‘அருகு’, ‘அறுகு’ ஆகிய இரு சொற்களின் விளக்கத்தில் அண்மைக் காலத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அவ்விரு சொற்களின் பொருளையும்; அவற்றிலிருந்து பெறப்படும் ஏனைய சொற்களையும் கசடற அறியவேண்டும். கையில் கிடைத்த அகராதிகளைப் புரட்டிப் பார்க்கிறேன். குழப்பம் எங்கு தோன்றியது என்பதைக் காண ‘அகராதிகள் முதற்பதிப்பு ஆண்டு முறையில்’ ஒழங்குபடுத்திச் சொற்களைத் தேடுகிறேன்.
1842
யாழ்ப்பாண அகராதி (முதற்பதிப்பு 1842, மறுபதிப்பு 2006):
அருகு – அருகென்னேவல், சமீபம், பக்கம்.
அருகல் – அணைதல், கிட்டுதல், குறைதல், சாதல், சுருங்குதல்
அருகுறல் – கிட்டல்.
அறுகு – ஆண்புலி, ஓர்புல், சிங்கம், யாளி, யானை.
அறுகரிசி – அட்சதை.
1862
Winslow’s A Comprehensive Tamil and English Dictionary தமிழ் – ஆங்கில அகராதி, எம்.வின்சுலோ (Eith AES Reprint 1992, முதல்பதிப்பு 1862):
அருகு – Neighborhood, nearness, contiguity, சமீபம். 2. Border, edge, ஓரம். 3. A shade or light carried before a great man, தீவட்டி.
அருகணைக்க – To embrace closely.
அருகுற – To approach, come , be near, கிட்ட.
அருகே –Near .
அறுகு – A kind of grass deemed sacred to Ganesa and others, ஓர் புல் agrostis linearis (Latin). 2. A lion, சிங்கம். 3. The yali – a fabulous beast, யாளி. 4. Male tiger, ஆண் புலி. 5 An elephant, யானை.
அறுகரிசி – Sacred grass and rice combined and put on the thighs, shoulders and heads, of the new married pair, at the time of marriage, as an auspicious ceremony.
Different kinds of அறுகு: உப்பறுகு – கொடியறுகு – ஆனையறுகு – கூந்தலறுகு – வெள்ளறுகு – சிற்றறுகு.
1918
நா.கதிரைவேற் பிள்ளையின் தமிழ் மொழியகராதி (ஆறாம்பதிப்பு 1992, First AES Reprint 1981, முதல்பதிப்பு 1918):
அருகு – அருகென்னேவல், சமீபம், தீவர்த்தி, பக்கம்.
அருகர் – அனுசரித்தர், சமணர், சமீபத்திலுள்ளவர், தோழர்.
அருகில் – சமீபத்தில்.
அருகுதல் – அருகல்.
அருகுறல் – கிட்டல்.
அருகே – கிட்ட.
அறுகு – ஆண்புலி, ஒருபுல், சிங்கம், யாளி, யானை.
அறுகரிசி – அட்சதை.
1924 – 1936
Tamil Lexicon, University of Madras (Reprinted 1982):
அருகு – 1. Nearness, contiguity, neighbourhood; சமீபம். 2. Border, edge, vicinity; ஓரம். 3. Side; பக்கம். 4. Place; இடம். 5. Lamp or torch carried before a great person; மரியாதைத் தீவட்டி.
அருகர் – Nearness; சமீபம்.
அருகல் – 1. Nearness; அருகு. 2. Diminution, deficiency; குறைவு.
அருகாமை – Close, proximity; சமீபம்.
அருகுதல் – 1. To become scarce, diminish, to be reduced; குறைதல், 2. To happen rarely, to be of uncommon occurence; அரிதாதல். 3. To be afraid, to fear; அஞ்சுதல். 4. To smart, prick, pain; நோவுண்டாதல். 5. To disappear, perish; கெடுதல். 6. To approach; கிட்டுதல். 7. To indicate one’s intention; குறிப்பித்தல் 8. To know; அறிதல்.
அறுகு – 1. Harialli grass, flowering all the year round and growing almost everywhere throughout India, used in ceremonies, Cynodon dactylon; அறுகம்புல். 2.Lion; சிங்கம். 3. An extinct animal; யானையாளி. 4. Tiger; புலி.
அறுகம்புல் – Harialli grass, Cynodon dactylon; புல்வகை.
அறுகரிசி –Mixture of Cynodon grass and rice, used in benediction of worship; அறுகம்புல்லோடு கூடிய மங்கலவரிசி
அறுகிடுதல் – To bless the bride and bridegroom by throwing on their heads rice with Cynodon grass; விவாகத்தில் அறுகிட்டாசீர்வதித்தல்.
அறுகை – Cynodon grass; அறுகு.
அறுகையு நெருஞ்சியு மடர்ந்து … (மணி 12-60)
1937
மதுரைத் தமிழ்ப் பேரகராதி (சந்தியா பதிப்பகம் முதற்பதிப்பு 2004, முதற்பதிப்பு 1937, இரண்டாம் பதிப்பு 1956):
அருகு – அருகென்னேவல், சமீபம், தீவர்த்தி, திரி, பண்வகை, ஓரம், விளிம்பு.
அருக – நெருக்கமாக, சமீபமாக, குறைய, அருகன் சம்பந்தமான.
அருகல் – அணைதல், ஒழுகல்,
அருகில் – சமீபத்தில், கிட்டடியில், அணியில், குறைந்தால் அழிந்தால்.
அருகுதல் – அருகல், சமீபித்தல், கிட்டுதல், குறைதல், அரிதாதல், அஞ்சுதல், கெடுதல்.
அறுகு – ஆண்புலி, ஒருபுல், சிங்கம், யாளி.
அறுகரிசி – அட்சதையரிசி, மங்கலவரிசி, அறுகும் அரிசியும்.
அறுகை – அறுகம்புல், அறுதல், ஒருகுறுநில மன்னன், ஆறுகை.
1964
கழகத் தமிழ் அகராதி (19ஆம் பதிப்பு 2004, முதற்பதிப்பு 1964):
அருகு – அடுத்த இடம், அண்மை, ஓரம்.
அருகல் – அருகு, பக்கம், குறைவு.
அருகுதல் – குறைதல், அஞ்சுதல், கெடுதல், நோவுண்டாதல், குறிப்பித்தல்.
அறுகு, அறுகை – அறுகம்புல், சிங்கம், யானை, யாளி, புலி, ஒருகுறுநில மன்னர்.
அறுகரிசி – ஆறுகம்புல்லொடு கூடிய மங்கலவரிசி.
அறுகிடுதல் – திருமணத்தில் அறுகிட்டு வாழ்த்துதல்.
அறுகெடுத்தல் – அறுகிட்டு வாழ்த்தல்.
தீர்மானம்
கிடைத்தவரை பார்த்ததில் குழப்பம் இல்லை. அறுகு என்றால் ஒருவகைப் புல் என்றும்; அருகு என்றால் அண்மை என்றும் திட்டவட்டமாகக் கூறலாம். இது எல்லோருக்கும் தெரிந்ததுதானே, இதற்கேன் இவ்வளவு தேடல் என்று கேட்கலாம். காரணம் இருக்கிறது. மெத்தப் படித்தவர்கள் பலர் கூடி வேறு பொருள் கூறும்போது!
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு (குறள் 423)
உண்மையை அடித்துச் சொல்வதற்குச் சாட்சியங்கள் பல வேண்டும்; ஆகவே நீண்ட அகராதிப் பட்டியல் தரப்பட்டுள்ளது.
1992
அருகு, அறுகு ஆகிய சொற்களில் குழப்பம் எங்கு உள்ளது என்று பார்த்தால்:
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (இரண்டாம்பதிப்பு 2008, முதற்பதிப்பு 1992):
அருகு – குறைதல், அண்மை, பக்கம், அருகம் புல்
அருகம்புல் – பூஜைக்கும் மருந்துக்கும் பயன்படும் படர்ந்து வளரும் ஒருவகைப்புல்
அருகரிசி – (இலங்) திருமணச் சடங்கின்போது உற்றாரும் உறவினரும் மணமக்கள்மேல் தூவும் அருகம்புல் கலந்த அட்சதை.
இலங்கையில் ‘அருகரிசி’ என்று சொல்வதில்லை, ‘அறுகரிசி’ என்றுதான் சொல்வார்கள். ‘அருகரிசி’ தவறான பதிவு.
அறுகம்புல் – காண்க: அருகம்புல்
அறுகம் புல் என்ற சொல் முதல்பதிப்பில் இல்லை. இரண்டு சொற்களுக்கும் வேறுபாடு இல்லாமல் இரண்டாம் பதிப்பில் உள்ளது.
அறுகு என்று ஒரு சொல் பதியப்படவில்லை.
2001
தமிழ்நடைக் கையேடு, உருவாக்கம்: இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம், மைசூர்; மொழி அறக்கட்டளை, சென்னை; தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
இலக்கண அமைப்பில் சொற்கள் என்ற தலைப்பில், சில பெயர்ச்சொற்கள் -அம் ஏற்று அடையாக வரும் நிலையில் அடுத்து வரும் சொல்லோடு சேர்த்து எழுதலாம்,
என்பதற்கு எடுத்துக்காட்டாக:
அருகம்புல் (அருகம் <– அருகு) (2001, 38)
‘அருகம்புல்’ என்ற சொல் தமிழ் எழுத்துகளில் தொடர்கிறது
கூகிளில் ‘arukampul’ என்று தட்டச்சுச் செய்தால் ‘அருகம்புல்’ என்றே தமிழ் மொழி பெயர்ப்பு வருகிறது.
‘வைறஸ்’ அங்கும் பரவிவிட்டது என்று கூறலாமா!
தமிழ் ஒலி இலக்கணம்
நாத்தவறா? செவித்தவறா? பொருள் தவறிய சொற்கள் பதியப்படுகின்றன. வாய்ப் புழக்கத்திற்கு வந்துவிட்டது என்பதால் மட்டும் சரியானவை எனக் கொள்ளமுடியுமா? இலக்கண வரம்பு தவறினால் மொழி தவறிப்போகும்.
‘நாகாக்க’ தமிழுக்குப் பிறப்பியல் இலக்கண மரபு உள்ளது. ஒலிகள் பிறக்கும் இடங்களை அறிந்து பயில வேண்டும். இங்கு றகார, ரகார ஒலிகளின் பிறப்பியலைப் பார்க்கலாம்:
அணரிநுனிநா அண்ணம் ஒற்ற
றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும் (தொல் 94)
அண்ண நுனிநா நனியுறிற் றனவரும் (நன் 31)
நுனிநா அணரி அண்ணம் வருட
ரகார ழகார ஆயிரண்டும் பிறக்கும் (தொல் 95)
அண்ண நுனிநா வருட ரழவரும் (நன் 28)
நுனிநா அண்ணத்தை ஒற்றுதலுக்கும் வருடுதலுக்குமான வேறுபாட்டை அறிந்து பயில வேண்டும். நான் இவற்றை ஓர் இலக்கணப் பண்டிதராகப் பார்க்கவில்லை; ஒரு தமிழ்த் தேசிக அரங்கனாகப் பார்க்கிறேன்.
தமிழ்த் தேசிக அரங்கர் பயிற்றில் சொற்களை எழுத்தெழுத்தாக ஒலிப்பதும் ஒரு பயிற்சி.
திருஞானசம்பந்தசுவாமிகள் ‘வழிமொழித் திருவிராகம்‘ பதிகத்திலிருந்து, பயிற்சிக்காகச் சில தேவாரப் பாடல்கள்:
றகாரம்
அறமழிவு பெறவுலகு தெறுபுயவன்
விறலழிவு நிறுவி வீரன்மா
மறையினொலி முறைமுரல்செய் பிறையெயிற
னுறஅருளும் இறைவனிடமாங்
குறைவின்மிக நிறைதையுழி மறையமரர்
நிறையருள முறையொடுவரும்
புறவனெதிர் நிறைநிலவு பொறையனுடல்
பெறவருளு புறவமதுவே (8)
ரகாரம்
கரருலகு நரர்கள்பயில் தரணிதலம்
முரணழிய அரணமதில்முப்
புரமெரிய விரவுவகை சரவிசைகொள்
கரமுடைய பரமனிடமாம்
வரமருள வரன்முறையி னிரைநிறைகொள்
வருசுருதி சிரவுரையினாற்
பிரமனுயர் அரனெழில்கொள் சரணவிணை
பரவவளர் பிரமபுரமே (1)
இன்னும் பாடல்கள் உள்ளன, தேடிப் பயில வேண்டும். ‘செந்தமிழும் நாப்பழக்கம்‘
[குறிப்பு: இக் கட்டுரை பற்றிய உங்கள் எண்ணங்களை ‘தொடர்பாடல்’ ஊடாக தெரியப்படுத்தவும், நன்றி.]