எண்ணும் எழுத்தும் (2)

2. தொண்எண்களும் எழுத்திலக்கணமும்

 

 

அறிமுகம்

 

 

‘தொண்எண்கள்’ என்ற சொற் தொடருக்கான பொருளை முதலில் வரையறை செய்யவேண்டும். தொன்று, தொன்மை, தொன் போல தொண்டு, தொண்மை, தொண் முன்னையதைக் குறிப்பன. ‘தொண்டு’ பற்றி ஏற்கனவே ‘ஓன்பதும் தொண்டும்’ என்ற முதற் பகுதியில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 

 

தொண் என்ற சொல்லுக்குக் கண்ட பொருளுக்கு அமைய ‘தொண்எண்கள்’ என்றால் முன்னைய எண்கள் எனக் கொள்ளலாம். தொண்எண்கள் என்றால், காலத்தால் முன்னையவை அல்ல இடத்தால் முன்னையவை. ஒன்பது, தொண்ணூறு, தொள்ளாயிரம் ஆகிய எண்களைத் தொண்எண்களாகக் கொள்ளலாம். தொண் எண்களை ஏனைய எண்களில் இருந்து வேறுபடுத்தி அவற்றின் இயல்புகளைக் காண்பதே இவ் ஆய்வின் நோக்கம்.

 

எண்பெயர்களுக்குத் தொல்காப்பியத்தில் எழுத்திலக்கணம் உள்ளது. எண்களுக்குத் தமிழில் குறியீடுகளும் உள்ளன. எண் குறியீடுகளையும் எண் பெயர்களையும் எளிதாகப் பொருத்திக் காண, இங்கு ‘அரெபிய’ (Arabic) எண் குறியீடுகள் அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றன. தமிழ் எண்களின் கட்டுமானத்தை விளங்கிக்கொள்ள ‘உரோமன்’ (Roman) எண் குறியீடுகள் எடுத்தாளப்படுகின்றன.

 

2 – 1 தொண்எண்பெயர்களின் புணரியல்

 

தொல்காப்பியம் எழுத்ததிகாரம் புணரியலில் எண்பெயர்களைக் காணலாம். அவற்றுள் தொண் எண்களாகிய ஒன்பது, தொண்ணூறு, தொள்ளாயிரம் ஆகிய சொற்களுக்கான புணரியலைப் பார்க்கலாம்.

 

ஒன்பது

 

ஒன்றுமுத லொன்பான் இறுதி முன்னர்
நின்ற பத்தி னொற்றுக்கெட ஆய்தம்
வந்திடை நிலையும் இயற்கைத் தென்ப (தொல் 2019 எழுத் 438)

 

இது எண்களின் மதிப்பைக் கொண்டு எண்களை வரிசைப்படுத்துவதற்கான நூற்பா அல்ல. ஏனைய எண்களுடன் பத்துப் புணரும் போது பஃதாக மாறும் என்பதை விளக்கும் பாடல்.

 

‘ஒன்’ உடன் ‘பான்’ புணருமாற்றைக் காணலாம்:

 

ஒன்பான் இறுதி முன்னர் – ஒன்
நின்ற பத்து – ஒன் + பத்து
ஒற்றுக் கெட – (‘த்’ கெட) – ஒன்பது
ஆய்தம் வந்திடை நிலையும் – ஒன்பஃது

 

எடுத்துக்காட்டாக,

 

… ஒன்பஃ தென்ப (தொல் 2019 எழுத் 82. 2)

 

‘ஒன்பான்’ என்ற சொல்லை தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தில் பல இடங்களில் காணலாம்: 438.1, 445.1, 459.1, 463.1, 470.1, 472.1, 475.2, 480.1. எல்லாமே ஒன்பானுடன் ஏனைய எண்பெயர்கள் புணருமாற்றைக் கூறுவன.

 

உரைகளில் ஒன்பான் என்றால் ஒன்பது எனப் பொருள் காணப்பட்டுள்ளது.

 

ஒன்பது என்ற எண்பெயரில் எல்லா இடங்களிலும் ஆய்தம் வந்திடை புகுவதும் இல்லை. எடுத்துக்காட்டாக:

 

ஒன்பதிற் (தொல் 2019; எழுத் 171. 2)
ஒன்பதும் (தொல் 2019 சொல்; 165. 6)
ஒன்பதும் (தொல் 2019 சொல்; 223. 3)
ஒன்பதின் (தொல் 2019 பொருள் புறத்திணையியல் 75. 24)
ஒன்பதுங் (தொல் 2019 பொருள் மரபியல் 545. 4)

 

ஒன்பான், ஒன்பஃது, ஒன்பது ஆகியவை ‘9’ என்ற எண்ணைக் குறிக்கும் சொற்கள். அவை முறையே இரு சொற்களின் சேர்க்கை: ஒன் + பான், ஒன் + பஃது, ஒன் + பது. பான் என்னும் சொல் பத்து எனப் பொருள்படுகிறது.

 

‘பான்’ என்ற சொல் பத்து என்ற பொருளில் வரும் வாறைக் காணலாம்:

 

ஒருபான் சிறுமை இரட்டியதன் உயர்பே (தொல் 2019 பொரு 453)

 

இனம்பூரணர் பொருள் கூறுவார்:

 

… பத்தடிச் சிறுமையாகவும் இருபதடிப் பெருமையாகவும் வரும் என்றவாறு.

 

‘ஒருபான்’ என்பது ஒருபத்து ’10’ என்றானால், ‘ஒன்பான்’ எவ்வாறு ‘9’ ஒன்பதாகும்? ‘ஒன்’ என்ற சொல்லை ‘ஒரு’ என்ற சொல்லுடன் ஒப்பு நோக்கி ‘ஒன்று’ எனப் பொருள்காண முடியவில்லை. ‘ஒன்’ வேறு பொருளைக் குறிப்பதாக இருக்கவேண்டும்.

 

‘சாரியை’ சொற்களுடன் ‘ஒன்’ கூறப்படுகிறது (தொல் 2019 சொல் புணரியல் 120. 2). சாரியை என்பது பொருளற்ற இடைச்சொல். பெயர்களின் பின்னர் சாரியை வரும் (தொல் 2019 சொல் புணரியல் 119).

 

ஆனால் ‘ஒன்பான்’ என்பதில், சொல்லின் முன் ‘ஒன்’ வருகிறது. இது சாரியை அல்ல. ஆனாலும் நேரடியாக எங்கும் பொருள் காணப்படவில்லை. பொருள் எங்காவது தொக்கு நிற்கிறதா எனப் பார்க்கவேண்டும்.

தொண்ணூறு என்ற எண்பெயருக்குப் புணரியல் கூறும் இடத்து:

 

ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும்
முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும் (தொல் 2019; எழுத் 445: 1-2)

 

‘ஒன்’ என்பதில் ‘ஒ’ மேல் ‘த’ ஒற்றித் ‘தொ’ ஆகும். ‘ன்’ என்பது ‘ண்’ ஆகும். இரண்டையும் கூட்டினால் ‘தொண்’ ஆகும். ‘ஒன்’ என்பது ‘தொண்’ ஆகும்.

 

முன் பின்னாகப் பார்த்தால் ‘தொண்’ என்பது ‘ஒன்’ ஆகலாம். ஆகவே ‘ஒரு’ என்பதை ‘ஒன்’ குறிக்கவில்லை. ‘தொண்’ என்பதையே ‘ஒன்’ குறிக்கிறது எனக் கொள்ளலாம்.

 

‘தொண்’ என்றால் ‘முன்னையது’ என ஏற்கனவே பொருள் காணப்பட்டுள்ளது. ‘ஒன்’ என்பதும் முன்னையது எனப் பொருள்படும். ஆகவே, ஓன்பது (9) என்ற எண், பத்து (10) என்ற எண்ணுக்கு முன்னைய எண் எனக் கூறலாம்.

 

 

தொண்ணூறு

 

தொண்ணூறு என்ற எண்பெயருக்கு எழுத்திலக்கணம்:

 

ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும்
முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும்
பஃதென் கிளவி யாய்தபக ரங்கெட
நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி
ஒற்றிய தகரம் றகரம் ஆகும் (தொல் 2019; எழுத் 445)

 

ஒன்பான்

ஒகரமிசைத் தகரம் ஒற்றும்:                                + த = தொ
முந்தைய ஒற்றே ணகாரம் இரட்டும்:            ன் –          ண்     *ண்
                                                                                            பான்      மறைய

பஃது என்கிளவி

ஆய்த பகரங் கெட:                                                   பஃ மறைய
நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி:                *ண் + ஊ – ணூ
ஒற்றிய தகரம் றகரம் ஆகும்:                              து –               று

 

ஒன்பான் பத்து = தொ + ண் + ணூ + று – தொண்ணூறு – 90

 

தொண்ணூறு என்ற எண்பெயரின் எழுத்து முற்றுமுழுதாக ‘ஒன்பான், பஃது’ ஆகிய சொற்களில் கட்டமைக்கப்படுகிறது. கணக்குப்படி பார்த்தாலும் ஒன்பான் (ஒன்பது), பஃது (பத்து) தொண்ணூறாகும்: 9 x 10 = 90.

 

 

தொள்ளாயிரம்

 

தொள்ளாயிரம் என்ற எண்பெயருக்கு எழுத்திலக்கணம்:

 

நூறுமுன் வரினும் கூறிய இயல்பே (தொல் 2019 எழுத் 460)

 

பத்து என்னும் எண்ணுடன் புணர்ந்த இயல்பு முன் கூறியவாறே நூறு என்னும் எண்ணுடனும் எண்கள் புணரும். அந்த வகையில் ஒன்பதுடன் நூறு புணரும் வாறைப் பார்க்கலாம்.

 

ஒன்பான் முதனிலை முந்துகிளந் தற்றே
முந்தை யொற்றே ளகாரம் இரட்டும்
நூறென் கிளவி நகார மெய்கெட
ஊ ஆ வாகும் இயற்கைத் தென்ப
ஆகடை வருதல் இகார ரகாரம்
ஈறுமெய் கெடுத்து மகரம் ஒற்றும் (தொல் 2019 எழுத் 463:)

 

ஒன்பான்

முதனிலை முந்து (பா445) கிளந்தற்றே:                                                     + த = தொ
முந்தை யொற்றே ளகாரம் இரட்டும்:                                                       ன் –         ள்     *ள்
                                                                                                                                       பான்     மறைய

 

நூறென் கிளவி:                                                                                                    நூ
நகார மெய்கெட:                                                                                                  ந்     மறைய
ஊ ஆ வாகும்:                                                                                                         ஊ – ஆ
இயற்கைத் தென்ப ஆகடை வருதல்:                                                       *ள் + ஆ = ளா
இகார ரகாரம் ஈறுமெய் கெடுத்து:
                                          (ஈறு மெய் ‘று’)                                                              று மறைய இ ர
மகரம் ஒற்றும்:                                                                                                                               ம்

 

ஒன்பான் நூறு = தொ + ள் + ளா + + + ம் – தொள்ளாயிரம் – 900.

 

தொள்ளாயிரம் என்ற எண்பெயரின் எழுத்து முற்றுமுழுதாக ‘ஒன்பான்’, ‘நூறு’ ஆகிய சொற்களில் கட்டமைக்கப்படுகிறது. கணக்குப்படி பார்த்தாலும் ஒன்பான் நூறு தொள்ளாயிரமாகும்: 9 x 100 = 900

 

 

2 – 2 தொல்காப்பியம் காட்டிய வழி

 

ஒன்பது, தொண்ணூறு, தொள்ளாயிரம், ஆகிய எண்பெயர்கள் புணர்ந்த வாறைக் கூறுவதாயின்:

 

அவைதாம்
மெய்பிறி தாதல் மிகுதல் குன்றலென்
றிவ்வென மொழிப திரியு மாறே (தொல் 2019 எழுத். 110)

 

மெய் பிறிதாதல், மிகுதல், குன்றல் ஆகிய திரிபுவிகாரங்களைக் கொண்ட எண்பெயர்க் கட்டமைப்பாக உள்ளது. நாப்பழக்கத்தில் உள்ளதற்கு இலக்கணம் காணப்பட்டுள்ளது. நாப்பழக்கத்தில் உள்ளதே அடிப்படையானது. ஒன்பது என்ற எண்பெயரும், தொண்ணூறு என்ற எண்பெயரும் தொள்ளாயிரம் என்ற எண்பெயரும் இன்றுவரை நாப்பழக்கத்தில் உள்ளவை.

 

தொல்காப்பியரின் பார்வை மிகவும் பரந்து விரிந்தது. முக்காலங்களையும் எண்ணியே முடிவுகளைக் காண்கிறார். ‘என்மனார் புலவர்‘ எனப் பல இடங்களில் முன்னதைப் பார்க்கிறார். அவர் காலத்துக்கு அவரே சான்று. அவர் எண்ணங்களை முடிந்த முடிவுகளாக இல்லாமல் எதிர்கால எண்ணங்களுக்கும் திறந்து வைக்கிறார். அவர் கோட்பாட்டுப் பிடிவாதவாதியாக (dogmatist) இல்லாமல் நடைமுறைவாதியாக (pragmatist) திறந்த பார்வையுடன் கொட்பாடுகளை அணுகுகிறார்.

 

எழுத்து இலக்கணம்பற்றிக் கூறவேண்டியவை யாவற்றையும் கூறியபின் இறுதியாகக் கூறுவார்:

 

கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும்
வழங்கியன் மருங்கின் மருவொடு திரிநவும்
விளம்பிய வியற்கையின் வேறு படத் தோன்றின்
வழங்கியன் மருங்கின் உணர்ந்தன ரொழுகல்
நன்மதி நாட்டத் தென்மனார் புலவர் (தொல் 2019 எழுத். 483)

 

கிளந்த அல்ல – முன்னர் சொல்லாதன

 

செய்யுளுள் திரிநவும் – செய்யுளில் நடப்பனவும்
வழங்கியன் மருங்கின் – வழக்கத்தின் பாங்கில்
மருவொடு திரிநவும் – கலந்து நடப்பனவும்

 

விளம்பிய வியற்கையின் – கூறிய முறைமையின்
வேறு படத் தோன்றின் – வேறாகத் தோன்றினால்

 

வழங்கியன் மருங்கின் – வழக்கத்தின் பக்கம்
உணர்ந்தன ரொழுகல் – அறிந்தவர் ஏற்ப நடத்தல்
நன்மதி நாட்டத் – நல்ல பகுத்தறிவின் பாற்படும்

 

தென்மனார் புலவர் – என்று கூறுவர் புலவர்

 

தொல்காப்பியர் அருளிய ‘புறநடை’ சுட்டும் எண்ணச் சுதந்திரத்திற்கு அமைய எண்பெயர்களை வேறு கோணத்திலும் நோக்கலாம். இது எண்பெயர்களை ‘ஏடு எழுதியோர் பிழை’ என்றோ, அல்லது ‘இடைச் சொருகல்’ என்றோ, அல்லது ‘வலிந்து கொண்டவை’ என்றோ, அல்லது ‘மக்களின் அறியாமை’ என்றோ கூறி, மறுதலிப்பதற்கான முயற்சி அல்ல, அவற்றை அவ்வாறே மேலும் விளங்கிக் கொள்வதற்கான ஒரு தேடல்.

 

2 – 3 தொண் எண்களின் இடமானம்

 

ஒன்பது, தொண்ணூறு, தொள்ளாயிரம் என, அவை முறையே அவ்வாறு பெயர் பெற்றதற்கான ஏதுக்களை முதலில் காணவேண்டும்.

 

1 – ஒன்று, 2 – இரண்டு, 3 – மூன்று, 4 – நான்கு, 5 – ஐந்து, 6 – ஆறு, 7 – ஏழு, 8 – எட்டு போன்று 9 – ‘ஒன்பது’ ஓராம் இடத்தில் வருகிறது. இவற்றை முதல்நிலை எண்கள் எனலாம். இவை இடம் மாறி இருக்கும் போது இவற்றின் மதிப்பும் வேறுபடுகிறது. ஓராம் இடம், பத்தாம் இடம், நூறாம் இடம், என எண்கள் பெறும் இடத்தை வைத்து எண்கள் மதிக்கப்படுகின்றன. இது பெயரால் பெறும் மதிப்புடன் இடத்தால் பெறும் மதிப்பும் ஆகும்.

 

10 – ஒருபது, 20 – இருபது, 30 – முப்பது, 40 – நாற்பது, 50 – ஐம்பது, 60 – அறுபது, 70 – எழுபது, 80 – எண்பது என்பன பத்தாம் இடத்தில் உள்ளதால் பெற்ற பெயரும் மதிப்பும் ஆகும். அவ்வாறே 90 – தொண்ணூறும் பத்தாம் இடத்தில் உள்ளது. அதுவும் இடத்திற்கேற்ற மதிப்பையே பெறும். அவ்வாறே, தொள்ளாயிரம் நூறாம் இடத்தில் உள்ளது, ஆதுவும் இடத்திற்கேற்ற மதிப்பையே பெறும். எண்கள் இடம் மாறும் போது அவற்றை ஏற்று மதிப்பும் பெயரும் பெறும்.

 

‘9’ என்ற எண்ணுக்கு இடுகுறிப் பெயர் இல்லை. இடத்தால் பெற்ற பெயரும் இல்லை. பத்தாம் இடத்தில் இல்லாமலே பெற்ற பெயர் ஒன்பது. இது ஓராம் இடத்தில் இருந்துகொண்டே பெற்றபெயர். சரியாகச் சொல்வதானால் இதற்கென்று ஒரு பெயர் இல்லை. இதற்கு உள்ளதெல்லாம் அடுத்த இடத்தை அண்டிப் பெறும் பெயர்கள் மட்டுமே. இதுவே ஏனைய எண்களுக்கு இல்லாத இதன் சிறப்பு. அடுத்து வரும் பெரிய எண்இடப்பெயரை ஒட்டியே அறியப்படுகிறது.

 

இட மாற்றத்தை ‘எண்மான’ (digit) மாற்றம் என்றும் சொல்லலாம். மானம் என்றால் மதிப்பு. இடம் மாற மதிப்பு மாறும். தொண் எண்கள் ஒன்பதையே அடிமானமாகக் கொண்டவை. ஒன்பது என்ற எண் இடம் மாற அதன் மதிப்பும் மாறும்.

 

‘ஓன்று, ஓர், ஒரு’ போன்று எண்பெயர்களில் ஏற்படும் திரிபுகளையும் பரக்கக் காணலாம். அவை எண் பெயர் திரிபுகளே அல்லாமல் எண் மதிப்பில் மாற்றம் இல்லை. இலக்கியங்களில் அவை பரந்துள்ளன, இங்கு விரிவஞ்சித் தவிர்க்கப் பட்டுள்ளன. ‘இலக்கியங்களில் எண்பெயர்கள்’ என்ற தலைப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

 

2 – 4 தொண் எண்களின் கட்டுமானம்

 

தமிழ் தொண் எண்களின் பெயர்களை மேலும் விளங்கிக்கொள்ள உரோமன் எண்களை மாதிரியாகக் கொள்ளலாம்.

 

பத்துக்கு உரோமன் எண்குறியீடு X ஆகும்.

X என்னும் எண்குறியீடு முன் ஒன்றுக்கான I என்னும் எண் குறியீட்டை இட்டால், IX ஒன்பதுக்கான எண்குறியீடாகும்.
X-1 = IX (10 – 1 = 9). பத்திற்கு முன்னையது ஒன்பது.

 

நூறுக்கான உரோமன் எண்குறியீடு C ஆகும்.
C என்னும் எண்குறியீட்டு முன் பத்துக்கான X என்னும் எண்குறியீட்டை இட்டால், XC தொண்ணூறுக்கான எண்குறியீடாகும்.
C-X = XC (100 – 10 = 90). நூறுக்கு முன்னையது தொண்ணூறு.

 

ஆயிரத்துக்கான உரோமன் எண்குறியீடு M ஆகும்.
M என்னும் எண்குறியீட்டு முன் நூறுக்கான C என்னும் எண்குறியீட்டை இட்டால், CM  தொள்ளாயிரத்துக்கான எண்குறியீடாகும்.
M-C = CM (1000 -100 = 900). ஆயிரத்திற்கு முன்னையது தொள்ளாயிரம்.

 

2 – 5 தொண் எண்களின் பெயர் இலக்கணம்

 

தொண் எண்கள் முன்னைய எனக் குறிக்கும் தொண் என்பதை அடிப்படையாகக் கொண்டவை என ‘2 – 1 தொண்எண்பெயர்களின் புணரியல்’ என்ற தலைப்பில் காணப்பட்டுள்ளது. மேலும் தொண் என்னும் சொல் ஏனைய எண்பெயர்களுடன் புணருமாற்றைக் காணலாம்.

 

ஒன்பது

 

‘ஒன்’ என்ற சொல் ‘தொண்’ என்னும் பொருளில் பத்துடன் புணர்ந்து ‘ஒன்பது’ ஆகியதற்கான விளக்கம், ஏற்கனவே ‘2 – 1. தொண்எண்பெயர்களின் புணரியல் ஒன்பது’ என்ற தலைப்பில் ஆய்வுசெய்யப்பட்டுள்ளது. ‘ஒன்’ என்ற சொல்லும் ‘பத்து’ என்ற சொல்லும் புணர்வதில் ‘தகர ஒற்று’ கெட்டு ‘ண்’ திரிந்து ‘ன்’ ஆகியவாறு காணப்பட்டுள்ளது.

 

தொண்ணூறு

 

தொண், நூறு ஆகிய சொற்கள் புணர்ந்து தொண்ணூறு ஆகியதன் புணரியலைக் காண வேண்டும்: ‘நூறு’ எவ்வாறு ‘ணூறு’ ஆகிறது?

 

தனிக்குறில் முன்னொற் றுயிர் வரின் இரட்டும் (நன்னூல் 1999, 205)

 

தனிக்குறில் முன் – நிலை மொழியின் ஈற்றெழுத்தின் முன் தனிக் குறில் எழுத்தாகவும் – ‘தொ’

ஒற்று – தனிக் குறில் எழுத்தைத் தொடர்ந்து வரும் ஈற்றெழுத்து ஒற்றெழுத்தாகவும் – ‘ண்’

உயிர் வரின் – வருமொழியின் முதலெழுத்து உயிர் எழுத்தாகவும் இருப்பின் – ‘ஊ’

இரட்டும் – ஒற்றெழுத்து இரட்டிக்கும் – ‘ண் ண்’; தொண் + நூறு = தொண்ணூறு

 

மேலும் எடுத்துக் காட்டு: மெய் + உணர்வு = மெய்யுணர்வு
                                                       கல் + ஓடு = கல்லோடு
                                                      விண் + உலகம் = விண்ணுலகம்
                                                      வெண் + நீறு = வெண்ணீறு

 

தொள்ளாயிரம்

 

தொண், ஆயிரம் ஆகிய சொற்கள் புணர்ந்து தொள்ளாயிரம் ஆகியதன் புணரியலைக் காண வேண்டும்.

 

எலவே கூறிய நூற்பாவுக்கு (நன் 205) அமைய இங்கும் சொற்களைப் புணர்த்தலாம்: தொண் + ஆயிரம் = தொண்ணாயிரம்.

 

தொண் எவ்வாறு தொள் ஆகியது?

 

இலக்கணத்துள் அமையாது நடைமுறையில் உள்ளவற்றுக்கும் தொல்காப்பியம் இடம் கொடுக்கிறது.

 

உணரக்கூறிய புணரியல் மருங்கின்
கண்டுசெயற் குரியவை கண்ணினர் கொளலே (தொல். எழுத். 406)

 

உணரக் கூறிய – அறியுமாறு கூறப்பட்ட
புணரியன் மருங்கிற் – புணர்ச்சி ழுறையில்
கண்டு செயற் குரியவை – அறிந்து செய்யத் தக்கவற்றை
கண்ணினர் கொளலே – அறிவுடையோர் கொள்ளவேண்டும்

 

கூறப்பட்ட புணர்ச்சி முறையில் வழக்கினுள் கண்டும் முடிக்க என்றவாறு.

 

புணரியல் புறநடை இலக்கண விதிக்கு அமைய ‘ண்’ என்ற எழுத்து ‘ள்’ ஆவதைக் காணலாம்.

 

எடுத்துக் காட்டு:

 

தோண் – தோள், முண் – முள், வண் – வள், தூணி – தூளி, எண் – எள்ளு, வெண்மை – வெள்ளை, கேண்மை – கேள்மை, ஆண்மை – ஆளுமை, தெண்மை – தெளிவு, நீண்ட – நீள், மீண்ட – மீளுதல், மண்டர் – மள்ளர், உண்ணாக்கு – உள்நாக்கு, தெண்ணீர் – தெளிநீர், கொண்முதல் – கொள்முதல் … …

 

‘ண்’ என்ற எழுத்துக்கும் ‘ள்’ என்ற எழத்துக்கும் உள்ள தொடர்பைப் பல சொற்கள் காட்டுகின்றன. இது நாப் பழக்கம்.

 

ஆந்த வகையில் ‘தொண்’ என்ற சொல் ‘தொள்’ ஆக மாறிய பின், ‘தொள் + ஆயிரம்’ ஆகிய சொற்களின் புணர்ச்சியைப் பார்க்கலாம்:

 

புள்ளி யீற்றுமுன் உயிர்தனித் தியலாது
மெய்யொடு சிவணும் அவ்வியல் கெடுத்தே (தொல் 2019 எழுத். 138)

 

புள்ளி யீற்றுமுன்                                                                                           – ள்
உயிர்                                                                                                                    – ஆ
தனித் தியலாது மெய்யொடு சிவணும்                                              – ள் + ஆ = ளா
அவ்வியல் கெடுத்தே                                                                                    – (ஆ மறையும்)

தனிக்குறின் முன்னொற் றுயிர்வரி னிரட்டும் (நன்னூல் 1999, 205)

 

(தொண்ணூறில் விரிவாகப் பார்க்கப்பட்டுள்ளது)

 

தனிக்குறின்                                                                                                      – தொ
முன் ஒற்று                                                                                                          – ள்
உயிர்வரின                                                                                                        – ஆ
இரட்டும்                                                                                                               – ள் ள்

 

உடன்மே லுயிர்வந் தொன்றுவ தியல்பே (நன்னூல் 1999, 204)

 

உடன்மேல்                                                                                                          – ள்
உயிர்                                                                                                                      – ஆ

வந்தொன்றுவது                                                                                               – ள் + ஆ = ளா
இயல்பே (இயல்புப் புணர்ச்சி)

 

தொள் + ஆயிரம் = தொள்ளாயிரம் ஆகும்.

 

இவ்வாறாகத் தொண்எண்யெர்களுக்கு இலக்கணம் காணலாம்.

 

 

முடிவுரை

 

‘தொண்எண்கள்’ என்பது: ஒன்பது, தொண்ணூறு, தொள்ளாயிரம் ஆகிய எண்களை ஏனைய எண்களிலிருந்து வேறுபடுத்திப் பார்ப்பதற்கான ஒரு சொற்கோர்வை.

 

எண்சொற்கள் புணரும் முறையாலும், எண்களின் இட மதிப்பாலும், எண்களின் கட்டுமானத்தாலும், தொல்காப்பியம் காட்டிய வழியில், எண் சொற்களை உள்ளது உள்ளபடி விளங்கிக் கொள்வதற்கான ஒரு முயற்சி இது.

 

சொற்கள் நடைமுறையில் மரபு மாறாது தொடர்வன.

 

எப்பொரு ளெச்சொலி னெவ்வா றுயர்ந்தோர்
செப்பின ரப்படிச் செப்புதன் மரபே (நன்னூல் 1999, 399)

 

 

ஆதார நூல்கள்

 

தொல்காப்பியம்

2019   தொல்காப்பியம் எழுத்து – சொல் – பொருள், உரை இளம்பூரணர், பதிப்பாசிரியர்: எஸ்.கௌமாரீஸ்வரி, சாரதா                                  பதிப்பகம், சென்னை. முதற் பதிப்பு: 2005.

 

நன்னூல்

1999   பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் மூலமும் சங்கர நமச்சிவாயர் செய்து சிவஞானமுனிவரால் திருத்தப்பட்ட புத்தம்              புத்துரை என்னும் விருத்தியுரையும், புதிப்பாசிரியர்: அ.தாமோதரன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

 

 

[குறிப்பு: இக் கட்டுரை பற்றிய உங்கள் எண்ணங்களை ‘தொடர்பாடல்’ ஊடாக தெரியப்படுத்தவும், நன்றி.]