சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை

 

இளங்கோவடிகள்

 

பாடிய

 

சிலப்பதிகாரம் அரங்கேற்று காதை

 

ஒரு நாட்டிய நன்னூல்

 

படிப்பு

 

 

முகமாடல்

 

பழம் பெரும் தமிழ் நூல்களின் பதிப்புகளைப் படிக்கும் போது முதலில் எழும் கேள்வி, இவ் பதிப்புகள் ‘தொன்மையைக்’ காக்கின்றனவா, அல்லது ‘சொன்மையைக்’ காக்கின்றனவா என்பதே. தொன்மையைக் காப்பது என்றால், ஒரு நூல் எவ்வாறு ஆசிரியரால் இயற்றப்பட்டதோ அவ்வாறே பதிப்பிக்கப்படுவது. அதில் ‘சீரும், மிடறும்’ சிதையாது, சிதையக் கூடாது. சிதைந்தால் செய்யுளாக அமையாது. குறிப்பாகச் சிலப்பதிகாரம் இசை அமைத்துப் பாடுவதற்கான பாங்கில் இயற்றப்பட்டது, சீர் சிதைந்தால் இசை சிதைந்து போகும்.

 

உயர்ந்தோர் கிளவி வழக்கொடு புணர்தலின்
வழக்குவழிப் படுதல் செய்யுட்குக் கடனே  (தொல். பொருள். 3.213)

 

ஆசிரியர் பெயரைக் குறிப்பிட்டு, இது இவரால் இயற்றப்பட்டது என்றால், அதில் மாற்றம் செய்யும் உரிமை வேறு எவருக்கும் இல்லை. அவ்வாறு செய்தால், அது அத்துமீறல் ஆகும். ஆனால், படிப்பதற்கும் புரிவதற்கும் இலகுவாக்கும் நோக்கில் புணர்ச்சிகளை உடைத்துச் சொற்களைப் பிரித்துப் பல பதிப்பிக்கப்படுகின்றன.

 

பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்
சொல்லினாகும் என்மனார் புலவர்  (தொல். சொல். 2.153)

 

சொற்களுக்குப் பொருள் கூறும் இடத்தில் அவ்வாறு செய்யலாம். இதைச் சொன்மையைக் காப்பதாகக் கொள்ளலாம், மூலத்தில் உள்ளவாறு முதலிலும், பின்பு அதைச் சொற்களாகப் பிரித்தும் பொருள் கூறலாம். இதுவே மூல ஆசிரியருக்குச் செய்யும் நியாயமாகும். உ.வே சாமிநாதையர் அவர்களின் பதிப்பைத் தவிர ஏனையவை பெரும்பாலும் சொற் பிரித்தே பதிப்பிக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களுக்கும் இதுவே கதி. மூலத்தில் உள்ளவாறு படிக்க விழைபவர்களுக்கு, இது நியாயம் செய்வதாகாது.

 

அடுத்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது, உரைகள் ஆய்வுகளின்பாற் படாது என்பதே. உரைகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அகராதிகளும் ஆய்வுகள் அல்ல. அகராதிகள் பலவற்றின் பதிவுகள். அகராதித் தரவுகளை மட்டும் ஆதாரமாகக் கொண்டு முடிவுகளுக்கு வந்துவிட முடியாது. அகராதிகளை வழிகாட்டிகளாகக் கொள்ளலாம். மூலங்களைத் தேடிக் கண்டு கொள்ளவேண்டும். சூழலுக்கு ஏற்பப் பொருள் கொள்ளவேண்டும். ஆய்வுகளும் முடிந்த முடிவுகள் அல்ல. ஆய்வுகள் தொடர்ச்சியானவை. முன்னவர் தோளில் ஏறி நின்றே பின்னவர் பார்க்கவேண்டி உள்ளது. எவ்வாறு பார்த்தாலும் ‘புரிதலும் புரியாமையும்’ எஞ்சிவிடுகின்றன.தவறுகளும் தொக்கு நிற்கின்றன.

 

புரிதலும் சுத்தமானதாக இல்லை. அங்கும் கலங்கல் உண்டு. தன்முனைப்பு உண்டு. தனிப்பட்ட பாதிப்பும் உண்டு. ழூன்றுகால் முயலும் உண்டு. மேலும், புரிதலில் நிலைப்பாடும் உண்டு. கொள்கை நிலைப்பட்டதே புரிதல். இங்கு கொள்கை என்பதை paradigm  என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் பொருத்திப் பார்த்து, what is your paradigm? என்று கேட்டுப் புரிதலை எடைபோடலாம்.

 

மாதவி கற்றறிந்த நூலாக ‘நாட்டிய நன்னூல்‘ கூறப்படுகிறது.

 

நாட்டிய நன்னூ னன்கு கடைப்பிடித்துக்
காட்டின ளாதலிற்  (சிலப். 158-159)

 

மாதவி கற்றுத் தேர்ந்ததாக இளங்கோவடிகளால் கூறப்பட்ட தமிழ் நாட்டிய நன்நூல் என்றோ தொலைந்துவிட்டது. தொல்காப்பியம் போன்ற காலத்தால் முந்திய இலக்கண நூல் இன்றும் வாழ்ந்திருக்க, நாட்டிய நன்நூல் எவ்வாறு தொலைந்தது. மொழி மாற்றிகளால் சுவடு தெரியாமல் அழிக்கப்பட்டுவிட்டதா, என்ற கேள்வி எழுகிறது. சிலப்பதிகாரம் வாழ்வதால், அதில் நாட்டிய நன்நூல் இலக்கணங்கள் சில கிடைத்துள்ளன. அவற்றைப் புரிந்துகொள்ளும் முயற்சிகள் பல நடந்துள்ளன. அனால், இன்னும் அவை முழுமைபெறவில்லை. உரைகளில் குழப்பங்களும், ஆய்வுகளில் இயலாமையும் தெரிகின்றன.

 

பஞ்சமரபு, கூத்த நூல் ஆகிய இரு தமிழ் கூத்து இலக்கண நூல்கள் கிடைத்துள்ளன. அவற்றுள்ளும் கூத்த நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. கிடைத்தவரையில் அதில் உள்ள கூத்துப் பற்றிய விளக்கங்கள் மிகவும் பயன் உள்ளவை. பஞ்சமரபும், கூத்த நூலும், சிலப்பதிகாரம் கூறும் கூத்துகளை விளங்கிக்கொள்ள மிகவும் உதவுகின்றன. அவற்றுடன் மேலும் விளக்கம்பெற நாட்டிய சாஸ்திரம் என்னும் வடநூலும் ஒப்பு நோக்காய்க் கற்க வேண்டும்.

 

கூத்த நூலின் ‘ஆசிரியம்’ பற்றியும், ‘காலம்’ பற்றியும் சில ஆய்வாளர்களால் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அதன் நம்பகத்தன்மை கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. இது ஆய்வுக்குரியது.

 

நக்கீரரும், நச்சினார்க்கினியரும் உரைகளுக்கு வலுச்சேரக்கும் வகையில் கூத்த நூல் நூற்பாவை எடுத்துக்காட்டியுள்ளார்கள்.

 

இறையனார் அகப்பொருள்:

 

காதற் பரத்தை எல்லார்க்கும் உரித்தே (பா 40 ப 172-3)

 

என்ற நூற்பாவுக்குப் பொருள் கூறுகையில் உரையாசிரியர் நக்கீரர், கூத்த நூலில் இருந்து,

 

குழல்வழி யாழெழீ இத் தண்ணுமைப் பின்னர்
முழவியம்ப லாமந்திரிகை

 

என்ற நூற்பாவை எடுத்துக்காட்டுவார்.

 

சீவகசிந்தாமணி, தொல்காப்பியம், பத்துப்பாட்டு, கலித்தொகை, குறுந்தொகையில் இருபது செய்யுள்களுக்கும் உரை செய்த நச்சினார்க்கினியர் (பத்துப்பாட்டு 2017, ஒஉஎ),

 

சீவகசிந்தாமணி:

 

‘புரிவளர் குழலொடு’ என வரும் பாடல் அடிக்கு ‘நரம்பிடத்து இசைவளர்தற்குக் காரணமாகிய குழல்’ என உரை வகுத்து (1949, பா 124-3, ப. 70);

 

நக்கீரர் எடுத்தாண்ட,

 

குழல்வழி யாழெழீ இத் தண்ணுமைப் பின்னர்
முழவியம்ப லாமந்திரிகை

 

என்ற அதே கூத்த நூல் நூற்பாவை எடுத்துக்காட்டி விளக்குவார்.

 

‘தோற்பொலி முழவும் யாழும் துளைபயில் குழலு மேங்க’ (பா 675.1 ப. 333)

 

‘இவை மூன்றுங் கூடியிசைப்ப, இவை ஆமந்திரிகையாம்’ எனப் பொருள் கூறி, ஏலவே எடுத்துக் காட்டிய கூத்தநூற் பாவை இங்கும் எடுத்துக்காட்டுவார்.

 

கூத்த நூலின் நம்பகத் தன்மைக்கு இவற்றைவிட வேறு என்ன காட்டு வேண்டும். கூத்த நுலைக் கிடைத்தவரை கற்க வேண்டும். முழுமையைத் தேடவேண்டும். அரங்கேற்றுகாதையில் கூறப்பட்டுள்ள கூத்துகளுக்கு விளக்கங்களைக் கூத்த நூலில் காணலாம். கூத்த நூல் பற்றி விரிவாக இன்னோரு சமயம் பார்க்கலாம்.

 

அரங்கேற்று காதையைத் தொடரலாம்:

 

அரங்கேற்று காதையைத் தொன்மையாகவும் சொன்மையாகவும் கற்க வாய்ப்பு உள்ளது. சாமிநாதையரவர்கள் யாப்புக் குலையாமல் பதிப்பித்துள்ளார். இதன் கட்டுமானம் ‘நிலைமண்டில ஆசிரியப்பா’ வகையில் யாக்கப்பட்டுள்ளது. ஆசிரியப் பாவை அகவற்பா என்றும் அழைப்பர். இதன் ஓசை அகவல் ஓசையாகும். ‘நிலைமண்டிலம்’ என்றால், குறைந்தது மூன்று அடிகள், மேல் வரையறை இல்லை. ‘என்’ என இறுதி அடி முடிவது சிறப்பு. இவற்றின் விளக்கங்களைத் தமிழ் யாப்பிலக்கண நூல்களில் காணலாம். விரிவஞ்சி யாப்பிலக்கண விளக்கங்களை விடுத்து, அரங்கேற்று காதையைப் பார்க்கலாம்.

 

அரங்கேற்று காதை,

 

தெய்வ மால்வரைத் திருமுனி யருள

 

என, முதலடியில் தொடங்கி, 175 ஆவது இறுதி அடியில்

 

வடுநீங்கு சிறப்பிற்றன் மனையக மறந்தென்

 

‘என்’ என முடிகிறது.

 

இது சிறப்பான நிலைமண்டில ஆசிரியப்பா.

 

அரங்கேற்று காதையைக் கற்று ஓரளவு தேற, இன்று வழக்கில் உள்ள, ஏலவே கூறப்பட்ட, பஞ்சமரபு, கூத்தநூல், நாட்டிய சாஸ்திரம் அகியவை அடிப்படை ஆதார நூல்களாகும். மேலும் பல இலக்கியங்களில் விளக்கங்களைத் தேடிக் காணலாம்.

 

சிலப்பதிகாரம்  ‘ஆடல்கள் விரவிய பாட்டுடைச் செய்யுள்’. ‘காதை’ என்றாலே பாடப்டுவது எனப் பொருள் கொள்ளும். அரங்கேற்று காதையை முறைப்படி படிப்பதானால், முதலில் அகவல் ஓசைக்கு பொருத்தமான மெட்டுக் கட்டிப் பாடவேண்டும், பாடல் அடிகளைப் பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்.

 

யாம இரவில் நெடுங்கடை நின்று
தேம்முதிர் சிமையக் குன்றம் பாடும்
நுண்கோல் அகவுனர … … … (அக 208: 1-3)

 

அகவுனர் எப்படிப் போற்றிப் பாடினார்களோ, அப்படிப் பாட மெட்டுத் தேட வேண்டும்.

 

கோவில்களில் தெய்வங்களைப் போற்றிக் ‘காவியம்’ பாட வழக்கில் உள்ள ஒரு ‘மெட்டுக்கட்டு’

 

தந்தந தநாதந தநாதந தநாநா
தநநா தநாதந் தநாதந் தநாநா

 

இவ்வாறு மெட்டுக்கட்டில் ‘கண்ணவி காவியம்’ கோவில்களில் பாடப்படுகிறது.

 

அவ்வாறு மெட்டுக்கட்டி அரங்கேற்று காதையைப் பாடலாம்.

 

அரங்கேற்றுகாதையை விளங்கிக்கொள்ள ஒரு படிப்பு நெறி வேண்டும்.

 

1. பாடலைப் பாடி அறிதல்.

2. சொற்களைப் பிரித்தறிதல்.

3. உரைகளைக் கற்றறிதல்

4. கற்றவற்றை ஆய்ந்தறிதல்

5. பொருளைக் கண்டறிதல்

6. நடைமுறையில் செய்தறிதல்.

 

இது ஒரு கூட்டு முயற்சி. தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், தமிழ் இசை, தமிழ்க் கூத்து அறிந்தோர் ஒன்று கூடி முயலவேண்டும்.

 

மாதவியின் தலைக்கோல் தானத்தில் ஒன்றிணைந்த:

 

ஆடற்கமைந்த ஆசான்
இசையோன்
நன்னூற் புலவன்
தண்ணுமை யருந்தொழின் முதல்வன்
குழலோன்
யாழப் புலமையோன்

 

ஆகிய அருந்தொழில் முதல்வர்களுடன் கவியும் ஒன்றிணைந்து மீண்டும் ஒரு ‘மாதவியை’ அரங்கேற்ற வேண்டும். அப்பொழுது அரங்கேற்று காதைப் படிப்பு முழுமை பெறும்.

 

சிலப்பதிகார அரங்கில் மாதவியின் அரங்கேற்றம் ‘கூத்தாக’ நிகழ்த்தப்பட்டதா அல்லது கவியால் ‘கூற்றாகப்’ பாடப்பட்டதா என்பது ஆராயப்படவேண்டிய இன்னொரு கேள்வி!

 

‘தெருக்கூத்து’ அரங்குகளில் பிரசங்கியார் காலையில் நிகழ்த்தும் ‘காதை’ நிகழ்வுடன் ஒப்பு நோக்கவேண்டும்.

 

தெருக்கூத்தில் அமையும் பல அரங்க விரிவாக்கங்களுடனும் அரங்கச் செயற்பாடுகளுடனும் ஒப்பு நோக்கவேண்டும்.

 

இத்தால் அறிவிப்பது யாதெனில் இளங்கோவடிகள் பாடிய சிலப்பதிகாரம் ஆடலும் பாடலும் விரவி, முப்பது நாட்கள் நிகழும் ‘செவ்வியல்’ தெருக்கூத்துக்கான ‘ஆட்டப்பிரகாரம்’.

 

சிலப்பதிகாரம் ஆட்டப்பிரகாரத்தை ஆதாரமாகக் கொண்டுசிலப்பதிகாரம் ஆட்டப் பாடம் எழுதவண்டும். சிலப்பதிகாரம் ஆட்டப்பாடத்தைச் சிலப்பதிகாரம் கூத்தாக அரங்காக்கம் செய்ய வேண்டும்.

 

சிலப்பதிகாரம் ஆடப்பட்டதற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.

 

ஆனால் எவ்வாறு ஆடப்பட்டது போன்ற விபரங்கள் தெரியவில்லை.

 

சிலப்பதிகாரம் ஊர் எங்கும் அரங்காக, ஊர் கூடிக் கொண்டாடும் பெரு விழா!