முகமாடல்
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே
அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே
உருக்குவித்தால் ஆரொருவர் உருகா தாரே
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே
பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே
காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே
காண்பாரார் கண்ணுதலாய்க் காட்டாக் காலே
(தனித் திருத்தாண்டகம் திருநாவுக்கரசர்)
‘ஆடலோன்’ யாவற்றையும் ஆடலாகக் காண்கிறார். ஆடல் பல் பொருட் கிளவி. அவற்றுள் பொருத்தப்பாடு கருதிச் சில: தோற்றுதல், அசைதல், செய்தல், சொல்லுதல், கூத்தாடுதல், கொண்டாடுதல் என அவற்றை வகைப்பாடுடன் பொருத்திப் பொருள் காணலாம்.
வகைப்பாடு
0. நடப்பாடல்
அண்மையில் இட்டவை
முன்னாதல் ‘நடப்பாடல்’
1. முகமாடல்
திரைவிலக்கி முகம்காட்டி
அறிமுகமாவது ‘முகமாடல்’
2. தானாடல்
தன்னைப் பற்றித் தான் கொண்டது
தான் சொல்லல் ‘தானாடல்’
3. அவையாடல்
கண்டவர் கொண்டவை
விண்டது ‘அவையாடல்’
4. அரங்காடல்
காண்பன காணாதன
கேட்பன கேட்காதன
சொல்வன சொல்லாதன
அசைவன அசையாதன
யாவுமே அவைமுன்
அரங்கானால் ‘அரங்காடல்’
5. கருத்தாடல்
எண்ணங்களை எழுத்தாக்கி
எடுத்துரைத்தல் ‘கருத்தாடல்’
6. அச்சாடல்
எழத்துக்கள் எழுத்தாகி
அச்சாகுவது ‘அச்சாடல்’
7. தொடர்பாடல்
முன்னிலை படர்க்கை
என்னிலையிலும் எண்ணங்களை
பரிமாறல் ‘தொடர்பாடல்’
இவ் வலைப்பதிவுக்கான (Blog) அவசியம் இப்போ என்ன வந்துவிட்டது. வயதுதான், வேறொன்றும் பெரிதாக இல்லை. எனக்கு இப்போ வயது எண்பதைத் தாண்டிவிட்டது. எனக்குள்ளே குமைந்து கொண்டிருக்கின்ற சிலவற்றை இப்போ சொல்லாமல் வேறு எப்போ சொல்லுவது. அவற்றுடன் என்னைப் பற்றியும்தான்; வயது போகத் தன்னைப் பற்றிப் பேச விரும்புவார்களாம்!
அவையடக்கம்
பாட்டைப் படித்தறியோம்
பாடும்வகை நாம் அறியோம்
எழுதிய ஏடறியோம்
எழுதும் வகை தாம் அறியோம்
வித்துவக் கவிஞரல்ல
வித்தைகள் கற்றோரல்ல
தப்புத் தவறிருந்தால்
செப்பனிட எடுத்துரைப்பீர்
நன்று கண்டு நயந்தால்
சென்று சொல்வீர் சிறப்புகளை