1. அறிமுகம்
அறுகம் புல்லை அகராதிகளில் தேடி அலைந்தபோது ‘ஓர்’, ‘ஒரு’ ஆகிய சொற்கள் தடக்குப்பட்டன.
யாழ்ப்பாண அகராதி (முதற்பதிப்பு 1842, மறுபதிப்பு 2006):
அறுகு – ஓர்புல்,
Winslow’s A Comprehensive Tamil and English Dictionary தமிழ் – ஆங்கில அகராதி, எம்.வின்சுலோ (Eith AES Reprint 1992, முதல்பதிப்பு 1862):
அறுகு – ஓர்புல்,
V. Visvanatha Pillai, Tamil and English Dictionary (AES First Published 1908, Second Reprint 1993)
அறுகு – ஓர்புல்,
நா.கதிரைவேற் பிள்ளையின் தமிழ் மொழியகராதி (ஆறாம்பதிப்பு 1992, First AES Reprint 1981, முதல்பதிப்பு 1918):
அறுகு – ஒருபுல்,
மதுரைத் தமிழ்ப் பேரகராதி (சந்தியா பதிப்பகம் முதற்பதிப்பு 2004, முதற்பதிப்பு 1937, இரண்டாம் பதிப்பு 1956):
அறுகு – ஒரு புல்,
‘அருகும் அறுகும்’ என்னும் கட்டுரையில் அகராதிகளில் உள்ளதை அப்படியே பதிவுசெய்தேன். ஒரு வாசக நண்பர் ‘உயிர் எழுத்துக்களின் முன் ஓர் வரும்’ எனச் சுட்டிக் காட்டினார். தெரிந்திருந்தும் ‘ஓர்’ என்பதன் முன் அவ்வாறே எடுத்தாளப்பட்டது என்பதைச் சுட்டும் ‘அப்படி’ (sic) [sic – used in writing after an error (such as a spelling error) in a quotation to show that the error was made by the speaker or writer who is being quoted and not by you – Merriam Webster Learners Dictionary] எனப் போடத் தயங்கினேன். அகராதிகளில் ஏன் ‘ஓர்’, ‘ஒரு’ என்பதில் வேறுபாடு இல்லாது எழுதினார்கள்? மேலும் விளக்கம் வேண்டும். இப்போ ‘ஓர் ஒரு’ என்னும் தலைப்பில் ஒரு தேடல் செய்யவேண்டி நேர்ந்துள்ளது.
2. அகராதிகளில்
முதலில் அகராதிகளில் ‘ஒர்’, ‘ஒரு’ ஆகிய சொற்கள் பொருள்பெறுமாற்றைக் காணலாம்:
ஓர் –
Tamil Lexicon, University of Madras:
An, the form used before substantives beginning with vowels
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி:
பெரும்பாலும் இலக்கண ஆசிரியர்கள் கருத்துப்படி உயிரெழுத்துகளில்
தொடங்கும் பெயர்களுக்கு முன் ஒன்று என்னும் எண்ணின் பெயரடை: adjectival form of ஒன்று (mostly before a vowel).
ஒரு –
Tamil Lexicon, University of Madras:
ஒன்று, (Used before a consonant) one; unique; special
க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி:
1. ‘ஒன்று’ என்னும் எண்ணின் பெயரடை; the adjectival form of ஒன்று.
– ஒரு ரூபாய்
2. பலரை அல்லது பலவற்றைக் கொண்டிருக்கும் தொகுப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துகிற வகையில் குறிப்பிடுகிற அல்லது எடுத்துக்காட்டுகிற; used adjectivally to refer to one in a group of similar things. – இந்தியா போன்ற ஒரு நாட்டில்.
3. ‘இன்னது இப்படி’ அல்லது ‘இவர் இப்படி’ என்ற திட்டவட்டமான எண்ணத்தை வெளியிடப் பயன்படுத்தும் ஒரு சொல்; word used to mean that s.o. or sth. mentioned is a reference. – இதுவும் ஒரு அழகுதான் …
மேலும் பல அகராதிகளைப் பார்த்த அளவில் ‘ஓர்’, ‘ஒரு’ பற்றித் திட்டவட்டமான முடிவுக்கு வரமுடியவில்லை. இன்னும் தேடவேண்டும்.
ஆங்கில மொழியிலும் இவற்றுக்கான விதிகளைக் காணலாம்:
A – ஒரு
An – ஓர்
The same rule still applies. “A” is used before words starting in consonant sounds and “an” is used before words starting with vowel sounds. It doesn’t matter if the word is an adjective, a noun, an adverb, or anything else; the rule is exactly the same (google).
ஆங்கிலத்தில் உயிர் எழுத்து ஒலிகள் மெய் எழுத்து ஒலிகள்பற்றி விரிக்கில் பெருகும்.
3. தொல்காப்பியத்தில்
ஓர், ஒரு ஆகியவற்றின் பயன்பாட்டுக்கு தமிழில் இலக்கணம் உள்ளதா என்று பார்க்கலாம்:
ஓர்:
முதலீ ரெண்ணின்முன் னுயிர்வரு காலை
தவலென மொழிப வுகரக் கிளவி
முதனிலை நீட லாவயி னான (தொல் 1: 455)
முதலீ ரெண்ணின்முன் – ‘ஒரு’ ‘இரு’ ஆகிய முதல் இரண்டு எண்களின் முன்
உயிர்வரு காலை – உயிர் எழுத்து வரும்போது
தவலென மொழிப – இல்லாது போகும் என்பர்
உகரக் கிளவி – ரு = ர் + உ; இதில் ‘உ’ கெட்டு ‘ர்’ நிற்கும்
முதனிலை நீடல் – முதலெழுத்துக்கள் நீளும்; ‘ஒ’ குறில் ‘ஓ’ நெடிலாகும்
ஆவயினான – அவ்வாறு ‘ஒரு’ என்பது ‘ஓர்’ ஆகும்.
உயிர் எழுத்துக்கள் வருமொழியின் முதலெழுத்தாயின் ‘ஒரு’ என்னும் எண்ணுப்பெயர் ‘ஓர்’ எனத் திரிபு பெறும்.
தொல்காப்பியத்தில் ஓர் வரும் இடங்கள்:
ஓரளபு (1: 3.4), (1: 57.1); ஓரெழுத்து (1: 5.1), (1: 43.1), (1: 45.1), (1: 227.1), (1: 268.1); ஓராங்கு (2: 241.2); ஓரிடத் (3: 17.2), (3: 86.1), (3: 109.36); ஓரினப் (3: 472.2); ஓரறிவு (3: 568.2), (3: 572.1).
ஆனால், ‘ஓர் பக்கம்’, ‘ஓர் நிலைமை’ என இலக்கண விதி மீறப்படுகிறதோ?
காவற் பாங்கின் ஆங்கோர் பக்கமும் (3: 44.21)
தலைமைக் குணச்சொலும் தத்தமக் குரியதோர்
நிலைமைக் கேற்ப நிகழ்த்துப வென்ப (3: 620)
ஒரு:
முதனிலை யெண்ணின்முன் வல்லெழுத்து வரினும்
ஞநமதோன்றினும் யவவந் தியையினும்
முதனிலை யியற்கை யென்மனார் புலவர் (தொல் 1: 478)
முதனிலை யெண்ணின்முன் – ‘ஒரு’ என்னும் முதல் எண்ணின் முன்
வல்லெழுத்து வரினும் – வல்லெழுத்துக்கள் வரினும்
ஞநம தோன்றினும் – ஞ, ந, ம ஆகிய மெல்லெழுத்துக்கள் தோன்றினும்
யவவந் தியையினும் – ய, வ ஆகிய இடையெழுத்துக்கள் வந்தியையினும்
முதனிலை யியற்கை – முதல் நிலை மாறாது இயல்பாக நிற்கும்
யென்மனார் புலவர் – என்று கூறுவர் புலவர்.
உயிர் எழுத்துக்கள் அல்லாத ஏனைய எழுத்துக்கள் வருமொழியின் முதலெழுத்தாயின் ‘ஒரு’ என்னும் எண்ணுப்பெயர் மாற்றம் இல்லாது இயல்பாக நிற்கும்.
தொல்காப்பியத்தில் ‘ஒரு’ வரும் இடங்கள்:
ஓரெழுத் தொருமொழி ஈரெழுத் தொருமொழி – ஒரு மொழி (1: 45.1),
ஒருநெறிப் (3.502.1),
4. இலக்கியங்களில்
‘இலக்கணம் இயம்பியதை இலக்கியம் கண்டதற்கு’ பழம் பெரும் இலக்கியங்களில் தேடிப் பார்க்க வேண்டும். அகநானூறு பாடல் அடிகளை ஆய்வு மாதிரியாகக் கொள்ளலாம்:
ஓர்:
இருதலைப் புள்ளின் ஓர்உயிர் அம்மே (12: 5)
உடைமதில் ஓர்அரண் (45: 18)
ஓர்இல் கூடிய (86: 20)
எம்மொடு ஓர்ஆறு படீஇயர் (257: 4)
ஓர்உயிர் மாக்களும் (305: 8)
ஓர்ஆ யாத்த (369: 24)
ஓர்எயில் (373: 18)
இலக்கணத்திற்கு அமைய ‘உயிர்வரு காலை’ ‘ஓர்’ வருவதைக் காணலாம். ஆனால் சில இடங்களில் இலக்கணவிதி மீறப்படுகிறதோ?
ஈங்குஓர் தொலைவு இல் (7: 11-12)
கொட்கும்ஓர் தேர் உண்டு (20: 16)
ஓர்யான் ஆகுவது (82: 17)
ஓர்புறம் தழீஇ (86: 22)
என்பஓர் குறுமகள் (96: 10)
இலக்கண மீறல் (?) விளக்கத்தைவேண்டி நிற்கிறது.
ஒரு:
ஒருசிறை (9: 18), (82: 13), (92: 10), (103: 9), (139: 11), (162: 9), (200: 9), (295: 7), (311: 2), (367: 7), (377: 11)
ஒருநாள்; (18: 9), (30: 12), (122: 17), (127: 11), (190: 8), (200: 5), (218: 15), (325: 12), (394: 11)
ஒருபகல் (36: 20)
ஒருவினை (44: 6)
ஒருகணை (48: 12)
ஒருபால் (52: 11)
ஒருகாழ் (73;: 4)
ஒருதிறன் (91: 6)
ஒரு காற் (107: 13)
ஒருதனித்து (107: 15)
ஒருநின் (170: 3)
ஒருபடை (174: 2)
ஒருதன் (190: 4)
ஒருபெருங் (195: 12)
ஒருகால் (219: 6), (360: 2)
ஒருவேல் (252: 5)
ஒருதிறம் (274: 7), (379: 23)
ஒருபதி (279: 3)
ஒருதனி (287: 8), (305: 13), (345: 19)
ஒருநரி (337: 15)
ஒருதலைப் (339: 10)
ஒருதூண் (369: 24)
ஒருதூக்கு (382: 4)
இலக்கணத்திற்கு அமைய ‘ஒரு’ இயல்பாக நிற்கிறது. ‘ஓர்’ மேலும் விளக்கத்தை வேண்டி நிற்கிறது.
உயிர் எழுத்துக்கள் வருமொழியின் முதலெழுத்தாக இல்லாத இடத்தும் ‘ஓர்’ என்பதை இலக்கியங்களில் பரவலாகக் காணலாம். இன்னும் ஒரு சங்க இலக்கிய நூலாகிய புறநானூறு பாடல்களை ஆய்வு மாதிரியாகக் கொள்ளலாம்:
விறகொய் மாக்கள் பொன்பெற் றன்னதோர்
தலைப்பாடு அன்றுஅவன் ஈகை (70: 17-18)
இருங்கடறு வளைஇய குன்றத்து அன்னதோர்
பெருங்களிறு நல்கி யோனே அன்னதோர்
தேற்றா ஈகையும் உளதுகொல்
போற்றார் அம்ம பெரியோர்தம் கடனே (140: 7-10)
செல்வத் தோன்றலோர் வல்வில் வேட்டுவன் (150: 7)
பாடுவல் விறலிஓர் வண்ணம் … (152: 13)
காணாது ஈத்த இப்பொருட்கு யானோர்
வாணிகப் பரிசிலன் அல்லேன் … (208: 6-7)
இன்னதோர் காலை நில்லலன்
இன்னே வருகுவுன் ஒழுக்க அவற் கிடமே (216: 11-12)
இனையதோர் காலை ஈய்கு வருதல் (217: 6)
இலம்பாடு ஒக்கல் தலைவற்கு ஓர்
கரம்பைச் சீறூர் நல்கினன் எனவே (285: 16-17)
சிறப்புடைச் செங்கண் புகையவோர்
தோல்கொண்டு … … … (311: 6-7)
பார்வை மடப்பிணை தழீஇப் பிறிதோர்
தீர் தொழில் தனிக்கலைதிளைத்துவிளை யாட (320: 3-4)
சிறிதென உணர்ந்தமை நாணிப் பிறிதுமோர்
பெருங்களிறு நல்கியோனே … … (394: 14-15)
இலக்கணப்படி முதனிலை யெண்ணாகிய ‘ஒரு’ வரவேண்டும். ஆனால், ‘ஒரு’ என்னும் எண்ணுப்பெயருக்குப் பதிலாக ‘ஓர்’ வந்ததன் காரணம் என்ன? இவற்றில் ‘ஓர்’ என்பது எண்ணைக் குறிக்காது வேறு பொருளைக் குறிக்கிறதோ? ‘ஓர்’ என்றால் ஒப்புநோக்காய்ச் சிறந்த ஒன்று எனக் கொள்ளலாமா? க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில் ‘ஒரு’ என்ற சொல்லுக்குக் கொடுக்கப்பட்ட விளக்கங்களை ‘ஓர்’ என்பதற்குப் பொருத்திப் பார்க்கலாம். குறிப்பாக இரண்டாவது, மூன்றாவது விளக்கங்கள் ‘ஒரு’ என்பதிலும் ‘ஓர்’ என்னும் சொல்லுக்குப் பெரும்பாலும் பொருந்துவனவாக உள்ளன. ‘இலக்கியங்களில்’ இவற்றைக் காணலாம்.
5. முடிவாக
கொண்டுகூட்டி ஒரு முடிவுக்கு வரவேண்டியுள்ளது. ஏலவே எடுத்தாளப்பட்ட தொல்காப்பிய நூற்பாக்கள் (1: 455; 1: 478) எண்ணுக்கானவை மட்டுமே. முதலெண் முன் உயிர் வரின் ‘ஓர்’ வரும். ‘ஓர்’ வராத இடங்களில் ‘ஒரு’ வரும்.
‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலின்’ எண் அல்லாது வேறு பொருள் கொள்ளின் தொல்காப்பிய நூற்பாக்கள் (1: 455; 1: 478) செல்லாது. சிறப்பைக் குறிக்கும் இடத்தும் ‘ஓர்’ வரும். இதற்கு ‘உயிர்வருகாலை’ என்ற கட்டுப்பாடு இல்லை. இது இலக்கண மீறல் இல்லை.
6. பின் இணைப்பு
‘In school we are taught the vowels: A, E, I, O, U, and sometimes Y’. இதை விரிக்கில் பெருகும். இங்கு ‘Y’ என்ற எழுத்தைக் கவனத்தில் கொள்ளலாம். இதுவும் சில இடங்களில் உயிர் ஒலியைப் பெறும். ‘யா’ என்ற எழுத்துக்கும் இவ்வாறான ஒரு விளக்கத்தைக் கொடுக்கலாம். ஆங்கிலத்தில் ஒலி வடிவம், தமிழில் வரி வடிவம். முதல் எண்ணின் முன் ‘யா’ வருகாலை:
அதனிலை யுயிர்க்கும் யாவரு காலையும்
முதனிலை யொகர மோவா கும்மே
ரகரத் துகரந் துவரக் கெடுமே (தொல் 1: 479)
அதனிலை உயிர்க்கும் – உயிர் எழுத்துக்குள்ள அதே நிலைப்பாடு
யா வருகாலையும் – யா என்னும் நெட்டெழுத்து வரும் போதும்
முதனிலை ஒகர – முதலில் உள்ள ஒ என்னும் குறில்
ஓ வாகும்மே – ஓ என்னும் நெட்டெழுத்தாகும்
ரகரத்து உகரம் – ர் + உ = ரு; ரு என்னும் எழுத்தில் உள்ள உகரம்
துவரக் கெடுமே – முற்றாக மறையும். ர் என்னும் எழுத்து நிற்கும்
ஒரு என்னும் சொல் ஓர் ஆகும்.
‘யா’ வருகாலையும் ‘ஓர்’ வரும்.
முந்நீர் ஏணி விறல்கெழு மூவரை
இன்னம் ஓர்யான் அவாஅறி யேனே (புற 137: 2-3)
யானை முன் வரினும் ஓர் வரும் – ஓர் யானை
யாழுக்கும் ஓர் வரும் – ஓர் யாழ்
இவை தமிழ் மரபு வழி வருவன. மரபு என்றால், எது எனத் தேடலாம்; ஆனால், ‘ஏன்’ எனத் தர்க்கிப்பது கடினம். ஏன் எனில், அது மரபு.
[குறிப்பு: இக் கட்டுரை பற்றிய உங்கள் எண்ணங்களை ‘தொடர்பாடல்’ ஊடாக தெரியப்படுத்தவும், நன்றி.]