இணையத் தமிழ்க்காவல் நிலையம்

தமிழில் இணையங்கள் பெருகிவிட்டன. இணையங்களில் எழுதுபவர்களும் பேசுபவர்களும் பெருகிவிட்டார்கள். இணையங்களைப் பார்ப்பவர்களும் பெருகிவிட்டார்கள். மிகவும் வரவேற்க வேண்டிய பெருக்கம். ஆனால், இணையச் சமூகப் பெருக்கத்துடன் எழுத்துத் தவறுகளும் பெருகிவிட்டன. நல்ல உணவில் கல்லும் மண்ணும் கடிபடுவது போலத் தவறுகள் உறுத்துகின்றன.

 

தமிழில் தொடர்பாடல் ஊக்குவிக்கப்பட வேண்டும், அதேவேளை தவறுகளும் களையப்பட வேண்டும். சமூக ஊடகங்களில் தவறுகளைக் கண்டும் காணாமல் சகித்துக் கொள்வது, தவறுகளுக்குத் துணைபோவதாகும். தொடரச்சியாக இழைக்கப்படும் தவறு பழக்கமாகி வழக்கமாகிவிடும். தமிழ் மரபு கெட்டுப்போகும். இணையங்களில் தமிழ் ஓர் அளவுக்கு ‘அந்த நிலைமைக்கு’ வந்துவிட்டது.

 

தமிழில் தவறின்றி எழுத வழிகாட்டிகளாகப் பல நூல்கள் உள்ளன. சொற்களைத் தேடிப் பார்க்கப் பல நிகண்டுகளும் அகரமுதலிகளும் உள்ளன. ஆனாலும், இணையச் சமூகத்தில் உள்ள பலர் அவற்றைக் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. தொடர்ச்சியாகத் தவறுகள் இழைக்கப்படுகின்றன.

 

தவறுகளைக் கண்டுபிடித்துக் கூண்டில் ஏற்ற ‘இணையத் தமிழ்க்காவல் நிலையம்’ பல தோன்றவேண்டும். நாம் (நான் உட்பட) விடும் தவறுகளைச் சுட்டிக்காட்டி நம்மை நல்வழிப்படுத்தத் தமிழ் அறிந்தோர் தமிழ்க்காவலர்களாக வேண்டும். தவறு விட்டவரைக் கூண்டில் ஏற்றுவதல்ல, தவறைத் திருத்துவதே நோக்கமாக இருக்க வேண்டும்.

 

இணையத் தமிழ்க்காவல் நிலையங்கள் தோன்றுமா? தமிழ் அறிந்தோர் தமிழ்க்காவல் நிலையங்களில் கடமையாற்றுவார்களா? நாம் விடும் தவறுகள் திருத்தப்படுமா?

 

எதிர்வரும் காலங்களில் தமிழ் இணையங்களில் நான் கண்ட கேட்ட எழுத்துத் தவறுகளைத் தொகைப்படுத்திக் கூண்டில் ஏற்றுவேன். தவறுகளை ஆய்ந்து திருத்தும் கடமையைத் தமிழ்க்காவலர்களிடம் விட்டுவிடுகிறேன். இணையச் சமூகம் மிகப் பெரியது; மிகமிக வலியது. இது பலர்கூடித் வடம்பிடித்து இழுக்கவேண்டிய தேர்.

 

‘கூண்டில் தமிழ்’ தொகுதி ஒன்று தொடரும் …

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments