தமிழர், தமிளர் ஆகிய இரு சொற்களின் இடையில் வரும் ழகாரம், ளகாரம் ஆகிய எழுத்துக்களுக்கு ஈழத்தமிழ் வழக்கில் முறையே ‘மவ்வழவு’, ‘கொம்பளவு’ எனப் பெயரிட்டுக் குறிப்பார்கள். மானா (ம) எழுதித் தொடர்வதால் மவ்வழவு (ழ) என்றும், கொம்பு எழுதித் தொடர்வதால் கொம்பளவு (ள) என்றும், இவ்விரு வரிவடிவங்களும் காரணப் பெயர் பெறும்.
எழுத்துக்களின் வரிவடிவங்கள் இவ்வாறுதான் அமையவேண்டும் என்பதற்கு இலக்கண விளக்கங்கள் இல்லை. அவை ஒரேமாதிரியாகத் தொன்றுதொட்டு எழுதப்படவும் இல்லை. அவை காலத்துக்குக் காலம் மாற்றமடைந்து வந்துள்ளன என்பதனை வரலாற்று அடையாளங்களில் காணலாம். ஆனால் எழுத்துக்களின் ஒலி வடிவங்கள் தொன்றுதொட்டு ஓரேமாதிரியாகவே இருந்துவந்துள்ளன என்பதற்கு இலக்கண வரையறைகள் சான்றுபகரும்.
தொல்காப்பியம் (தொல்) எல்லா எழுத்துக்களுக்குமான பிறப்பியலை முதலில் பொதுவாகக் கூறி, தொடர்ந்து ஒவ்வொரு எழுத்துக்குமான பிறப்பியலை விளக்கிக் கூறும். அவ்வாறே நன்னூல் (நன்) நூற்பாக்களிலும் காணலாம்.
உந்தி முதலா முந்துவளி தோன்றித்
தலையினு மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப்
பல்லு மிதழு நாவு மூக்கும்
அண்ணமு முளப்பட வெண்முறை நிலையான்
உறுப்புற் றமைய நெறிபட நாடி
எல்லா வெழுத்துஞ் சொல்லுங் காலைப்
பிறப்பி னாக்கம் வேறுவே றியல
திறம்படத் தெரியுங் காட்சி யான (தொல் 83)
நிறையுயிர் முயற்சியி னுள்வளி துரப்ப
எழுமணுத் திரளுரங் கண்டம் முச்சி
மூக்குற் றிதழ்நாப் பல்லணத் தொழிலின்
வெவ்வே றெழுத்தொலி யாய்வரல் பிறப்பே (நன் 74)
இங்கு தேடப்படுவது ழகார, ளகார ஒலிப் பிறப்பின் இலக்கணம்.
நுனிநா வணரி யண்ணம் வருட
ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும் (தொல் 95)
அண்ண நுனிநா வருட ரழவரும் (நன் 83)
நாவிளிம்பு வீங்கி யண்பன் முதலுற
ஆவயி னண்ணம் ஒற்றவும் வருடவும்
லகார ளகார மாயிரண்டும் பிறக்கும் (தொல் 96)
அண்பன் முதலு மண்ணமு முறையின்
நாவிழிம்பு வீங்கி யொற்றவும் வருடவும்
லகார ளகாரமா யிரண்டும் பிறக்கும் (நன் 84)
இந்நூற்பாக்ளில் கவனத்தில் கொள்ளப்படுவன ழகாரம், ளகாரம் ஆகிய இரு எழுத்துக்கள்.
நாவின் நுனி மேனோக்கி அண்ணத்தை வருட ழகாரம் பிறக்கும்.
நாவிளிம்பு வீங்கி அண்ணத்தை வருட ளகாரம் பிறக்கும்.
ளகார, ழகார எழத்துக்களின் பிறப்பிடங்களையும் நாப்பழக்கத்தையும் மேலும் விளங்கிக்கொள்ள லகாரத்தின் பிறப்பிடத்தையும் நாப்பழக்கத்தையும் ஒப்புநோக்கி அறிந்துகொள்ளவேண்டும்.
‘தமிழ்த் தேசிக அரங்கச் செயிற்றியம்‘ கற்கை நெறியில் தமிழ்மொழி ஒலி வடிவங்களை அறிந்துகொள்ள, பயிற்று முறையில் தேவாரப் பாடல்கள் இணைக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாகத் திருஞானசம்பந்தசுவாமிகள் ‘வழிமொழித் திருவிராகம்’ பதிகத்திலிருந்து,
ழகாரம்:
ஒழுகலரி தழிகலியில் உழியுலகு
பழிபெருகு வழியைநினையா
முழுதுடலில் எழுமயிர்கள் தழுவுமுனி
குழுவினொடு கெழுவுசிவனைத்
தொழுதுலகில் இழுகுமலம் அழியும்வகை
கழுவுமுரை கழுமலநகர்ப்
பழுதிலிறை யெழுதுமொழி தமிழ்விரகன்
வழிமொழிகள் மொழிதகையவே
இவ்வாறாகத் தமிழ் எழுத்துக்களைப் பயிலப் பாடல்கள் உள்ளன, விரிக்கில் பெருகும். ‘தமிழ்த் தேசிக அரங்கச் செயிற்றியம்’ வெளியிடப்படவில்லை.
தமிழ் இலக்கணங்களில் இருந்தும், அரங்கர் பயிற்றுகளில் இருந்தும் கற்றவற்றில் அறிந்தவை:
மேல்வாய்ப் பல்லின் அடிப்பாகத்தை நா ஒற்ற லகாரம் பிறக்கும்.
அண்ணத்தின் நடுப்பாகத்தை நா வருட ளகாரம் பிறக்கும்.
அண்ணத்தின் பின் பாகத்தை நா வருட ழகாரம் பிறக்கும்.
எழுத்தொலி பிறக்கும் இடமும் செயலும் மாற எழுத்தொலியும் வேறுபடுகிறது. எழுத்தொலி வேறுபாட்டால் சொற்பொருளும் மாறிவிடுகிறது. இவற்றுக்கு எடுத்துக்காட்டாகச் சொற்களைப் பட்டியல் இட்டால் மிக நீளும்.
என் மனதை உறுத்திய தமிழர், தமிளர் ஆகிய இரு சொற்களை விளக்கத்திற்காக எடுத்துக்கொள்ளலாம். முதலில் தமிளர் என்ற சொல்லைப் பார்க்கலாம். தமிளர் என்பது ‘tumbler‘ என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ் ஒலிபெயர்ப்பாகும். அதை நேரடியாகவே ‘டம்ளர்’ என்று சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலம் – தமிழ் அகராதி (1965) ஒலிபெயர்க்கும். அதற்குக் குவளை என்றும் பொருள் கூறும். ஒலிபெயர்ப்பில் ளகாரம் வருவதைக் கவனிக்க.
சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி (Reprinted 1982) தமிளர் என்ற சொல்லுக்கான பொருளை தமிழர் என்ற சொல்லில் காணும்படி கூறிப் பொருள் கூறும்:
தமிழர் – tumbler, drinking cup, விளிம்பில்லாத தீர்த்தபாத்திரம்.
[வேறு பொருள் ஏதும் கூறப்படவில்லை]
மதுரைத் தமிழ்ப் பேரகராதி (2004) பொருள் கூறும்:
தமிழர் – தமிழ்ப்பாடைக்காரர், விளிம்பில்லாத தீர்த்தபாத்திரம்.
Dictionary by Merriam Webster – Google:
Tumbler – a glass used for drinking that has a flat bottom and no stem or handle.
வேண்டுமானால் மூக்கில்லாத பேணி என்றும் சொல்லலாம்.
யார் தமிழர் எனக் கேட்பவர்கள் இனி, எது ‘தமிழர்’ எனக் கேட்கலாம்!
ஐயோ ‘பேர் அகராதிகளே‘!
[குறிப்பு: இக் கட்டுரை பற்றிய உங்கள் எண்ணங்களை ‘தொடர்பாடல்’ ஊடாக தெரியப்படுத்தவும், நன்றி.]