Numbers and Letters
Prelude
[?]
Why is 90 called ‘thonuru’ and 900 ‘tholaayiram’ in Tamil?
Tamil word Thonnuru for 90 and Thollaayiram for 900 are wrong usages which attained wide usage because of ignorance of the people . Ancient Tamil had the word THONDU for nine. Tamil grammarian Tholkappiyar (865 B C ) also mentioned it. Thondu became thon – thou – nav in Hindi, nava in sanskrit and it is thau in Russian. Tamil word Thondu-Thon -Thau has thus crossed the geographical, political borders through the international Tamil merchants.
Therefore it is the bounden duty of the Tamils to use the right words Thonbathu for 90 and onbathu nooru for 900 instead of Thonnuru and Thollaayiram.
(www.quora. Com – Raman Madhivanan, Director, indus script study centre )
It means:
Thondu for 9
Thonpathu for 90
Onbathu [?] nooru [Thonnooru] for 900
…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
நீண்ட நாட்களாகவே தமிழ் மொழியில் 90 மற்றும் 900 ஆகிய எண்களைப் பெயரிட்டு அழைக்கும் வழக்கில் ஒரு முரண் இருப்பதான உறுத்தல் இருந்துவந்தது. நூறு (100) வருவதற்கு முன்பாகவே தொண்ணூறு (90) எப்படி வருகிறது? ஆயிரம் (1000) வருவதற்கு முன்பாகவே தொள்ளாயிரம் (900) எப்படி வரமுடியும்?
…
அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரே பதில் ‘தொண்டு’என்பதுதான்,
‘தொண்டு’ என்பது 9 என்கிற எண்ணைக் குறிக்கும் பழம் தமிழ்ச் சொல்லாக, தொல்காப்பியர் காலத்திற்கு முன்பான தமிழகத்தில், வழக்கில் இருந்திருக்கிறது.
…
9 தொண்டு
90 தொண்பது (தொண்டு பஃது)
900 தொண்ணூறு (தொண்டு நூறு)
9000 தொள்ளாயிரம் (தொண்டு ஆயிரம்)
…
9 என்கிற எண்ணைக் குறிக்கும் இந்த ‘தொண்டு’ எப்போது வழக்கொழிந்தது?
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதாவது தொல்காப்பியர் காலத்திற்கு முன்பாகவே வழக்கொழிந்து விட்டது.
…
(சு. இராமசுப்பிரமணியன், பண்டு இருந்த ‘தொண்டு’, காக்கைச் சிறகினிலே இறக்கை: 7 இறகு: 7 – ஜுலை 2018)
இவ் முற்குறிப்புகளுடன் தேடலைத் தொடங்கலாம் …
…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
எண்ணும் எழுத்தும்
முன்னுரை
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
(கொன்றை வேந்தன்)
எண்என்ப ஏனை எழத்துஎன்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு
(திருக்குறள்)
தமிழ் நீதி நூல்கள் ‘எண்ணும் எழுத்தும் கண்’ என கூறுகின்றன. இவற்றை ‘கண்’ என மட்டும் அல்லாது, ‘எண், எழத்து’ என இரு வேறாகவும் கூறுகின்றன. ஒலி, வரி ஆகிய இரு வடிவங்ளைக் கொண்டது எழுத்து. எண் என்பதை ஒலி வடிவத்தில் சொல்லலாம், வரிவடிவத்தில் எழுதலாம், குறியீடாகவும் குறிக்கலாம். எண், எழுத்து ஆகிய இரண்டில், எழுத்து இரண்டு வடிவங்களைக் கொண்டிருக்க எண் மூன்று வடிவங்களைக் கொண்டுள்ளது.
தமிழில் எண்களின் எழுத்திற்கும் எண்களின் குறியீட்டுக்குமான உறவைக் காண விழைகிறது இவ் ஆய்வுரை. இவ் ஆய்வுரை மூன்று பாகங்களைக் கொண்டது.
1. தொண்டும் ஒன்பதும்
முதலில், ‘ஒன்பது’ என்ற எண்ணுக்கும் ‘தொண்டு’ என்ற சொல்லுக்கும் உள்ள உறவைக் காணலாம்.
2. தொண் எண்களும் எழுதிலக்கணமும்
அடுத்து, எண்பெயர்களுக்கான இலக்கண விளக்கங்களைக் காணலாம்.
3. தொண்டுதொட்டு எண்பெயர்கள்
எண்பெயர்களின் தொடர்ச்சியையும் எண்குறியீட்டு மாற்றங்களையும் காணலாம்.
இணைப்பு – 1
எண்பெயர்களும் குறியீடுகளும்
இணைப்பு -2
இலக்கியங்களில் எண்பெயர்கள்
1. தொண்டும் ஒன்பதும்
அறிமுகம்
‘தொண்டு’ என்ற சொல் இலக்கியங்களில் பரவலாக எடுத்தாளப்படவில்லை. ஆனால், அச் சொல் வரும் இடங்களில் உரையாசிரியர்களாலும், ஆய்வாளர்களாலும் பொருள் பலவாறாகக் கூறப்படுகின்றது. இலக்கியங்களில் தொண்டு என்ற சொல் வரும் இடங்களைக் கண்டு, அதன் உண்மைப் பொருளைக் காண்பதே இவ் ஆய்வுப் பகுதியின் நோக்கம்.
இங்கு எடுத்தாளப்படும் கலைச் சொற்களுக்கான விளக்கங்களை முதலில் வரையறை செய்யவேண்டும்:
ஒலி வடிவம் – எழுத்துக்கு உச்சரிக்கப்படும் தெளிவான ஓசை.
வரி வடிவம் – தெளிவான ஓசைக்கு வரிக்கப்படும் எழுத்து.
பொருள் – உட்கருத்து
குறிப்பொருள் – புலப்படாத பொருள்.
பருப்பொருள் – புலப்படும் பொருள்.
குறியீடு – ஒரு கருத்தைத் தெரிவிக்கும் அடையாளம்.
இடுகுறி – காரணம் பற்றாது தொன்றுதொட்டு வழங்கி வருவது.
மேலும், சொற்களுக்கு விளக்கங்களை ஆங்காங்கு காணலாம்.
1 – 1. ஓலி வடிவமும் வரி வடிவமும்
ஒலி வடிவமே எழுத்தாக்கத்திற்கு அடிப்படையானது.
மொழிமுதற் காரண மாமணுத் திரளொலி
எழுத்தது … … (நன்னூல் 1999,; பா58)
வரலாற்றில் எழுத்தின் வரி வடிவம் மாற்றமடைந்து வந்துள்ளது. தொல்காப்பியர் காலத்து வரி வடிவம் வெறு, தற்காலத்து வரி வடிவம் வேறு. அவைபற்றி பல ஆய்வுகள் நடந்துள்ளன. மாற்றங்களை அவற்றுக்கான ஆய்வுகளில் காணலாம். கல்வெட்டுகளிலும் காணலாம். எங்கள் காலத்திலேயே எழுத்தின் வரி வடிவம் மாற்றம் அடைந்துகொண்டிருப்பதைக் காண்கிறோம். அறிவியல் வளர்ச்சியில் கணினியின் தாக்கத்தால் காலப்போக்கில் மேலும் மாற்றங்கள் நிகழலாம். எழுத்தின் வரிவடிவத்தில் நிகழும் மாற்றங்களைக் காண்பது இன்னொரு ஆய்வு. அது இங்கு மேற்கொள்ளப்பட வில்லை.
எழுத்தின் ஒலி வடிவத்தில் மாற்றம் இல்லாது இன்றுவரை நடைமுறையில் தொடர்வதை தொல்காப்பியம் எழுத்தின் பிறப்பியல் இலக்கணம் காட்டும்.
உந்தி முதலா முந்துவளி தோன்றித்
தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப்
பல்லும் இதழும் நாவும் மூக்கும்
அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்
உறுப்புற் றமைய நெறிப்பட நாடி
எல்லா வெழுத்துஞ் சொல்லுங் காலைப்
பிறப்பின் ஆக்கம் வேறுவே றியல
திறப்படத் தெரியுங் காட்சி யான (தொல் 2019 எழுத் பா83)
இவ்வாறு தமிழ் எழுத்துக்களின் ‘பொதுப் பிறப்பு’ வரையறுக்கப்படுகிறது. ஓவ்வொரு எழுத்துக்கும் பிறப்பிலக்கணம் உண்டு, விரிக்கின் பெருகும்.
எழுத்தின் திரள்ஒலி சொல்லாகும். ஆனால் எல்லா வேளைகளிலும் எழுத்து சொல்லாகத் திரள்வதில்லை.
எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே (தொல் 2019 சொல் பா152)
எழுத்தின் திரள்ஒலி பொருள் குறிக்கும்போது சொல்லாகிறது. உள்ள பொருளையே சொல் சுட்டுகிறது. ஆகவே, சொல்லுக்கு முந்தியது பொருள். இது ‘பொருள் முதல் வாதம்’.
எல்லாச் சொல்லுக்கும் ஒலி, வரி, பொருள் ஆகிய மூன்று வடிவங்கள் உள்ளன. எண்ணும் சொல்லாகும்; சொல்லாக இருந்தாலும் எண்ணுக்கு ஒலி, வரி, குறியீடு ஆகியன இடுகுறிகளாக உள்ளபோது குறிப் பொருளையும், பொருளாக எண்ணப்படும்போது பருப் பொருளையும் பெறுகிறது. அஃதாவது, பொருளுக்கு அடைமொழியாகும் போது (numeral adjective), எண் பருப்பொருளைப் பெறுகிறது.
எழுத்து வரி வடிவத்தில் மாற்றம் நிகழ்ந்ததைப் போல எண்ணின் குறியீட்டிலும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஆனால் தொன்று தொட்டு ஒலி வடிவத்தில் மாற்றம் இல்லாது எழுத்து தொடர்வது போல ஒலிவடிவத்தில் மாற்றம் இல்லாது எண்ணும் தொடர்கிறது.
எண்ணின் ஒலி வடிவத்தில் மாற்றம் நிகழவில்லை என்ற நிலைகோள் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. குறிப்பாக: 9, 90, 900 ஆகிய எண்களைக் கூறலாம். சான்றுகள் என தமிழ் இலக்கண இலக்கியங்களில் இருந்தும் எடுத்துக்காட்டப் படுகின்றன. அவற்றைப் பார்க்கலாம்.
1 – 2. தொண்டும் திவவும்
பத்துப்பாட்டு மலைபடுகடாம், பேரியாழின் இயல்பு கூறும் இடத்து ‘தொண்டு’ என்ற சொல் வருகிறது:
தொடித்திரி வன்ன தொண்டுபடு திவவிற் (பா21)
எடுத்துக்காட்டாக ஒருசில உரைகளைப் பார்க்கலாம்.
நச்சினார்க்கினியர் உரை கூறுவார்:
தொடியினது உறழ்ச்சியையொத்த உறழ்ச்சியுடைய ஒன்பதென்னுமெண் உண்டான வார்க்கட்டினையும் (2017, ப710).
வ.வே.சுப்பிரமணியன் உரை கூறுவார்:
வளையல் போன்ற நெகிழ்ச்சியும் இறுக்கமும் அமைந்த ஊறழ்ச்சியை உடையது. ஒன்பது என்னும் எண் போன்று வடிவில் வார்க்கட்டை உடையது.
தொண்டு – ஒன்பது
திவவு – வார்க்கட்டு (2003, ப564 – 565)
வி.நாகராசன் உரை கூறுவார்:
வளையலின் உறழ்ச்சியைப் போன்ற உறழ்ச்சியுடைய ஒன்பது வார்க் கட்டினை உடையது (2017, ப392).
தொடி – வளையல்
தொண்டு – ஒன்பது
திவவு – வார்க்கட்டு, முறுக்காணி (ப394)
தொண்டு என்றால் ஒன்பது என்பதே உரையாசிரியர்களின் ஒருமித்த முடிவு.
யாழின் வார்க்கட்டுக்கும் தொண்டுக்கும் உள்ள உறவுபற்றி வேறு இலக்கியங்களில் உள்ளதா என்று பார்க்கலாம்.
ஒன்பான் விருத்தியுட் டலைக்கண் விருத்தி
நன்பா லமைந்த விருக்கையளாகி (சிலப் 1950, பா8:25)
சிலப்பதிகாரம் மூலப்பாடல்களில் ‘தொண்டு’ என்ற சொல் இல்லை. ஆனால் அரும்பதவுரையில் காணலாம்.
இருக்கை முறைமைபற்றிக் கூறும் இப் பாடல் அடிகளுக்கு கோவை வகைகள் எனப் பொருள் கொண்டு,
… ஒன்பான்கோவை: ‘தொண்டுபடு திவவின் முண்டக நல்யாழ்‘ என ஆசிரியமாலையுள்ளும் கண்டுகொள்க (சிலப் 1950, ப219)
என, அரும்பதவுரையாசிரியர் கூறுகிறார். ஓன்பான் என்பதற்கு தொண்டு எனப் பொருள் காண்கிறாரோ என எண்ணத் தோன்றுகிறது.
இங்கு ‘ஒன்பான்’ என்ற சொல் கவனத்திற்குரியது.
‘தொண்டு’ என்ற சொல் என்ன பொருள் கொள்கிறது?
(ஆசிரியமாலை கிடைக்கவில்லை, தேடிப் படிக்கவேண்டும்).
எது எப்படியோ, பலரின் உரைகளுக்கு அமையத் தொண்டு என்றால் ஒன்பது எனப் பொருள் கொள்வதாகத் தற்போதைக்கு ஏற்றுக்கொள்ளலாம்.
1 – 3. தொண்டும் திருமாலின் தத்துவங்களும்
பரிபாடல் மூன்றம் பாடலில் திருமாலின் உருவமும் பெயரும் அளவில்லாதவை என கைகளை வைத்துப் போற்றிப் பாடப்படுகிறது. இங்கு கவனத்தைப் பெறுவது எண்பெயர்கள்:
… … … நின் புகழுரு வினகை
நகையச் சாக நல்லமிர்து கலந்த
நடுவுநிலை திறம்பிய நயமி லொருகை
இருகை மாஅல்
முக்கை முனிவ நாற்கை யண்ணல்
ஐங்கைம் மைந்த வறுகை நெடுவெள்
எழுகை யாள வெண்கை யேந்தல்
ஒன்பதிற்றுத் தடக்கை மன் பேராள
பதிற்றுக்கை மதவலி நூற்றுக்கை யாற்றல்
ஆயிரம்விரித்தகைம் மாய மள்ள
பதினா யிரங்கை முதுமொழி முதல்வ
நூறா யிரங்கை யாறறி கடவுள்
அனைத்து மல்லபல வடுக்க லாம்பல்
இனைத்தென வெண்வரம் பறியா யாக்கையை
நின்னைப் புரைநினைப்பி னீயல துணர்தியோ
முன்னை மரபின் முதுமோழி முதல்வா (2017 3: பா32-47)
எண்களைக் கூறிவருகையில் ‘ஒன்பதிற்று’ என்றே எண்ணப்படுகிறது, தொண்டு எனக் கூறப்படவில்லை.
அதே பாடலில் திருமாலின் தத்துவங்களும் எண்களை வைத்துக் கூறப்படுகின்றன:
பாழெனக் காலெனப் பாகென வொன்றென
இரண்டென மூன்றென நான்கென வைந்தென
ஆறென வேழென வெட்டெனத் தொண்டென
நால்வகை யூழியெண் ணவிற்றுஞ் சிறப்பினை (2017 3: பா77-80)
தத்துவ விசாரணையை விடுத்து எண்களை எண்களாக மட்டும் பார்த்தால்:
பாழென – இன்மை சுழி 0
காலென – கால் பங்கு, நாலில் ஒன்று 1/4
பாகென – அரைப் பங்கு, இரண்டில் ஒன்று 1/2
ஒன்றென இரண்டென மூன்றென நான்கென வைந்தென ஆறென ஏழென எட்டென – விளக்கிச் சொல்லாமலே தெரிந்த எண்கள் 1, 2, 3, 4, 5, 6, 7, 8.
எட்டுக்கு அடுத்துத் ‘தொண்டு’ என வருவதால் ‘தொண்டு’ என்ற சொல் ஒன்பது என்ற எண்ணைக் குறிப்பதாக எண்ணத் தோன்றுகிறது. அவ்வாறே பல உரையாசிரியர்களும் ஆய்வாளர்களும் எண்ணுகிறார்கள்.
‘தொண்டு – மூலப்பகுதி’ எனப் பரிமேலளகர் பொருள் கூறுவார். (2017 ப21). ஆனால், உ.வே.சாமிநாதையர் அடிக்குறிப்பில் ‘தொண்டு – ஒன்பது’ எனக் குறித்திருப்பார்.
ஏனைய உரையாசிரியர்கள் ஒன்பதாவது தத்துவம் மூலப்பகுதி எனப் பொருள் காண்கிறார்கள்.
உரையாசிரியர்கள் பெ.சுப்பிரமணியன், கு.வே.பாலசுப்பிரமணியன், அ.தட்சிணாமூர்த்தி ஆகியோர் கூடிக் கூறிய உரையிலும் தொண்டு என்ற சொல்லுக்குப் பொருளில் மாற்றம் இல்லை. ‘தொண்டு என்னும் மூலப்பகுதியும்’ (2017, ப67), ‘ஒன்பது – மூலப்பகுதி’ (2017, ப69) எனப் பொருள் காணப்பட்டுள்ளது.
உரையாசிரியர் இரா.சாரங்கபாணி இருபத்தைந்து தத்துவங்களை விளக்கி அவற்றுள் மூலப்பகுதியும் கூறி (2003, ப74), தொண்டு – (ஒன்பது) மூலப்பகுதி (76) என அருஞ்சொற் பொருளும் கூறுகிறார்.
‘தொண்டென’ என்பதை எண்களுடன் தொடர்ந்து முடிக்காது, ‘தொண்டென நால்வகை யூழியெண் ணவிற்றுஞ் சிறப்பினை’ (பா79-80) என அடுத்து வரும் அடியுடன் சேர்த்துப் படித்தால் வேறு பொருள் தரும். ‘முன்னை மரபின் முதுமொழி முதல்வா’ (3: பா47) என்பதுடன் ஒப்ப நோக்கி ‘தொண்டு’ என்றால் ‘முன்னை மரபு’ எனக் கொள்ளலாம். இறை தத்துவத்தை இன்மையிலும் தொன்மையிலும் தேடுவர், ஒன்பதுக்குள் அடங்காது.
ஒன்பதையும் விடமுடியாமல் மூலப்பகுதியையும் விடமுடியாமல் இரண்டையும் இணைத்து ஒன்பதாவது மூலப்பகுதி என உரையாசிரியர்கள் பொருள் கூறுகிறார்கள். ‘தொண்டு’ மேலும் ஆய்வுக்குரியது.
1 – 4. தொண்டும் தொடை வகையும்
தொல்காப்பியம் செய்யுளியலில் ‘தொடை’ பற்றி ஒரு எண்கணக்கு உண்டு. கூட்டல் கழித்தல் பெருக்கல் யாவும் ஒரு கணக்கில் வரும் சிக்கலான கணக்கு.
மெய்பெறு மரபின் தொடைவகை தாமே
ஐயீ ராயிரத் தாறைஞ் ஞூற்றொடு
தொண்டுதலை யிட்ட பத்துக்குறை எழுநூற்
றொன்பஃ தென்ப உணர்ந்திசி னோரே (1989, பா97)
தொல்காப்பிய ‘ஆசிரியர்’ கொடுத்த கணக்கிற்கு உரையாசிரிய ‘மாணவர்கள்’ ஆளுக்கொரு முறையில் விடை கண்டுள்ளார்கள். விரிக்கில் பெருகும், பார்க்க: வெள்ளைவாரணன், தொல்காப்பியம் செய்யுளியல் உரைவளம் 1989,பப406-505.
கணக்கில் தொல்காப்பியர் ஒரு ‘முடிச்சு’ இடுகிறார். கணக்கைச் செய்வதற்கு தொல்காப்பியர் இட்ட முடிச்சை விளங்கிக்கொள்ள வேண்டும். ‘தலையிட்ட’ என்பது தொல்காப்பியர் இட்ட முடிச்சு. தலையிட்ட என்ற சொல் வரும் இடங்களைக் கண்டு, அந்த முடிச்சை அவிழ்க்க முயற்சிக்கலாம்.
‘தலையிட்ட’ என்ற சொல் தொல்காப்பியத்தில் ஐந்து இடங்களில் உள்ளது: எழுத் பா104: 1,2: சொல் பா205: 2; பொருள் பா310: 10; செய்யுள் பா406. 3.
எடுத்துக்காட்டாக:
மூன்றுதலை யிட்ட முப்பதிற் றெழுத்தின் (தொல் 2019 எழுத் பா104: 1):
செய்முறை விளக்கம்: 30 + 3 = 33
அந்நா லைந்தும் மூன்றுதலை யிட்ட (தொல் 2019; சொல் பா205: 2)
செய்முறை விளக்கம்: 4 x 5 + 3 = 23
தலையிடுதல் என்றால் கூட்டுதல் என்று பொருள் காணலாம் (தமிழ்ப் பேரகராதி). கூட்டப்பட்டாலும், தொல்காப்பியரின் இலக்கணப்படி கூட்டப்பட்ட எண் தொடங்கும் இடத்தில் இடப்படுகின்றது. அஃதாவது தலையிடத்தில் இடப்படுகிறது. மொத்த எண் வரிசையில் அது முதலெண். இதுவே ஏனைய கூட்டல்களுக்கும் தலையிட்ட கூட்டலுக்கும் உள்ள வேறுபாடு. ‘தலையிட்ட’ என்ற சொல் இக் கணக்குச் செய்முறைக்கு அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது.
தொல்காப்பியரின் கணக்கு:
ஐயீ ராயிரத் தாறைஞ் ஞூற்றொடு
தொண்டுதலை யிட்ட பத்துக்குறை எழுநூற்
றொன்பஃ தென்ப
செய்முறை விளக்கம்:
ஐயீராயிரத்: 5 x 2 ஆயிரம் = பத்தாயிரம்
ஆறைஞ்ஞூற்றொடு: 6 x 5 நூறு = மூவாயிரம்
தொண்டு: (தேடலுக்குரிய சொல்)
தலையிட்ட: கூட்டப்பட்ட
பத்துக் குறை எழுநூற்றென்பஃது: 709 – 10 = 699
விடை: 10,000 + 3,000 + 699 = 13699
இளம்பூரணர் விடையும் அவ்வாறே:
வடிவுபெற்ற மரபினையுடைய தொடையினது பாகுபாடு பதின்மூவாயிரத் தறுநூற்றுத் தெண்ணூற்றொன்பது என்றவாறு (தொல் செய்யுளியல் 1989 ப457).
கூட்டப்பட்ட எண் தலையிட்ட எண்ணாகவும் உள்ளது. ஆனால் செய்முறையைக் கூறாது விடையைக் கூறிவிடுகிறார்.
தொண்டு என்பதற்கு ‘மரபினையுடைய’ எனப் பொருள் கொள்கிறார் போலத் தெரிகிறது.
‘தொண்டு’ என்பதை எண் ஒன்பதென ஊரையாசிரியர்கள் பலர் கொண்ட பொருளை ஏற்றுக்கொண்டு கணித்தால் செய்முறைகளும் விடைகளும் வேறுபடுகின்றன. விரிவஞ்சி விவரிக்கப்படவில்லை. பார்க்க:
பேராசிரியர்: (தொல் செய்யுளியல் 1989 பப458-460).
நச்சினார்க்கினியர்: (தொல் செய்யுளியல் 1989 ப478).
பேராசிரியர் வேள்ளைவாரணன் ஆய்வுரையிலும் தொண்டு என்றால் ஒன்பது எனப் பொருள் கொள்வதைக் காணலாம்.
தொண்டுதலையிட்ட’ என்பது ஒன்பது என்னும் எண்ணை முடியும் எண்ணாகவுடைய என்ற பொருளுடையது (தொல் செய்யுளியல் 1989 ப500).
தொல்காப்பியரின் கணிதக் கொட்பாட்டுக்கு அமைய கணக்கைச் செய்தால்:
தலையிட்ட பத்துக் குறை ஏழுநூற்றொன்பது (709-10=699); இதுவே பதின்மூவாயிரத்துடன் கூட்டிய எண்ணும், முதலில் இட்ட எண்ணும் ஆகும். இங்கு ஒன்பதைக் கூட்டினால் கணக்கு குளம்பிப் போகும். ஆகவே தொண்டு என்பதின் உண்மைப் பொருள் என்ன? ஆகவே தொண்டு என்பதின் உண்மைப் பொருள் என்ன?
1 – 5. தொண்டு பொருள் காணல்
தொண்டுபற்றி தொடக்கத்தில் கூறியவற்றை மீழாய்வுக்குட்படுத்த வேண்டியுள்ளது. முதலில் யாழில் ‘திவவு’ கட்டுவது பற்றிக் கூறிய சொற் கோவையைப் பார்க்கலாம்: ‘தொண்டு – படு – திவவு’ என மூன்று சொற்களைக் கொண்டதாக உள்ளது.
‘படு’ முன் சொல்லாக வந்தால், தன்மையின் மிகுதியைக் காட்ட அல்லது தன்மையை வலியுறுத்திக் கூறப்பயன்படும் பெயரடை (க்கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி 2008). படுதிவவு என்றால், திவவு படுமுடிச்சுப் போட்டுக் கட்டியதாகிவிடும். ஆனால் திவவு அவ்வாறு கட்டப்படவில்லை.
பைங்க ணூகம் பாம்புபிடித் தன்ன
வங்கோட்டுச் செறிந்த வவிழ்ந்துவீங்கு திவவின் (பத்துப். நச்சி. 2017 சிறு பா220-221)
பைங்கண் ஊகம் – பசிய கண்களையுடைய கரிய குரங்கை
பாம்பு பிடித் தன்ன – பாம்பு சுற்றியதைப் போன்று
அம் கோடு செறிந்த – அழகிய தண்டை நெருக்கமாகவும்
அவிழ்ந்து வீங்கு திவவின் – நெகிழ்ந்தும் இறுகியும் உள்ள வார்க்கட்டு
நெடும்பணைத் திரடோண் மடந்தை முன்கைக்
குறுந்தொடி யேய்க்கு மெலிந்துவீங்கு திவவின் (பத்துப். நச்சி. 2017 பெரும் பா12-13)
நெடும் பணைத் – நெடிய மூங்கிலை ஒத்த
திரள் தோள் மடந்தை – திரண்ட தோள் மகளுடைய
முன் கைக் – முன் கையில் உள்ள
குறுந் தொடி ஏய்க்கும் – சிறு வளையலைப் போல மருட்டும்
மெலிந்து வீங்கு திவவின் – சிறுத்துப் பெருக்கும் வார்க்கட்டு
திவவு நெகிழ்ச்சியும் இறுக்கமும் அமைந்த ஊறழ்ச்சியை உடைய வார்க்கட்டு. அது படுமுடிச்சு அல்ல. ஆகவே, திவவுக்குப் படு முன் சொல்லாக வர வாய்ப்பில்லை.
தொண்டுபடு எனப் ‘படு’ சொல்லுக்குப் பின்னாக வந்தால், ஆன என்ற பொருளில் இடைச்சொல்லாகும். சில எடுத்துக் காட்டுகளைப் பார்க்கலாம்:
ஒன்றுதும் என்ற தொன்றுபடு நட்பின் (நற் 2003, பா109: 1)
தொன்றுபடு – பழமையாகிய
தொன்றுபடு பழமொழி இன்றுபொய்த் தன்றுகொல் (அக 2017, பா101: 3)
தொன்றுபடு – தொன்றுதொட்டு வழங்கிவரும்
தொன்றுபடு என்பது தொன்மையைக் குறிக்கும். அவ்வாறே தொண்டுபடு என்ற சொல்லுக்கும் பொருள் காண வேண்டும். ஆனால், தொண்டு என்பதற்கு ஒன்பதெனப் பொருள் கொண்டு:
‘ஒன்பதென்னுமெண் உண்டான வார்க்கட்டினையும்’
‘ஒன்பது என்னும் எண் போன்று வடிவில் [?] வார்க்கட்டை உடையது’
‘ஒன்பது வார்க் கட்டினை உடையது’
என, உரையாசிரியர்கள் திவவு கட்டுவதுடன் ஒன்பது என்னும் எண்ணை வலியுறுத்துகிறார்கள்.
1 – 6. யாழும் திவவும்
ஒன்பது என்ற எண்ணுக்கும் யாழுக்கும் உள்ள உறவைக் காண, முதலில் யாழ்பற்றிப் பார்க்கலாம்.
யாழ் பெரும்பாலும் நால்வகைப்படும்:
ஒன்று மிருபது மொன்பதும் பத்துடனே
நின்றபதி னான்கும் பின்னேழும் – குன்றாத
நால்வகை யாழிற்கு நன்னரம்பு சொன்முறையே
மேல்வகைநூ லோதும் விதி
நால்வகை யாழுக்கும் நரம்புகள் முறையே:
பேரியாழிற்கு இருபத்தொன்று,
மகரயாழிற்குப் பத்தொன்பது,
சகோடயாழிற்குப் பதினான்கு,
செங்கோட்டியாழிற்கு ஏழு (பஞ்சமரபு 1973, ப10)
யாழின் பல உறுப்புகள்:
கோட்டின தமைதியுங் கொளுவிய வாணியும்
ஆட்டிய பத்தரின் வகையு மாடகமும்
தந்திரி யமைதியுஞ் சாற்றிய பிறவு
முந்திய நூலின் முடிந்த வகையே (சிலப் 1950, பா100)
இது யாழின் பிண்டத் தேடல் இல்லை. திவவுக்கும் ஒன்பது என்ற எண்ணிற்குமான தேடல். ‘கொளுவிய ஆணி’ என்பது திவவைக் குறிக்கும். வார்க் கட்டு என்றாலும் திவவைக் குறிக்கும். யாழ் பல வகையின; அவற்றுக்கான நரம்புகளும் பல எண்ணிக்கையின. அவற்றை ஒன்பது திவவுக்குள் எவ்வாறு கட்டமுடியும்?
எல்லாவகை யாழிற்கும் பொதுவான ஒரு கேள்வி, திவவு எத்தனை?
சீவகசிந்தாமணியில் விடை உள்ளது:
விளக்கழ லுறுத்த போலும் விசியுறு போர்வைத் தீந்தேன்
துளக்கற வொழுகி யன்ன துய்யறத் திரண்ட திண்கோல்
கொளத்தகு திவவுத் திங்கட் கோணிரைத் தனைய வாணி
அளப்பருஞ் சுவைகொ ணல்யா ழாயிர மமைக வென்றான் (1949, 3: பா559)
‘தீந்தேன் துளக்கு அற ஒழுகி அன்ன துய் அற திரண்ட திண் கோல் கொளத்தகு திவவு’
இனிமைகொண்ட நல்யாழாயிரம், விளக்கை அழலைச்சேர்த்தினால் போலும் நிறத்தவாய்த் தெரியாமற்போர்த்த போர்வையினையும் தேன் அசைவற ஒழுகினாற்போன்ற சிம்பறத் திரண்ட நரம்பு தன்னிடத்தே கொள்ளத்தக்க வார்க்கட்டினையுமுடையனவாய்க் கோள் நிரைத்தனைய எண்ணாட்டிங்களைப்போல அமையவென்றானென்க (1949, ப279)
‘தேன் அசைவற ஒழுகினாற்போன்ற சிம்பறத் திரண்ட நரம்பு தன்னிடத்தே கொள்ளத்தக்க வார்க்கட்டினையுமுடையனவாய்க்’
‘கொள்ளத்தக்க’ என்பதே விடை. எத்தனை நரம்புகளோ அத்தனை திவவு.
ஏலவே இவ் ஆய்வில் உரையாடலுக்குள்ளாவது பேரியாழ். பேரியாழுக்கு நரம்பு இருபத்தொன்று. அதற்குத் திவவும் இருபத்தொன்றாக இருக்க வேண்டும். இங்கு ஒன்பது பொருந்தவில்லை. ஆகவே, தொண்டு என்றால் ஒன்பது என்று கொள்ள முடியவில்லை, முந்தைய என்று பொருள் கொள்வதே பொருத்தமாகும். ‘தொண்டுபடு’ என்றால் ‘முந்திய நூலின் முடிந்த வகையே’ (சிலப் 1950, பா100) என்பது இங்கு படுபொருத்தம்.
1 – 7. ‘பாழ்’ என ஓர் எண்பெயர்
ஏலவே ‘தொண்டு’ என்ற சொல்லுக்கு விளக்கம் தேடி எடுத்தாளப்பட்ட பாடல் (1-3. தொண்டும் திருமாலின் தத்துவங்களும்), ‘பாழ்’ என்ற சொல்லையும் குறிப்பிடுவதால் மீண்டும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுகிறது.
பாழெனக் காலெனப் பாகென வொன்றென
இரண்டென மூன்றென நான்கென வைந்தென
ஆறென வேழென வெட்டெனத் தொண்டென
நால்வகை யூழியெண் ணவிற்றுஞ் சிறப்பினை (பரிபாடல் 2017 3: பா77-80)
எண்பெயர் வரிசையில் ‘பாழ்’ முதலில் கூறப்படுவது ஆய்வுக்குரியது. பாழ் எனப்படுவது பல் பொருள் கிழவி. ‘தமிழ்ப் பேரகராதி’ கூறும் பொருள்களுள் இங்கு கவனத்திற்குரியவை: Non- existance, nothingness, இன்மை: Primodial Matter, மூலப்பிரகிருதி; The soul, புருடன் ஆகியன.
பாழ் என்ற சொல்லை எண்பெயராகக் கொண்டால் ‘இன்மை’ என்பதைக் குறிக்கும் சொல்லாகக் கொள்ளலாம். இல்லாததைக் குறிப்பதால் பாழுக்குத் தமிழ் எண் வரிசையில் இடுகுறியும் இல்லையோ! என எண்ணத் தோன்றுகிறது. பாழுக்கான இடுகுறி ‘0’, ‘சுழியம்’ (zero) தமிழுக்கு இடையில் வந்தது. அது எண்களின் வரலாற்று ஆய்வுள்படும்.
‘தொண்டு’ என்றால் ஒன்பது என்ற எண்ணைக் குறிக்காது என ஆய்வில் காணப்பட்டுள்ளது. மேலும் தொண்டு என்பதற்கு ‘மூலப்பகுதி’ எனப் பரிமேலளகர் கண்ட பொருளும் ஆய்வுக்கு உட்படுத்தபடவேண்டி உள்ளது. மூலப்பகுதி – ‘எல்லாப்பொருளுந் தோன்றுதற் கிடமெனச் சொல்லுதன் மூலப்பகுதி‘ என மணிமேகலை (27: 205-6) பாடலை தமிழ்ப்பேரகராதி எடுத்துக்காட்டும். ‘மூலம்’ எனப் பொருள்படும் சொல் ‘பாழ்’ எனத் தமிழ்ப் பேரகராதியில் காணப்பட்டுள்ளது.
‘பாழ்’ என்ற சொல்லும் ‘தொண்டு’ என்ற சொல்லும் ஒரே பாடலில் வருகின்றன. ‘மூலம்’ என்பதற்கும் ‘முன்னைய’ என்பதற்கும் இடையிலுள்ள நுட்பமான பொருள் வேறுபாட்டைக் கருத்தில் கொள்ளவேண்டும். தொண்டு என்றால் ‘மூலம்’ அல்ல, ‘முன்னைய’ என்பதே சரியான பொருள்.
முடிவுரை
திவவிலும், திருமாலின் தத்துவங்களிலும், தொடைக் கணக்கிலும், ‘தொண்டு’ என்றால் ஒன்பது எனப் பொருள் காண முடியவில்லை. ஆகவே, ‘தொண்டு’ என்றால் ஒன்பது என்ற எண்ணைக் குறிக்கும் சொல் இல்லை என முடிவாகக் கூறலாம்.
‘தொண்டு’ என்ற சொல் ‘முந்தைய’ என்ற பொருள் கொள்கிறது. முந்தைய எனக் கருதப்படும் ‘தொண்’ எண்கள் உள்ளன. ‘தொண்’ எண்களுக்கும் தொண்டுக்கும் உள்ள பொருள் வேறுபாட்டைக் கருத்தில் கொள்ள வேண்டும். அடுத்து, தொண் எண்களின் இலக்கணங்களைப் பார்க்கலாம்.
‘எண் எழுத்து இகழேல்’
(ஆத்தி சூடி)
Postlude
முற் குறிப்புகளுக்குப் பிற் குறிப்பு
‘இலக்கியமும் வியர்வையும்’ என்ற கட்டுரையில் சீனப் புரட்சிக்காலப் புரட்சிகர எழுத்தாளர் லூசுன் (Lu Xun) ஓர் அடிப்படையான கேள்வியை எழுப்புகிறார். தொலைந்து போயின என்றால், அவற்றை எவ்வாறு அறிவது? மீழாக்கம் செய்வதற்கான கூறுகளை எங்கிருந்து பெறுவது? லூசுன் எழுப்பும் கேள்வியை இங்கும் எழுப்பலாம்.
லூசுன் எழுப்பும் கேள்வி
‘இலக்கியம் நின்று நிலைக்க வேண்டுமாயின், கால வரையற்ற மனிதப் பண்புகளை எடுத்துரைக்க வேண்டும். எடுத்துக் காட்டாக இங்கிலாந்து தேசத்தில் சேக்ஸ்பியரும், ஓர் இரு வேறு சிலரும் கால வரையற்ற மனித இயல்பை எழுதினார்கள். இதனால் அவை இன்றும் வாசிக்கப்படுகின்றன. ஏனைய எழுத்தாளர்கள் இதைச் செய்வதற்குத் தவறிவிட்டார்கள், ஆகவே அவர்கள் படைப்புகள் அழிந்துவிட்டன,’
என, சங்கை (Shanghai) நகரைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் இலக்கியம் பற்றி உரையாற்றும் போது கூறுகிறார்.
‘the more you explain the more bewildered I grow’ நீங்கள் எவ்வளவுக் கெவ்வளவு விளக்கிக் கூறுகிறீர்களோ அவ்வளவுக்கு மேலாக நான் குழப்பம் அடைகிறேன். சீனப் பேராசிரியர் கூறுவது உண்மையில் எனக்குப் பெரும் குழப்பமாக உள்ளது.
முன்னைய பல ஆங்கிலப் படைப்புகள் தொலைந்து போயின என வைத்துக் கொண்டாலும், இது கால வரையற்ற மனித இயல்புகளை எடுத்துரைக்கத் தவறியதால் என நான் கூறமாட்டேன்.
அப் படைப்புகள் அழிந்துபோயிருந்தால், பேராசிரியரால் எவ்வாறு அவற்றைப் படிக்க முடிந்தது? எவ்வாறு அவற்றில் ஒன்றும் காலவரையற்ற மனிதப் பண்புகளை எடுத்துரைக்கவில்லை எனத் தீர்மானிக்கமுடிந்தது? பேராசிரியர் கூற்று என்னால் புரிந்துகொள்ள முடியாதுள்ளது (தமிழாக்கம்).
(Lu Xun Selected Works Volume 2 ‘Literature and Sweat’ Translated to English by Yang Xianyi and Gladys Yang, Foreign Languages Press, Peijing, 2003 P381)
ஆதார நூல்கள்
இலக்கணம்
தொல்காப்பியம்
2019
தொல்காப்பியம் எழுத்து – சொல் – பொருள், உரை இளம்பூரணர், பதிப்பாசிரியர்: எஸ்.கௌமாரீஸ்வரி, சாரதா பதிப்பகம், சென்னை. முதற் பதிப்பு: 2005.
1989
தொல்காப்பியம் செய்யுளியல் உரைவளம், க.வெள்ளைவாரணன் ஆய்வுரை, மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை.
நன்னூல்
1999
பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் மூலமும் சங்கர நமச்சிவாயர் செய்து சிவஞானமுனிவரால் திருத்தப்பட்ட புத்தம் புத்துரை என்னும் விருத்தியுரையும், புதிப்பாசிரியர்: அ.தாமோதரன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
பஞ்சமரபு
1975
அறிவனார் இயற்றிய பஞ்சமரபு, பதிப்பாசிரியர் வித்துவான் வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர், சக்தி அறநிலைய வெளியீடு, ஈரோடு.
இலக்கியம்
அகநானூறு
2017
உரையாசிரியர் முனைவர் இரா.செயபால், தலைமைப் பதிப்பாசிரியர்கள் முனைவர் அ.மா.பரிமணம், முனைவர் கு.வே.பாலசுப்பிரமணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை.
நற்றிணை
2003
மக்கள் பதிப்பு, உரையாசிரியர் முனைவர் கதிர். மகாதேவன், முதன்மைப் பதிப்பாசிரியர்கள் முனைவர் தமிழண்ணல், முனைவர் சுப. ஆண்ணாமலை, கோவிலூர் மடாலயம், கோவிலூர்.
பத்துப்பாட்டு
2003
பத்துப்பாட்டு மக்கள் பதிப்பு, உரையாசிரியர் முனைவர் ச.வே சுப்பிரமணியன், முதன்மைப் பதிப்பாசிரியர்கள் முனைவர் தமிழண்ணல், முனைவர் சுப. ஆண்ணாமலை, கோவிலூர் மடாலயம், கோவிலூர்
2017
பத்துப்பாட்டு இரண்டாம் பகுதி உரையாசிரியர் முனைவர், வி.நாகராசன், தலைமைப் பதிப்பாசிரியர்கள் முனைவர் அ.மா.பரிமணம், முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன், நியுசெங்சுரி புக் ஹவுஸ்(பி)லிட்.. சென்னை.
2017
பத்துப்பாட்டு நச்சினார்க்கினியர் உரை, டாக்டர் உ.வே.சாமிநாதையரவர்கள் ஆராய்ச்சிக் குறிப்புகளுடன், டாக்டர் உ.வே சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை. முதற் பதிப்பு:1889.
பரிபாடல்
2003
பரிபாடல் மக்கள் பதிப்பு, உரையாசிரியர் முனைவர் இரா.சாரங்கபாணி, பதிப்பாசிரியர்கள் முனைவர் தமிழண்ணல், முனைவர் சுப. அண்ணாமலை. கோவிலூர் மடாலயம் கோவிலூர்.
2017
பரிபாடல் மூலமும் பரிமேலளகருரையும், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை. முதல்பதிப்பு: 1918.
2017
பரிபாடல் மூலமும் உரையும், உரையாசிரியர்கள்: முனைவர் பெ.சுப்பிரமணியன், முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன், முனைவர் அ.தட்சிணாமூர்த்தி. தலைமைப் பதிப்பாசிரியர்கள் முனைவர் அ.மா.பரிமணம், முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன், நியு செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிட்., சென்னை. முதல் பதிப்பு: 2004.
சிலப்பதிகாரம்
1950
இளங்கோவடிகளருளிச்செய்த சிலப்பதிகார மூலமும்
அரும்பதவுரையும் அடியார்க்குநல்லாருரையும், டாக்டர் வே.சாமிநாதையரவர்கள் எழுதிய பலவகை ஆராய்ச்சிக் குறிப்புகளுடன், எஸ். கலியாணசுந்தரையரால் பதிப்பிக்கப்பெற்றன.
மூன்றாம் பதிப்பு: 1927.
சீவகசிந்தாமணி
1949
திருத்தக்கதேவர் இயற்றிய சீவகசிந்தாமணி, நச்சினார்க்கினியர் ஊரை, முதன் நான்கு பதிப்பும் உ.வே. சாமிநாதையர். ஐந்தாம் பதிப்பு: எஸ்.கலியாணசுந்தரையர், சென்னை. முதற்பதி;ப்பு 1887.
நீதி நூல்
ஆத்திசூடி
கொன்றைவேந்தன்
திருக்குறுள்
அகரமுதலி
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி
தமிழ்ப் பேரகராதி
மற்றும்
Lu Xun Selected Works Volume 2, 2003 ‘Literature and Sweat’ Translated to English by Yang Xianyi and Gladys Yang, Foreign Languages Press, Peijing.
www.quora. Com – Raman Madhivanan, Director, indus script study centre
சு. இராமசுப்பிரமணியன், பண்டு இருந்த ‘தொண்டு’, காக்கைச் சிறகினிலே இறக்கை: 7 இறகு: 7 – ஜுலை 2018
[குறிப்பு: இக் கட்டுரை பற்றிய உங்கள் எண்ணங்களை ‘தொடர்பாடல்’ ஊடாக தெரியப்படுத்தவும், நன்றி.]