly:  a philosophical or theoretical framework of any kind

              (Merriam-Webster.com)

 

சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம்-தமிழ் சொற்களஞ்சியம் கூறும் பொருள்:

 

paradigm – இலக்கணத்தில் மேற்கோள் வாய்பாடு; கட்டளைப் படிவ வாய்பாடு (English-Tamil Dictionary).

 

‘paradigm’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அகராதிகளில் பொருள் விளக்கம் உள்ளது. ஆனாலும், இங்கு வேண்டப்படுவது அந்த ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான, இலக்கண வரையறைக்கு உட்பட்ட ஒரு தமிழ்ச் சொல். இந்த ஆய்வு, அவ்வாறான ஒரு தமிழ்ச் சொற் தேடல்; அதன் ஊடு எடுத்துக்காட்டாக ஆதாரங்களுடன் சில விளக்கங்களும்.

 

1. மதம் Paradigm

 

நூல்களில் தேடிப் பார்க்கும் போது, நன்னூல் கூறும்:

 

எழுவகை மதமே யுடன்படன் மறுத்தல்

பிறர்தம் மதமேற் கொண்டு களைவெ

தாஅ னாட்டித் தனாது நிறுப்பே

இருவர் மாறுகோ ளொருதலை துணிவே

பிறர்நூற் குற்றங் காட்ட லேனைப்

பிறிதொடு படாஅன் றன்மதங் கொளலெ (நூற்பா 11)

 

இந்நூற்பாவுக்கு ‘மதம் ஏழு’ எனத் தலைப்பிட்டு, சிவஞான முனிவர் விருத்தியுரையில்:

 

எனின், ‘எழுமதம்’ (நூற்பா.4) என்றதனை வகுத்து உணர்த்துதல் நுதலிற்று (அ. தாமோதரன் 1999, 124)

 

இங்கு எழும் கேள்வி மதம் ஏழா, அல்லது மதத்தைத் தழுவிக் கையாளும் முறைகள் ஏழா என்பதே. ‘எழுவகை மதம்’ எனச் சேர்த்துப் பார்க்காது, ‘எழுவகை’ என்பதை மதத்திலிருந்து பிரித்துப் பார்த்தால், மதத்தைத் தழுவிக் கையாளும் முறைகள் ஏழு எனக் காணலாம்.

 

‘எழுமதந் தழுவி’ (நூற்பா 4: 3), என்பதனை, ஏழு – மதம் தழுவி எனப் பிரித்துப் பொருள்காண வேண்டும்.

 

எழுவகை:

(1) மதமே உடன்படல்

(2) மறுத்தல்

(3) பிறர்தம் மதம் மேற்கொண்டு களைவெ

(4) தாஅன் நாட்டித் தனாது நிறுப்பே

(5) இருவர் மாறுகோள் ஒருதலை துணிவே

(6) பிறர்நூல் குற்றம் காட்டல்

(7) ஏனைப் பிறிதொடு படாஅன் தன் மதம் கொளலெ (நூற்பா 11)

 

இவ் ஏழும் மதத்தைத் தழுவிக் கையாளும் முறைகள் என்றானால், மதம் என்ற சொல்லிற்கான விளக்கம் என்ன?

 

விருத்தி உரையில் வேறு ஓர் இடத்தில் ‘மதம்’ விளக்கப்படுகிறது:

 

கொள்கை வகையான் மதமென்றும் (தாமோதரன் 1999, 126).

 

வித்துவான் ச. தண்டபாணி தேசிகர் விளக்கக் குறிப்பில் கூறுவார்:

 

மதம் – கொள்கை (தண்டபாணிதேசிகர் 2003, 54)

 

ஆகவே, ‘மதம்’ என்றால் ‘paradigm’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் பெற்ற விளக்கங்களைக் கொண்டும், கொள்கைச் சட்டகம் (theoretical framework) எனப் பொருள் கொள்ளலாம்.

 

‘paradigm’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான ‘மதம்’ என்ற ஒரு சொல் தமிழ் இலக்கணத்தில் உள்ளது.

 

மதம் தழுவிய ஏலவே கூறிய ‘மதமே உடன்படல்’ முதல், ‘தன் மதம் கொளலே’ வரை, ஏழும் மதம் சார்ந்த நடைமுறைகளே.

 

2. மதச்சார்பு – Paradigmatic

 

மதம் (paradigm) சார்ந்தே பொருள் விளக்கம் பெறும். அதற்குத் திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற நூல்களுக்குக் காணப்பட்ட விளக்க உரைகளும் விதிவிலக்கல்ல. அகராதிகளும் பெரும்பாலும் அவற்றைப் பின்பற்றுபவையே. அவை விரிக்கில் பெருகும். விரிவஞ்சி, மாதிரி எடுத்துக்காட்டாக (sample) ஒரு நன்னூல் நூற்பாவும், உரைகளும்:

 

… … …

வினையி னீங்கி விளங்கிய வறிவின்

முனைவன் கண்டது முதநூ லாகும் (நூற்பா 6)

 

இதற்கான உரைகள் சிலவற்றைப் பார்க்கலாம்.

 

சிவஞான முனிவர் விருத்தியுரை:

 

இதன் பொருள்: வினையின் நீக்கி விளக்கப்படும் அறிவினை உடைய உயிர்கட்கு வினையின் நீங்கி விளங்கிய அறிவினை உடைய முதல்வன் ஆதிக்கண்ணே செய்தது யாது, அது முதல்நூல் ஆம் என்றவாறு. (அ. தாமோதரன் 1999, 122)

 

கூழங்கைத் தமிபிரான் உரை:

 

இதன் பொருள்,

வினையின் நீங்கி        – அனாதியின் இயல்பாகவே பாசங்களை நீங்கி,

விளங்கிய அறிவின்   – விளக்கமாகிய பேரறிவினை உடைய,

முனைவன் கண்டது – எல்லா உலகிற்கும் முதல்வனாகிய கடவுள் செய்யப்பட்டது,

முதல்நூல் ஆகும்        – முதல்நூலாகும் என்றவாறு. (அ. தாமோதரன் 2010, 5)

 

உரையை ஒட்டி வரும் அகராதிப் பொருள்:

 

முனைவன் – God, as the First Being, கடவுள் (Tamil Lexicon).

 

நன்னூல் பாயிரத்தில் கூறப்படும் நூற்பா-6 தொல்காப்பியம் மரபியலில் இருந்து எடுத்தாளப்பட்டதாகும்.

 

வினையி னீங்கி விளங்கிய வறிவின்

முனைவன் கண்டது முதநூ லாகும் (தொல் நூற்பா 96)

 

இளம்பூரணர் உரை:

 

என் – எனின், நிறுத்தமுறையானே முதனூலாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

 

‘சூத்திரத்தாற் பொருள் விளங்கும்’ (தொல்காப்பியம் 2019, 532), என இளம்பூரணர் நூற்பாவுக்குப் பொருள் கூறாது விடுத்தார்.

 

இவை தற்காலத்தவர் ஊரைகள்:

 

செய்வினைப் பயனை அடையாத, தூய்மையான அறிவினையுடைய முன்னோனால் செய்யப் பெற்றது முதல் நூல்

        (ச.வே சுப்பிரமணியன், தொல்காப்பியம் தெளிவுரை 2006, 611)

 

இருவகை வினைகளின் நின்றும் நீங்கி விளக்கம் பெற்ற அறிவினையுடைய சான்றோன் செய்தது ‘முதல்நூல்’ என்று கூறப்பெறும்

                  (புலியூர்க் கேசிகன் தொல்காப்பியம் தெளிவுரையுடன் 1986, 454)

 

நன்னூல், தொல்காப்பியம் ஆகிய இரு நூல்களிலும் உள்ள இந்நூற்பாவுக்கு பலர் உரை எழுதியுள்ளார்கள். அவ்வுரைகள் யாவற்றையும் படிக்கும் வாய்புக் கிட்டவில்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல், உரைகளின் எண்ணிக்கை கூடினாலும், பெரும்பாலானவற்றில் எண்ணத்தில் மாற்றம் இருக்கும் என்று எண்ணத் தோன்றவில்லை. இரு நூல்களிலும் கூறப்படும் உரைகள் எக்காலத்தவையாயினும், வினைப் பயன் பற்றிய ‘இந்து’ சமயத் தத்துவத்தை (Hindu Religious Philosophy) அடிப்படையாகக் கொண்டவையாகவே உள்ளன. இங்கு வலியுறுத்த விழைவது ‘மதம் சார்ந்தே பொருள் விளக்கம் பெறும்’  என்பதே. இங்கு மதம் என்ற சொல், சமயத்திற்கு (religion) வேறாகக் ‘கொள்கைச் சட்டகம்’ (paradigm ) என்ற பொருளில் கையாளப் படுவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே, ஏலவே கூறப்பட்டுள்ள உரைகள் யாவும் ‘இந்து’ சமய தத்துவத்தை மதமாகக் (Hindu Religious Philosophy as Paradigm) கொண்டவை என்ற முடிவுக்கு வரலாம். சமயக் கொள்கை இங்கு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. மதம் என்ற சொல்லை விளங்கிக் கொள்வதற்கான எடுத்துக்காட்டுகளாக மட்டுமே உரைகள் எடுத்தாளப் படுகின்றன.

 

மேலும், மதம் பற்றி விளங்கிக்கொள்ள இன்னும் ஒரு உரையைக் காணலாம்:

 

நல்வினை தீவினை ஆகியவற்றை வலியுறுத்தும் மூடநம்பிக்கையைப் புறந்தள்ளிய துலக்கமான அறிவினை உடைய முனைப்புடைய முன்னோன் கண்டது முதன்நூலாகும் என்பது இதன் பொருள் (சி.அறிவுறுவோன், காக்கைச் சிறகினிலே, ஜூன் 2018, 59).

 

‘வினை’ என்பதற்கு நல்வினை தீவினை என விரிவுரை கொள்வதை மூடநம்பிக்கை எனப் புறந்தள்ளினாலும், வினைக்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு விளக்கம் பெறவில்லை.

 

3. மதமாற்றம் Paradigm Shift

 

வினைக்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பை விளங்கிக் கொள்ள இங்கு வேண்டப்படுவது ‘மதமாற்றம்’ (Paradigm Shift).

 

Paradigm shift – an important change that happens when the usual way of thinking about or doing something is replaced by a new and different way. (Merriam -Webster.com)

 

அந்த வகையில் ஏலவே கூறிய நூற்பாவுக்கு சொற்பொருள் காணல்:

 

வினையின்               – செயலின், from action

நீங்கி                            – புறம்பாகி, become distinct        

விளங்கிய                 – தெளிவு பெற்ற, to become clear

அறிவின்                    – புத்தியின், knowledge

முனைவன்               – முனைந்து நிற்பவன், one who is deeply engaged

கண்டது                     – உணர்ந்தது, that which reveals

முதன் நூலாகும்    – மூல எழுத்தாக்கம் ஆகும், primary treatise

 

பொழிப்புரை: செயலில் இருந்து பெற்ற தெளிவான அறிவில் முனைந்து நிற்பவன் கண்டது முதல் நூலாகும்.

 

இங்கு கவனத்திற்குள்ளாவது: ‘செயலில் இருந்து பெற்ற தெளிவான அறிவு’. அதாவது, வினை முந்தியது; வினையில் இருந்தே அறிவு தோன்றுகிறது. அதுவும் விடாப்பிடியாக முனைந்து நிற்பவன் இடத்தில்தான் அறிவு தெளிவடைகிறது. அவ்வாறு பெற்ற அறிவின் எழுத்தாக்கமே முதல் நூல் ஆகும்.

 

இந்த உரையும் மதச்சார்புக்கு அப்பாற்பட்டதல்ல, இங்கு நிகழ்ந்தது மதமாற்றம் (Paradigm Shift). ‘வினையின் நீங்கி விளங்கிய அறிவின்’ என்பதற்குக் காணப்படும் உரை மாக்சியத்தை மதமாக் கொண்டது (Marxism as Paradigm). ‘நடைமுறையில் இருந்து கோட்பாட்டுக்கு’ என்ற மாஓவின் சிந்தனையின் பாற்பட்டது (Mao-tse-dong ‘On Practise’).

 

Practice, knowledge, again practice and again knowledge. This form repeats itself in endless cycles, and with each cycle the content of practice and knowledge rises to higher level. Such is the whole of the dialectical – materialist theory of knowledge, and such is the dialectical materialist theory of the unity of knowing and doing.

 

இது, மதமாற்றத்தால் (Paradigm Shift) ஏற்பட்ட தெளிவுரை:

 

‘வினையி னீங்கி விளங்கிய வறிவின் முனைவன்

முனைவன் – விடாப்பிடியாக மீண்டும் மீண்டும் செயற்படுதல்.

வினையி னீங்கி விளங்கிய வறிவு’ – மேலும் விளக்கத்திற்குரியது.

வினையின் நீங்கி – செயலில் மட்டுப்படும் அறிவு வெறும் ‘புலனறிவு’ (perceptual knowledge). புலனறிவில் இருந்து அடுத்த கட்டத்திற்கு அறிவில் பாய்ச்சல் ஏற்படவேண்டும். ‘நீங்கி’ என்ற சொல் இங்கு கவனத்திற்குரியது.

விளங்கிய அறிவு – விளக்கம் பெறும் அறிவு, அதுவே ‘பகுத்தறிவு’ (rational knowledge).

 

உணர்தல் நிலையிலிருந்து (stage of perception) கருத்துருவாக்க நிலைக்கு (stage of conception) வளர்த்தெடுக்கப்படுவதே ‘விளங்கிய அறிவு’. நடைமுறையில் இருந்து கோட்பாட்டுக்கும், கோட்பாட்டில் இருந்து நடைமுறைக்குமான இயங்கியல் விதி, நடைமுறையிலேயே சூழ் கொள்கிறது.

‘… such is the dialectical materialist theory of the unity of knowing and doing.’

 

முடிவுரை

‘paradigm’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரிநிகர் தமிழ்ச் சொல் ‘மதம்’ எனத் தேர்ந்து; பொருள் காண்பதில் ‘மதச் சார்பு’ (Paradigmatic) கண்டு; பொருள் தேடலில் ‘மதமாற்றம்’ (Paradigm Shift) வேண்டி; மாக்சியத்தை மதமாகக் கொண்டு (Marxism as Paradigm); ‘அறிவின் தோற்றுவாய் செயல்’ என்பதும் காணப்பட்டுள்ளது.

 

அறிவு, செயலை அடித்தளமாகக் கொண்டாலும், செயலில் மட்டுப்படாது என்பது மேலும் நுண்ணாய்வுக்கு உட்படுத்த வேண்டிய விரிந்த பாடம் (persual). அது இங்கு மேற்கொள்ளப்படவில்லை. இது ‘மதம்’ (paradigm) என்ற சொல்லின் விளக்கமே அல்லாது, மதங்களுக்கு (paradigms) இடையிலான விவாதம் அல்ல.

 

பழம்பெரும் தமிழ் நூல்களுக்குக் காணப்பட்ட இடைக்கால உரைகள் மீழ்வாசிப்புக்கு உட்படுத்த ‘மதமாற்றம்’ (Paradigm Shift ) வேண்டும் என்பதற்கும் இது ஒரு மாதிரி எடுத்துக்காட்டு (sample).

 

முன்னோர் மொழிபொருளே யன்றி யவர்மொழியும்

பொன்னெபோற் போற்றுவ(ம்) … (நன்னூல் நூற்பா 9)

                                (அ. தாமோதரன் 1999, 123 சிவஞான முனிவர் விருத்தியுரை)                                                                                                                                                                                   

 

ஆதாரம்

 

தொல்காப்பியம்:

 

கேசிகன், புலியூர்க். தொல்காப்பியம் தெளிவுரையுடன் பாரிநிலையம், சென்னை, 1986.

 

சுப்பிரமணியன், ச.வே. தொல்காப்பியம் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2006.

 

தொல்காப்பியம் இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை, 2019.

 

நன்னூல்:

 

தண்டபாணி தேசிகர், ச. நன்னூல் விருத்தியுரை, பாரி நிலையம், சென்னை, 2003.

 

தாமோதரன், அ. நன்னூல் மூலமும் சிவஞான முனிவர் விருத்தியுரையும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1999.

 

தாமோதரன், அ. நன்னூல் மூலமும் கூழங்கைத் தமிபிரான் உரையும், க்ரியா, சென்னை, 2010.

 

அகராதிகள்:

 

English –Tamil Dictionary, University of Madras, 1965.

 

Tamil Lexicon, University of Madras, 1982

 

Mautner, Thomas. The Penguin Dictionary of Philosophy, United States of America, 2000.

 

Merriam -Webster.com

 

கட்டுரைகள்:

 

அறிவுறுவோன், சி. ‘பாடலாசிரியர் வைரமுத்துவின் தொல்காப்பியன்: ஆதி அறிவன் கட்டுரைக்கு எதிர்வினை’, காக்கைச் சிறகினிலே, ஜூன் 2018.

 

Mao-tse-dong ~On Practise’

 

marxists.org/reference/archive/mao/selected-works/volume-1/mswv1=16.htm