பட்டியல் படுத்தும் பாடு

ஏதோ சொல்ல வந்து எதிலோ மாட்டிக் கொண்டன். நான் சொல்ல வந்தது ஒரு பட்டியல் பற்றி, மாட்டிக் கொண்டதும் பட்டியலில். பட்டியல் என்ற சொல்லுக்கு அகராதிப் பொருள் பல. நான் சொல்ல வந்ததைச் சொல்வதற்குச் சரியான விளக்கம் எது? பட்டி என்ற சொல்லில் இருந்து ஆரம்பித்து மூலப் பொருளைக் காணலாம் என்றால், பட்டிக்கும் பொருள் பல. அகராதியை விடுத்து இலக்கியத்தில் தொடர்பைக் காண முயற்சிக்கலாம்.

 

சுடர்தொடீஇ கேளாய் தெருவில் நாம் ஆடும்
மணற்சிற்றில் காலின் சிதையா அடைச்சிய
கோதை பரிந்து வரிப்பந்து கொண்டுஓடி
நோதக்க செய்யும் சிறுபட்டி… … (கலித்தொகை 51:1-4)

 

பட்டி – கட்டுப்பாடு இன்றித் தான் விரும்பியவாறு நடப்பவன் எனப் பொருள் கூறப்படடுகிறது.

 

கிராமவாக்கில் வேறு ஒரு பொருள் உள்ளது. இவர் இந்தப் பட்டியைச் சேர்ந்தவர் என்றால், அவர் தலைமுறையைக் குறிக்கும்.

 

பட்டி என்றால் பட்டியில் வந்தவன் என்று கொள்ளலாமா? அவ்வாறாயின் பட்டிக்கும் சிறுவனுக்கும் என்ன தொடர்பு? பட்டி என்பது வழி வழியாகத் தொடரும் ஒரு மரபுக் குடியைக் (clan) குறிப்பதாயின், பட்டிக் குணம் சிறுவனிடமும் காணப்படுகிறதா? இது மரபணுத் தொடர்ச்சியா?

 

அக் கள்வன் மகன்‘ (16) என அப் பாடல் முடிவதையும் கவனிக்க.

 

மகனைக் கடிவது போல பரத்தை வீடு சென்று திரும்பும் தலைவனைக் கடியும் காட்சிகள் பலவற்றைக் கலித்தொகை பாடல்களில் காணலாம். இங்கும் குடி பேசு பொருளாகிறது.

 

‘சிறுபட்டி’ (கலி 84:20) என மகனைத் திட்டுவதையும் காணலாம். ‘சிறு பட்டி’ என்றால், அந்தப் பட்டியில் பிறந்த சிறுவன்.

 

புறநானூறு வீரத்திற்கு முதுகுடிகள் பலவற்றைக் காட்சிப்படுத்தும். எடுத்துக் காட்டாக:

 

கெடுக சிந்தை கடிதிவள் துணிவே
மூதின் மகளிர் ஆதல் தகுமே
மேனாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை
யானை எறிந்து களத்து ஒழிந் தனனே
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்
பெருநிரை விலங்கி ஆண்டுப்பட் டனனே
இன்றும் செருப்பறை கேட்டு விருப்பு உற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து உடீஇப்
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒருமகன் அல்லது இல்லோள்
செருமுகம் நோக்கிச் செல்கென விடுமே (279: 1-11)

 

இதைப் பட்டிமை அல்லால் வேறு என்னென்பது!

 

சிலப்பதிகாரம் கண்ணகியின் வஞ்சினம்:

 

பட்டாங் கியானுமோர் பத்தினியே யாமாகில்
ஒட்டெ னரசோ டொழிப்பேன் மதுரையுமென்
பட்டிமையுங் காண்குறுவாய் … … (சிலப் 21: 36-38)

 

கண்ணகி ‘என் பட்டிமை’ என்பதின் பொருள் என்ன?

 

தேரா மன்னா செப்புவ துடையேன்
எள்ளறு சிறப்பி னிமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் டீர்த்தோ னன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி யுகுநீர் நெஞ்சுடத் தான்றன்
அரும்பெறற் புதல்வனை யாழியின் மடித்தோன்
பெரும்பெயர்ப் புகாரென் பதியெ யவ்வூர்
ஏசாச் சிறப்பி னிசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வணிகன் மகனையாகி
… … …
… … … கோவலன் மனைவி
கண்ணகி யென்பதென் பெயரே … (சிலப் 20: 50-63)

 

பட்டிமை என்பது குடிப் பெருமை. அவ்வாறாயின் பட்டி என்றல் குடி எனக் கொள்ளலாம். பொதுவாகக் கூறுவதாயின் ஒரு குழுமத்தைக் குறிப்பது. ‘நிலப்பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே’.

 

மனித இனம் எவ்வாறு பட்டிக் கட்டமைப்பிற்குள் வந்தது?

 

பட்டி என்றல் ஆடு மாடுகளை மந்தையாகக் கட்டுக்குள் வைப்பது. மந்தைக்கு ‘பட்டிக் குறி’ இடுவதும் உண்டு. பட்டி என்பது மேய்ச்சலில் இருந்து பெறப்பட்ட சொல். அது நிலத்துடன் தொடர்புபட்டு நில அளவைக்கான பொருள் பெறுவதாயிற்று. ஒரு பட்டி என்றால், அதற்கு நீள அகல அளவு உண்டு. இவ்வாறு பத்துப் பட்டி கொண்டது ஒரு பரப்பு. என் ஐயாவிடம் நூறு பட்டி தோட்டக் காணி இருந்தது. அதாவது பத்துப் பரப்பு. பட்டி என்பது காலப் போக்கில் ஊர்ப் பெயர், கிராமம் முதலியவற்றையும் கூறிக்கலாயிற்று. இவ்வாறே மனிதக் கூட்டமும் குழுவாகிப் பட்டிமை பெற்றது. இது மனித வரலாற்றுத் தேடல். வேட்டையில் தொடங்கி மேய்சலுக்கு வந்து நில உடமைக்கு இப்பாலும் வரவேண்டி இருக்கும். விரிவஞ்சி வரலாற்றை விடுத்து பட்டி மேலும் பொருள் கொள்ளுமாற்றைக் காணலாம்.

 

 

பட்டிமண்டபம் – ஓலக்கமண்டபம், அரச சபாமண்டபம். வித்தியா மண்டபம். பன்னருங் கலைதெரி பட்டி மண்டபம் (கம்ப. நகர. 62). பட்டிமை உடையோர் கூடும் கட்டடம் எனக் கொள்ளலாம்.                                                    

 

பட்டிமன்றம் – விவாத மேடை என இன்று பொருள் கொண்டாலும், குழுக்களாகக் கூடும் இடத்தையே குறிக்கும்.

 

பட்டி என்பது குழுவுடன் தொடர்புபட்டுப் பொருள் கொள்ளும்.

 

பட்டி + அல் – ஒரு வகைக்குள் வருவதைப் பட்டியல் எனக் கொள்ளலாம். அல் தொழிற் பெயர் விகுதி.

 

வகைப்படுத்தி எல்லாவற்றுக்கும் பட்டியல் போடலாம். கலியாணத்திற்குப் பொருட்கள் வாங்குவதற்கும் பட்டியல், அன்றாடம் சமயலுக்குச் சாமான்கள் வாங்குவதற்கும் பட்டியல், வாக்காளர்களை அறிவிக்கப் பட்டியல், என எங்கும் எதிலும் பட்டியல் இன்று பழக்கமாகிவிட்டது. அட்டவணை எனப் பொருள் படும்.

 

சரி, பட்டியலில் மாட்டிக்கொண்டு விடுபட்டாயிற்று. இனி, சொல்ல வந்ததைச் சொல்லுவம். ஈழத்தில் தமிழ் நாடகர் பட்டியலை பலரின் எழத்துகளில் காணலாம். இதுவே நான் சொல்ல வந்த ஒரு பட்டியல் – நாடகர் பட்டியல்.

 

குழு நிழற் படத்தில் முதலில் தன் முகத்தைத் தேடுவது போல ஒரு உந்துதலில் ஏனோ நானும் என் பெயரை, நாடகர் பட்டியலில் இன்றுவரை தேடுகிறேன்.

 

 

 

[குறிப்பு: இக் கட்டுரை பற்றிய உங்கள் எண்ணங்களை ‘தொடர்பாடல்’ ஊடாக தெரியப்படுத்தவும், நன்றி.]