கூத்த நூல் வெளியீடுகள்

சாத்தனாரின் கூத்த நூல் இரு தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன.

 

1. சாத்தனார்

1968, கூத்த நூல், கவிஞர் பாலபாரதி ச.து.சு. யோகியார் அவர்கள் விளக்கக் குறிப்புகளும் பொழிப்புரையும் உடையது. பதிப்பாசிரியர்: மகா வித்துவான் மே.வீ. வேணுகோபாலப்பிள்ளையவர்கள். வெளியீடு: திருமதி ச.து.சு.யோகியார், சென்னை.

 

2. சாத்தனார்

1987, கூத்த நூல் (இரண்டாம் தொகுதி) வெளியிடுவோர்: திருமதி ச.து.சு. யோகியார், சென்னை.

 

 

பாயிரம்

 

மந்திர மாமலை யந்திரத் தவிசில்
வடக்குப் பரிதி கிடக்கப் போம்வழி
நால்வர்க்குத் தந்திர நான்மறை கூறும்
கூத்தனும் கூத்தியும் இயற்றிய கூத்தைக்
கண்டான் அகத்தியன் கண்ணுதல் செப்ப
இயற்றினான் கூத்தின் இலக்கண வைப்பே. (1)

 

நால்வர்க்கு தந்திர நான்மறை கூறும் கூத்தனும் கூத்தியும் இயற்றிய கூத்தை, மந்திர மாமலை யந்திரத் தவிசில், பரிதி கிடக்கப் போம் வழி வடக்கு, (அங்கே) அகத்தியன் கண்டான்; கண்ணுதல் செப்ப இயற்றினான் கூத்தின் இலக்கண வைப்பு.

 

கூத்துப் பற்றிய செய்திச் சுருக்கம்: சிவனும் உமையும் ஆடிய கூத்தை அகத்தியன் கண்டான். சிவன் கூறியருள அகத்தியன் ‘கூத்தின் இலக்கண வைப்பு’ இயற்றினான்.

 

இதனால் பெறுவது:

 

அகத்தியரே கூத்துக்கு முதல் இலக்கணம் இயற்றியவர் என்பது.

 

அகத்தியன் இயற்றிய ஆகத்திய முதல்நூல்

 

அகத்தியம் முதல் நூலைத் தொடர்ந்து சார்புநூல் கூறப்படுகிறது:

 

சிகண்டி இயற்றிய தேன்இசை சார்பு

 

தேன் இசை சார்பு நூலைத் தொடர்ந்து வழிநூல்கள் கூறப்படுகின்றன:

 

பேரிசை நாரை குருகு கூத்து
சயந்தம் குணநூல் முறுவல் சயிற்றியம்
தண்டுவம் நந்தியம் பண்ணிசை தக்கம்
தாளம் தண்ணுமை ஆடல்மூ வோத்தும்
வழிநூல்

 

இந்நூலாசிரியர் சாத்தனார் மேலே கூறப்பட்ட நூல்கள் யாவற்றையும் அறிந்துள்ளார் எனத் தெரிகிறது.

 

… அவற்றின் வழிவகை வகுத்துக்
கூத்தின் விளக்கம் கூறுவன் யானே (2)

 

ஆண்டவன் அருள் கூட்ட,

 

ஒருதாள் ஊன்றி ஒருதாள் ஏற்றி
ஒருகை மறித்து மறுகை அமைத்து
இருகையில் ஆக்கமும் இறுதியும் ஏற்று
அருவுரு ஆக்கும் அம்மைகூத்து ஆட்டப்
பெருவெளி நடிக்கும் பெருமான் அருளத்

 

இந்நூலை ஆக்குவித்தோன் தென்னவன்:

 

தென்னவன் வேண்ட

 

முன்னை நூல்களை ஆய்ந்தும், கூத்தின் வகை எல்லாம் நேரில் கண்டும் இயற்றுகிறார்.

 

… முன்னைநூல் ஆய்ந்து
செந்தமிழ் நிலத்தும் சேர்பல நிலத்தும்
வந்தமெய்க் கூத்தின் வகைஎல்லாம் கண்டு
கூத்தநூல் நான்முகக் கூத்தன் சாத்தன்
வேத்தவை எல்லாம் வியப்பத் தந்ததே (3)

 

கூத்தநூல்‘ என்பதை யோகியார் ‘கூத்தனூர்’ எனக் கொண்டு விளக்கிக் கூறுவார் (1968, ப.10). நான்முகக் கூத்தன்: ‘கூத்தைப் படைப்போன் நான்முகக் கூத்தன்’ (3:115). வேத்தவை: நாட்டிய நாடக அரங்கங்கள் (1968, ப.10)

 

கூத்தநூலை ஆக்கியோர் சாத்தனார் என்பதும், ஆக்குவித்தோர் தென்னவன் என்பதும் பாயிரம் தரும் செய்திகள். கவிஞர் ச.து.சு. யோகியார் கூத்தநூல் பொருள் அடக்கம் தருகிறார்:

 

1. சுவை நூல்: (கலையின் தெய்வீக உணர்ச்சிகளை விவரிப்பது)
2. தொகை நூல்: (நாட்டிய வடிவங்களின் தொகுப்பு)
3. வரி நூல் (கிராமிய நாட்டியங்கள்)
4. கலை நூல் (கைகால்களின் நாட்டிய அமைப்பு)
5. கரண நூல்: (நாட்டியக் குறிப்புகளின் தொகுப்பு)
6. தாள நூல்: (காலவரையளவு)
7. இசை நூல்
8. அவை நூல்: (அரங்கமைப்பு வர்ணனை)
9. கண் நூல்: (கருத்து விளக்கம்)

 

கூத்த நூல் ஒன்பது பொருட்கூறுகளாக வகுக்கப்பட்டுள்ளது. ஒன்பது பொருட்கூறுகளையும் முழுமையாகப் பார்த்தவர் ச.து.சு. யோகியார் அவர்கள். அவற்றுள் சுவை நூல், தொகை நூல் ஆகியவை மட்டும் யோகியாரின் விளக்க உரையுடன் வெளியாகியுள்ளன (1968).

 

கவிஞர் பெரியசாமி தூரன் அணிந்துரையில் கூறுவார்:

 

அவர் ஒரு விரிவான ஆராய்ச்சி முகவுரையும் எழுத எண்ணியிருந்தார். ஆனால், காலன் அவரை அதற்குள் கவர்ந்தோடிவிட்டான்! ஆங்கிலத்திலும் இந்நூலை மொழி பெயர்த்து வெளியிட வேண்டுமென்ற ஆசையும் அவருக்கு இருந்தது. விரிவாக அவர் எழுத விரும்பிய விளக்கக் குறிப்புகளெல்லாம் இன்னும் ஒழுங்குபடுத்தப்படாமலே அவர் இல்லத்திலே கிடக்கின்றன. அவற்றையும் சேர்த்துப் பார்த்தால், இந்த நூலுக்கு மேலும் நல்ல விளக்கம் கிடைக்கும் என்பது எனது நம்பிக்கை (VI).

 

மேலும் கூறுவார்:

 

இந்தச் சுவடியை ஆராயும்போது இது முழுமையாய் இராமல் இடையிடையே சில பகுதிகள் குறைவாய் இருப்பதை உணரலாம். கிடைத்த பகுதியே மிகப் பெரிய கலைக்கருவூலமாகும் (VII).

 

யோகியர் வசமிருந்த இந்நூலினன் பிற்பகுதிகளையும் தேடியெடுத்து வெளியிட வேண்டும். முன்பே நான் குறிப்பிட்டுள்ளவாறு இடையில் சிறுசிறு பகுதிகள் கிடைக்காவிட்டாலும், நூலின் முழுப்பெருமையை உணர அதன் இறுதிப் பகுதிகளையும் உடனே வெளிக்கொணர வேண்டும் (VIII).

 

1987இல் கூத்த நூல் (இரண்டாம் தொகுதி) வெளியாகியுள்ளது. இரண்டாம் தொகுதிக்கு வழங்கியுள்ள அணிந்துரையில் கவிஞர் பெரியசாமி தூரன் கூறுவார்:

 

கூத்தநூலின் முதல் பாகத்தில் பல விளக்கவுரையைத் தந்துள்ளார் அதன் பதிப்பாசிரியரான ச.து.சு. யோகியார். ஆனால் இந்த இரண்டாம் தொகுதிக்கு விளக்கவுரை எழுதும் முன்னரேயே அவர் அமரராகிவிட்டார். … … … இருந்தாலும் ழூலத்தையாவது அச்சிடலாம் என்ற நோக்கத்தோடு தமிழ்நாடு இயலிசை நாடக மன்றத்தார் வெளியிட்டுள்ளார்கள் (16).

 

மாண்புமிகு தலைமைநீதிபதி உயர்திரு பு.ரா. கோகில கிருஷ்ணன் (முன்னாள் தலைவர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்) வழங்கிய இரண்டாம் தொகுதிக்கான சிறப்புரையில் கூறுவார்:

 

மகாவித்துவான் செந்தமிழ்க் களஞ்சியம் மே.வீ. வேணுகோபால பிள்ளை அவர்களுடைய அயரா உழைப்பின் காரணமாக கூத்தநூல் பாக்கள் அத்தனையும் ஒருசேர நூல் வடிவில் அச்சில் ஏற்றி மூலத்தைக் காப்பாற்ற நாங்கள் முயற்சி எடுத்துக் கொண்டோம் (17-18).

 

கூத்தநூல் பாக்கள் அத்தனையும்’ என்பதால் வெளிடப்பட்டவை எத்தனை என பொருள் அடக்க முறையில் கணக்கிட்டுப் பார்த்தால் சில இடங்களில் குளப்பமாக இருக்கிறது. பொருளடக்கத்திற்கு யோகியார் தந்த விளக்கத்தையும் இரண்டாம் தொகுதியில் வெளியிடப்பட்ட நூற்பாக்களையும் ஒப்புநோக்கிப் பார்க்க வேண்டும்.

 

1. சுவை நூல்:

 

நாட்டியம், இசை, நாடகம் ஆகிய கலைகளின் தெய்வீகத் தோற்றம், பல்வேறு ஒலிகளின் தோற்றம், அமைப்புகள், உணர்ச்சிகள், அவற்றை அரங்கில் வெளியிடும் முறைகள், அவற்றிற்கான கோட்பாடுகள் ஆகியவை இம்முதல்நூலில் அடங்கும் (யோகியார்).

 

சுவை நூலில் 153 நூற்பாக்கள் உள்ளன.

 

தோற்றுவாய்: 1, ஓம்: 2-4, எழுத்து: 5-12, பொது நெறி: 13-25, சுவைத்தொகை: 26-30, இயல்:31-36, பொது இயல் சுவை நெறி – முக்குணம்: 37-63, வேத்து இயல் சுவைநெறி: 64-75, இழை நெறி: 76-91, உள்ளாளம்: 92-115, யோனி: 116-132, புணரியல்: 133-153.

 

சுவை நூல் நூற்பாக்களின் எண்ணிக்கையிலும் வகைப்பாட்டிலும் இரு வெளியீடுகளிலும் குளப்பம் இல்லை.

 

2. தொகை நூல்:

 

சிவபெருமான் ஆடிய 108 தாண்டவ நாட்டிய முறைகளை இது விவரிக்கிறது. அசைவின்றி நின்று பல்வேறு நாட்டிய வடிவங்களைச் சித்தரிக்கும் முறையையும் இந்நூல் விளக்குகிறது. 12 சிவ தாண்டவ நாட்டியங்களின் 39 வடிவங்கள், அவற்றிலிருந்து பிறந்த 12 வித நாட்டிய முறைகள் ஆகிய 144 நாட்டிய முறைகளை இந்நூல் விளக்குகிறது (யோகியார்).

 

தொகை நூலில் 162 நூற்பாக்கள் உள்ளன.

 

வழி முறை: 1-55, கிளை இயல்: 56-61, சாய்பு: 62-79, படிம இயல்: 80-126, பன்னிரு கூத்து: 127-140, தண்டுவம் தக்கம் 141-148, இணையம்: 149-162.

 

தொகை நூல் நூற்பாக்களின் எண்ணிக்கையிலும் வகைப்பாட்டிலும் இரு வெளியீடுகளிலும் குளப்பம் இல்லை.

 

இனித் தொடர்வன இரண்டாம் தொகுதியில் மட்டும் உள்ள நூற்பாக்களும் வகைப்பாடுகளும்:

 

3. வரி நூல்:

 

பூமியின் ஐந்துவித இயற்கைப் பாகுபாடுகளையொட்டி அமைந்த நாட்டியங்கள், காதலைச் சித்தரிக்கும் நடனங்கள், உடல் கூறின் சிறப்புகளையொட்டி, தனியாகவும் குழுவாகவும் ஆடப்பெறும் நாட்டியங்கள், உணர்ச்சி மீறி ஆடப்படும் நடனங்கள் போன்றவை இப்பிரிவில் அடங்கும் (யோகியார்).

 

வரி நூலில் 119 நூற்பாக்கள் உள்ளன.

 

நில வரி, நீர் வரி என்ற வகைப்பாட்டுடன் நின்றுவிட்டது. ஒவ்வொரு நூற்பாவாகப் படித்துப் பொருள் கண்டு மேலும் வகைப்படுத்தித் தலைப்பிட வேண்டும்.

 

4. கலை நூல்:

 

மிகவும் விரிவான இப்பகுதியில் மனித உடல் அமைப்புகளை யொட்டி அமைந்த நாட்டியங்களை விளக்கும் ஆயிரம் சூத்திரங்களுக்குமேல் உள்ளன. பாதங்களின் நாட்டிய முறைகள், நாட்டிய வடிவங்கள், கால் விரல்கள், கணுக்கால், முழங்கால், தொடை இவற்றின் உதவியால் நின்றவாறும் ஆடியசைந்தும் 360, 120, 300, 90 ஆகிய எண்ணிக்கைகளில் தனியாகவும், துணையாகவும், இரு கைகளாலும் நாட்டிய வடிவங்களை அமைத்து அதற்கு ஏற்றபடி கழுத்து, முகவாய், கன்னம், காதுகள், வாய், மூக்கு, முக உணர்ச்சி யாவும் இணைந்த பல்வேறு நாட்டிய அமைப்புகளை இந்நூல் விவரிக்கிறது (யோகியார்).

 

பெயரிலேயே குளப்பம் உள்ளது. முதல் தொகுதியில் ‘கலை நூல்’ என உள்ளது. இரண்டாம் தொகுதியில் ‘கிளை நூல்’ எனக் கூறப்படுகிறது. எடுத்த எடுப்பிலே இந்த நூலில் இத்தனை நூற்பாக்கள் உள்ளன என்றும் கூற முடியவில்லை. நூற்பா எண்களும் வகைப்பாடுகளும் தொடர்ச்சியாக இல்லை. உள்ளவாறு கண்டு கூட்டிக் கூறலாம்.

 

முளைக்கூறு: 1-9, கீழ்க்கிளை: 10-11, அடி: 12, புறம்:13-18, விரல்: 19-33, குதி: 34-35, கணைக்கால்: 36-37, கடைக்கால்: 38, முழங்கால்: 39, துடை: 40, கால் நெறி: 41-44, நிலைக்கால்: 45-46, பொருத்தம்: 47-51, திரிகை: 52-54, மாற்று: 55-63, தாக்கு: 64-73, விருத்தம்: 74, நிலையலை: 75-76, அலை நிலை:77-78, அடி அடைவு: 79-95, அலை விருத்தம்: 96-97, சரி: 98-108, சரி நெறி: 109-117, சச்சரி 118-133, மச்சரி: 134-142, பின்முக மச்சரி: 143-148, இடவல மச்சரி 149-162, உண்மச்சரி 163-170, இணைமச்சரி 171-178, பிணையிணை: 179-180, கொணையிணை181-182, இணையிணை: 183-199, தாக்குரி: 200-223, தாப்புலி: 224-243, விச்சுளி 244-265, மீச்சுரி: 266-272,

 

நடுக்கிளை – பாடு: 273, இடை: 274-275, வயிறு: 276-277, முதுகு: 278, தோள்: 279: மார்பு: 280, பத்கம்: 281,

 

கை: 1, கைக்குழி: 2, பின்கை: 3, முழங்கை: 4, முன்கை: 5, கணைக்கை: 6, புறங்கை: 7, அகங்கை: 8-18, கைவிரல்: 19-44, வலமிடம்: 45-52, தனிக்கை: 53-596, இணைக்கை: 597, தழுவம்: 598-627, தகையம்: 628-644, இணையம்: 645-648, காப்பஞ்சலி: 649-673, கோப்பஞ்சலி: 674-676, காப்பியம்: 677-704, மற்றஞ்சலி: 705-722, அணியஞ்சலி: 723-725, அரவஞ்சலி: 726-729, முகுளஞ்சலி: 730-734, முகுடஞ்சலி: 735-746, ஆட்டக்கை: 747-776,

 

முடிக்கிளை – கழுத்து (மிடறு, மோவாய், கன்னம், பல்லு, நா, கண், தலை): 777-786,

 

மெய்ப்பாடு: 787-796.

 

இதில் கூறப்பட்டவற்றைப் பார்த்த அளவில் ‘கிளை நூல்’ என்பதே இவ் வகைப்பாட்டுக்குப் பொருந்துவதாக உள்ளது.

 

கிளை நூலில் 281+796=1177 நூற்பாக்கள் உள்ளன. இந்நூற்பாக்கள் மேலும் விரிவாகவும் தெளிவாகவும் வகைப்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக எண்கள் இடப்பட வேண்டும்.

 

5. கரண நூல்:

 

120 கரணங்கள், அவற்றிற்குத் தகுந்த முத்திரைகள், ஸ்தானங்கள், சாரிகள், 90 கலசங்கள் (அங்ககாரம்), 9 தாண்டவங்களின் முழு விபரம், 6 லாஸ்யங்கள் ஆகிய கலைப் பிரிவுகளை விவரிக்கும் பகுதி இந்நூலில் அடங்கியுள்ளது (யோகியார்).

 

இரண்டாம் தொகுதியில் ‘கரண நூல்’ இல்லை.

 

6. தாள நூல்:

 

தாள சமுத்திரம் என வழங்கப்பெறும் இப்பகுதியில் அங்கங்கள், கிரகங்கள், மூர்ச்சனைகள் போன்றவையும் அடங்கியுள்ளன. இயல் தாளம் என்னும் பகுதியியல் ஐந்து அடிப்படைத் தாளங்களும், அவற்றிலிருந்து கிடைத்த 35 இணைத் தாளங்களும் அவற்றின் சுரங்கள், ஜதிகள் ஆகியவை பற்றிய விவரமும் உள்ளன. ஆட்ட தாளம் என்னும் பகுதியில் அகஸ்திய முனிவரின் 108 தாளங்களும், இதர கலை வல்லுனர்களின் 52 தாளங்களும் அவற்றிற்கான ஜதிகளின் வழிமுறை போன்ற விளக்கங்களும் உள்ளன (யோகியார்).

 

தாள நூல் நூற்பாக்களின் எண்ணிக்கை ஒன்றில் இருந்து தொடங்காமல் கிளை நூல் முடிந்த இடத்திலிருந்து தொடங்குகிறது. தாள நூலில் உள்ள எண்ணிக்கையைக் கணக்கிட பழைய எண்களை விடுத்துப் புதிய எண்கள் இடப்பட வேண்டும். நூற்பாக்களை வேறாக எண்ணிப் பார்த்த அளவில், தாள நூலில் 543 நூற்பாக்கள் உள்ளளன. அவை தாளங்களின் பெயர்களில் விரிவாக வகைப்படுத்தப்பட்டு விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

 

நந்தியே முழவின் நயமுரைத்தனனே

 

எனப் பாடல் எண் 1286 தொடங்கி,

 

கொன்னத் தாளம் கோப்பது குரலே

 

எனப் பாடல் எண் 1303 வரை உள்ள 18 நூற்பாக்களில் பல வாத்தியக் கருவிகளின் பெயர்கள் கொடுக்கப்படுகின்றன.

 

7. இசை நூல்:

 

இந்நூல் பகுதியின் விவரம் தொடர்பின்றிக் காணப்படுகிறது. எனினும் இப்பகுதியில்தான், மறைந்த முப்பது பண்களின் ஆரோகண அவரோகண வரிசை முறைகளும் காணப்படுகின்றன. தேவாரம் எழுதிய நாயன்மார்கள் இப்பண்களை கையாண்டுள்ளனர் (யோகியார்).

 

8. அவை நூல்:

 

அரங்கமைப்பு முறை, அதற்கான ஒலி, திரை, உடை, நாடக உணர்ச்சிகளுக்கான ஒளிவடிவங்கள், ஒப்பனை, ஒப்பனைஅறை போன்ற பல்வேறு பிரச்சனைகளை விளக்கும் நூல் இது (யோகியார்).

 

9. கண் நூல்:

 

நாட்டியத்தின் குறிக்கோள், நாட்டியத்தின் மூலம் யோக சாதனை, உடல் வலிவும் குரல் வளமும் குன்றாத நிலையாக இருக்கத் தேவையான மருந்துகள், களிம்புகள், உடற்பயிற்சி, நாட்டியத்தில் மூச்சையடக்கும் முறை, நாட்டியக் கலைஞர்கள் தமது மனதை ஒரு நிலையில் நிறுத்துதல், வீடுபெறும் வழி ஆகியவற்றை விளக்கும் பகுதி இந்நூல் (யோகியார்).

 

யோகியார் கொடுத்த பொருள் அடக்கத்தில் இறுதியாக உள்ள மூன்று நூல்களும் இரண்டாம் தொகுதியிலும் இடம்பெறவில்லை. ஆகவே,

 

5 – கரணநூல்,

7 – இசை நூல்,

8 – அவை நூல்,

9 – கண் நூல்

 

ஆகிய நான்கு நூல்களும் இன்னும் மறைவாகவே உள்ளன.

 

தமிழ் அரங்க ஆற்றுனர்களுக்கான ஒரு பயிற்று முறையைக் கட்டமைக்க ‘கண் நூல்’ ஓர் ஒப்பற்ற கருவூலமாகும். தமிழ்த் தேசிக அரங்கிற்கு கூத்த நூல் இன்றியமையாதது. கூத்த நூல் முழுமையாக வெளிக்கொண்டுவர வேண்டியது காலத்தின் கட்டாயம். இதை அறியாமலும் அக்கறை இன்றியும் அரைகுறைக் கூத்தநூல் வாசிப்பில் தமிழ் அறிஞர் உலகம் இருப்பது சோகத்திலும் சோகம்.

 

 

[குறிப்பு: இக் கட்டுரை பற்றிய உங்கள் எண்ணங்களை ‘தொடர்பாடல்’ ஊடாக தெரியப்படுத்தவும், நன்றி.]